இந்தியாவிடம் டிரம்ப் காட்டும் கண்டிப்பு ரஷ்யாவுக்கு சாதகமாக இருக்கும் என நிபுணர்கள் சொல்வது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, விளாடிமிர் புதின் மற்றும் டிரம்பின் சந்திப்பை இந்தியாவும் உன்னிப்பாக கவனித்து வந்ததுஎழுதியவர், ரஜ்னீஷ் குமார்பதவி, பிபிசி செய்தியாளர்6 நிமிடங்களுக்கு முன்னர்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதிமுன் மிகவும் நட்புடன் ஆகஸ்ட் 15ஆம் தேதி அலாஸ்காவில் சந்தித்துக்கொண்டனர்.
புதினை சந்தித்த போது டிரம்ப் நடந்துகொண்ட விதமும், அதன் பின்னர் தெரிவித்த கருத்துகளும் யுக்ரேன் விவகாரத்தில் அவர் ரஷ்யா மீது மிகவும் கோபமாக இருக்கிறார் என்ற எண்ணத்தை ஏற்படுத்தவில்லை.
இந்தியாவும் இந்த உரையாடலின் மீது ஒரு கண்ணை வைத்திருந்தது.
இந்த சந்திப்பு சுமூகமாக நடைபெற்றால், ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது டிரம்ப் விதித்த 25% கூடுதல் வரி விலக்கிக்கொள்ளப்படலாம் என சொல்லப்பட்டது.
இதைத் தொடர்ந்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட 25 சதவீத வரியைக் குறைக்க இந்தியா முயற்சிக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால், இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை. நிலைமை இப்படியே தொடர்ந்தால், ஆகஸ்ட் 27 முதல் இந்தியாவுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்த சந்திப்புக்குப் பிறகும் இந்தியாவின் மீதான அமெரிக்காவின் அணுகுமுறையில் கண்டிப்பு குறையவில்லை.
வெள்ளை மாளிகையில் வர்த்தகம் மற்றும் உற்பத்தி ஆலோசகராக இருக்கும் பீட்டர் நவரோ, டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, பிரிட்டன் செய்தித்தாள் பைனான்ஷியல் டைம்ஸ்-ல் ஒரு கட்டுரை எழுதினார். அதில் இந்தியாவை கடுமையாக விமர்சித்தார்.
“அமெரிக்க வாடிக்கையாளர்கள் இந்திய பொருட்களை வாங்குகிறார்கள். இந்த பொருட்களின் விற்பனையில் கிடைக்கும் டாலர்களை இந்தியா மலிவு விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதற்கு பயன்படுத்துகிறது. ரஷ்ய எண்ணெயை இந்தியா சுத்திகரித்து உலகம் முழுவதும் விற்கிறது. இந்திய லாபவெறியர்கள் ரஷ்யாவின் அமைதியான கூட்டாளியாக இருக்கின்றனர். ரஷ்யா யுக்ரேனை தொடர்ந்து தாக்கி வருகிறது, இதில் இந்தியா உதவி செய்கிறது,” என எழுதினார்.
“அமெரிக்கா இந்தியாவை ஒரு உத்தி ரீதியான கூட்டாளியாக பார்க்க வேண்டுமெனில், இந்தியாவும் அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும்,” என பீட்டர் நவரோ குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்பின் கடுமையான அணுகுமுறைக்குப் பிறகு இந்தியா சீனாவை நோக்கி நகர்வதாக சில அறிஞர்கள் கருதுகின்றனர்புதின், டிரம்ப் இடையேயான அனுசரணையான போக்கு
டிரம்பும் புதினும் இடையேயான உற்சாகமான சந்திப்பால் இந்தியாவுக்கு எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை, மாறாக இது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் மட்டுமே பயனளிக்கும் என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா தானே ரஷ்யாவுடன் வணிகம் செய்கிறது, மேலும் இந்தியாவை விட சீனா ரஷ்யாவிடமிருந்து அதிக எண்ணெய் வாங்குகிறது. ஆனால், டிரம்ப் புதினை வரவேற்பதோடு சீனாவின் மீது வரி விதிக்கும் முடிவை தள்ளிப்போடுகிறார்.
இதனால், இந்தியாவின் மீதான டிரம்பின் கடுமையான அணுகுமுறைக்கு ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவது காரணமல்ல என்று கூறப்படுகிறது.
“டிரம்பின் கடுமையான அணுகுமுறைக்கு எண்ணெய் காரணமல்ல, மாறாக இது டிரம்புக்கும் மோதிக்கும் இடையேயான சுயமரியாதையின் மோதலாகும்,” என பாகிஸ்தானின் பிரபல எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான பர்வேஸ் ஹூட்பாய் கூறினார்.
” யுத்த நிறுத்தத்திற்கு தமக்கு பெயர் கிடைக்க மோதி இடம் தரவில்லை என்பது டிரம்புக்கு பிடிக்கவில்லை. டிரம்பின் உத்தரவின்படிதான் யுத்த நிறுத்தம் செய்யப்பட்டது என்று தனது சொந்த நாட்டி ஒப்புக்கொள்வது மோதிக்கு ஏற்புடையதாக இல்லை. எனவே, இது இரு தலைவர்களின் சுயமரியாதையின் மோதல் என்று நினைக்கிறேன்,” என்று ஹூட்பாய் சொல்கிறார்.
அலாஸ்காவில் டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு முன்பு அமெரிக்க நிதி செயலாளர் ஸ்காட் பெசென்டும், இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.
புதினுடனான பேச்சுவார்த்தை சரியாக அமையவில்லை என்றால், இந்தியாவுக்கு எதிரான வரி மேலும் உயரலாம் என்று ஸ்காட் கூறியிருந்தார். ஐரோப்பாவும் இந்தியாவுக்கு எதிரான இந்த முடிவில் இணைய வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
அநந்தா சென்டர் என்ற சிந்தனைக் குழு வெளியுறவுக் கொள்கை தொடர்பான விவகாரங்களில் பணியாற்றுகிறது.
இதன் தலைமை நிர்வாகி இந்திராணி பாக்சி, ஸ்காட் கருத்தின் காணொளியை மறு பதிவு செய்து “இது மிகவும் ஆபத்தானது. மேற்கத்திய நாடுகள் இந்தியா ரஷ்யாவுக்கு முக்கியமானது என்று நம்புகின்றன. எனவே புதினை அடக்குவதற்கு இந்தியாவை தண்டிக்கின்றன. புதின் தனது நலன்களில் இருந்து விலகுவதில்லை, எனவே இந்தியா பாதிக்கப்பட்டாலும் அவருக்கு கவலையில்லை. இதனால் இந்தியா ஒரு குத்துப் பையாக(பஞ்ச் பேக்) மாறி, தனக்கு எந்தத் தொடர்பும் இல்லாத விளைவுகளால் பாதிக்கப்படும்.” என எழுதினார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியாவின் மீது அதிகரித்து வரும் அமெரிக்காவின் கடுமையான அணுகுமுறை குறித்த நிச்சயமின்மை டிரம்பை பற்றி மட்டுமல்ல. பல ஆய்வாளர்கள் ரஷ்யாவையும் சந்தேகத்துடன் பார்க்கின்றனர்.
வெளியுறவுக் கொள்கை முனையில் இந்தியா இப்போது மிகப் பெரிய சவாலை எதிர்கொள்வதாக டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள ரஷ்ய மற்றும் மத்திய ஆசிய ஆய்வு மையத்தில் இணைப் பேராசிரியரான ராஜன் குமார் கூறினார்.
“ஒரு பக்கத்தை தேர்ந்தெடுக்க வேண்டிய அழுத்தம் இந்தியாவின் மீது அதிகரித்து வருகிறது, இது எந்த வகையிலும் இந்தியாவுக்கு சாதகமல்ல. இந்தியா அமெரிக்காவுக்காக ரஷ்யாவை கைவிட முடியாது, மேலும் ரஷ்யாவுடன் மட்டுமே இருக்கவும் முடியாது. இந்தியாவின் மீது அழுத்தம் தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோதியின் எஸ்சிஓ (ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு) உச்சி மாநாட்டிற்காக சீனா செல்லுவது, இந்தியா அமெரிக்காவல்லாத தலைமையிலான குழுவில் மிகவும் செயல்பாட்டுடன் இருக்க விரும்புவதைக் காட்டுகிறது. பிரதமர் மோதி சீனாவுக்கு செல்லவிருக்கும் நேரத்தில், சில மாதங்களுக்கு முன்பு சீனா இந்தியாவுக்கு எதிரான யுத்தத்தில் பாகிஸ்தானுக்கு உதவியிருந்தது.” என்கிறார் ராஜன் குமார்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்ப் இந்தியாவின் மீதான அணுகுமுறையை மாற்றாவிட்டால், அமெரிக்காவல்லாத தலைமையிலான குழுக்களில் இந்தியா அதிக ஈடுபாட்டுடன் செயல்படுவதை காணலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் புதின் பலனடைவாரா?
புரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூஷன் என்ற சிந்தனைக்குழுவின் மூத்த ஆய்வாளர் தன்வி மதன், இந்திராணி பாக்சியின் பதிவை மறு பதிவு செய்து, “டிரம்ப் இந்தியாவை தொந்தரவு செய்தால், புதின் பயனடைவார். இந்தியாவும் அமெரிக்காவும் இடையேயான உறவுகள் மோசமடைந்தால், இந்தியாவில் ரஷ்யாவுடனான உறவுகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழும். அப்படி ஒரு சூழ்நிலையில் இந்தியா சீனாவுடன் உடன்படிக்கை செய்துகொள்ள தயாராக இருக்கும்.”என குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா பாகிஸ்தான் இடையேயான உறவுகள் குறித்து கவலைகொள்ளும் அளவு ரஷ்யா பாகிஸ்தான் இடையேயான உறவுகள் ஆழமடைவது குறித்து இந்தியர்கள் கவலைகொள்ளாதது ஏன் என தன்வி மதன் கேள்வி எழுப்புகிறார்.
“ஒரு காலத்தில் அமெரிக்காவை விட பாகிஸ்தானுக்கு அதிக ராணுவ உபகரணங்கள் விநியோகிக்கும் நாடாக ரஷ்யா இருந்தது. இந்த விவகாரத்தில் இந்தியாவும் புகார் எழுப்பியிருந்தது. ஆனால், இந்தியாவின் புகாரால் ரஷ்யா பாகிஸ்தானுடனான எஃப்.டி.எஃப்.ஏ திட்டத்திலிருந்து பின்வாங்கிவிடும் என்று நான் நினைக்கவில்லை. அமெரிக்காவுடனான இந்தியாவின் மோதல் நிரந்தரமானது இல்லை என்பது ரஷ்யாவுக்கு தெரியும். அமெரிக்காவுக்கு இந்திய சந்தை தேவை. சமீபத்தில் தாலிபன் விவகாரத்தில் ரஷ்யா பாகிஸ்தான் இடையேயான ஒத்துழைப்பை காணலாம். கல்வான் மோதலுக்கு நான்கே மாதங்களுக்குப் பிறகு சீனா ரஷ்யா இடையேயான பாதுகாப்பு ஒத்துழைப்பு அதிகரித்தது,” என மதன் எழுதினார்.
“ரஷ்யா அமெரிக்கா இடையேயான உறவுகளில் முன்னேற்றம் ஏற்பட்டால், அமெரிக்கா இந்தியா இடையேயான உறவுகளின் மீதான அழுத்தம் குறையலாம். ஆனால், அமெரிக்கா ரஷ்யா இடையேயான நட்பு, சீனாவிடமிருந்து ரஷ்யாவின் தூரத்தை அதிகரிக்கும் என்று இந்தியாவில் பலர் நினைத்தனர். ஆனால், அப்படி நடக்காது என்று நான் நம்புகிறேன். டிரம்ப், சீனா, ரஷ்யா இரண்டுடனும் ஒப்பந்தம் செய்ய விரும்புவதாக கூறியிருந்தார்,” என தன்வி மதன் குறிப்பிட்டிருந்தார்.
“இது இந்தியாவிற்கு கூடுதல் பிரச்னைகளை ஏற்படுத்தும் என நான் நினைக்கிறேன். புதின் புகழ்ச்சியை ஒரு கருவியாக பார்க்கிறார், அதை பலவீனத்தின் அறிகுறியாக நாம் பார்க்கக் கூடாது. போரிஸ் யெல்ட்ஸின் மற்றும் கிளின்டன் இடையே நடந்த பேச்சுவார்த்தைகளையோ அல்லது 1960-70களையோ மக்கள் நினைவு கூர வேண்டும். இந்தியாவிற்கு பாதிப்பு ஏற்பட்டாலும் பயனடைவதற்கு ரஷ்யாவிற்கு எந்த தயக்கமும் இருக்கவில்லை. இந்த விவகாரத்தில் அமெரிக்கா மட்டுமே தனித்து இல்லை.”
அமெரிக்காவின் தற்பெருமைக்கு தூபம்போடுவதன் மூலம் தான் பலனடையமுடியும் என கருதியபோதெல்லாம் புதின் அதை மகிழ்ச்சியாக பயன்படுத்திக்கொண்டதாக பலர் நம்புகின்றனர்.
உதாரணமாக, ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு டிரம்ப் மற்றும் புதின் இடையே ஒரு தொலைபேசி உரையாடல் நடைபெற்றது.
இந்த உரையாடலுக்குப் பிறகு ரஷ்யாவின் தரப்பிலிருந்து வெளியான அறிக்கையில், யுத்த நிறுத்தத்திற்கு டிரம்பின் பங்களிப்பு புகழப்பட்டது.
இந்தியா டிரம்பின் கூற்றுகளை மறுத்தபோது, ரஷ்யாவிடமிருந்து இந்த அறிக்கை வெளியானது. 2019இல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டபோது, ரஷ்யாவும் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது.
இந்தியாவிற்கு இருக்கும் சவால்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆகஸ்ட் 15 அன்று அலாஸ்காவில் புதினை டிரம்ப் உற்சாகமாக வரவேற்றார்சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி செவ்வாய்க்கிழமை புது டெல்லியில் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். அதைத் தொடர்ந்து வாங் யி பாகிஸ்தான் செல்கிறார். வாங் யி பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருடன் முக்கிய பேச்சுவார்த்தையில் பங்கேற்பார் என சீன வெளியுறவு அமைச்சகம் கூறியிருக்கிறது.
“மே 7 முதல் 10 வரை இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ராணுவ மோதலின் போது, கண்ணுக்கு தெரியாத மூன்றாம் தரப்பு போல சீனா நடந்து கொண்டது. சீனா பாகிஸ்தானுக்கு நிகழ்நேர புலனாய்வு தகவல்களை வழங்கியது. மேலும், ரேடார் மற்றும் செயற்கைக்கோள் தரவுகளையும் வழங்கியது. இதை இந்திய ராணுவத் துணைத் தளபதி கூறியிருந்தார்,” என வாங் யியின் இந்தப் பயணம் குறித்து இந்தியாவின் நன்கு அறியப்பட்ட உத்தி நிபுணர் பிரம்மா செல்லானி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
“மோதி இந்த மாத இறுதியில் சீனாவுக்கு செல்லவிருக்கிறார். ஏப்ரல் 2020க்கு முன்பு லடாக்கில் இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளை சீனா இன்னமும் விடுவிக்காத நிலையில் இந்த பயணம் நடக்கிறது. ஏப்ரல் 2020க்கு முன்பு லடாக்கில் இருந்த நிலைமை மீண்டும் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்ற கோரிக்கையை இந்தியா கைவிட்டுவிட்டதை வரவிருக்கும் மோதியின் பயணம் சுட்டிக்காட்டுகிறது,” என செல்லானி எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், @narendramodi
படக்குறிப்பு, புது டெல்லியில் நரேந்திர மோடியை சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி செவ்வாய்க்கிழமை சந்தித்தார்வாங் யி திங்கட்கிழமை ஜெய்சங்கரை சந்தித்த பிறகு, மாண்டரின் மொழியில் சீனா வெளியிட்ட அறிக்கையில், இந்தியா தைவானை சீனாவின் ஒரு பகுதியாக ஏற்றுக்கொண்டதாக கூறப்பட்டது. இருப்பினும், வாங் யியின் இந்த பயணத்தைப் பற்றி இந்தியாவின் தரப்பில் அதிகாரபூர்வமாக எதுவும் கூறப்படவில்லை.
“இந்தியா சீனாவுடனான உறவுகளை மேம்படுத்த விரும்பினால், சீனா அதை வரவேற்கும், ஆனால் இந்தியாவுக்கு எந்தவித சலுகையும் கிடைக்காது. சீனா தனது நலன்களில் சமரசம் செய்யாது, மேலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்தாது.
இந்தியாவின் தற்போதைய அணுகுமுறை முக்கியமாக உத்தி சமன்பாட்டின் அடிப்படையில் உள்ளது. அமெரிக்காவுடனான உறவுகள் மோசமடைந்து வரும் நிலையில், இந்தியா சீனாவுடன் உறவுகளை மேம்படுத்த முடிவு செய்துள்ளது. சீனா இந்த விஷயங்களை மிகவும் எச்சரிக்கையுடன் மதிப்பிடுகிறது என்று நான் நம்புகிறேன்,” என்று நியுயார்க் டைம்ஸ் நாளிதழுக்கு அளித்த பேட்டியில் ஷாங்காயின் ஃபுடான் பல்கலைக்கழகத்தில் தெற்காசியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவுகள் குறித்த நிபுணரான லின் மின்வாங் தெரிவித்தார்.
இந்தியாவின் மீதான டொனால்ட் டிரம்பின் பகைமை ஒரு பெரிய உத்தி தவறு என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரபல அமெரிக்க பத்திரிகையாளர் ஃபரீத் ஸகாரியா, சிஎன்என் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
“கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்கா இந்தியாவை ஒரு உத்தி கூட்டாளியாக பார்த்து வந்தது, ஆனால் டொனால்ட் டிரம்ப் இந்தக் கொள்கையை மாற்றி வருகிறார். ஆசியாவில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கைத் தடுக்க இந்தியா அமெரிக்காவுக்கு முக்கியமானதாக கருதப்பட்டது. ஆனால், டிரம்ப் இந்திய பொருளாதாரம் வீழ்ந்துவிட்டதாக கூறி அவமதித்தார். உண்மையில், இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது,” என ஃபரீத் ஸகாரியா கூறினார்.
”டிரம்ப் இந்தியாவின் மீதான தனது அணுகுமுறையை இப்போது மாற்றிக்கொண்டாலும், பாதிப்பு ஏற்கனவே ஏற்பட்டுவிட்டது. இந்தியாவில் அமெரிக்காவின் மீதான அவநம்பிக்கை அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது உண்மையான நிறத்தை காட்டிவிட்டது என்று இந்தியர்கள் நினைக்கிறார்கள்” என ஃபரீத் ஸகாரியா தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு