ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60வது கூட்டத் தீர்மானத்தில் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை அமைக்க அதிகாரம் அளிக்க வேண்டும், அல்லது அத்தகைய பொறிமுறையை அமைக்க ஐ.நா. பொதுச் சபையிடம் கோரிக்கை விடுக்கும் விதமாக இருக்க வேண்டுமென வடகிழக்கு தமிழர் தாயகத்தை சேர்ந்த மதத்தiலைவர்கள் மற்றும் அரசியல் சிவில் அமைப்பு பிரதிநிதிகள் பகிரங்கமாக கோரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கை அரசிற்கான சர்வதேச விசாரணை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய நிரந்தர மற்றும் அவதானிப்பு நாடுகளின் அங்கத்துவர்களுக்கும் தமிழ் தரப்பில் இருந்து மற்றொரு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசியல் மற்றும் சிவில் சமூக தரப்பினரால் தெளிவுபடுத்தப்பட்டது.
இறையாண்மையைப் பன்னாட்டுக் குற்றங்களுக்கு எதிரான ஒரு கவசமாக பயன்படுத்த முடியாது என்பதே சட்ட ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் உறுதி செய்யப்பட்டுள்ள நியதி ஆகும். அதனை, சிரியாவுக்கு விசாரணை செய்ய ஐ.நா. மனித உரிமை ஆணையகம் ஏற்படுத்திய விசாரணைக் குழு போன்ற ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆகியவை எடுத்த செயற்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஈழத் தமிழர்கள் பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவோர் என்ற நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் இருக்கிறோம். இந்நம்பிக்கையின்படி பன்னாட்டு விசாரணையைக் கோருவதற்கு உரிமையும் எங்களுக்கு உள்ளது.
16 ஆண்டுகள் கடந்தும், தங்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலையின் உச்சத்தை உலகம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததுடன், நுணுக்கமாக அவ் இனப்படுகொலையை மறுப்பதும், அமைதியாக இருப்பதன் மூலம் புறக்கணிப்பதும் இலங்கை அரசினால் தொடர்ந்து மேற்கொண்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைச் செயல்களுக்கு உலகம் ஆதரவு அளிப்பதாகவே ஈழத் தமிழர்கள் உணர்ந்து வருகின்றனர எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..