Tuesday, August 19, 2025
Home tamil newsஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு: – Global Tamil News

ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு: – Global Tamil News

by ilankai
0 comments

மன்னார் மறைமாவட்ட ஆயர்  அந்தோனிப்பிள்ளை . ஞானப்பிரகாசம் ஆண்டகை க்கும்,   இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில்   இடையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை (18)  மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு  கருத்து தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (18.08.2025) திங்கள் கிழமை மன்னார் ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை அவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார்.

மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினை, மின்சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால் எழுந்துள்ள பாரிய பாதிப்புக்கள், வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்திய சாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன.

banner

கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகளையும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாதிப்புக்களையும் ஆயர் அவர்கள் ஜனாதிபதிக்கு எடுத்து விளக்கியபோது அச் செயற்பாடு முற்றாக நிறுத்தப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார்.

மின் சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால் எழுந்துள்ள பாரிய பாதிப்புகள், இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன், குறிப்பாக மக்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்திய சாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை ஆயர் அவர்கள் வலியுறுத்திய போது இது தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.என அவர் மேலும் தெரிவித்தார்.(56)

You may also like