பாலாங்கொடை காசியப்ப தேரரின் மனு மீதான  ஜனவரி 22-ல்   – Global Tamil News

by ilankai

திருகோணமலை கடற்கரை பகுதியில் அனுமதியின்றி மத ரீதியான கட்டுமானங்களை அமைத்து, புத்தர் சிலையை நிறுவியது தொடர்பான வழக்கில் கைதான பாலாங்கொடை காசியப்ப தேரர் மற்றும் திரிகோணமலை கல்யாண வன்சதிஸ்ஸ தேரர் ஆகியோர் திரிகோணமலை நீதவான் நீதிமன்றம் விதித்த கைது மற்றும் விளக்கமறியல் உத்தரவை வலுவிழக்கச் செய்யக் கோரி, தாக்கல் செய்த மேன்முறையீட்டு (Writ) மனுவை வரும் ஜனவரி 22-ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதவான் பிறப்பித்த விளக்கமறியல் உத்தரவு சட்டத்திற்குப் புறம்பானது என்று மனுதாரர்கள் சார்பாக முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி மனோகர டி சில்வா வாதிட்டார். கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், இவர்களை விளக்கமறியலில் வைக்கப் போதுமான ஆதாரங்களை காவல்துறையினா் சமர்ப்பிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். இந்த வழக்கில் பிணை வழங்க சட்டமா அதிபர் ஏற்கனவே சம்மதம் தெரிவித்திருந்தும் காவல்துறையினா் அதற்கு முரணாகச் செயற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. கடலோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் சந்தேக நபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டதால், அவர்களுக்குப் பிணை வழங்க நீதவானுக்கு அதிகாரம் இல்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் விகும் டி அப்ரூ வாதிட்டார். கடந்த நவம்பர் 16, 2025 அன்று திருகோணமலை கோட்டை வீதியில் உள்ள புத்தர் சிலையை அகற்றப் காவல்துறையினா் முயன்றதாகக் கூறி காசியப்ப தேரர் தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் புத்தர் சிலைக்குப் பின்னால் மறைவாகச் சட்டவிரோத உணவகம் (Restaurant) ஒன்று அமைக்கப்பட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த உணவகத்தை அகற்றக் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் எடுத்த முயற்சியே போராட்டத்திற்குக் காரணம் என உறுதிப்படுத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று (ஜனவரி 19, 2026) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பாலாங்கொடை காசியப்ப தேரர் உள்ளிட்ட குழுவினரை வரும் ஜனவரி 28-ஆம் திகதிவரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது Tag Words: #BalangodaKassapa #Trincomalee #CourtOfAppeal #CoastConservation #BuddhaStatueIncident #SriLankaNews2026 #LegalBattle #RemandExtended

Related Posts