கப்பலுடன் கைவிடப்பட்ட மாலுமிகள் எண்ணிக்கையில் இந்தியா முதலிடம் வகிப்பது ஏன்?

படக்குறிப்பு, ஏப்ரல் முதல் யுக்ரேனிய துறைமுகத்தில் கைவிடப்பட்ட அன்கா சரக்குக் கப்பலின் இந்தியக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்.எழுதியவர், நியாஸ் ஃபாரூக்கிபதவி, பிபிசி செய்திகள்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஏப்ரல் மாதம் முதல், இந்திய மாலுமி மனாஸ் குமார் யுக்ரேனிய கடல் பகுதியில் உள்ள ஒரு சரக்குக் கப்பலில் தவித்து வருகிறார்.

மால்டோவாவிலிருந்து துருக்கிக்கு பாப்கார்ன் கொண்டு சென்ற 14 பேர் கொண்ட குழுவில் மனாஸ் இருந்தார். யுக்ரேன் மற்றும் ருமேனியாவைப் பிரிக்கும் டான்யூப் நதியில் பயணித்தபோது, ஏப்ரல் 18-ஆம் தேதி கப்பல் சோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

அன்கா என்ற அந்தக் கப்பல் ரஷ்யாவின் “நிழல்” கப்பல் தொகுதியின் ஒரு அங்கம் என்றும், யுக்ரேனில் இருந்து “கொள்ளையடிக்கப்பட்ட” தானியங்களை மற்ற நாடுகளுக்கு விற்கப் பயன்படுத்தப்பட்டதாகவும் யுக்ரேன் கூறுகிறது.

ஆனால், கப்பலின் தலைமை அதிகாரியான குமார், அன்கா கப்பல் தான்சானியா கொடியின் கீழ் இயங்குவதாகவும், ஒரு துருக்கிய நிறுவனத்தால் நிர்வகிக்கப்படுவதாகவும் கூறுகிறார்.

ஆனால் அந்தக் கப்பல் யாருடையது என்பது தெளிவாகத் தெரியவில்லை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால், கப்பலின் உரிமையாளர் யார் என்பது குழுவினர் கொடுத்த ஆவணங்களில் தெளிவாக இல்லை. குமாருடன் மேலும் 5 இந்தியர்களும், அசர்பைஜானைச் சேர்ந்த இருவரும், ஆறு எகிப்தியர்களும் அந்தக் குழுவில் உள்ளனர்.

ஐந்து மாதங்களுக்குப் பிறகும், மனாஸ் குமார் உள்ளிட்ட அனைவரும் இன்னும் அந்தக் கப்பலில் சிக்கியுள்ளனர். அவர்கள் மீது விசாரணை நடத்தப்படவில்லை என்பதால் அவர்கள் வெளியேறலாம் என்று யுக்ரேனிய அதிகாரிகள் கூறிய போதிலும், வெளியேற முடியாமல் இருப்பதாக குமார் கூறுகிறார்.

ஆனால் கப்பலில் இருந்து இறங்கினால், அந்தக் கப்பலின் குழுவினர் சம்பளத்தை இழக்க நேரிடும். சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) மற்றும் சர்வதேச கடல்சார் அமைப்புத் (IMO) தரவுகளின்படி, ஜூன் மாதம் வரை அவர்கள் மொத்தமாக 102,828 டாலர் சம்பளத்தை இழந்திருக்கலாம் எனத் தெரிய வருகிறது.

அந்தக் கப்பலின் குழுவினர் கொடுத்த விவரங்களை வைத்து பிபிசி, கப்பலின் நிர்வாகத்தையும் உரிமையாளர்களையும் தொடர்பு கொண்டுள்ளது.

வேலைக்கு சேர்ந்தபோது கப்பலின் முந்தைய வரலாறு தெரியாது என்று குமார் கூறுகிறார். இப்போது இக்கட்டான நிலையில் சிக்கியுள்ள அவர்கள், விரைவில் தீர்வு கிடைக்க வேண்டும் என விரும்புகின்றனர்.

இந்த நெருக்கடியைக் குறைக்க கப்பலின் உரிமையாளரும் இந்திய கப்பல் அதிகாரிகளும், இன்னும் ஒரு நாள் பொறுத்திருங்கள் என்று சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் இதுவரை நம்பிக்கைக்குரிய எதுவும் நடக்கவில்லை, என்று அவர் கூறுகிறார்.

“இது போர் மண்டலம். நாங்கள் விரைவாக வீட்டுக்குத் திரும்ப விரும்புகிறோம்,” என்று மனாஸ் குமார் பிபிசியிடம் தெரிவித்தார்.

உலகளவில் வணிகக் கப்பல்களுக்கு மாலுமிகளை வழங்குவதில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. ஆனால், “கைவிடப்பட்ட மாலுமிகள்” பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. 2006 கடல்சார் தொழிலாளர் மாநாட்டின்படி, கப்பல் உரிமையாளர்கள் குழுவினருடன் தொடர்பை துண்டித்து, திருப்பி அனுப்பாமல், உணவு மற்றும் சம்பளம் வழங்காமல் விடுவதை இந்தச் சொல் குறிக்கிறது.

சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு (ITF) தகவலின்படி, 2024இல் 312 கப்பல்களில் 3,133 மாலுமிகள் கைவிடப்பட்டனர், இதில் 899 பேர் இந்தியர்கள்.

சம்பளம் இல்லாமல் கப்பலை விட்டு வெளியேற முடியாத சூழல் பலருக்கும் உள்ளது. ஏற்கனவே வேலைக்காக அல்லது பயிற்சி சான்றிதழ் பெற வேண்டும் என்பதற்காக முகவர்களுக்கு பெரிய தொகை செலுத்தியிருந்தால் , வெளியேறுவது சாத்தியமில்லை என்று இது குறித்து, உலகின் பல பகுதிகளில் இருந்து இந்திய மாலுமிகளை திருப்பி அனுப்ப உதவும் முன்னாள் கடற்படை வீரர் முகமது குலாம் அன்சாரி பிபிசியிடம் கூறுகிறார்.

படக்குறிப்பு, நிர்வாணா கப்பலின் பணியாளர்கள் கப்பலில் உணவு சமைக்கிறார்கள்.மாலுமிகள் கைவிடப்படுவதற்கு மிக முக்கியமான காரணம், பலவீனமான கப்பல் விதிகளைக் கொண்ட நாடுகளில் ‘சொந்த ஆதாயத்திற்கான கொடி’ (Flags of Convenience – FOC) எனப்படும் முறையில் கப்பல்களைப் பதிவு செய்வது என்று சர்வதேச போக்குவரத்து தொழிலாளர் கூட்டமைப்பு (ITF) தெரிவிக்கிறது.

சர்வதேச கடல்சார் விதிகள், கப்பல் உரிமையாளரின் நாட்டிற்கு சொந்தம் இல்லாத நாட்டில் கப்பலைப் பதிவு செய்ய அனுமதிக்கின்றன.

“ஒரு நாடு கப்பல் பதிவேட்டை அமைத்து, உரிமையாளர்களிடம் கட்டணம் வசூலிக்கலாம். ஆனால், பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்களுக்கான தர நிலைகளைக் குறைத்து, உண்மையான நாட்டின் பொறுப்புகளைப் புறக்கணிக்கலாம்,” என்று ஐடிஎஃப் இணையதளம் குறிப்பிடுகிறது.

இந்த முறை, உண்மையான உரிமையாளரின் அடையாளத்தை மறைக்க உதவுகிறது. இதனால், சந்தேகத்திற்குரிய உரிமையாளர்கள் கப்பல்களை இயக்க முடிகிறது என்று ஐடிஎஃப் கூறுகிறது.

2024ஆம் ஆண்டில், கைவிடப்பட்ட கப்பல்களில் சுமார் 90% சொந்த ஆதாயத்திற்கான கொடியின் (Flags of Convenience – FOC) கீழ் இயங்கியதாக ஐடிஎஃப் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், கப்பல் துறையின் உலகமயமாக்கல் காரணமாகவும் சிக்கல்கள் எழுகின்றன. உரிமையாளர்கள், நிர்வாகிகள், கொடி நாடுகள் மற்றும் குழுவினர் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பது இதற்குக் காரணமாகிறது என்று தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

2025 ஜனவரி 9ஆம் தேதி, கேப்டன் அமிதாப் சவுத்ரி இராக்கிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஒரு சரக்குக் கப்பலை இயக்கிக் கொண்டிருந்தார். மோசமான வானிலை காரணமாக, அவர் வழித்தடத்தை சற்று மாற்ற வேண்டியிருந்தது.

அதற்குப் பிறகு சில நிமிடங்களில், தான்சானியா கொடியுடன் இருந்த ஸ்ட்ராடோஸ் கப்பல், கீழே இருந்த பாறைகளில் மோதி, எண்ணெய் நிரம்பிய தொட்டி சேதமடைந்தது. இதனால், சவுதி அரேபியாவின் ஜுபைல் துறைமுகம் அருகே அந்தக் கப்பலை திட்டமிடாமல் நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அந்தக் குழுவில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேரும், இராக்கைச் சேர்ந்த ஒருவரும் இருந்தனர். அவர்கள் கப்பலை மீண்டும் இயங்க வைக்க பலமுறை முயன்றனர், ஆனால் அந்த முயற்சிகள் வெற்றியடையவில்லை.

கப்பல் மீண்டும் இயங்கும் வரை, 6 மாதங்கள் அங்கேயே உதவிக்காக காத்திருந்தனர்.

இதற்கிடையில், கப்பலின் இராக்கிய உரிமையாளர், “கப்பல் நிறுத்தப்பட்டதால் இழப்பு ஏற்பட்டது” என்று கூறி, குழுவினருக்கு சம்பளம் வழங்க மறுத்துவிட்டார் என்று சவுத்ரி பிபிசியிடம் தெரிவித்தார்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்குமாறு கப்பல் உரிமையாளர்களை பிபிசி தொடர்பு கொண்டது, ஆனால் அவர்கள் பதிலளிக்கவில்லை.

பட மூலாதாரம், BBC/ITF

படக்குறிப்பு, நிர்வாணா கப்பலின் பணியாளர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை.இந்தியாவின் கடல்சார் ஒழுங்குமுறை அமைப்பான கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் (DG Shipping) கப்பல்கள், உரிமையாளர்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிறுவனங்களின் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பொறுப்பை மேற்கொள்கிறது. ஆனால், பங்குதாரர்களை கவனமாக ஆய்வு செய்யத் தவறுவதாக மாலுமிகள் குற்றம் சாட்டுகின்றனர். இது குறித்து கருத்து கேட்கப்பட்டபோது கப்பல் போக்குவரத்து இயக்குநரகம்(DG Shipping) பதிலளிக்கவில்லை.

ஆனால், சிலர் குழுவினரும் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

“வேலைக்கு சேரும்போது, ஒப்பந்தத்தில் ஏதேனும் பிரச்னைகள் இருந்தால், அதை கப்பல் போக்குவரத்து இயக்குநரகத்திடம் (DG Shipping) தெரிவிக்க போதுமான நேரம் இருக்கிறது,” என்று கடற்படையினரின் நலனுக்காகப் பணியாற்றும் ITF பிரதிநிதி சுஷில் தியோருக்கர் கூறுகிறார். “ஆவணங்களில் கையெழுத்திட்ட பிறகு, நீங்கள் சிக்கிக்கொள்கிறீர்கள். பின்னர் தீர்வுக்காக எல்லா கதவுகளையும் தட்ட வேண்டியிருக்கும்”என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இந்தியாவின் கடல் எல்லைக்குள் இயங்கும் இந்திய உரிமையுள்ள கப்பல்களிலும் குழுவினருக்கு சிக்கல்கள் ஏற்படுகின்றன.

கேப்டன் பிரப்ஜீத் சிங், இந்தியாவிற்குச் சொந்தமான, குராக்கோ கொடியுடன் இயங்கும் ‘நிர்வாணா’ என்ற எண்ணெய் டேங்கரில் 22 இந்திய பணியாளர்களுடன் பணியாற்றினார். அந்தக் கப்பல் சமீபத்தில் ஒரு புதிய உரிமையாளருக்கு விற்கப்பட்டது. புதிய உரிமையாளர் கப்பலை முடக்க விரும்பினார். ஆனால், பழைய மற்றும் புதிய உரிமையாளர்களுக்கு இடையே சம்பளம் தொடர்பாக பிரச்னை எழுந்தது.

ஏப்ரல் தொடக்கத்தில், குஜராத் மாநிலத்தில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு அந்தக் கப்பலை பிரித்தெடுப்பதற்காக (dismantling) கேப்டன் சிங் கொண்டு சென்றபோது, “குழுவினருக்கு சம்பளம் செலுத்தப்படவில்லை” என்ற காரணத்தால் இந்திய நீதிமன்றம் கப்பலைப் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது என்று ஐஎல்ஓ-ஐஎம்ஓ ( ILO-IMO) தரவுகள் தெரிவிக்கின்றன.

படக்குறிப்பு, பல மாதங்களாக கடலில் சிக்கித் தவித்த ஸ்ட்ராடோஸ் கப்பல் மே மாதம் மீண்டும் இயக்கப்பட்டபோது குழுவினர் மகிழ்ச்சியடைந்தனர்.சில நாட்களிலேயே தாங்கள் கைவிடப்பட்டுவிட்டதாக ‘நிர்வாணா’ கப்பல் குழுவினர் உணர்ந்தனர் என்று கேப்டன் பிரப்ஜீத் சிங் கூறினார்.

“போதுமான உணவோ, தேவையான பொருட்களோ இல்லை. கப்பலில் டீசல் தீர்ந்து, மின்சாரம் இல்லாமல் முழு இருட்டில் இருந்தோம், “உணவு சமைக்க கப்பலில் இருந்த மரங்களை உடைத்து எரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.”

என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

2024 அக்டோபரில் வேலைக்கு சேர்ந்த சிங், இந்த வேலையால் நல்ல வருமானம் கிடைக்கும் என நம்பினார். அதனால் , சம்பளம் இல்லாமல் கப்பலை விட்டு வெளியேறுவது அவருக்கு சாத்தியம் இல்லை.

நீதிமன்ற உத்தரவின் பேரில் ஏற்பட்ட சமரசத்துக்குப் பிறகு, ஜூலை 7ஆம் தேதி குழுவினர் இறங்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் ILO-IMO தரவுகளின்படி, நீதிமன்ற உத்தரவு இருந்தும் அவர்களுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை.

வளைகுடாவில், ஸ்ட்ராடோஸ் கப்பல் குழுவினர், கப்பலின் அடிப்பகுதியில் உள்ள துளை காரணமாக கப்பல் மூழ்கிவிடுமோ என்று பயந்தனர். ஆனால், உடனடி பிரச்னையாக பசி இருந்தது.

“பல நாட்கள் அரிசி அல்லது உருளைக்கிழங்கு மட்டுமே சாப்பிட்டோம், வேறு பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை,” என்று கேப்டன் அமிதாப் சவுத்ரி கடந்த வாரம் பிபிசியிடம் கூறினார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகு, குழுவினர் கப்பலை மீண்டும் மிதக்க வைத்தனர், ஆனால் விபத்தில் அதன் கட்டுப்பாட்டு அமைப்பு சேதமடைந்து விட்டதால், கப்பல் பயணிக்க முடியாத நிலையில் உள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இன்னும் கப்பலில் சிக்கியுள்ள அவர்கள், சம்பளம் கிடைக்க காத்திருக்கிறார்கள்.

“நாங்கள் இன்னும் அதே இடத்தில், அதே சூழலில் தான் இருக்கிறோம். எங்களது மூளை வேலை செய்யவில்லை. இனி என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க முடியவில்லை,” என்ற சவுத்ரி,

“எங்களுக்கு ஏதாவது உதவி கிடைக்குமா? நாங்கள் வீட்டிற்குச் சென்று எங்கள் அன்புக்குரியவர்களைச் சந்திக்க விரும்புகிறோம்.” என்கிறார் .

அடையாளத்தைப் பாதுகாக்க சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு