Friday, August 22, 2025
Home பிபிசிதமிழிலிருந்துத.வெ.க. மாநாடு: விஜய்யின் பஞ்ச் வசனங்களும் 'ராம்ப் வாக்கும்' தேர்தலில் பலன் தருமா? – BBC News தமிழ்

த.வெ.க. மாநாடு: விஜய்யின் பஞ்ச் வசனங்களும் 'ராம்ப் வாக்கும்' தேர்தலில் பலன் தருமா? – BBC News தமிழ்

by ilankai
0 comments

“234 தொகுதிகளிலும் விஜயே வேட்பாளர்”: த.வெ.க.வின் கதாநாயக அரசியல் பலன் தருமா?

பட மூலாதாரம், TVK

எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்51 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை கூட்டத்தில் விஜய்யின் ராம்ப் வாக்கும் அவர் பேசிய பஞ்ச் வசனங்களும் தேர்தலில் எந்த அளவுக்குப் பலனளிக்கும்? எம்.ஜி.ஆரின் வாக்குகளை குறிவைக்கும் முயற்சிகள் பலனளிக்குமா?

banner

வியாழக்கிழமையன்று மதுரையில் நடந்து முடிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் விஜய் தனது பேச்சில் எம்.ஜி.ஆரைத் தூக்கிப்பிடித்திருக்கிறார். அதே நேரத்தில் தற்போதைய அ.தி.மு.கவை விமர்சித்திருக்கிறார். பஞ்ச் வசனங்கள், குட்டிக் கதை, சிங்கத்தோடு ஒப்பீடு என விஜய்யின் பேச்சு நகர்ந்தது குறித்த விமர்சனங்களும் இருக்கின்றன. தி.மு.கவுக்கு எதிரான முக்கிய சக்தியாக த.வெ.கவை முன்னிறுத்த விரும்பும் விஜய்யால் அதனைச் சாதிக்க முடியுமா என்ற கேள்வியை இது எழுப்பியிருக்கிறது.

நடிகர் விஜய் கட்சி துவங்கியதற்குப் பிந்தைய முதல் மாநாடு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற்றது. இதற்கு அடுத்த மாநாட்டை மதுரையில் நடத்த முடிவுசெய்யப்பட்டது. ஆகஸ்ட் 25ஆம் தேதி இந்த மாநாட்டை மதுரையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், விநாயக சதுர்த்தி நெருங்குவதால் காவல் துறை தேதியை மாற்றும்படி கோரியதால் மாநாடு ஆகஸ்ட் 21ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது.

கட்சி துவங்கிய பிறகு த.வெ.கவின் இரண்டாவது மிகப் பெரிய பொதுக் கூட்டம் என்பதால் இது தொடர்பான எதிர்பார்ப்புகள் ஏகத்திற்கும் இருந்தன. விக்கிரவாண்டி மாநாட்டிலேயே த.வெ.கவின் அடிப்படையான விஷயங்களை விஜய் தெளிவுபடுத்தியிருந்தார். கொள்கைத் தலைவர்கள் யார் யார், சித்தாந்த எதிரி யார், அரசியல் எதிரி யார் என்றெல்லாம் குறிப்பிட்டுப் பேசிய விஜய், “கொள்கை கோட்பாட்டளவில் திராவிடம், தமிழ் தேசியம் ஆகிய இரண்டுக்கும் பிரிவினை இல்லை, இரண்டும் நமது இரண்டு கண்கள்” என்று குறிப்பிட்டார்.

மேலும், “2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. இருந்தாலும், நம்மோடு கூட்டணி வைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கீடும், அதிகாரப் பகிர்வும் கொடுப்போம்” என்றதோடு, “பிளவுவாத அரசியலையும், ஊழல் மலிந்த அரசியல் கலாசாரத்தையும் எதிர்க்கப் போவதாகவும்” தெரிவித்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆகவே, இந்த மாநாட்டில் என்னென்ன விஷயங்களை விஜய் பேசப் போகிறார் என்ற எதிர்ப்பார்ப்பு எல்லா மட்டங்களிலுமே இருந்தது. இந்த மாநாட்டிற்கு என முதல் நாளே மதுரைக்கு வந்து குவிந்திருந்த தொண்டர்கள் மத்தியில் ‘ராம்ப் வாக்’ செய்த விஜய், மாலை 4.50 மணியளவில் பேச ஆரம்பித்தார். முக்கியத் தலைவர்கள் பெயரைக் குறிப்பிட்டு சம்பிரதாயமான முறையில் தனது உரையைத் துவங்காமல் நேரடியாகப் பேச்சைத் துவங்கினார் விஜய்.

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, மாநாட்டில் கூடிய கூட்டம்அதிமுக குறித்த விஜய்யின் விமர்சனம்

பேச்சின் துவக்கத்திலேயே தன்னை சிங்கத்தோடு ஒப்பிட்டுப் பேசிய அவர், பிறகு அரசியலுக்குள் வந்தார். அ.தி.மு.கவின் நிறுவனர் எம்.ஜி.ஆரையும் தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்தையும் புகழ்ச்சியாகக் குறிப்பிட்டார். “சினிமாவிலும், அரசியலிலும் எனக்கு மிகவும் பிடித்தவர் எம்ஜிஆர். அவரோடு பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை ஆனால், அவருடைய குணம் கொண்ட இந்த மதுரை மண்ணில் பிறந்த விஜயகாந்த்துடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது” என்றார்.

தங்களது கொள்கை எதிரி பா.ஜ.க. என்றும் அரசியல் எதிரி தி.மு.க. என்பதையும் மீண்டும் குறிப்பிட்டவர், தி.மு.கவையும் பா.ஜ.கவையும் விமர்சித்துப் பேசினார். இதற்குப் பிறகு, எம்.ஜி.ஆரைப் பற்றியும் அ.தி.மு.கவின் தற்போதைய நிலையைப் பற்றியும் பேசினார் விஜய்.

“எம்ஜிஆர்னா யாரு தெரியும்ல, அவர் மாஸ்னா என்னானு தெரியும்ல, அவர் உயிரோடு இருக்கும்வரைக்கும் அந்த சி.எம். சீட்டப் பத்தி ஒருத்தராலையும் நினைச்சுக்கூட பார்க்க முடியல. கனவுகூட காண முடியல. எப்படியாவது அந்த சி.எம். சீட்டை என்கிட்ட கொடுத்திருங்க, என் நண்பர் எம்.ஜி.ஆர். திரும்ப வந்த பிறகு திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்று தன் எதிரியைக்கூட மக்களிடம் கெஞ்ச வைத்தவர். ஆனால், இப்போ அவர் ஆரம்பித்த அந்தக் கட்சியை கட்டிக் காப்பது யாரு? இன்று அந்தக் கட்சி எப்படியிருக்குது?”

“அப்பாவித் தொண்டர்கள் வெளியில் சொல்ல முடியாம வேதனையில் தவிக்கிறார்கள். 2026ல சட்டமன்றத் தேர்தலில் யாருக்கு ஓட்டுப்போடனும்னு, எப்படிப்பட்ட ஆட்சி இங்க அமையனும்னு அந்த அப்பழுக்கற்ற தொண்டர்களுக்கு நல்லாவே தெரியும். பொருந்தாத கூட்டணியாக பா.ஜ.க. கூட்டணி இருக்கிறது. தி.மு.க. அவர்களோடு மறைமுக உறவுவைத்துக்கொண்டிருக்கிறது” என்று அவர் பேசிய பேச்சு, அ.தி.மு.கவின் வாக்குகளை தன் பக்கம் ஈர்க்கும் நோக்கத்தில் இருந்ததைப் போலவே அமைந்திருந்தது.

விஜய் பேசி முடித்த பிறகு உடனடியாக கூட்டம் முடிவுக்கு வந்தது. விஜய்யின் இந்த இரண்டாவது கூட்டத்திற்கு தமிழ்நாட்டின் ஊடகங்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டன. பெரும்பாலான தொலைக்காட்சிகள் நாள் முழுவதும் பொதுக்கூட்ட அரங்கை நேரலை செய்தன. விக்கிரவாண்டி பொதுக்கூட்டத்திற்குக் கூடியதைப் போலவே பெரும் எண்ணிக்கையிலான தொண்டர்கள் இந்தக் கூட்டத்திற்கும் திரண்டனர்.

‘மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரான கருத்து’

பட மூலாதாரம், TVK

படக்குறிப்பு, ‘விஜய்க்கு வரும் கூட்டம் அரசியல்படாத (Apolitical) கூட்டமாகத்தான் இருக்கிறது’ என்கிறார் அ. ராமசாமி.ஆனால், விஜய்யின் அரசியல் தொடர்பாக நடக்கும் விவாதங்கள் அதிர்ச்சியளிப்பதாகச் சொல்கிறார் முன்னாள் பேராசிரியர் அ. ராமசாமி. “விஜய்க்கு வரும் கூட்டம் அரசியல்படாத (Apolitical) கூட்டமாகத்தான் இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு வந்த அக்கட்சித் தொண்டர்களில் பலர் ஊடகங்களில் பேசும்போது, விஜய்யைப் பார்ப்பதற்காக மட்டுமே வந்ததாகவே சொன்னார்கள். அவர் என்ன மாற்றத்தைச் செய்வார், என்னென்ன விஷயங்களை மாற்றியமைப்பார், எதனால் அவரை ஆதரிக்கிறோம் என்பதைப் பற்றியே அவர்கள் பேசவில்லை.” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இதில் அதிர்ச்சியளிக்கும் விஷயம் என்னவென்றால், இப்படி எந்த அரசியலும் இல்லாமல் தொண்டர்கள் இருப்பதை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் பலரும் நல்ல விஷயம்போல பேச ஆரம்பித்திருப்பதுதான். அரசியல்படாத தன்மையே சிறப்பு என்று பேசும் சூழல் தமிழ்நாட்டில் வந்துவிட்டது ஆச்சரியமளிக்கிறது” என்கிறார் அ. ராமசாமி.

விஜய்யின் பேச்சில் பலரையும் கவனிக்க வைத்த ஒரு விஷயம், தான் எந்தத் தொகுதியில் போட்டியிடப்போகிறேன் என்று பேசியதுதான். தான் மதுரை கிழக்குத் தொகுதியில் போட்டியிடப்போவதாக துவங்கியவர், பிறகு தமிழ்நாட்டின் எல்லாத் தொகுதியிலும் தானே போட்டியிடுவதாக கருத வேண்டும் என்று குறிப்பிட்டார். இது பெரும் அதிர்ச்சியளிப்பதாகக் கூறுகிறார் தில்லியைச் சேர்ந்த பேராசிரியரும் Rule of the Commoner நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான ராஜன் குறை கிருஷ்ணன்.

“234 தொகுதியிலும் நானே நிற்பதாகக் கருத வேண்டும் என்று சொல்வது மக்களாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. ஆனால், அந்தக் கட்சியே அப்படித்தான் இருக்கிறது. இது அடிப்படையிலேயே தவறு. அ.தி.மு.க., தி.மு.க. போன்ற கட்சிகள் சிறு பேச்சாளர்களை வைத்து தெரு முனைக் கூட்டங்களை நடத்தி பிரசசனைகளை விளக்குகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள எல்லா கட்சிகளிலுமே இதுபோல ஆட்கள் இருக்கிறார்கள். இந்தக் கட்சியில் அப்படி எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை.” என்று விமர்சித்தார்.

மேலும், “இப்போது மாநாடு என்று சொல்லிவிட்டு, கட்சியின் முக்கியப் பிரமுகர்களே 2-3 நிமிடங்கள்தான் பேசுகிறார்கள். அப்படிப் பேசுபவர்களும் பள்ளிக்கூடங்களில் பேசும் குழந்தைகள் ரேஞ்சிற்குத்தான் ‘by the people for the people’ என்று பேசுகிறார்கள். தங்கள் கட்சியினருக்கு அது போதுமென நினைக்கிறார்கள் போலிருக்கிறது” என்றும் கடுமையாக விமர்சிக்கிறார் ராஜன் குறை.

விஜய்யின் பேச்சுக்கு அதிமுகவின் எதிர்வினை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அ.தி.மு.க குறித்த விஜய்யின் கருத்தை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.இந்த மாநாட்டில், விஜய் எம்.ஜி.ஆர். குறித்துப் பேசியதும் அ.தி.மு.க. குறித்துப் பேசியதும் எதிர்பார்த்ததைப் போலவே, கடுமையான எதிர்வினைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

சுற்றுப் பயணத்தில் இருந்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிச்சாமி காஞ்சிபுரத்தில் பேசும்போது, “யாரெல்லாம் புதிய கட்சி தொடங்குகிறார்களோ அவர்களும் நம் தலைவர்களை சொல்லித்தான் கட்சியைத் துவங்க முடியும். சிலர், அ.தி.மு.க. யார் கையில் இருக்கிறது என்று கேட்கிறார்கள். இதுகூடத் தெரியாமல் கட்சிக்குத் தலைவராக இருந்தால், உங்களை நம்பி எப்படி தொண்டர்கள் இருப்பார்கள்?” என்றார்.

விஜய்யைப் பொறுத்தவரை, எம்.ஜி.ஆரைப் போல தன்னை ஒரு பெர்சனாலிட்டியாக முன்வைத்து வாக்குகளைக் கோர நினைத்தாலும் அது சுலபமல்ல என்கிறார் அ. ராமசாமி.

“விஜய்யைப் பொறுத்தவரை அவர் தன் ‘பெர்சனாலிட்டியை’ சார்ந்தே அரசியல் செய்ய விரும்புகிறார். அதாவது, தமிழக அரசியலில் எம்.ஜி.ஆரைப் போல, விஜயகாந்தைப் போல தன்னை ஒரு முகமாக முன்வைக்க விரும்புகிறார். அதனால்தான், அவர் எம்.ஜி.ஆரை, விஜயகாந்தை தன் மேடையில் குறிப்பிடுகிறார். நான் கிழக்குத் தொகுதியில் நிற்கப்போகிறேன் என்று ஆரம்பித்து, தமிழ்நாடு முழுக்க நானே நிற்கப் போகிறேன் என்று சொல்கிறார். இது முழுக்க முழுக்க பெர்சனாலிட்டி சார்ந்த அரசியல்.” என்று கூறுகிறார் அவர்.

‘அ.தி.மு.கவினரின் வாக்குகளை விஜய் பெறுவதற்கு வாய்ப்பே கிடையாது’ எனக் குறிப்பிட்ட அ. ராமசாமி, “காரணம், அ.தி.மு.கவில் தற்போது உள்ள வாக்குகள், இவருக்கு இலக்காகக்கூடிய வாக்குகள் அல்ல. இவருக்கு இலக்காகக்கூடிய 35 வயதுக்குக் கீழே உள்ளவர்களின் வாக்குகளை அ.தி.மு.க. ஏற்கனவே இழந்துவிட்டது. அவர்களில் பலர் நாம் தமிழருக்கு பலர் போய்விட்டார்கள். மற்றொரு பக்கம் தி.மு.கவில் இளைஞரணியை வலுப்படுத்தியிருக்கிறார்கள்.” என்கிறார்.

“வி.சி.கவில் உள்ள இளைஞர்களைப் பொறுத்தவரை, அவர்கள் திருமாவளவன் யாருக்கு வாக்களிக்கச் சொல்கிறாரோ அவருக்கே வாக்களிப்பார்கள். அவர்களைப் பொறுத்தவரை சினிமா பார்ப்பது வேறு, வாக்களிப்பது வேறு. ஆகவே விஜய் நினைப்பது நடக்காது” என்கிறார் அ. ராமசாமி.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ராஜன் குறையும் அப்படியே கருதுகிறார். “எம்.ஜி.ஆரைக் குறிப்பிட்டுப் பேசுவதன் மூலம், எடப்பாடி கவர்ச்சியான தலைவரில்லை என்று நினைப்பவர்களைத் தன் பக்கம் ஈர்க்க நினைக்கிறார் விஜய்.” என்கிறார்.

தொடர்ந்து பேசிய ராஜன், “ஆனால், அ.தி.மு.க. அடிப்படையில் வலுவான கட்டமைப்பைக் கொண்ட கட்சி. அவர்கள் தலைவர்கள் இல்லாமலேயே பிரச்னைகளை பேசுவார்கள். சமயங்களில் தலைவர்களைத் தாண்டியும் பேசுவார்கள். இங்கே யார் அப்படியிருக்கிறார்கள்? தவிர, சட்டமன்றத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் யார் போட்டியிடுகிறார்கள் என்பது முக்கியம்.”

“பெரும்பாலும் எல்லாக் கட்சிகளும் உள்ளூர் முகமாக, செல்வாக்கு உள்ளவர்களாக பார்த்து வேட்பாளர்களாக நியமிப்பார்கள். எல்லாத் தொகுதியிலும் யாரையாவது நிறுத்துவேன், நானே நின்றதாக நினைத்து வாக்களியுங்கள் என்றால் அது மக்களாட்சியே இல்லை. இது அவருக்குப் புரிந்த மாதிரியே தெரியவில்லை” என்கிறார்.

எம்.ஜி.ஆரின் வாக்குகளை குறிவைக்கும் முயற்சிகள்

படக்குறிப்பு, ‘விஜய், எம்.ஜி.ஆரைக் குறிப்பிடுவதன் மூலம் அ.தி.மு.கவின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறார்’ என்கிறார் ப்ரியன்.ஆனால், மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் இதனை வேறுவிதமாகப் பார்க்கிறார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், எம்.ஜி.ஆரைக் கையில் எடுத்தபோது அது அவருக்குச் சாதகமாக இருந்தது என்கிறார் அவர்.

“2007ல் விஜயகாந்த் எம்.ஜி.ஆரைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அவரது கட்சியினர் அவரை கறுப்பு எம்.ஜி.ஆர். என்று சொல்ல ஆரம்பித்தார்கள். அவர்கள் இப்படிப் பேசியது அ.தி.மு.கவினரை கடுமையாக ஆத்திரப்படுத்தியது. இதற்காக அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதாவே விஜயகாந்த்தை கடுமையாக விமர்சித்தார்” என நினைவுகூர்கிறார் ப்ரியன்.

“2008ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழாவை ராமாபுரம் தோட்டத்தில் கொண்டாடிய ஜெ. ஜெயலலிதா, விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்தார். ‘நான்தான் எம்ஜிஆரின் உண்மையான வாரிசு. இதில் யாரும் உரிமை கொண்டாட முடியாது. அப்படி யாராவது பேசினால், மக்கள் எள்ளி நகையாடுவார்கள். சிலருக்கு பித்தம் தலைக்கேறிவிட்டது’ என்று விஜயகாந்தைக் கடுமையாக விமர்சித்தார் ஜெயலலிதா. ஆனால், விஜயகாந்த்தும் இதனை அப்படியே விட்டுவிடவில்லை.”

“இது குறித்து விஜயகாந்திடம் கேட்டபோது, எம்.ஜி.ஆர். தன்னுடைய அரசியல் வாரிசு என யாரையும் சொல்லவில்லை. நான் எம்.ஜி.ஆரை மானசீக குருவாக நினைக்கிறேன். எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு” என்று பதிலடி கொடுத்தார். ஆனால், அவர் எம்.ஜி.ஆரோடு தன்னை ஒப்பிட்டதற்கு பலன் இருந்தது.” என்கிறார் ப்ரியன்.

“2006ஆம் ஆண்டு தேர்தலைவிட 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அவரது வாக்கு வங்கி உயர்ந்திருந்தது. ஆகவே, விஜய்யும் எம்.ஜி.ஆரைக் குறிப்பிடுவதன் மூலம் அ.தி.மு.கவின் வாக்குகளை தங்கள் பக்கம் இழுக்கப் பார்க்கிறார். அ.தி.மு.க. தற்போது பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்திருக்கும் நிலையில், அந்தக் கூட்டணியைப் பிடிக்காதவர்களின் வாக்குகள் தி.மு.கவுக்குப் போய்விடாமல் தனக்கு வர வேண்டுமென நினைக்கிறார் விஜய்” என்று ப்ரியன் கூறுகிறார்.

பட மூலாதாரம், DMDK Facebook

படக்குறிப்பு, “விஜயகாந்த், எம்.ஜி.ஆரோடு தன்னை ஒப்பிட்டதற்கு பலன் இருந்தது.” என்கிறார் ப்ரியன்.2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க. 8.38% வாக்குகளைப் பெற்றது. 2009ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் 10.29% ஆக அதிகரித்து.

ஆனால், இந்த சாத்தியம் குறித்து சந்தேகம் எழுப்பும் அ. ராமசாமி எம்.ஜி.ஆர். குறித்த பேச்சினால் வேறு சில நன்மைகள் நடக்கலாம் என்கிறார். “எடப்பாடி பழனிச்சாமியுடன் இருப்பவர்களில், பா.ஜ.கவுடன் அ.தி.மு.க. சேர்ந்ததில் அதிருப்தியில் இருப்பவர்கள் இருப்பார்கள். விஜய் எம்.ஜி.ஆரைப் போலத் தெரிகிறார் என்று கூறி, அவர்களில் சிலர் விஜய் கட்சியில் சென்று சேரலாம்.

அவரது கட்சியில் தமிழ்நாடு முழுவதும் தெரிந்த முகங்கள் குறைவாக இருக்கும் நிலையில், இதுபோல ஆட்கள் சென்று சேர்வது, அவருக்கு பலனளிக்கும். த.வெ.கவைப் பொறுத்தவரை இதுவே போதுமானதுதான்” என்கிறார் அவர்.

‘நிகழ்கால பிரச்னைகளை விஜய் பேசவில்லை’

பட மூலாதாரம், TVK

எம்.ஜி.ஆர். குறித்த பேச்சை விட்டுவிட்டால், அவரது உரை குறித்து ஏமாற்றமே எஞ்சுவதாகக் குறிப்பிடுகிறார் அ. ராமசாமி. “அவருடைய மேடைப் பேச்சு எவ்வித சாரமும் இன்றி இருந்தது. ஒருவர் அரசியல் மேடையில் ஏறும்போது, நேற்றுவரை என்ன நடந்தது என்பதைப் பேச வேண்டும். எம்.ஜி.ஆர்கூட அதைச் செய்தார். ஆனால், இவருடைய பேச்சு சுத்தமாக நிகழ்காலத்தோடு ஒட்டாமல் இருக்கிறது.” என்கிறார் அவர்.

மேலும், “எம்.ஜி.ஆரின் சினிமாகூட நிகழ்காலத்தோடு பொருந்தியிருந்தது. தமிழ்நாட்டில் இப்போது எத்தனையோ பிரச்னைகள் இருக்கின்றன. ஆணவக் கொலைகள் பற்றி, தூய்மைப் பணியாளர் போராட்டம் பற்றி ஒரு வார்த்தையும் பேசவில்லை. அவருடைய ரசிகர்களுக்கு இதெல்லாம் தேவையில்லை என நினைக்கிறாரோ எனத் தெரியவில்லை.”

“பா.ஜ.கவை எதிர்க்கப்போகிறோம் என்று சொல்லிவிட்டு, நீட் வேண்டாம், கச்சத்தீவு மீட்பு போன்ற விஷயங்களை முன்வைக்கிறார். அதை எல்லாக் கட்சிகளும் பேசிவிட்டன. கச்சத்தீவையெல்லாம் மீட்க முடியாது என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். இப்போது தேசிய அளவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பற்றி ஒரு வார்த்தையும் இல்லை” என்கிறார் அ. ராமசாமி.

இதற்கிடையில் மாநாடு நிறைவுக்கு வந்த நிலையில், மாநாட்டுத் தீர்மானங்களை அறிக்கையாக வெளியிட்டது அக்கட்சி. அந்த அறிக்கையில், பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு, சுந்திரமான, நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதை உறுதிசெய்ய வேண்டும், தமிழக மீனவர்கள் கைதுசெய்யப்படும் விவகாரம், ஆணவக் கொலைகளைத் தடுக்கத் தனிச் சட்டம், சட்டம் – ஒழுங்கு சீர் குலைவிற்கு தி.மு.க. அரசுக்குக் கண்டனம் போன்ற விஷயங்கள் இடம்பெற்றிருந்தன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like