Wednesday, August 20, 2025
Home பிபிசிதமிழிலிருந்துபிரதமர், முதலமைச்சர், மற்றும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் மசோதா மக்களவையில் அறிமுகம்: கடும் எதிர்ப்பு எழுவது ஏன்? – BBC News தமிழ்

பிரதமர், முதலமைச்சர், மற்றும் அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் மசோதா மக்களவையில் அறிமுகம்: கடும் எதிர்ப்பு எழுவது ஏன்? – BBC News தமிழ்

by ilankai
0 comments

பிரதமர், முதலமைச்சர், அமைச்சர்களை பதவியில் இருந்து நீக்கும் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம், SANSADTV

படக்குறிப்பு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, 130ஆவது அரசியலமைப்பு திருத்த மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார்20 ஆகஸ்ட் 2025, 14:52 GMT

புதுப்பிக்கப்பட்டது 10 நிமிடங்களுக்கு முன்னர்

banner

தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில அமைச்சர்களை பதவி நீக்கம் செய்யும் மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மக்களவையில் தாக்கல் செய்தார்

மசோதாவின் வரைவின்படி, ஓர் அமைச்சர் பதவியில் இருக்கும்போது, ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட தண்டனை விதிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டால், பிரதமரின் ஆலோசனையின் பேரில் குடியரசுத் தலைவரால் அவர் பதவியில் இருந்து நீக்கப்படுவார். இது காவலில் எடுக்கப்பட்ட 31வது நாளில் நடைபெற வேண்டும்.

அதே போல பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அமைச்சர்கள் ஆகியோர் தொடர்ச்சியாக 30 நாட்களுக்கு காவலில் வைக்கப்பட்டாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ, 31வது நாளில் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்படுவார்கள் என்ற பிரிவு இந்த மசோதாவில் உள்ளது.

இந்த மசோதா, பிரதமர் மற்றும் அமைச்சர்களின் நியமனம் மற்றும் பொறுப்புகளைப் பற்றி பேசும் அரசியலமைப்பின் 75வது பிரிவை திருத்துவதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த மசோதா நாடாளுமன்றக் கூட்டு குழுவிற்கு (JPC) அனுப்பப்பட்டுள்ளது. அடுத்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் முதல் நாளில் தனது அறிக்கையை நாடாளுமன்றக் கூட்டு குழு சமர்ப்பிக்கும்.

எதிர்க்கட்சிகள் தங்கள் ஆட்சேபனைகளை நாடாளுமன்றக் கூட்டு குழு முன் பதிவு செய்யலாம் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

இந்த மசோதா, தமிழ்நாட்டின் திமுக அரசில் அமைச்சராக இருந்த வி. செந்தில் பாலாஜியின் கைது சர்ச்சையைத் தொடர்ந்து கொண்டுவரப்பட்டது. பணமோசடி வழக்கில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட பிறகு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி அவரை பதவியில் இருந்து நீக்கினார். உச்சநீதிமன்றம் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கிய பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் அவரை மீண்டும் அமைச்சராக நியமித்தார். பாலாஜியை மீண்டும் அமைச்சராக்கியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. பின்னர், அமைச்சரவை மாற்றத்தில் அவர் நீக்கப்பட்டார்.

130வது அரசியலமைப்பு திருத்த மசோதா 2025, ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்த) மசோதா 2025, மற்றும் யூனியன் பிரதேச அரசு (திருத்த) மசோதா 2025 ஆகிய மூன்று மசோதாக்கள் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும் என்று அமித் ஷா மக்களவை அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை தகவல் அளித்திருந்தார்.

மசோதாவின் நோக்கம் மற்றும் காரணங்கள்

இதுவரை, குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் எந்த அமைச்சரையோ, முதலமைச்சரையோ அல்லது பிரதமரையோ பதவியில் இருந்து நீக்குவதற்கு எந்த விதிமுறையும் இல்லை. இதுவரை, குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்ட பிறகு மட்டுமே நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர் பதவியும், சட்டமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர் பதவியும் பறிக்கப்படுகிறது.

மசோதாவின் நோக்கம் மற்றும் காரணங்கள் குறித்து அமித் ஷா அளித்த தகவல் மக்களவை உறுப்பினர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.

“தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் இந்திய மக்களின் நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அவர்கள் அரசியல் நலன்களுக்கு மேல் உயர்ந்து, பொது நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பதவியில் இருக்கும் அமைச்சர்களின் நடத்தையும் குணமும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்,” என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், “மோசமான குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு, கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட ஒரு அமைச்சரால் அரசியலமைப்பு ஒழுக்கத்தையும், நல்லாட்சி கொள்கைகளையும் பாதிக்கலாம். இதனால் அரசு மீதான மக்களின் நம்பிக்கை குறையும்,” என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“மோசமான குற்றச்சாட்டுகள் அடிப்படையில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்ட அமைச்சரை நீக்குவதற்கு அரசியலமைப்பில் எந்த விதிமுறையும் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு, பிரதமர், முதலமைச்சர்கள், மத்திய மற்றும் மாநில அமைச்சர்களை நீக்குவதற்கு அரசியலமைப்பின் 75, 164 மற்றும் 239ஏஏ பிரிவுகளில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம்,” என அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

இதுவரை, கைது செய்யப்பட்டோ அல்லது காவலில் வைக்கப்பட்டோ இருந்தாலும் பல அமைச்சர்கள் பதவி விலகுவதில்லை.

இது சட்டமானால் இதனை தவறாக பயன்படுத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன.

அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஹேமந்த் சோரன் ஆகியோர் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் வேண்டுமென்றே சிக்கவைக்கப்பட்டதாக இவர்களின் கைது குறித்து எதிர்க்கட்சிகள் கூறின.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் பதவியில் இருக்கும்போது கைது செய்யப்பட்டார்அரசின் உத்தி என்ன?

“இது எதிர்க்கட்சிகளை குறிவைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. கைதுகளில் எந்தவித விதிமுறைகளும் பின்பற்றப்படுவதில்லை. எதிர்க்கட்சி தலைவர்களின் கைதுகள் அதிகரித்துள்ளன, மேலும் இவற்றில் பல முரண்பாடுகள் உள்ளன. புதிய மசோதா, தற்போது முதலமைச்சரை கைது செய்யப்பட்ட உடனே பதவியிலிருந்து நீக்கிவிடும். எதிர்க்கட்சிகளை நிலைகுலைய வைக்க இதுவே சிறந்த வழி,” என இந்த மசோதா குறித்து காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும் உச்சநீதிமன்ற வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி குறிப்பிட்டுள்ளார்

மழைக்கால கூட்டத் தொடர் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முடிவடைகிறது, மேலும் அரசுக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை. இந்நிலையில், இந்த மசோதாவை கொண்டுவருவதன் நோக்கம் என்ன?

இந்த கேள்விக்கு பதிலளித்த ஆங்கில நாளிதழ் ஹிந்துஸ்தான் டைம்ஸ் இன் அரசியல் ஆசிரியர் வினோத் ஷர்மா, “இந்த மசோதாவை சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஒப்புக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை. நரேந்திர மோதி பிரதமராக இருப்பது தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவால்தான் . இந்த மசோதாவின் நோக்கம், அரசு அரசியல் குற்றமயமாக்கலையும் ஊழலையும் கடுமையாக எதிர்க்கிறது என்ற மனநிலையை உருவாக்குவதற்காக உள்ளது” எனத் தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”இந்த மசோதா நிறைவேறிய பின்னர் ஆளுநருக்கு எந்தவொரு முதலமைச்சரையும் நீக்கும் அதிகாரம் கிடைக்கும். ஆனால், ஆளுநர் தனது பதவியை தவறாக பயன்படுத்துவதாகவே அதிக குற்றச்சாட்டுகள் உள்ளன என்பது வேறு விஷயம். இருப்பினும், இந்த சட்டத்தின் அதிகார வரம்பிலிருந்து ஆளுநர் விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.” என்று வினோத் ஷர்மா மேலும் தெரிவித்தார்.

“குற்றஞ்சாட்டப்பட்டவருக்கும் குற்றவாளிக்கும் இடையேயான வித்தியாசத்தை அழிக்க செய்யப்படும் ஏற்பாடு இது. அரசியல் விளையாட்டின் ஒரு பகுதியாக மாறுவதாக அமலாக்கத்துறையிடம் உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. தேர்தலில் வெற்றிபெற முடியாத இடங்களில், எதிர்க்கட்சி ஆட்சிகளை கலைப்பதற்கு இது ஒரு வழியாகும். உள்துறை அமைச்சர் தனது கட்சியில் உள்ள சிலரையே கையாள முயற்சிக்கிறார் என்று எனக்கு தோன்றுகிறது,” என இந்த மசோதா குறித்து, ராஷ்டிரிய ஜனதா தளத்தின் மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் ஜா கூறினார்.

சிபிஐஎம்எல் பொதுச்செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா, இந்த மசோதாவை விமர்சித்து, இது நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின் மீது நேரடி தாக்குதல் என்று கூறினார். இந்த மசோதா மூலம், மத்திய அமைப்புகளான இ.டி, சிபிஐ, வருமான வரித்துறை மற்றும் என்ஐஏ ஆகியவற்றின் தவறான பயன்பாடு அதிகரிக்கும் என தீபங்கர் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like