அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தின் மூலம் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் காணப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு அந்த அமைப்பு, இந்த புதிய சட்டமூலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாத எதிர்ப்பு நிபுணர்களால் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என தெரிவித்துள்ளது.இது ஜீ.எஸ்.பி பிளஸ் (GSP+) வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்வதற்காக இலங்கை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வழங்கிய மனித உரிமைகள் பாதுகாப்பு உடன்பாடுகளுக்கு அமைவானது அல்ல எனவும் தெரிவித்துள்ளது.பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட அனைத்து அடக்குமுறைச் செயற்பாடுகளையும் ஒழிப்பதற்கும் மக்களின் சிவில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கும் தற்போதைய அரசாங்கம் உறுதிமொழி வழங்கியுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஆயினும், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள பயங்கரவாதத்திலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான சட்டமூலத்தின் மூலம், பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு நிகரான பல ஏற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் அமைப்பின் ஆசிய பிராந்திய பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். பயங்கரவாத எதிர்ப்பு சட்டங்களைப் பயன்படுத்தி தமிழ், முஸ்லிம் மற்றும் மனித உரிமை பாதுகாவலர்கள் உள்ளிட்ட அரசாங்க எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் சம்பவங்கள் வரலாற்றில் இடம்பெற்றதுடன், அது தற்போதைய அரசாங்கத்தின் கீழும் இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சட்டமூலத்தில் பயங்கரவாதம் தொடர்பில் பரந்த மற்றும் தெளிவற்ற வரைவிலக்கணம் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், இதில் பயங்கரவாதம் அல்லாத குற்றங்களும் உள்ளடக்கப்படுவதால், அரசியல் செயற்பாடுகளைத் தடை செய்தலாக இதனை அர்த்தப்படுத்த முடியும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.
புதிய சட்டத்தல் துஷ்பிரயோகங்கள் அதிகரிக்கும் அபாயம் – மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரிக்கை
6