இலங்கை அரசிற்கான சர்வதேச விசாரணை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளருக்கும் ஐ.நா. மனித உரிமை ஆணைய நிரந்தர மற்றும் அவதானிப்பு நாடுகளின் அங்கத்துவர்களுக்கும் தமிழ் தரப்பில் இருந்து மற்றொரு கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள், மத தலைவர்கள், சிவில் சமூக தலைவர்கள் என பலரது கையொப்பத்துடன் குறித்த கடிதம் அனுப்பபட்டுள்ளது.
இது தொடர்பில் யாழ் ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அரசியல் மற்றும் சிவில் சமூக தரப்பினரால் தெளிவுபடுத்தப்பட்டது.
அக்கடிதத்தில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையின் 60ஆவது அமர்வு – ஸ்ரீலங்கா அரசிற்கான பன்னாட்டு விசாரணையும் நடவடிக்கை பற்றி
மிகத் தெளிவாக விடயங்களை வெளிப்படுத்தும் முகமாக எங்களால் எழுதப்படும் இந்தக் கடிதத்தை நீங்கள் இதற்கு முன் இதே விடயம் தொடர்பாக எழுதப்பட்ட கடிதங்களுடன் இணைத்தோ அல்லது தனித்தோ வாசிக்க முடியும் என்பதை தங்களின் கவனத்திற்குத் தருகிறோம்.
1. பன்னாட்டு விசாரணையை நிகழ்த்துவதற்காக 1948 ஆம் ஆண்டு இனப்படுகொலை வரைபின்கீழ் குற்றமாக அடையாளப்படுத்தப்பட்டவை நிகழ்த்தப்பட்டுள்ளதா என்பதையும் அக் குற்றங்களின் நோக்கத்தையும் மதிப்பீடு செய்யும் அதிகாரத்துடன் கூடிய, பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) நிறுவ வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எந்தவொரு விசாரணைக்கும் அளிக்கப்படும் அதிகாரம், 1948 இனப்படுகொலை வரைபின்படி முழுக் காலவரையறையையும் உள்ளடக்க வேண்டும்.
ஸ்ரீலங்காவின் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தமது தாயகத்தில் ஈழத் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்ட குற்றங்கள் சுயாதீன நீதிப்பொறிமுறையின் கீழ் விசாரிக்கப்பட வேண்டும் என உலகப் புகழ்பெற்ற பன்னாட்டு அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில், இலங்கை அரசின் செயற்பாடுகள், முழுஅளவிலோ அல்லது பகுதியளவிலேனும் ஈழத்தமிழரை அழிப்பதற்கான நோக்கத்தைக் கொண்டிருப்பதுடன் அவ்வழிப்புத் தொடர்பான எந்தவொரு விசாரணையும் நடைபெறாதவாறு நுட்பமாகத் தடை செய்துவருவதும் இனப்படுகொலை வரைபின் அகவிதி 2இன் படி இனப்படுகொலையாகும்.
1956 ஜூன் மாதம் ஸ்ரீலங்கா அரச ஆதரவுடன் சிங்களக் காடையர்களால் ஈழத் தமிழர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட கல்லோயாப் படுகொலைகள் என அறியப்படும் முதலாவது பாரிய இனவழிப்பு நடைபெற்ற நாளிலிருந்து, தம்மீது நடைபெற்ற பன்னாட்டுக் குற்றங்களை விசாரிக்கும் பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) அமைக்க வேண்டும் என ஐக்கிய நாடுகளிடம் தொடர்ந்து ஈழத்தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இப்பொறிமுறையின் ஊடாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் நீண்டநாளாகத் தொடரும் வேதனையினைத் தீர்க்கவும் காணாமலாக்கப்பட்டவர்களின் விதியை அறிந்துகொள்ளவும் முடியும்.
இந்த விசாரணையில் இலங்கை அரசின் பங்கு இருந்தால் அது பாரபட்சமானதாகும், ஏனெனில் இப்பன்னாட்டுக் குற்றங்களை நிகழ்த்தியவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்கள் அரசும் அரசுடன் தொடர்புடையவர்களும் ஆகும்.
இலங்கை அரசு, எந்தவொரு வகையிலும் பன்னாட்டு விசாரணைக்கு எதிராகவே இருப்பதுடன் ஈழத் தமிழர்களின் மீது தொடர்ச்சியாகக் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையினை நிகழ்த்தும் இடைவிடாத திட்டமிட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஐ.நா. சாசனத்தின் அகவிதி 2(7)இல் குறிப்பிடும் “அரசிற்கிருக்கும் இறையாண்மையினை” இதற்கான பாதுகாப்புக் கவசமாக ஸ்ரீலங்கா பயன்படுத்தி வருகிறது.
ஆனால், இறையாண்மையைப் பன்னாட்டுக் குற்றங்களுக்கு எதிரான ஒரு கவசமாக பயன்படுத்த முடியாது என்பதே சட்ட ரீதியிலும் நடைமுறை ரீதியிலும் உறுதி செய்யப்பட்டுள்ள நியதி ஆகும். இதனை, சிரியாவுக்கு விசாரணை செய்ய ஐ.நா. மனித உரிமை ஆணையகம் ஏற்படுத்திய விசாரணைக் குழு போன்ற ஐ.நா. பொதுச் சபை, ஐ.நா. பாதுகாப்புச் சபை ஆகியவை எடுத்த செயற்பாடுகள் உறுதிப்படுத்துகின்றன.
ஈழத் தமிழர்கள் பன்னாட்டு மனிதாபிமான சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படுவோர் என்ற நம்பிக்கையில் நாம் தொடர்ந்தும் இருக்கிறோம். இந்நம்பிக்கையின்படி பன்னாட்டு விசாரணையைக் கோருவதற்கு உரிமையும் எங்களுக்கு உள்ளது.
இவற்றினடிப்படையில் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் 60வது கூட்டத் தீர்மானம்,
(அ) ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) அமைக்க அதிகாரம் அளிக்க வேண்டும், அல்லது
(ஆ) அத்தகைய பொறிமுறையை அமைக்க ஐ.நா. பொதுச் சபையிடம் கோரிக்கை விடுக்கும் விதமாக இருக்க வேண்டும்.
எனக் கவனமாக வலியுறுத்துகிறோம். இந்தப் பொறிமுறைக்கு 1948ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை வரைபின் கீழ் குற்றச் செயல்களின் வடிவமைப்பைத் தீர்மானிக்கும் அதிகாரமும், சம்பந்தப்பட்ட முழு காலவரையறையையும் உள்ளடக்கும் அதிகாரமும் கட்டாயம் வழங்கப்பட வேண்டும்.
2. ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கு ஸ்ரீலங்கா அரசின் பொறுப்பை நிரூபிக்க, இனப்படுகொலைக் குற்றத்தைத் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் வரைபின் அகவிதி IX ன் கீழ், முழுமையான காலவரையறையையும் உள்ளடக்கும் வகையில், ஸ்ரீலங்கா குடியரசுக்கு எதிராக நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் (ICJ) ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் உறுப்பினர், பார்வையாளர் நாடுகள், வழக்குத் தொடங்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
ஸ்ரீலங்காவின் பாதுகாப்புத்துறை அமைச்சராக இந் நாட்டின் சனாதிபதி உள்ள நிலையில் ஸ்ரீலங்கா பாதுகாப்பு படைகள் செய்த போர் குற்றங்களும், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களும் அரசின் முழுமையான ஒத்துழைப்பின்றி சாத்தியமற்றவை எனவும் அரசின் நேரடி பொறுப்புடனேயே நிகழ்ந்ததாகவும் சுயாதீனமாக அங்கீகரிக்கப்பட்ட பல்வேறு அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இங்கு குறிப்பாக, ஐ.நா. பொதுச் செயலரின் நிபுணர் குழு (2011), இலங்கை தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையரின் விசாரணை ( OISL அறிக்கை, 2015), மற்றும் 2007இல் சித்திரவதைகளுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளரின் பயணம் ஆகிய அறிக்கைகளைக் கருத்திற்கொண்டாலே இக்குற்றங்கள் அரச பின்புலத்தில் நிகழ்த்தப்பட்டதற்குப் போதுமான ஆதாரங்களை வழங்கியுள்ளன. இந்த உறுதியான ஆதாரத் தொகுப்பு, ஸ்ரீலங்காவிற்கு எதிராகப் பன்னாட்டு நீதிமன்ற நடவடிக்கைகளை ஆரம்பிக்க ஆதாரமாக இருக்கும் என நாங்கள் நம்புகிறோம்.
இப்போது 16 ஆண்டுகள் கடந்தும், தங்கள் மீது நடைபெற்ற இனப்படுகொலையின் உச்சத்தை இந்த உலகம் வெறுமனே பார்த்துக்கொண்டிருந்ததுடன், நுணுக்கமாக அவ் இனப்படுகொலையை மறுப்பதும், அமைதியாக இருப்பதன் மூலம் புறக்கணிப்பதும் ஸ்ரீலங்கா தொடர்ந்து மேற்கொண்டு வரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைச் செயல்களுக்கு உலகம் ஆதரவு அளிப்பதாகவே ஈழத் தமிழர்கள் உணர்ந்து வருகின்றனர்.
1948 இனப்படுகொலை வரைபின் அகவிதி IX இல் குறிப்பிடப்பட்டிருக்கும் உடன்படிக்கை அடிப்படையிலான அதிகாரப் பிரிவின் கீழ், அவ்வரைபில் பங்கேற்றிருக்கும் இரண்டு நாடுகளுள் ஒன்று, மற்றொரு நாடு மேற்கொள்ளும் மீறல்களைக் குற்றஞ்சாட்டி நேரடியாக வழக்குத் தொடங்கலாம். ஸ்ரீலங்கா 12 அக்டோபர் 1950 அன்று அவ்வரைபின் அகவிதி IX உட்பட அனைத்து விதிமுறைகளையும் ஏற்றுக்கொண்டு அவ்வரைபில் இணைந்துள்ளது. இதனால், UNHRC இன் எந்த ஒரு உறுப்பினர் அல்லது பார்வையாளர் நாடும், ஈழத் தமிழர்கள் மீதான இனப்படுகொலைக்கான ஸ்ரீலங்கா அரசுப் பொறுப்பை நிரூபிக்க நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.
எனவே, குறைந்தபட்சம் ஒரு உறுப்பினர் அல்லது பார்வையாளர் நாடு, ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான ஸ்ரீலங்கா அரசின் பொறுப்பை நிரூபிப்பதற்காக, இனப்படுகொலை வரைபில் அகவிதி IX கீழ், ஸ்ரீலங்கா குடியரசுக்கு எதிராக நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடங்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம்.
3. இலங்கையின் வடபகுதியில் உள்ள செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வாராய்ச்சிகளை மேற்பார்வை செய்வதற்காக, “மனிதப் புதைகுழி பாதுகாப்பு மற்றும் விசாரணைக்கான சர்வதேச நெறிமுறைகள் – போர்ன்மொத் நெறிமுறை” (The Bournemouth Protocol) கீழ் அதிகாரம் வழங்கப்பட்டு பன்னாட்டு நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என வலியுறுத்தல்.
வலியுறுத்தல் 1-இன் பந்திகள்; 3 மற்றும் 4-ஐ மேற்கோள் காட்டுகையில், ஸ்ரீலங்கா அரசின் ஆதரவோடு நடைபெறும் எந்தவொரு விசாரணையும் இயல்பாகவே பாகுபாடுடையதாக இருக்கும் என்பது தெளிவாகிறது. செம்மணி மனிதப் புதைகுழி, ஈழத் தமிழ் பொதுமக்கள் கடத்தப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்பட்டு, புதைக்கப்பட்டதற்கான வெளிப்பட்ட சான்றாக திகழ்கிறது. எலும்புக் காவல்கள், பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள், இளம் குழந்தைகள் கூட இருந்ததை வெளிப்படுத்துகின்றன.
முப்படை மற்றும் காவல்துறையை உள்ளடக்கிய அரசின் ஆதரவுடன் செயல்பட்ட அமைப்புகள், ஈழத் தமிழ் பொதுமக்களை படுகொலை செய்து, இரகசியமாக புதைத்தன என்பதற்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் உள்ளன. அரசின் ஆதரவுடன் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்ட சமூகம்; தங்களைப் பாதுகாக்க முயன்ற போதிலும், “உலகளாவிய பயங்கரவாதத்துக்கு எதிரான போர்” என்ற கோதாவில் ஈழத் தமிழ்மக்களின் மீது அழித்தொழிப்பு நடத்தப்பட்டது. செம்மணி மனிதப் புதைகுழியானது பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளைத் தாண்டி, அடையாளம் காணப்பட்ட ஈழத்தமிழ் மக்களைப் பகுதியளவிலேனும் அழிக்கத் திட்டமிட்ட நோக்கம் இருந்ததை வெளிப்படுத்தும் உறுதியான சான்றாகும். இது, ஈழத்தமிழர் மீதான இனப்படுகொலைக் குற்றச்சாட்டை வலுப்படுத்துகிறது.
ஸ்ரீலங்காவின் நீதித்துறை வரலாற்றில், சட்டத்திற்குப் புறம்பான கொலைகளுக்கான ஆதாரங்கள் மறைக்கப்பட்ட அல்லது அழிக்கப்பட்ட பல சம்பவங்கள் உள்ளன. மொஹமட் தாஜுதீன் வழக்கு அவற்றில் ஒன்று. இத்தகைய அச்சுறுத்தும் முறை, உள்நாட்டு விசாரணைகளின் நேர்மையைப் பற்றித் தீவிரமான சந்தேகங்களை எழுப்புகிறது. இத்தகைய செயல்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்ற எந்த அறிகுறியும் இல்லை, மேலும் செம்மணி வழக்கும் அதே நிலையை சந்திக்கும் என்ற நியாயமான அச்சம் ஈழத்தமிழ் மக்களிடம் உள்ளது. ஊடக அறிக்கைகளின் படி 2023 செப்டம்பரில், ஸ்ரீலங்காவின் வடபகுதியான முல்லைத்தீவில் பணியாற்றிய ஒரு தமிழ் நீதிபதி, உயிரச்சுறுத்தல் மற்றும் கடுமையான மன அழுத்தம் காரணமாக, தனது பதவியை விடுத்து ஸ்ரீலங்காவை விட்டு வெளியேறினார். அவரின் ராஜினாமா, ஒரு தொல்பொருள் தள வழக்கை உள்ளடக்கிய சில நுணுக்கமான வழக்குகளுக்கான அழுத்தம் மற்றும் அவரின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமை காரணமாக ஏற்பட்டது. இது, இங்கு பாதுகாப்பின்மையையும் நீதித்துறையின் சுயாதீனமின்மையையும் வெளிப்படுத்துகிறது.
இந்த உண்மைகளின் அடிப்படையில், செம்மணி மனிதப் புதைகுழி தளத்தில் நடைபெற்று வரும் அகழ்வாராய்ச்சியை மேற்பார்வை செய்து கண்காணிக்கவும், வழக்கு நடைமுறைகளில் பன்னாட்டுத் தலையீட்டை எளிதாக்கவும், “போர்ன்மொத் நெறிமுறை” (The Bournemouth Protocol ) பிரேரிக்கும் அதிகாரத்துடன் கூடிய சுயாதீன நிபுணர் குழுவை அமைக்க வேண்டும் என்ற முன்மொழிவை, ஐ.நா. மனித உரிமை ஆணையகத்தின் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.
4. ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 60ஆவது தீர்மானத்தில், பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு வரைபுகளுக்கு முரணான தற்போதுள்ள மற்றும் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் திருத்தச் சட்டங்கள் மற்றும் புதிய சட்டங்களை இயற்றுவதை நிறுத்துமாறு வலுவான அழைப்பைச் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
1983 ஆகஸ்ட் 8 அன்று இலங்கை அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 6ஆவது திருத்தச் சட்டம், குமுகாய மற்றும் அரசியல் உரிமைகள் குறித்த பன்னாட்டு உடன்படிக்கை (ICCPR – 23 மார்ச் 1976) ஐ வெளிப்படையாக மீறுகிறது. இது, சுயாட்சி அரசியல் நிலையைத் தீர்மானிக்கும் உரிமையை அமைதியான முறையில் வலியுறுத்துவதை குற்றமாக்குகிறது. இதன்மூலம் இவ்வரசியலமைப்புத்திருத்தமே பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தின் (PTA) முன்னோடியாகச் செயல்பட்டது. மேலும் இத்திருத்ததமானது தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் பதவியை பறித்தும், அரசியல் கருத்தொன்றை மட்டும் கொண்டதற்காக கடுமையான குடியுரிமைத் தடைகளையும் விதித்தும் வருகிறது.
இந்த திருத்தச் சட்டம், அகவிதி 1இன் கீழ் ஈழத்தமிழ் மக்களுக்கு தங்கள் அரசியல் நிலையை சுதந்திரமாகத் தீர்மானிக்கும் உரிமையை மறுக்கிறது. அகவிதி 19இன் கீழ் பாதுகாக்கப்படும் ஜனநாயக கருத்துச் சுதந்திரத்தை ஒடுக்குகிறது. அகவிதி 25 இன் கீழ் உறுதியளிக்கப்படும் அரசியல் பங்கேற்பைத் தடுக்கிறது. மேலும், அகவிதி 26 ஐ மீறி, ஒரேயொரு சமூகத்தை மட்டுமே குறிவைக்கிறது. இதனால், தமிழ்த் தேசியப் பிரச்சனைக்கு ஜனநாயக வழிமுறைகளால் தீர்வு காணும் அனைத்து வாயில்களையும் மூடியதன் ஊடாக ஸ்ரீலங்காவின் பன்னாட்டுக் கடப்பாடுகளுக்கு முரணான கட்டமைப்பை வலுப்படுத்தியுள்ளது.
இருப்பினும், ஸ்ரீலங்கா அரசு, இத்தகைய கொடூரமான நடவடிக்கைகளின் அடிப்படைக் காரணமான 6வது திருத்தச் சட்டத்தைத் தொடாமல், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தினை நீக்குவதற்கு மட்டுமே ஒப்புக்கொண்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தினைப் போன்ற அடக்குமுறைச் சட்டங்களை உருவாக்கும் வழி திறந்தேயிருக்கின்றது. மேலும், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தினை நீக்குவதற்கான தெளிவான காலக்கெடு எதுவும் இல்லை. இதனால், பயங்கரவாதத் தடுப்பு சட்டமானது தொடர்ந்தும் அடக்குமுறை மற்றும் அச்சத்தின் கருவியாக இருந்து வருகிறது. குறிப்பாக பயங்கரவாதத் தடுப்பு சட்ட நடைமுறையில், ஈழத் தமிழ் குமுகாய மற்றும் அரசியல் செயற்பாட்டாளர்கள், மனித உரிமை பாதுகாப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், இராணுவம் கைப்பற்றிய நிலங்களின் உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அச்சத்தில் வாழ்கிறார்கள்.
2007 ஆம் ஆண்டின் இலங்கை ICCPR சட்டமும், நிகழ்நிலை பாதுகாப்புச் சட்டமும் பன்னாட்டு ICCPR இன் கொள்கைகளை முழுமையாகவும் ஒருமைப்பாட்டுடனும் நடைமுறைப்படுத்தாததால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளன. அவற்றின் அமுலாக்கம் பெரும்பாலும் காவல்துறையின் கீழ் இருப்பதால், தமிழர், முஸ்லிம்கள், சிங்களவர்கள் உள்பட பல்வேறு சமூகங்களுக்கு எதிராக அச்சட்டங்கள் பிரயோகிக்கப்படும்போது பாகுபாடாகப் பொருள்கோருவதும் விளக்கமளிப்பதும் செயற்படுவதும் நிகழ்கிறது.
எனவே, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்தில், 6வது திருத்தச் சட்டத்தை நிறுத்தவும், பயங்கரவாதத் தடுப்பு சட்டத்தினை ஒரு குறிப்பிட்ட மற்றும் அமுலாக்கக்கூடிய காலக்கெடுவில் நீக்கவும் ஸ்ரீலங்காவிற்குத் தெளிவான, உறுதியான கோரிக்கையைச் சேர்க்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். மேலும், பயங்கரவாதத் தடுப்பு சட்ட விதிகளை இன்னும் ஆபத்தான பிரிவுகளுடன் மீண்டும் அறிமுகப்படுத்தும் அல்லது மாற்றியமைக்கும் எந்தச் சட்ட முயற்சிகளையும் ரத்து செய்யவும் வலியுறத்த வேண்டும். மற்றும், 6வது திருத்தச் சட்டம் போன்ற, பன்னாட்டு மனித உரிமை மற்றும் மனிதாபிமான பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு முரணான எந்தவொரு சட்டத்தினையோ அல்லது அரசியலமைப்பு திருத்தங்களையோ எதிர்காலத்தில் உருவாக்குவதைத் தடுக்க வேண்டும். மேலும், ஈழத் தமிழ் பகுதிகளில் சிங்களக் குடியேற்றத்தை ஊக்குவிக்கும், அமைதியான இணைந்த வாழ்வை அச்சுறுத்தும், மற்றும் நிலங்களை மறுபெயரிடல் அல்லது அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கைப்பற்றும் சட்டங்கள் மற்றும் கொள்கைகளை நிறுத்துவதையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்
முடிவாக, மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 60ஆவது அமர்வு தனது தீர்மானத்தில் பின்வரும் நடவடிக்கைகளை சேர்க்குமாறு வலியுறுத்தப்படுகிறது:
1. 1948ஆம் ஆண்டு இனப்படுகொலைக் குற்றங்களைத் தடுக்கும் மற்றும் தண்டிக்கும் வரைபின் படி முழுக் காலஅளவு அதிகாரத்தை உள்ளடக்கிய பணி ஆணையுடன், பன்னாட்டுச் சுயாதீன மற்றும் பாரபட்சமற்ற பொறிமுறையொன்றை (IIIM) நிறுவுதல்.
2. பன்னாட்டுச் சட்டத்தின் கீழ் தங்களின் கடமைகளின் படி, உறுப்புநாடுகள் மற்றும்-அல்லது பார்வையாளர் நாடுகள் ஸ்ரீலங்காவிந்கு எதிராக நீதிக்கான பன்னாட்டு நீதிமன்றத்தில் (ICJ) வழக்குத் தொடங்குதல்.
3. செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகள் மீது சுயாதீன மேற்பார்வை மற்றும் கண்காணிப்பை உறுதி செய்ய போர்ன்மொத் நெறிமுறையை செயல்படுத்தக்கூடிய பன்னாட்டு நிபுணர் குழுவை அமைத்தல்.
4. பன்னாட்டு மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான சட்டப் பொறுப்புகளுக்கு முரணான தற்போதைய அல்லது எதிர்கால சட்ட நடவடிக்கைகளின் இயற்றுதலை இடைநிறுத்தி, தடைசெய்தல் – என்றுள்ள