உயிர்கள் வாழ இன்னொரு இடம்? – பூமிக்கு அருகே வாயு கோளத்தை கண்டறிந்த விஞ்ஞானிகள்
பட மூலாதாரம், NASA, ESA, CSA, STScI, R. Hurt (Caltech/IPAC)
படக்குறிப்பு, ஆல்ஃபா சென்டாரி ஏ-வைச் சுற்றி வரும் ஒரு வாயு கோளின் மாதிரி படம். வலது மற்றும் இடது புறம் உள்ள இரு பிரகாசமான நட்சத்திரங்களின் மத்தியில் புள்ளியாக உள்ள சிறிய ஒளி தான் நமது சூரியன்எழுதியவர், ஜார்ஜினா ரன்னார்ட்பதவி, அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
நமது சூரிய மண்டலத்திற்கு அருகிலுள்ள நட்சத்திர அமைப்பில் ஒரு பிரம்மாண்ட வாயு கோள் இருப்பதற்கான வலுவான ஆதாரங்களை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நான்கரை ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள இந்த உயிரற்ற கோள், வானியல் அடிப்படையில் பூமிக்கு நெருக்கத்தில் உள்ள அண்டை கோளாக இருக்கும் என்பதுடன் உயிரைத் தாங்கக்கூடிய நிலவுகளைக் கொண்டிருக்கலாம்.
இந்த அறிகுறிகள், ஆல்ஃபா சென்டாரி நட்சத்திர அமைப்பில், சக்திவாய்ந்த ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் கண்டறியப்பட்டன.
இந்த சாத்தியமான கோள் கடந்த ஆண்டு (2024 ஆகஸ்ட்) கண்டறியப்பட்டது, ஆனால் அதன் பின்னர் பார்வையிட்டபோது அது மறைந்துவிட்டது. இந்தக் கோள் நிச்சயமாக இருப்பதை உறுதிபடுத்த வானியலாளர்கள் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
சூரிய குடும்பத்தைச் சேராத இந்தக் கோளின் நட்சத்திரத்திற்கும் நமது சூரியனுக்கும் ஒற்றுமைகள் இருப்பதால், இந்த கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“நான்கு ஆண்டுகள் என்பது நீண்ட தூரம், ஆனால் பால்வெளி அளவில் இது மிக அருகில் உள்ளது – இது நமது அண்டைப் பகுதியில் உள்ளது,” என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் விண்வெளி கருவிகள் இணைப் பேராசிரியர் டாக்டர் கார்லி ஹோவெட் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வியாழனின் நிலவான யூரோப்பாவின் சித்தரிப்புப்படம், இதன் கடல் பகுதியில் உயிரின் அறிகுறிகள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர் மேலும் அவர், “இது சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி உள்ளது, அதே வெப்பநிலையும் பிரகாசமும் கொண்டது. வாழக்கூடிய உலகங்களைப் பற்றி நாம் சிந்திக்க விரும்பினால் இது மிகவும் முக்கியமானது,” என்று தெரிவித்தார்.
இந்தக் கோள், நமது சூரிய மண்டலத்தின் வாயு கோள்களான சனி மற்றும் வியாழனைப் போன்று இருக்கும், மேலும் அடர்த்தியான வாயு மேகத்தால் சூழப்பட்டிருக்கும்.
அதாவது, இந்தக் கோளில் உயிர்கள் இருக்க முடியாது. ஆனால் அதைச் சுற்றி வரும் நிலவுகள் உயிர்கள் வாழக்கூடியவையாக இருக்கலாம்.
நமது சூரிய மண்டலத்தில் உள்ள வியாழன் மற்றும் பிற கோள்களில் பனியால் ஆன நிலவுகள் உள்ளன, அவை உயிரைத் தாங்கக்கூடியவை என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.
இந்த சாத்தியத்தை தற்போது யூரோப்பா கிளிப்பர் மற்றும் ஜூஸ் என்கிற விண்வெளி ஆய்வு திட்டங்களின் மூலம் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.
இந்த கோள்கள் நமது சூரியனிலிருந்து வெகு தொலைவில் உள்ளன. ஆனால், இந்த “புதிய” கோள் ஒப்பீட்டளவில் அதன் நட்சத்திரத்திற்கு அருகில் உள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (கோப்புப்படம்)தொலைதூரப் பொருட்களை புகைப்படம் எடுப்பதற்கு தற்போது விஞ்ஞானிகள் வசம் இருக்கும் கருவியான ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் நேரடி படமாக்கல் மூலம் இந்த அறிகுறிகள் கண்டறியப்பட்டன.
“இந்த நட்சத்திரங்கள் மிகவும் பிரகாசமாகவும், அருகிலும் வானத்தில் வேகமாக நகரக்கூடியவையாகவும் இருப்பதால், உலகின் மிக சக்திவாய்ந்த விண்வெளி தொலைநோக்கியைப் பயன்படுத்தினாலும் இந்த அவதானிப்புகளை மேற்கொள்வது மிகவும் சவாலானது,” என்று நாசாவின் ஜெட் ப்ரொபல்ஷன் ஆய்வகத்தைச் சேர்ந்தவரும் இந்த புதிய கண்டுபிடிப்புகளின் இணை ஆசிரியருமான சார்லஸ் பைச்மேன் கூறினார்.
இந்த நட்சத்திரங்கள் பெருமளவு பிரகாசமான ஒளியை உருவாக்குகின்றன, இது அருகிலுள்ள பொருட்களை மறைக்கக்கூடும்.
அதனால் தான் இந்தக் கோள் 2024 ஆகஸ்டில் ஒரு முறை கண்டறியப்பட்ட பிறகு மீண்டும் தேடியபோது மறைந்துவிட்டதாகத் தோன்றியிருக்கலாம்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”ஒருவேளை அந்த கோள் நட்சத்திரத்தின் பின்னால் இருந்திருக்கலாம் அல்லது பார்க்க முடியாத அளவுக்கு அருகில் இருந்திருக்கலாம். இதற்கு கொஞ்சம் அதிர்ஷ்டமும் தேவை,” என்று டாக்டர் ஹோவெட் கூறினார்.
வானியலாளர்கள் இப்போது இந்தக் கோளை பற்றிய புதிய அறிகுறிகளைத் தேடுவார்கள். இதற்கு, 2027இல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் புதிய நாசா தொலைநோக்கியான கிரேஸ் ரோமன் விண்வெளி தொலைநோக்கியை பயன்படுத்த முடியும் என அவர்கள் நம்புகின்றனர்.
ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியின் எதிர்கால ஆய்வுகள், ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்கிற முறை மூலம் இந்த கோள் எதனால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதைப் பற்றி நமக்கு தெரிவிக்க முடியும்.
இது, கோளின் தோற்றம் மற்றும் அதைச் சுற்றி வரும் நிலவுகளின் வாழக்கூடிய தன்மை பற்றி மிகவும் விரிவான தகவல்களை வழங்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு