சி.பி.ராதாகிருஷ்ணனை தேர்வு செய்ததன் பின்னணியில் பாஜக போடும் புது கணக்கு
பட மூலாதாரம், X@CPRGuv
எழுதியவர், சேவியர் செல்வகுமார் பதவி, பிபிசி தமிழ்19 ஆகஸ்ட் 2025, 09:34 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்திய குடியரசு துணைத்தலைவர் பதவிக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்குவதன் பின்னணியில் பாஜகவின் இந்த நகர்வு பல்வேறு யூகங்களுக்கு வித்திட்டுள்ளது.
தொடர்ந்து 40 ஆண்டுகளாக பாஜவில் பயணித்ததற்கு வழங்கப்பட்ட பரிசு என்று அக்கட்சியினர் கூறுகின்றனர்.
இது நிச்சயமாக எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கு பலனளிக்கும் என்று அதிமுக தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
தமிழகத்திற்கு குறிப்பாக கொங்கு மண்டலத்திற்கு எதையுமே செய்யாமல் தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு பதவி கொடுப்பதால் மட்டும் தமிழக மக்களை ஏமாற்றிவிட முடியாது என்று திமுக கூறுகிறது.
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணனை நிறுத்தும் பாஜக முடிவின் பின்னணி என்ன?
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
சி.பி.ராதாகிருஷ்ணனின் பின்னணி
குடியரசு துணைத்தலைவராக இருந்த ஜெகதீப் தன்கர் பதவி விலகலைத் தொடர்ந்து, வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி குடியரசு துணைத்தலைவர் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் மத்தியில் ஆளும் கூட்டணியான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளராக தமிழகத்தைச் சேர்ந்தவரும், மகாராஷ்டிரா ஆளுநருமான சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டுள்ளார்.
திருப்பூர் சந்திராபுரத்தைப் பூர்வீகமாகக் கொண்ட ராதாகிருஷ்ணன், கடந்த 1974 ஆம் ஆண்டிலேயே ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் இணைந்து, அதன்பின் பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைர் வேட்பாளராக சி.பி.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவரது மூத்த சகோதரர் சி.பி.குமரேசன், ”சிபிஆர் சிறு வயதிலேயே அரசியலில் இறங்கிவிட்டதால், குடும்பப் பொறுப்புகளை அவரிடம் சுமத்தியதேயில்லை. கட்சிக்காக அவர் செலுத்தியிருக்கும் உழைப்பு அசாத்தியமானது. வாஜ்பாய், அத்வானி காலத்திலிருந்து இப்போதுள்ள தலைவர்கள் வரையிலும் அனைவருடைய நம்பிக்கையையும் பெற்றிருப்பதே அவருடைய அர்ப்பணிப்புள்ள பணிக்கு ஓர் உதாரணம். அதற்கு வழங்கப்பட்ட பரிசாகத்தான் இதை நாங்கள் பார்க்கிறோம்.” என்றார்.
பட மூலாதாரம், X/@CPRGuv
கோவை தொகுதியில் 2 முறை வென்றவர்
சி.பி.ராதாகிருஷ்ணன் 1996 ஆம் ஆண்டில் தமிழக பாஜக செயலாளராக நியமிக்கப்பட்டார். 2004 லிருந்து 2007 வரை தமிழக பாஜ தலைவராக அவர் பதவி வகித்துள்ளார்.
1998 மற்றும் 1999 ஆகிய இரு தேர்தல்களில் கோவையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு அவர் தேர்வானார். அதே கோவை தொகுதியில் 2004, 2014 மற்றும் 2019 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களில் சி.பி.ராதாகிருஷ்ணன் தோல்வியடைந்தார்.
சி.பி.ராதாகிருஷ்ணன் முதல் முறை தேர்தலில் நின்றபோது, இவருக்காக தேர்தல் பரப்புரைக்கு அத்வானி கோவை வந்தபோதுதான், 1998 பிப்ரவரி 14 அன்று கோவையில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்து, 58 பேர் உயிரிழந்தனர். அந்தத் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். அடுத்த 13 மாதங்களில் மத்தியில் ஆட்சி கவிழ்ந்ததால், அடுத்த ஆண்டில் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வேட்பாளராக மீண்டும் வெற்றி பெற்று, 5 ஆண்டுகள் முழுமையாக கோவை நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றினார்.
அப்போது நடந்த பல விஷயங்களை பிபிசி தமிழிடம் நினைவு கூர்ந்த திமுக சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினரும், முன்னாள் தமிழக அமைச்சருமான பொங்கலுார் பழனிசாமி, ”குண்டு வெடிப்புக்குப் பின், கோவையை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வரவும், தொழில் வளர்ச்சியை மீட்டெடுக்கவும் திமுக ஆட்சியில் நாங்கள் பெரும் முயற்சிகளை எடுத்தோம். அப்போது எம்.பி.யாக இருந்து, எங்களுடைய எல்லா முயற்சிகளுக்கும் பக்கபலமாக இருந்தவர் சி.பி.ராதாகிருஷ்ணன்.” என்றார்.
”தமிழக பாஜக தலைவராக சிபிஆர் இருந்த போதுதான், முதல்முறையாக 19 ஆயிரம் கி.மீ. பாத யாத்திரை நடத்தினார். எல்.முருகன் நடத்திய வேல் யாத்திரை, அண்ணாமலை நடத்திய ‘என் மண் என் மக்கள்’ யாத்திரை அனைத்துக்கும் அதுதான் முன்மாதிரியாக இருந்தது. பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த போதும், 40 ஆண்டுகளாக கட்சியை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து பணியாற்றியதற்கான அங்கீகாரமே இது.” என்றார் பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம்.
பட மூலாதாரம், X/@apmbjp
படக்குறிப்பு, பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம்.கொங்கு பகுதியில் அதிருப்தியை சரி செய்யும் முயற்சியா?
கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன், திருப்பூரைச் சேர்ந்தவர் என்றாலும் கோவை நாடாளுமன்ற உறுப்பினராகவும், கயிறு வாரிய தலைவராகவும் பணியாற்றியவர். அவரை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக்கியதன் மூலம் பாஜகவுக்கு எதிர் வரும் சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் அரசியல் ரீதியாக கூடுதல் பலன் கிடைக்குமென்ற கணிப்பும் அவரது தேர்வுக்கு ஒரு காரணமாகச் சொல்லப்படுகிறது.
இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிககையாளர் ராதாகிருஷ்ணன், ”கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த அண்ணாமலையிடமிருந்து மாநிலத்தலைவர் பதவியைப் பறித்து, முக்குலத்தோர் சமுதாயத்தைச் சேர்ந்த நயினார் நாகேந்திரனிடம் கொடுத்தது, கொங்கு மண்டலத்தில் தேர்தலில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று பாஜவுக்கு தகவல் சென்றிருக்கும். அதனால் அந்த சமுதாயத்தினரிடையே ஒருவித அதிருப்தி இருந்ததும் தெரியவந்திருக்கும். இப்போது சிபிஆரை குடியரசு துணைத்தலைவராக தேர்வு செய்வதன் மூலமாக அதை ஈடு செய்ய பாஜ முயற்சி செய்கிறது.” என்றார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆனால் அரசியல்ரீதியாக இது தேர்தலில் பெரும் பலனைக் கொடுக்குமா என்பது சந்தேகமே என்று அவர் கூறினார். அதேபோல, சசிகலா, ஓ.பன்னீர் செல்வம் ஆகியோரை அதிமுகவில் புறக்கணித்து விட்டு, நயினார் நாகேந்திரனை பாஜ தலைவராக நியமித்ததால் மட்டுமே, தெற்கு மாவட்டங்களில் முக்குலத்தோர் சமுதாயத்தினரின் வாக்குகள் அதிமுக–பாஜ கூட்டணிக்குக் கிடைத்துவிடும் என்று கணிப்பதும் தவறாகவே முடியும் என்கிறார் பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன்.
இதே கருத்தை எதிரொலிக்கும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் (திமுக) ராஜ்குமார், ”கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசு துணைத்தலைவர் வேட்பாளராக அறிவித்ததில் மகிழ்ச்சி. ஆனால் தமிழகத்துக்கு குறிப்பாக கொங்கு மண்டலத்துக்கு கடந்த 10 ஆண்டு கால பாஜ ஆட்சியில் எதுவுமே செய்யாத நிலையில், ஒருவரை குடியரசு துணைத்தலைவராக மட்டும் நியமிப்பதால் தமிழகத்துக்கு எந்த பலனும் கிடைக்கப் போவதில்லை. அதை வைத்து தமிழக மக்களை ஏமாற்றவும் முடியாது.” என்றார்.
படக்குறிப்பு, கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார்சி.பி.ராதாகிருஷ்ணன், கடந்த 2014 ஆம் கோவை நாடாளுமன்றத் தொகுதியில் பாஜக வேட்பாளராக போட்டியிட்ட போது, “பாஜ ஆட்சிக்கு வந்தால் கோவையில் மெட்ரோ ரயில் இயக்க மத்திய அரசிடம் நிதி பெற்றுத்தரப்படும். கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் மின்சார ரயில் இயக்கப்படும்” என்று வாக்குறுதி அளித்திருந்தார்.
10 ஆண்டுகள் கடந்த பின்னரும் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில், தற்போது கோவை விமான நிலைய விரிவாக்கம் கோரிக்கையும் கூடுதலாகச் சேர்ந்துள்ளது.
அதைப் பற்றிக் கேள்வி எழுப்பும் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் ராஜ்குமார், ”பாஜக ஆட்சியில் ஜிஎஸ்டியால் தொழில்துறையினர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கோவை விமான நிலைய விரிவாக்கம் கொங்கு மண்டலத்தின் வளர்ச்சிக்கு முக்கியமான விஷயம். அதையும் செய்யவில்லை. ரயில் நிலைய மேம்பாடு, புதிய ரயில்கள் கோரிக்கை, கிழக்கு புறவழிச்சாலை என கொடுத்த வாக்குறுதி எதையுமே நிறைவேற்றாமல் ஒரே ஒருவருக்கு பதவி கொடுப்பதால் மட்டும் கொங்கு மண்டலத்துக்கும் தமிழகத்துக்கும் என்ன பலன் கிடைத்துவிடும்.” என்கிறார்.
படக்குறிப்பு, அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணிஇந்த கருத்துகளை மறுக்கும் அதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி, ”அப்துல் கலாமுக்குப் பின், தமிழரான ஒருவருக்கு இவ்வளவு பெரிய பதவி கிடைப்பது எல்லோராலும் கொண்டாடப்பட வேண்டிய விஷயம். அதிலும் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த பொறுப்பைக் கொடுப்பதற்காக பிரதமருக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். இது தமிழர்கள் அனைவருக்குமான பெருமை என்பதால் தமிழக மக்கள் இதை நிச்சயம் ஆதரிப்பார்கள்.” என்றார்.
”வரும் சட்டமன்றத் தேர்தலில் இது எங்கள் கூட்டணிக்கு பெரும் பலத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறோம். நான் சிபிஆருடன் 4 தேர்தல்களில் பணியாற்றியிருக்கிறேன். அவர் எந்தப் பொறுப்பில் இருந்தாலும் அந்தப் பொறுப்பை வைத்து தமிழகத்துக்கு பல நல்ல திட்டங்களைச் செய்திருக்கிறார். அதேபோல இப்போதும் விமான நிலைய விரிவாக்கம், கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதியுதவி போன்ற பல திட்டங்கள் நிறைவேற்ற அவர் பேருதவியாக இருப்பார்.” என்றும் எஸ்.பி.வேலுமணி நம்பிக்கை தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு