டிரம்ப் உண்மையில் எத்தனை போர்களை நிறுத்தியுள்ளார்? – ஓர் ஆய்வு
பட மூலாதாரம், EPA/Shutterstock
எழுதியவர், ஜேக் ஹார்டன் & நிக் பீக்பதவி, பிபிசி வெரிஃபை 21 நிமிடங்களுக்கு முன்னர்
ரஷ்யா-யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவர அதிபர் டொனால்ட் டிரம்ப் முயற்சிக்கும் வேளையில், தனது இரண்டாவது பதவிக் காலம் தொடங்கியதிலிருந்து அமைதிப் பேச்சுவார்த்தைகளில் தான் செய்த சாதனைகளை கூறி வருகிறார்.
ஆகஸ்ட் 18 அன்று வெள்ளை மாளிகையில் பேசியபோது, ஐரோப்பிய தலைவர்கள் அவரிடம் யுக்ரேன் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்தனர்.
அப்போது, “நான் ஆறு போர்களை முடித்து வைத்துள்ளேன்… இந்த ஒப்பந்தங்களில் ‘போர் நிறுத்தம்’ என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்தவில்லை” என்று கூறினார் டிரம்ப்.
மறுநாள், அவர் குறிப்பிட்ட அந்த எண்ணிக்கை “ஏழு போர்கள்” ஆக உயர்ந்தது.
“சமாதானத்தை உருவாக்கும் தலைவருக்கு நோபல் பரிசு கிடைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று டிரம்ப் நிர்வாகம் கூறுகிறது. மேலும், டிரம்ப் முடிவுக்குக் கொண்டுவந்ததாகக் கூறப்படும் “போர்களின்” பட்டியலையும் வெளியிட்டுள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சில மோதல்கள் சில நாட்கள் மட்டுமே நீடித்தன, ஆனால் அவை நீண்டகால பதற்றங்களின் விளைவாக இருந்தன. சில சமாதான ஒப்பந்தங்கள் நீடிக்குமா என்பது குறித்து இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
டிரம்ப் தனது ‘ட்ரூத் சோசியல்’ சமூக தளத்தில் இந்த ஒப்பந்தங்களைப் பற்றி பேசும்போது, “போர் நிறுத்தம்” என்ற வார்த்தையை பலமுறை பயன்படுத்தினார்.
இந்த மோதல்களையும், அவற்றை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக டிரம்ப் எவ்வளவு தூரம் பெருமைப்படலாம் என்பதையும் பிபிசி வெரிஃபை ஆய்வு செய்துள்ளது.
இஸ்ரேல் மற்றும் இரான்
ஜூன் 13, 2025 அன்று, இஸ்ரேல் இரானில் தாக்கியதன் மூலம் 12 நாள் மோதல் தொடங்கியது.
இந்தத் தாக்குதல்களுக்கு முன்னதாக இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனக்குத் தகவல் தெரிவித்ததாக டிரம்ப் உறுதிப்படுத்தினார்.
அமெரிக்கா, இரானின் அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த நடவடிக்கை மோதலை விரைவாக முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் இருந்ததாக பரவலாகக் கருதப்பட்டது.
“அதிகாரப்பூர்வமாக, இரான் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். 12வது மணி நேரத்தில், இஸ்ரேல் போர் நிறுத்தத்தைத் தொடங்கும். 24வது மணி நேரத்தில், 12 நாள் போரின் அதிகாரப்பூர்வ முடிவை உலகம் வரவேற்கும்” என ஜூன் 23 அன்று, டிரம்ப் ட்ரூத் சோசியல் தளத்தில் பதிவிட்டார்.
போர் முடிவடைந்த பிறகு, இரானின் அதிஉயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயி, தனது நாடு ஒரு “தீர்க்கமான வெற்றியை” பெற்றதாக கூறினார். ஆனால், அவர் போர் நிறுத்தம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
மறுபுறம், புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள இரானை மீண்டும் தாக்கலாம் என்று இஸ்ரேல் கூறியுள்ளது.
“நிரந்தர அமைதி குறித்தோ, அல்லது இரானின் அணுசக்தி திட்டத்தை எவ்வாறு கண்காணிப்பது என்பது குறித்தோ, எந்த உடன்பாடும் இல்லை,” என்று ப்ரூக்கிங்ஸ் நிறுவன (Brookings Institution) சிந்தனைக் குழுவின் மூத்த உறுப்பினரான மைக்கேல் ஓ’ஹான்லான் குறிப்பிட்டார்.
“இது அதிகாரப்பூர்வ போர் நிறுத்தம் அல்ல. ஆனால், அமெரிக்காவின் உதவியுடன் இஸ்ரேல் இரானை பலவீனப்படுத்தியது உத்தி சார்ந்து முக்கியமானது என்பதால், டிரம்ப் ஓரளவு பெருமைப்படலாம்” என்றும் மைக்கேல் கூறினார்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, 12 நாட்கள் நடந்த மோதலில் இரான் மற்றும் இஸ்ரேலில் உள்ள இலக்குகள் தாக்கப்பட்டன.பாகிஸ்தான் மற்றும் இந்தியா
இரண்டு அணு ஆயுத நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே பல ஆண்டுகளாகப் பதற்றமான சூழல் உள்ளது.
ஆனால், இந்தியாவின் காஷ்மீரில் நடந்த ஒரு தாக்குதலுக்கு பிறகு கடந்த மே மாதம் மோதல் வெடித்தது.
நான்கு நாட்கள் தாக்குதல்களுக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் “முழுமையான மற்றும் உடனடி சமாதானத்திற்கு” ஒப்புக் கொண்டதாக டிரம்ப் பதிவிட்டார்.
இது “அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தைகளின்” விளைவு என்றும் அவர் கூறினார்.
டிரம்பிற்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான், அவரது “தீர்க்கமான ராஜ்ஜிய தலையீட்டை” குறிப்பிட்டு அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைத்தது.
ஆனால், அமெரிக்காவின் ஈடுபாடு குறித்த பேச்சை இந்தியா மறுத்தது.
“ராணுவ மோதலை நிறுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகள், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவங்களுக்கிடையே ஏற்கனவே உள்ள வழிகள் மூலம் நேரடியாக நடத்தப்பட்டன,” என்று இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி கூறினார்.
ருவாண்டா மற்றும் காங்கோ ஜனநாயக குடியரசு
இந்த ஆண்டின் தொடக்கத்தில், கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசில் கனிம வளம் நிறைந்த ஒரு பகுதியை M23 கிளர்ச்சிக் குழு கைப்பற்றியது. இதன் பின்னர், ருவாண்டாவுக்கும் கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்த விரோதம் மீண்டும் வெடித்தது.
பல தசாப்தங்களாக இருந்த மோதலுக்கு முடிவு காண்பதை நோக்கமாகக் கொண்டு, ஜூன் மாதத்தில், இரு நாடுகளும் வாஷிங்டனில் ஒரு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
இந்த ஒப்பந்தம், அமெரிக்காவுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகத்தை அதிகரிக்க உதவும் என்று டிரம்ப் கூறினார்.
2024 ஆகஸ்ட் மாதத்தில் ருவாண்டா மற்றும் கிழக்கு காங்கோ ஜனநாயகக் குடியரசுக்கு (DRC) இடையே ஒப்புக்கொள்ளப்பட்ட “போர் நிறுத்தத்திற்கு மதிப்பளிக்க” அமெரிக்கா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, M23 கிளர்ச்சியாளர்கள் ருவாண்டாவுடன் தொடர்புடையவர்கள்.ஆனால், சமீபத்திய ஒப்பந்தத்திற்குப் பிறகு, இரு தரப்பும் போர்நிறுத்தத்தை மீறியதாக ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
மேலும், M23 கிளர்ச்சியாளர்கள், அமைதிப் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகுவதாக அச்சுறுத்தியுள்ளனர்.
“காங்கோவிற்கும் ருவாண்டாவிற்கும் இடையே இன்னும் சண்டை நடந்து கொண்டிருக்கிறது. அதனால், அந்த போர்நிறுத்தம் ஒருபோதும் நிலைத்ததில்லை,” என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பேராசிரியராக பணியாற்றிய மார்கரெட் மேக்மில்லன் கூறுகிறார்.
தாய்லாந்து மற்றும் கம்போடியா
” தற்போது தீவிரமாகி வரும் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர தாய்லாந்தின் தற்காலிக பிரதமரை கேட்டுக்கொள்கிறேன்”என ஜூலை 26 அன்று, டிரம்ப் ட்ரூத் சோஷியலில் பதிவிட்டார்.
ஓரிரு நாட்கள் கழித்து, எல்லையில் சில நாட்கள் நடைபெற்ற மோதலுக்குப் பிறகு, தாய்லாந்தும் கம்போடியாவும் “உடனடி மற்றும் நிபந்தனையற்ற சண்டை நிறுத்தத்திற்கு” ஒப்புக்கொண்டன.
மலேசியா அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தியது. ஆனால் தாய்லாந்தும் கம்போடியாவும் சண்டையை நிறுத்தாவிட்டால், இறக்குமதி வரிகளைக் குறைப்பது தொடர்பாக அமெரிக்க உடனான தனி பேச்சுவார்த்தைகளை நிறுத்துவதாக அதிபர் டிரம்ப் அச்சுறுத்தல் விடுத்தார்.
இரு நாடுகளும் அமெரிக்காவிற்கான ஏற்றுமதியை பெரிதும் சார்ந்துள்ளன.
அதன் பிறகு, ஆகஸ்ட் 7 அன்று, தாய்லாந்தும் கம்போடியாவும் தங்களுக்கு பொதுவான எல்லையில் பதற்றங்களைக் குறைக்கும் நோக்கில் ஒரு உடன்பாட்டை எட்டின.
ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான்
ஆகஸ்ட் 8 அன்று வெள்ளை மாளிகையில் அறிவிக்கப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் நாடுகளின் தலைவர்கள் கூறினர்.
“இங்கே அவருக்கு நல்ல பாராட்டு கிடைக்கும் என்று நினைக்கிறேன். அதிபர் அலுவலகத்தில் நடந்த ஒப்பந்த கையெழுத்து விழா, இரு தரப்பையும் அமைதியை நோக்கிக் கொண்டு சென்றிருக்கலாம்” என்று ஓ’ஹான்லான் கூறினார்.
மார்ச் மாதத்தில், நாகோர்னோ-கராபாக் பிரச்னையை மையமாகக் கொண்டு, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளாக நீடித்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு அரசாங்கங்களும் தயாராக இருப்பதாகக் கூறியிருந்தன.
மிக சமீபத்திய, தீவிரமான மோதல் செப்டம்பர் 2023 இல் ஏற்பட்டது, அப்போது அஜர்பைஜான் பல ஆர்மீனியர்கள் வாழ்ந்த பகுதியைக் கைப்பற்றியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆகஸ்ட் மாதம் டிரம்ப் அஜர்பைஜான் அதிபர் மற்றும் ஆர்மீனிய பிரதமரை வெள்ளை மாளிகையில் வரவேற்றார்.எகிப்து மற்றும் எத்தியோப்பியா
அதிபர் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இங்கு எந்த “போரும்” இல்லை, ஆனால் நைல் நதியின் மீது ஒரு அணை கட்டுவது தொடர்பாக நீண்ட காலமாக பதற்றம் நிலவி வருகின்றன.
எத்தியோப்பியாவின் ‘கிராண்ட் எத்தியோப்பியன் மறுமலர்ச்சி அணை’ இந்த கோடையில் கட்டி முடிக்கப்பட்டது. இதனால், நைல் நதியிலிருந்து எகிப்துக்கு கிடைக்கும் நீர் வரத்து பாதிக்கப்படலாம் என்று எகிப்து கூறியது .
12 ஆண்டுகளாக நீடித்த கருத்து வேறுபாடுகளுக்குப் பிறகு, ஜூன் 29 அன்று எகிப்தின் வெளியுறவு அமைச்சர், எத்தியோப்பியாவுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாகக் கூறினார்.
“நான் எகிப்தின் இடத்தில் இருந்தால், நைல் நதியின் தண்ணீர் எகிப்தின் பக்கம் வர வேண்டும் என நினைப்பேன்” என்று டிரம்ப் கூறினார். மேலும் அமெரிக்கா இந்த பிரச்னையை மிக விரைவில் தீர்க்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
டிரம்பின் வாக்குறுதியை எகிப்து வரவேற்றது, ஆனால் எத்தியோப்பிய அதிகாரிகள் இது பதற்றங்களைத் தூண்டக்கூடும் என்றனர்.
எகிப்துக்கும் எத்தியோப்பியாவுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைத் தீர்க்க எந்த முறையான ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.செர்பியா மற்றும் கொசோவோ
ஜூன் 27 அன்று, டிரம்ப் செர்பியா மற்றும் கொசோவோ இடையே மோதல் வெடிக்காமல் தடுத்ததாக கூறினார். “செர்பியா மற்றும் கொசோவோ சண்டையிடப் போகின்றன, அது ஒரு பெரிய போராக இருக்கப் போகிறது. நீங்கள் சண்டையிடுங்கள், ஆனால் அமெரிக்காவுடன் எந்த வர்த்தகமும் இருக்காது என நான் சொன்னேன். அவர்கள், ‘சரி, நாங்கள் சண்டையிட மாட்டோம்’ என்று சொன்னார்கள்”என டிரம்ப் கூறியிருந்தார்.
1990களின் பால்கன் போர்களின் பின்னணியில், இந்த இரண்டு நாடுகளும் நீண்ட காலமாக மோதலில் ஈடுபட்டுள்ளன.
அந்த அடிப்படையில், சமீபத்திய ஆண்டுகளில் பதற்றம் அதிகரித்துள்ளது.
ஆனால், “செர்பியாவும் கொசோவோவும் ஒருவருக்கொருவர் சண்டையிடவோ, துப்பாக்கிச் சூடு நடத்தவோ இல்லை. எனவே இது முடிவுக்கு வரும் போர் அல்ல” என்று பேராசிரியர் மேக்மில்லன் கூறினார்.
டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் மேற்கொண்ட ராஜ்ஜிய முயற்சிகளை வெள்ளை மாளிகை சுட்டிக்காட்டியது.
2020 ஆம் ஆண்டு, இரு நாடுகளும் அமெரிக்க அதிபர் அலுவலகத்தில் பொருளாதார ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டன. ஆனால், அந்த நேரத்தில் அவை போரில் ஈடுபடவில்லை.
கூடுதல் தகவல்கள் : பீட்டர் மவாய், ஸ்ருதி மேனன் மற்றும் ஈவ் வெப்ஸ்டர்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு