Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
இராணுவத்தில் ஒருசில படையினர் ஏதேனும் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்கலாம். இதனை முழு இராணுவத்தினர் மீதும் தொடர்புபடுத்தி இராணுவத்தினர் யுத்தக் குற்றத்திலும், பாலியல் துஷ்பிரயோக செயற்பாடுகளிலும் ஈடுபட்டனர் என்று குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது.
சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் காலத்துக்கு பொருத்தமற்றவையென ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு, செலவுத்திட்டத்தின் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
ராஜபக்ஷக்களை ரணில் விக்கிரமசிங்கமே பாதுகாத்தார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் குறிப்பிட்டிருந்தார்.எங்களுக்கு எதிராக ரணில் விக்கிரமசிங்க செயற்பட்டார்.
அதிகளவில் வழக்குகளை தாக்கல் செய்தார். நல்லாட்சி அரசாங்கத்தில் ஊழல் ஒழிப்பு அலுவலகத்தின் செயலாளராக பதவி வகித்த ஆனந்த விஜேபால தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக செயற்படுகிறார். நீங்களே அந்த வழக்குகளை தாக்கல் செய்தீர்கள். அவற்றில் நாங்கள் நீதிமன்றத்தினால் நாங்கள் விடுதலையாகியுள்ளோம்.
கடந்த காலங்களில் ரணில் விக்கிரமசிங்க நாட்டின் இறையாண்மைக்ககு எதிராக செயற்பட்டார்.
ஆனால் தற்போது சர்வதேச ஊடகங்களில் அவர் நாட்டை காட்டிக்கொடுக்காமை தொடர்பில் மகிழச்சியடைகின்றோம்.
எமது அரசியல் மாற்றங்கள் என்பது வேறு விடயமாகும். நம்மிடையே நட்புறவுகள் உள்ளன. 2005இல் ஒரே மேடையில் இருந்தோம். 2015 இல் நீங்களும் ரணிலும் ஒரே மேடையில் இருந்தீர்கள். இப்போது பட்டலந்த அறிக்கையை நீங்களே முன்வைக்கின்றீர்கள். அன்று அந்த அறிக்கையை மறைத்து வைத்துக்கொண்டு இருந்தீர்கள்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் 2005இல் உடன்படிக்கை கைச்சாத்திடும் போது குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று கூறவில்லை. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் அமைச்சரவையிலும் இருந்தீர்கள். அப்போதும் பட்டலந்த அறிக்கை தொடர்பில் பேசவில்லை. ஆனால் இப்போது சர்வதேச ஊடகம் கேட்டதும் அந்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளீர்கள்.
நாங்கள் நாட்டை பாதுகாக்க வேண்டும். நாட்டின் முன்னாள் தலைவர் ஒருவர் வெளிநாட்டுக்கு சென்று எமது இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பதனை பகிரங்கமாக ஏற்றுக்கொள்ளும் நிலைக்கு சென்றால் மஹிந்த ராஜபக்ஷவுக்கோ, ரணில் விக்கிரமசிங்கவுக்கோ பாதகமாக அமையாது, முழு நாடும் நெருக்கடிக்குள்ளாக நேரிடும்.
பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், இராணுவத்தினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றார். இராணுவத்தினர் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்டனர் என்பது மட்டுன்றி பாலியல் வன்கொடுமைகளிலும் ஈடுபட்டதாகவும் கூறுகின்றார். ஏதேனும் சம்பமொன்று முன்னாள் இராணுவ சிப்பாயால் நடந்திருக்கலாம்.
ஒரு நபரின் செயற்பாட்டை முழு இராணுவத்தினருடனும் தொடர்புபடுத்த வேண்டாம்.
பாதாள கும்பல் தொடர்பில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் அதில் தலையீடு செய்து தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். அந்த நடவடிக்களை எடுக்கும் போது நாங்கள் உங்களை பாதுகாக்கின்றோம்.
பாதாள உலக கும்பலை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் போது பிலிப்பைன்ஸில் நடந்ததை போன்று மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உங்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நாங்கள் இடமளிக்கப் போவதில்லை. இதனால் இறுதியில் நாடே வீழ்ச்சியடையும்.
இங்கே சாணக்கியன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் காலத்திற்கு பொருத்தமானது அல்ல. இராணுவத்தினர் அன்று யுத்தம் செய்தனர். அதன்போது ஏதேனும் சம்பவம் இடம்பெற்றிருந்தால் அது தொடர்பில் விசாரணை செய்வதல்ல பிரச்சினை, இதனை அரசியல் விடயமாக மாற்றி, வருடங்கள் பலவற்றுக்கு பின்னரும் இதுபற்றி கூறிக்கொண்டு போனால் 1988 இல் நடந்த சம்பவத்தை 2028 இலும் கதைப்போம் என்றால், 2009இல் நடந்தவற்றை 2048 இலும் கதைக்க தயாராவோம் என்றால் அதனூடாக இந்த சமுகத்தில் வெறுப்புணர்வு உருவாகுவதை நிறுத்த முடியாது.
வெறுப்புணர்வற்ற அரசியலை இங்கே கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசு என்ற விடயத்தில் நாம் எல்லோரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்றார்