ரஷ்ய எரிவாயுவை ஐரோப்பாவிற்கு கொண்டு சென்ற நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்கள் மீது 2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் தாக்குதல் தொடர்பாக ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக யேர்மன் வழக்கறிஞர்கள் இன்று வியாழக்கிழமை அறிவித்தனர்.
சந்தேக நபரான உக்ரைன் நாட்டவர் இத்தாலியின் ரிமினி அருகே கைது செய்யப்பட்டதாக ஒரு அறிக்கையில் வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். அவர்கள் தங்கள் இத்தாலிய சகாக்கள் மற்றும் பிற சர்வதேச சட்ட அமலாக்க நிறுவனங்களின் உதவிக்கு நன்றி தெரிவித்தனர்.
யேர்மன் தனியுரிமைச் சட்டங்களின்படி செர்ஹி கே என்று மட்டுமே அடையாளம் காணப்பட்ட அந்த நபர், குழாய்களில் வெடிபொருட்களை வைத்த குழுவைச் சேர்ந்தவர் என்றும், தாக்குதலை ஒருங்கிணைக்க உதவியதாக நம்பப்படுகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறித்த நபரை ஒரு இரவில் கைது செய்ய வழிவகுத்தமை பிரமிக்க வைக்கும் வெற்றியை என நீதி அமைச்சர் ஸ்டெபானி ஹுபிக் பாராட்டினார். மேலும் வழக்கு முழுமையாக தீர்க்கப்பட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
செப்டம்பர் 26, 2022 அன்று, நோர்ட் ஸ்ட்ரீம் உள்கட்டமைப்புக்கு அருகில், நீருக்கடியில் தொடர்ச்சியான வெடிப்புகள் நிகழ்ந்ததை டேனிஷ் அதிகாரிகள் கண்டறிந்தனர். சந்தேகத்திற்குரிய நாசவேலை மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட எரிவாயு கசிவுகள் காரணமாக மூன்று குழாய்கள் செயல்பட முடியாமல் போயின.
ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்பே சர்ச்சைக்குரியதாக இருந்த இந்த குழாய்வழிகள், பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைனில் முழு அளவிலான போரைத் தொடங்கிய பின்னர் மேலும் சர்ச்சைக்குரியதாக மாறியது. இதன் பின்னர் இக்குழாய்கள் நீருக்கடியில் குண்டு வைத்து தகர்க்கப்பட்டன.
நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்கள் மீதான தாக்குதலை ரஷ்யாவே நடத்தியதாக மேற்கு நாடுகளும் அதன் ஊதுகுழல் ஊடகங்களும் பொய்யான பரப்புரைகளை முன்னெடுத்தன. இருந்தாலும் இதனை அமெரிக்காவின் உளவு அமைப்பு அல்லது உக்ரைனே இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என்று பலரும் நம்பியிருந்த நிலையில் தற்போது உக்ரைன் நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.