பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ்45 நிமிடங்களுக்கு முன்னர்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில், காய்ச்சலுக்கு பரிந்துரைக்கப்பட்ட மாத்திரையை விழுங்கிய நான்கு வயது சிறுவன் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருத்தணி அருகே உள்ள பி.ஆர். பள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதியின் நான்கு வயது மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 18) காலை, காய்ச்சல் காரணமாக திருத்தணியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
மருத்துவர் சிறுவனுக்கு சில மாத்திரைகளை பரிந்துரைத்துள்ளார். அன்று இரவு அந்த மாத்திரைகளை மகனுக்கு வழங்கியதாக பெற்றோர் கூறுகின்றனர். அதை விழுங்கும்போது, மாத்திரை தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர்.
ஆனால், மருத்துவமனையில் சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுக்கும்போது என்னென்ன விஷயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும்? பெரியவர்களுக்கும் இதுபோல நடக்க வாய்ப்புள்ளதா?
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
குழந்தைகளுக்கு மாத்திரைகளை கொடுக்கலாமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே'”5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு உணவுப் பொருள்கள் மற்றும் அவர்கள் கைக்கு எளிதில் கிடைக்கக்கூடிய சிறிய பொருள்கள் மூச்சுத் திணறலை ஏற்படுத்தலாம். அவை தொண்டையில் சிக்கி காற்றுப்பாதையை அடைக்கும்போது, நுரையீரல் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் செல்வதைத் தடுக்கலாம். மூளைக்கு 4 நிமிடங்களுக்கு மேல் ஆக்ஸிஜன் செல்லாமல் இருக்கும்போது, அது மூளை பாதிப்பு அல்லது மரணத்திற்கு கூட வழிவகுக்கும்.” என ‘அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ்’ தெரிவிக்கிறது.
ஆனால், “மாத்திரைகளை முழுங்குவது சிறு குழந்தைகளுக்கு மட்டுமல்ல, (சில) பெரியவர்களுக்கும் கூட எளிதானது அல்ல. மாத்திரைகளை முழுங்குவது, மூன்றில் ஒருவருக்கு வாந்தி, குமட்டல் உணர்வு அல்லது மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது.” என ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி தெரிவிக்கிறது.
இதுகுறித்துப் பேசிய ஈரோட்டைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் அருண்குமார், “பொதுவாகவே 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரைகளை அப்படியே கொடுப்பதைத் தவிர்க்கலாம். தண்ணீரில் பொடித்துக் கொடுப்பது சிறந்தது. குழந்தைகளுக்கு பரிந்துரைக்கப்படும் மாத்திரைகள் பெரும்பாலும் எளிதில் நீரில் கரையக்கூடியவையே” என்கிறார்.
படக்குறிப்பு, சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.பொதுவாக வாயில் சிறிதளவு தண்ணீரை வைத்துக்கொண்டு, பின்னர் மாத்திரையை வாயில்போட்டு விழுங்குவது சிறந்தது எனக் கூறும் அவர், “ஆனால், குழந்தைகளை அவ்வாறு செய்யவைப்பது சுலபமல்ல என்பதால், பொடித்துக்கொடுப்பது நல்லது.” என்கிறார்.
சில மருந்துகள் மாத்திரை வடிவங்களில் மட்டுமே இருக்கும், சிரப் வடிவில் கூட கிடைக்காது என்பதால், சிறு குழந்தைகளுக்கு மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுவது வழக்கமானது தான் என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
“குழந்தைகளுக்கு அதைக் கொடுப்பது தொடர்பான அறிவுறுத்தல்களையும் மருத்துவர்கள் வழங்குவர். ஆனால் இறுதியாக, பெற்றோர் தான் குழந்தைகளுக்கு மாத்திரைகள் கொடுப்பதில் மிகக்கவனமாக இருக்கவேண்டும்.” என்றும் அவர் கூறுகிறார்.
குழந்தைகளில் மூச்சுத் திணறல் தொடர்பான இறப்பு அபாயத்தைக் குறைக்க, மாத்திரைகளை நசுக்கி தண்ணீருடன் கொடுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனமும் (WHO) பரிந்துரைக்கிறது.
பெரியவர்களும் கவனமாக இருக்க வேண்டுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மாத்திரைகளை அப்படியே விழுங்கவேண்டுமென எந்தக் கட்டாயமும் இல்லை என்கிறார் மருத்துவர் அருண்குமார்.’மாத்திரைகளை விழுங்குவது என்பது பெரியவர்களுக்கு குறிப்பாக 65 வயதிற்கு மேற்பட்டோருக்கு மிகவும் கடினமானது. வயது மூப்பின் காரணமாக அவர்கள் அதிக மாத்திரைகள் எடுத்துக்கொள்வதால், மாத்திரைகளை விழுங்குவது மூலம் மூச்சுத்திணறல் ஏற்படக்கூடிய வாய்ப்பு அதிகம்’ என்று ஹார்வர்ட் மருத்துவப் பள்ளியின் கட்டுரை தெரிவிக்கிறது.
குமட்டல், வாந்தி மற்றும் மூச்சுத்திணறல் போன்ற பிரச்னைகளால், அவர்கள் ஒருகட்டத்தில் மாத்திரைகளை உட்கொள்வதையே தவிர்ப்பதாகவும், இதனால் அவர்களது உடல்நிலை மேலும் மோசமாக மாறுகிறது என்றும் அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது.
மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும் என்றும், உதாரணத்திற்கு 19.5 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்கர்களால் எடுத்துக்கொள்ளப்படும் நீரிழிவு நோய்க்கான மிகவும் பொதுவான மருந்தான மெட்ஃபோர்மின் போன்றவை அளவில் பெரிதாக இருப்பதும் ஒரு முக்கியப் பிரச்னை என அந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
“முதியோர்களுக்கு மாத்திரை கொடுக்கும்போதும் கவனமாக இருக்கவேண்டும். அவர்களுக்கும் நீரில் கரைத்துக் கொடுப்பது நல்லது. மாத்திரையை விழுங்கியே ஆக வேண்டும் என எந்தக் கட்டாயமும் இல்லை. கேப்சியூல் வடிவில் இருந்தாலும் பிரித்து, நீரில் கரைத்துக் கொடுக்கலாம்.” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டால் என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.”குழந்தைகள், பெரியவர்கள் என தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி, மூச்சுத்திணறல் ஏற்பட்டால், ஹெய்ம்லிச் மனேவர் என்ற முதலுதவி முறையை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
பொதுவாக ஒருவருக்கு தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கி மூச்சுத்திணறல் ஏற்பட்டால், உடனே முதுகில் தட்டுவது என்பது பலரும் செய்யக்கூடிய ஒன்று. ஆனால், அது பெரிதாக பலனளிக்கக்கூடிய ஒரு முறை அல்ல என்பது மட்டுமல்லாமல், தொண்டையில் சிக்கியுள்ள பொருள் மேலும் கீழே செல்லவும் வாய்ப்பு உள்ளது என்பதால் இந்த ஹெய்ம்லிச் மனேவர் (Heimlich maneuver) முறை பரிந்துரைக்கப்படுகிறது என ஒரு ஆய்வு கூறுகிறது.
குறிப்பாக, 1960களில் அமெரிக்காவில், உணவு, பொம்மைகள் மற்றும் பிற பொருட்களால் மூச்சுத்திணறல் ஏற்படுவது என்பது தற்செயலான மரணங்களுக்கு ஆறாவது முக்கிய காரணமாக இருந்தது. அதன் பிறகு, 1974இல் இந்த ஹெய்ம்லிச் மனேவர் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
ஆனால், ஒருவயதுக்குட்பட்ட குழந்தைகள், மூச்சுத்திணறலால் சுயநினைவு இழந்தவர்கள் மற்றும் கர்ப்பிணிப் பெண்களுக்கு இது பரிந்துரைக்கப்படுவதில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மாத்திரையின் வடிவம், அளவு, அமைப்பு அல்லது சுவை கூட அதை விழுங்குவதில் சிரமங்களைத் தூண்டக்கூடும்.மூச்சுத்திணறல் அல்லது தொண்டையில் ஏதேனும் பொருள் சிக்கிக்கொண்டதற்கான அறிகுறிகள் தெரிந்தால், அதாவது தொண்டையில் இரு கைகளையும் வைத்துக்கொண்டு, பேச, இரும அல்லது மூச்சுவிட முடியாத நிலையில் ஒருவர் இருந்தால், உடனடியாக இந்த ஹெய்ம்லிச் மனேவர் முதலுதவியை செய்ய வேண்டும்.
“பாதிக்கப்பட்ட நபருக்குப் பின்னால் நின்றுகொண்டு, உங்கள் இரு கைகளை அவர்களின் இடுப்பைச் சுற்றி இறுக்கமாக கட்டிக்கொள்ளுங்கள். வயிற்றில் விரைவாகவும், வலுவாகவும் மேல்நோக்கி 5 அல்லது 6 முறை அழுத்தம் கொடுக்க வேண்டும். இதை முயற்சி செய்தும் தொண்டையில் சிக்கியிருக்கும் பொருள் வெளியேறவில்லை என்றால், உடனடியாக மருத்துவரின் உதவியை நாட வேண்டும்” என்கிறார் மருத்துவர் அருண்குமார்.
ஒருவயதிற்குட்பட்ட குழந்தை என்றால், தங்களது தொடையின் மீது வயிறு இருப்பது போல குழந்தையை படுக்க வைத்து முதுகில் தட்ட வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
“பல பள்ளிக்கூடங்களில் இந்த முதலுதவி முறையைக் கற்றுக்கொடுக்கிறார்கள். அதை பொதுமக்களுக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும். அது ஒரு எளிய முறை தான்.” என்கிறார் அருண்குமார்.
‘மாத்திரைகளை கட்டாயப்படுத்திக் கொடுக்கவே கூடாது’
படக்குறிப்பு, மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுவது ஆபத்தானது என்கிறார் ரேவதி.”பொடித்து கொடுக்கிறோமோ அல்லது உடைத்துக் கொடுக்கிறோமோ, ஆனால் ஒருபோதும் குழந்தைகளுக்கு வலுக்கட்டாயமாக மாத்திரைகளை கொடுக்கக் கூடாது. அதனால் குழந்தைகள் பீதியடைவார்கள், அது மூச்சுத்திணறலுக்கான வாய்ப்பை அதிகப்படுத்தும்” என்கிறார் மருத்துவர் ரேவதி. இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் குழந்தை நலப் பிரிவின் மூத்த ஆலோசகராக உள்ளார்.
குழந்தைகளை ஆசுவாசப்படுத்தி கொடுக்க வேண்டும், அதை ஒரு பழக்கமாக மாற்ற வேண்டும் என அறிவுறுத்தும் அவர், “சிலர் மாத்திரைகளை தண்ணீரில் கரைத்து குழந்தையின் மூக்கைப் பொத்தியவாறு வாயில் ஊற்றுகிறார்கள். அது மிகவும் தவறு மற்றும் ஆபத்தானது.” என்கிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சிறு குழந்தைகளின் மூச்சுக்குழாய் அமைப்பு மிகவும் குறுகலாக இருப்பதால் மாத்திரைகள் தொண்டையில் சிக்கும் வாய்ப்பு அதிகம் என அவர் கூறுகிறார்.
“6 வயதுக்குட்பட்ட குழந்தை என்றால் நிச்சயமாக தண்ணீரில் கரைத்துக் கொடுங்கள். 6 முதல் 10 வயது என்றால், உடைத்தோ அல்லது ஒரு ஸ்பூன் தயிருடன் கொடுக்கலாம் அல்லது மெல்லக்கூடிய மாத்திரைகளை (Chewable tablet) பரிந்துரைப்பது சிறந்தது. 10 வயதிற்கு மேல் மாத்திரைகளை அப்படியே விழுங்கச் சொல்லலாம், ஆனாலும் கவனம் தேவை” என்கிறார் மருத்துவர் ரேவதி.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு