யுக்ரேன் போர் நிறுத்தத்துக்கு தடையாக இருக்கும் கிரிமியாவை ஸெலென்ஸ்கி விட்டுக் கொடுக்காதது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, யுக்ரேனிய அதிபர் ஸெலென்ஸ்கிஎழுதியவர், பால் கிர்பிபதவி, ஐரோப்பா டிஜிட்டல் ஆசிரியர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
திங்கள்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை வாஷிங்டனில் சந்தித்தபோது, கிரிமியாவின் எதிர்காலம் குறித்து முக்கியமாகப் பேசப்பட்டது.
மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் போரில், நிலப்பரப்பு பிரச்னை யுக்ரேனில் அமைதி ஏற்படுவதற்கு மிகப்பெரிய தடையாக உள்ளது.
ஸெலென்ஸ்கியை வெள்ளை மாளிகையில் வரவேற்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, “கிரிமியா தீபகற்பத்தை மீண்டும் [யுக்ரேன்] பெற முடியாது” என்று டிரம்ப் கூறினார்.
கிரிமியா என்பது யுக்ரேனியத் தெற்குப் பகுதியில் கருங்கடலில் உள்ள ஒரு தீபகற்பம். 2014-இல் ரஷ்ய படைகள் அதை சட்டவிரோதமாக இணைத்த பிறகு, அது ரஷ்ய ஆக்கிரமிப்பின் கீழ் உள்ளது.
யுக்ரேனிய கடற்கரையில் கிரிமியா அமைந்து இருப்பதால், அது ரஷ்யாவிற்கு உத்தி சார்ந்த முக்கிய இடமாக உள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
2014 பிப்ரவரியில், ரஷ்யா கிரிமியாவை கைப்பற்றியபோது, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “எனக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை” என்று முதலில் மறுத்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத பச்சை நிற சீருடையில் முகமூடி அணிந்த மர்ம கமாண்டோக்கள் உள்ளூர் சட்டமன்றத்தை கைப்பற்றி, தீபகற்பம் முழுவதும் பரவினர்.
“லிட்டில் க்ரீன் மென்” என்ற பெயரில் அழைக்கப்பட்ட அவர்கள், யுக்ரேன் மீது ரஷ்யா தொடங்கிய போரின் ஆரம்பத்தைக் குறிக்கின்றனர். இந்தப் போர் 2022-இல் முழு அளவிலான படையெடுப்பாக உச்சக்கட்டத்தை அடைந்தது.
யுக்ரேனின் தெற்குப் பகுதியில் உள்ள கிரிமியா “பல ஆண்டுகளுக்கு முன்பே தொலைந்து விட்டது” என்றும், அமைதிப் பேச்சுவார்த்தையில் அது “விவாதத்தின் ஒரு பகுதியாக கூட இல்லை”” என்றும் அதிபர் டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.
ஆனால், கிரிமியா யுக்ரேனின் பிரிக்க முடியாத பகுதி என்ற நிலைப்பாட்டை கைவிடுவது, ஸெலென்ஸ்கியால் ஏற்றுக்கொள்ள முடியாதது.
“பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மை என்பது யுக்ரேன் மற்றும் அதன் மக்களுக்கு கடுமையான எல்லை. அதை எவரும் மீற முடியாது” என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரினா ஜெராஷ்செங்கோ கூறுகிறார்.
யுக்ரேனில் ரஷ்ய சார்பு கொண்ட அதிபர் பதவியில் இருந்து அகற்றப்பட்ட பிறகு, தனது மூத்த அதிகாரிகளுடன் இரவு முழுவதும் நடந்த ஒரு கூட்டத்தில், கிரிமியாவை கைப்பற்றும் திட்டத்தை உருவாக்கியதாக புதின் பின்னர் ஒப்புக்கொண்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, அடையாளம் தெரியாத “லிட்டில் க்ரீன் மென் ” கிரிமியாவைக் கைப்பற்றினர், விரைவில் அவர்கள் ரஷ்யர்கள் என்பது தெளிவாகியதுடிரம்பிற்கு கிரிமியா ஒரு தடையாக உள்ளது
அமைதி ஒப்பந்தத்தை விரைவில் பெற விரும்பும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு, கிரிமியா ஒரு பெரிய தடையாக இருக்கக்கூடும்.
எதிர்காலத்தில் யுக்ரேன் மீண்டும் கிரிமியாவை கைப்பற்றும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. நடைமுறையில் கிரிமியா ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஆனால் அதனை சட்டப்படி அங்கீகரிப்பது என்பது முற்றிலும் வேறு விஷயம்.
2018-ல் டிரம்பின் நிர்வாகத்தில் வெளியுறவு செயலாளராக இருந்த மைக் பாம்பியோ வெளியிட்ட “கிரிமியா பிரகடனத்தை” ஸெலென்ஸ்கி நினைவூட்டுகிறார்.
“கிரிமியாவை இணைக்கும் ரஷ்யாவின் முயற்சியை” அமெரிக்கா நிராகரிக்கிறது என்றும் யுக்ரேனின் பிராந்திய ஒருமைப்பாடு மீட்கப்படும் வரை இந்த நிலைப்பாடு தொடரும் என்றும் பாம்பியோ கூறினார்.
அப்போது டிரம்ப் கிரிமியா விஷயத்தில் யுக்ரேனை ஆதரித்தார். அதே நிலைப்பாட்டை இப்போதும் தொடர வேண்டும் என்பதே ஸெலென்ஸ்கியின் விருப்பம் .
சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத நில அபகரிப்பை, அமெரிக்கா சட்டபூர்வமாக ஏற்றுக்கொண்டால், அது சர்வதேச சட்டத்துக்கும் ஐநா சாசனத்தின் அடிப்படை கொள்கைகளுக்கும் பெரிய சவாலாக இருக்கும்.
யுக்ரேன் மீதான முழு அளவிலான போரை ரஷ்யா தொடங்கிய சில வாரங்களில், இஸ்தான்புல்லில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
கிரைமியா பிரச்னையை இப்போது பேசுவதை விட, 10–15 ஆண்டுகளில் பேசி தீர்க்கும் யோசனை முன்வைக்கப்பட்டது.
அந்த யோசனை நடைமுறைக்கு வரவில்லை, ஆனால் கிரிமியா விவகாரத்தில் ஏற்பட்ட தடையைக் கடக்க ஒரு முயற்சியாக இருந்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோர் ஸெலென்ஸ்கி மீது பலமுறை அதிருப்தி அடைந்துள்ளனர்.யுக்ரேனிய அரசியலமைப்பால் கட்டுப்படுத்தப்பட்ட ஸெலன்ஸ்கி
கிரிமியாவை விட்டுக்கொடுக்க தனக்கு அதிகாரம் இல்லை என்பதில் ஸெலென்ஸ்கி உறுதியாக இருந்தார். “இதைப் பற்றி பேச எதுவும் இல்லை. இது எங்களது அரசியலமைப்பிற்கு எதிரானது”என்று அவர் கூறியிருந்தார்.
யுக்ரேனின் இறையாண்மை, “அதன் தற்போதைய எல்லைக்குள் முழுமையாக பரவியுள்ளது. அந்த எல்லை பிரிக்க முடியாதது மற்றும் மீற முடியாதது” என்கிறது அரசியலமைப்பின் பிரிவு 2.
யுக்ரேனின் எல்லையில் ஏதாவது மாற்றம் வர வேண்டுமெனில், அது தேசிய வாக்கெடுப்பில் மக்கள் ஒப்புதல் பெற வேண்டும். அதற்கு நாடாளுமன்ற அனுமதி அவசியம்.
யுக்ரேன் விவகாரத்தில் டிரம்ப் மட்டும் அல்ல, ரஷ்யாவும் யுக்ரேனின் அரசியலமைப்பை அமைதி முயற்சிக்கு “தடையாக” பார்க்கிறது.
அதில் மாற்றம் ஏற்படுவது சாத்தியம்தான். ஆனால் இப்போது யுக்ரேன் ராணுவச் சட்டத்தின் கீழ் இருப்பதால், அரசியலமைப்பில் எந்த மாற்றமும் செய்ய முடியாது.
இது யுக்ரேனுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக மட்டுமல்ல, கருங்கடல் எல்லையில் உள்ள ருமேனியா போன்ற நாடுகளுக்குப் அச்சமூட்டும் முன்னுதாரணமாகவும் அமையும். இது, கருங்கடலைத் தாண்டியும் பல நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கிரிமியாவை இணைத்த ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2022 இல் மாஸ்கோவில் விளாடிமிர் புதின் ஒரு உரையை நிகழ்த்தினார்.கிரிமியா மீது ரஷ்யாவுக்கு உரிமை உள்ளதா?
வரலாற்று காரணங்களால், ரஷ்யர்கள் கிரிமியாவை தங்கள் பிரதேசத்தின் ஒரு பகுதியாகவே நீண்ட காலமாகக் கருதுகிறார்கள்.
புதின், கிரிமியாவுடன் “பிரிக்க முடியாத பிணைப்பு” இருப்பதாகவும், கருங்கடலில் உள்ள ஓய்வு விடுதிகள் மற்றும் மிதமான கோடை காலநிலையைப் பற்றியும் பேசியுள்ளார்.
1991ல் சோவியத் யூனியன் சிதைந்தபோது, கிரிமியா மற்றும் யுக்ரேனின் மற்ற பகுதிகள் சுதந்திரம் பெற வாக்களித்தன.
அதன்பின் யுக்ரேன் அரசு, ரஷ்யாவுக்கு செவஸ்டோபோல் துறைமுகத்தை கருங்கடல் கடற்படைத் தளமாக பயன்படுத்த குத்தகைக்கு விட்டது.
2014இல் கிரிமியாவை இணைத்த பிறகு, புதின் ரஷ்யாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்த முயற்சித்தார். 2018இல் கெர்ச் ஜலசந்தியில் 12 மைல் நீளமுள்ள பாலம் கட்டப்பட்டது, பின்னர் 2022இல் அசோவ் கடற்கரையில் தரைப்பாலத்தைக் கைப்பற்றினார்.
1954இல் சோவியத் தலைவர் நிகிதா குருசேவ் கிரிமியாவை யுக்ரேனுக்கு மாற்றினார். கிரிமியாவை கைப்பற்றுவதன் மூலம் ரஷ்யாவுக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் திருத்துவதாக புதின் கருதினார்.
“ரஷ்யா வெறுமனே கொள்ளையடிக்கப்படவில்லை, முற்றிலும் பறிக்கப்பட்டது,” என்று அவர் கூறினார்.
கிரிமியாவின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ரஷ்யர்கள். 1944-ல் சோவியத் தலைவர் ஸ்டாலின், அங்கு பெரும்பான்மையாக இருந்த கிரிமியன் டாடர் மக்களை வெளியேற்றியதுதான் அதன் முக்கியக் காரணம்.
1989இல் சோவியத் யூனியன் சிதைந்தபோது, டாடர்கள் மீண்டும் கிரிமியாவில் குடியேறினர். தற்போது அவர்கள் கிரிமியாவின் மக்கள்தொகையில் சுமார் 15% ஆக உள்ளனர்.
2014 மார்ச் மாதத்தில், ரஷ்யா விரைவாக ஒரு வாக்கெடுப்பை நடத்தியது. ஆனால் சர்வதேச சமூகமும், ஐநா பொதுச் சபையும் அதை நிராகரித்தன. ஐநா, யுக்ரேனின் இறையாண்மையை ஆதரிக்கும் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ரஷ்யா கிரிமியாவில் மேற்கொண்ட செயல்பாடுகளை, “தொடர்ந்து நடைபெறும் ஆக்கிரமிப்பு” என சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூறியது.
மெஜ்லிஸ் (Mejlis) ( கிரிமியன் டாடர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பு) என்ற அமைப்பின் தலைவர் ரெபாட் சுபரோவ், அமைதிக்கு ஈடாக யுக்ரேன் எந்தவொரு நிலப்பரப்பையும் கைவிடுவதை திட்டவட்டமாக நிராகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
“கிரிமியா என்பது பழங்குடி கிரிமியன் டாடர் மக்களின் தாயகம். அது யுக்ரேனின் பிரிக்க முடியாத பகுதி” என்று அவர் கூறியிருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு