மத்திய கிழக்கில் போர் மேகங்கள்: அமெரிக்காவுக்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை! – Global Tamil News

by ilankai

அமெரிக்கா தங்கள் மீது ராணுவத் தாக்குதல் நடத்தினால், அதன் விளைவுகள் மிகக் கடுமையாக இருக்கும் என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. அமெரிக்கா ஒருவேளை ஈரானைத் தாக்கினால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்க ராணுவத் தளங்களும் மற்றும் இஸ்ரேலும் ஈரானின் நேரடி இலக்குகளாக மாறும் என ஈரான் ராணுவத் தளபதிகள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் தங்கள் நாட்டு வான்பரப்பையோ அல்லது ராணுவத் தளங்களையோ அமெரிக்கா ஈரானைத் தாக்க பயன்படுத்த அனுமதித்தால், அந்தத் தளங்கள் மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. ஒருவேளை போர் வெடித்தால், இஸ்ரேலின் முக்கிய நகரங்கள் மற்றும் ராணுவ நிலைகள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்படும் என ஈரான் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது. ஈரானில் நடக்கும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாகவும், அங்கு நிலவும் வன்முறையைத் தடுக்கவும் ராணுவ நடவடிக்கை தேவைப்பட்டால் எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்னதாகத் தெரிவித்திருந்தார். இந்த பதற்றம் காரணமாக கத்தாரில் உள்ள அல்-உடைத் (Al-Udeid) விமான தளத்திலிருந்து சில அமெரிக்க அதிகாரிகள் முன்னெச்சரிக்கையாக வெளியேற்றப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், ஈரான் தனது வான்பரப்பை அவ்வப்போது மூடி ராணுவ ஒத்திகைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இந்த மோதல் போக்கு உலகளாவிய கச்சா எண்ணெய் விலை மற்றும் சர்வதேச பாதுகாப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Related Posts