யாழ். தெல்லிப்பழை வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ள ஊழல், மோசடிகளில் உரிய கவனம் செலுத்தி உடனடி நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரிடம் வலியுறுத்தினார்.
இது குறித்து, இலஞ்ச, ஊழல் ஆணைக்குழு வில் முறையாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் இது வரையில் சம்பந்தப்பட்ட நபர்கள் ஏன் கைது செய்யப்படவி ல்லை எனக்கேள்வி எழுப்பிய அர்ச்சுனா இராமநாதன் இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அமைச்சரிடம் கேட்டுக் கொண்டார்.
பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சரிடம் கேள்வியெழுப்பிய போதே அர்ச்சுனா இவ்வாறு தெரிவித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வட மாகாணத்தில் உள்ள ஒரேயொரு புற்றுநோய் வைத்தியசாலை தெல்லிப்பழை வைத்தியசாலையாகும்.தெல்லிப்பழை வைத்தியசாலையின் ஒரு பகுதியாக புற்றுநோய்ப் பிரிவு இயங்கி வருகிறது. இவ்வைத்தியசாலை மாகாண அமைச்சின் கீழ்வரும்’ பி’ பிரிவு ஆதார வைத்தியசாலையாகும். இந்த வைத்தியசாலையில், கணக்காளர் ஒருவர் கடமையிலில்லை.
இதனால்,பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் கேதீஸ்வரனின் கீழும் மற்றும் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர் சமன்பத்திரனவின் கீழும் இது,நிர்வகிக்கப்படுகிறது.
வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவுக்கான தனிப்பட்ட பண கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்டுள்ள வங்கி கணக்கிலக்க புத்தகங்கள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த வைத்தியசாலையில் புற்றுநோய் பிரிவிற்குப் பொறுப்பான டாக்டர் கிருசாந்தியே இந்தப் பரிமாற்றங்களை மேற்கொண்டுள்ளார்.
இது தவிர டாக்டர் கேதீஸ்வரன் புற்றுநோய் பிரிவுக்கான மாகாண பொதுச் செயலாளரின் அனுமதியின்றி 30 மில்லியன் ரூபா பெறுமதியான கட்டட ஒப்பந்தம் ஒன்றை முறையற்ற விதத்தில் மேற்கொண்டிருப்பதும் ஆரம்பகட்ட விசாரணைக ளிலிருந்து தெரிய வந்திருந்தது.
சுகாதார அமைச்சினு டாகவும் அத்துடன் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவாலும் கடந்த ஜூன் மூன்றாம் திகதி முறைப்பாடு செய்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள பின்பும் சுமார் ஒன்றரை மாதங்களாக அது தொடர்பில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.
இவ்விடயம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவில் முறையாக முறைப்பாடு செய்யப்பட்டிருந்தும் இன்று வரை சம்பந்தப்பட்ட இரு டாக்டர்களும் கைது செய்யப்படாத காரணம் என்ன?
2015 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சம்பந்தப்பட்ட புற்றுநோய் அலகிற்கு பொதுமக்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட அரசாங்கத்தின் கணக்கில் வைப்பிலிடப்படாத பணம் எவ்வளவு? இந்த நிதி மோசடி தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக் குழுவிற்கு ஆராய அதிகாரம் உண்டா?
புற்றுநோய் டாக்டர் கிருசாந்தியால், பிராந்திய வைத்தியசாலை பணிப்பாளர் நாயகம் டாக்டர் கேதீஸ்வரனின் அனுசரணையுடன் பொதுமக்களிடமிருந்து பணம் பெற்றுக் கொள்ளப்பட்டது தங்களுக்கு தெரியுமா? அப்பணம் தனிப்பட்ட வங்கி இலக்கங்களில் இடப்பட்டு வைத்திய சாலையில் இருந்து களவாடப்பட்டது தங்களுக்கு தெரியுமா? தெரிந்திருந்தும் ஏன் இன்றுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என கேள்வி எழுப்பி இருந்தார்.