இலங்கை ராணுவ முகாமில் தமிழ் இளைஞர் அடித்துக் கொலையா? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால்

எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக2 நிமிடங்களுக்கு முன்னர்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலானது, யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வெற்றியளித்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவான இராணுவத்தினரை நிலைநிறுத்துவதற்கு எதிராகவும், முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவத்திற்கு எதிராகவும் இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 9ம் தேதி சடலமாக மீட்கப்பட்ட அந்த இளைஞர் ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

ஹர்த்தால் வெற்றி அடைந்ததா?

யாழ்ப்பாணம் நகரம் திங்கட்கிழமை முழுமையாக வழமை போன்று இயங்கி வந்ததை, அங்கு சென்ற பிபிசி குழுவினால் அவதானிக்க முடிந்தது. எனினும், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் ஓரளவு இயல்பு வாழ்க்கை முற்பகல் வேளையில் பாதிக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது.

அதேபோன்று, கிழக்கு மாகாணத்திலும் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், அந்த ஹர்த்தால் நடவடிக்கை முழுமையாக வெற்றியளித்துள்ளதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொது போக்குவரத்துக்கள் வழமை போன்று இயங்கியதுடன், பள்ளிகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டமையும் வழமை போன்று இயங்கியதை அவதானிக்க முடிந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், KOGULAN

படக்குறிப்பு, யாழ்ப்பாணம் நகரம் திங்கட்கிழமை முழுமையாக வழமை போன்று இயங்கி வந்தாலும் வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் ஓரளவு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருந்தது. இந்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் நகரிலுள்ள பொதுமக்களிடம் பிபிசி தமிழ் வினவியது.

இலங்கை தமிழரசு கட்சியின் தன்னிச்சையான தீர்மானம் காரணமாகவே ஹர்த்தால் வெற்றியளிக்கவில்லை என யாழ்ப்பாணத்தில் தையல் நிலையமொன்றை நடத்திவரும் ரவிச்சந்திரன் குறிப்பிடுகின்றார்.

”ஹர்த்தால் என்பது சகல அமைப்புகளும் சேர்ந்து முடிவெடுத்து ஹர்த்தால் அறிவித்திருந்தால் நாங்கள் ஒத்துழைப்பு அளித்திருக்கலாம். இது தன்னிச்சையாக அறிவிக்கப்பட்டதனால் நாங்கள் கடைகளை பூட்ட விரும்பவில்லை. அதே ஐந்து ஆறு கட்சிகள் சேர்ந்து அறிவித்திருந்தால் அதை வரவேற்றிருந்திருப்போம். இளைஞன் படுகொலை தொடர்பில் அரசாங்கம் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதை நாங்கள் ஊடகங்களில் பார்க்கின்றோம். அதேநேரம் ராணுவத்தினரும் கைது செய்யப்பட்டுள்ளனர். நாங்கள் அதையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இது அதிக வருமானம் வரக்கூடிய காலப் பகுதி. நிறைய தையல் வேலைகள் வருகின்றன. நல்லூருக்கு அதை கொடுத்தே ஆக வேண்டும். நாங்கள் கடையை பூட்டியிருந்தால், இந்த வேலைகளை முடிக்க முடியாது.” என அவர் குறிப்பிட்டார்.

குறிப்பாக முற்பகல் வேளையில் மாத்திரம் ஹர்த்தால் போராட்டத்தை நடத்துமாறு இலங்கை தமிழரசு கட்சி அறிவித்திருந்தாலும் கூட, திங்கட்கிழமை தினம் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

”இந்த போராட்டம் எதிர்பார்த்ததை விட வெற்றியான முடிவை கொடுத்துள்ளது என சொல்கின்றார்கள். சில இடங்களில் கடைகள் திறந்திருந்தது. 10.30 மணிக்கு பிறகு எல்லா கடைகளும் திறக்கப்பட்டன. அதை சிலர் தோல்வி என்று சொல்லலாம். தன்னிச்சையான முடிவு என்று சொன்னால், அது இலங்கை தமிழரசு கட்சி எடுத்த முடிவு. இலங்கை தமிழரசு கட்சிக்கு அப்படியான முடிவை எடுத்து அறிவிக்கின்ற கடப்பாடு இருக்கின்றது. அதற்கான பொறுப்பு இலங்கை தமிழரசு கட்சிக்கு மட்டும் தான் இருக்கின்றது. இது மற்றவர்களை குறை சொல்வதற்காக விடயம் அல்ல. யதார்த்தம் அது தான். முல்லைத்தீவு மாவட்டம் முற்று முழுதாக முடங்கியிருந்தது. மரணம் நடந்த முல்லைத்தீவு மாவட்டத்தில் இந்த உணர்வு இருக்கின்ற போது, யாழ்ப்பாணத்தில் இருக்கின்றவர்களுக்கு அதனை பகிர்ந்துக்கொள்ளும் உணர்வு இல்லாமல் இருக்கின்றது. அப்படி இருக்க முடியாது.” என அவர் குறிப்பிட்டார்.

படக்குறிப்பு, யாழ்ப்பாணத்தில் தையல் நிலையமொன்றை நடத்திவரும் ரவிச்சந்திரன்ஏன் யாழில் ஹர்த்தால் அனுஷ்டிக்கவில்லை – வர்த்தக சங்கம் என்ன கூறுகின்றது?

“அரசியல்வாதிகளோ அல்லது சங்கங்களோ சொல்வதை கேட்கும் நிலையில் மக்கள் இல்லை. மக்கள் தெளிவாக உள்ளார்கள்” என யாழ்ப்பாணம் வணிக கழகத்தின் தலைவர் ஆர்.ஜெயசேகரன் கூறுகின்றார்.

”கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகள் வலியுறுத்திதை மீறி, மக்கள் அமோகமாக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தனர். ஆனால், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் மீண்டும் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு வாக்களித்தனர். மக்கள் நாங்கள் சொல்வதை கேட்கும் இடத்தில் இல்லை. அவர்களே சிந்தித்து செயற்படும் அளவில் இருக்கின்றனர்.’ என அவர் குறிப்பிடுகின்றார்.

ஹர்த்தாலுக்கான காரணம் என்ன?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவான இராணுவத்தினரை நிலைநிறுத்துவதற்கு எதிராகவும், முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவத்திற்கு எதிராகவும் இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.

கடந்த 15ம் தேதி இந்த ஹர்த்தாலை அனுஷ்டிக்க முன்னதாக தீர்மானம் எட்டப்பட்ட நிலையில், அது 18ம் தேதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மன்னார் மடு மாதா தேவாலயம் மற்றும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் உற்சவங்களை முன்னிட்டு இந்த தேதியை மாற்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தமிழ் இளைஞனின் சடலம் மீட்பு

முல்லைத்தீவு – முத்தையன்கட்டுக் குளத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று கடந்த 09ம் தேதி கண்டெடுக்கப்பட்டது.

குறித்த பகுதியிலுள்ள ராணுவ முகாமொன்றிற்குள் ராணுவத்தினால் வரவழைக்கப்பட்டதாக கூறப்படும் ஐந்து நபர்களில் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது.

ராணுவ முகாமில் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற இரும்பு பொருட்களை பெற்றுத் தருவதாக ராணுவ அதிகாரிகள் கூறியே, இந்த இளைஞர்கள் சென்றுள்ளதாக போலீஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அதன்பின்னர், ராணுவ முகாமிற்கு இந்த ஐந்து இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறப்படும் ஐந்து இளைஞர்களில் நால்வர் தப்பித்துள்ளதாகவும், ஒருவரின் சடலமே இரண்டு தினங்களுக்கு பின்னர் இவ்வாறு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது.

சம்பவத்தில் 32 வயதான ஒரு குழந்தையின் தந்தையான எ.கம்பில்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்திருந்தார்.

மூன்று ராணுவ சிப்பாய்கள் கைது

முல்லைத்தீவு குளமொன்றிலிருந்து தமிழ் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று இராணுவ சிப்பாய்கள் ஒட்டுச்சுட்டான் போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று ராணுவ சிப்பாய்களையும் எதிர்வரும் 19ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் ஒட்டுச்சுட்டான் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர்.

ராணுவத்தின் பதில்

ராணுவத்தின் முகாமிற்குள் இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில் சிலர் பிரவேசித்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை நடத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் அவர்களில் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

இவ்வாறு சட்டவிரோதமாக ராணுவ முகாமிற்குள் பிரவேசித்த ஒருவரை தமது தரப்பினர் பிடித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

ராணுவத்தினால் அந்த சந்தர்ப்பத்தில் பிடிக்கப்பட்ட சந்தேக நபர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார்.

பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர், ஏற்கனவே ராணுவ முகாமிற்குள் பிரவேசித்து திருட்டு சம்பவமொன்றில் ஈடுபட்டமை குறித்த வழக்கொன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

”ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்றதாக சொல்லப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பின்னர் எமக்கு அறிய கிடைத்தது. அது தொடர்பில் எமக்கு சரியாக கூற முடியாது. ஏனென்றால், அவர்கள் தப்பிச் சென்றவர்கள். அந்த நபர் முகாமிற்குள் வந்தாரா என்பது தொடர்பில் கூட நாம் அறிந்திருக்கவில்லை. ராணுவம் சோதனை செய்யும் போது தப்பிச் சென்றுள்ளதாக தப்பி சென்றவர்கள் போலீஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளனர். அதில் ஒருவரே குளத்திற்குள் குதித்து இறந்துள்ளார். அதற்கான பொறுப்பை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.” என ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார்.

குறித்த இளைஞர்கள் இரவு 11.30 மணிக்கு ராணுவ முகாமின் பின்புறத்தின் ஊடாக ராணுவ முகாமிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

”ராணுவ முகாமிற்கு வருகைத் தருமாறு கூறி, பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வருகைத் தர சொல்லப்படுமாக இருந்தாலும், இரவு 11.30க்கு திருட்டுத்தனமாக பின்புறத்தில் வருகைத் தருமாறு நாங்கள் சொல்ல மாட்டோம் அல்லவா?. அப்படி வருகைத் தருமாறு கூறப்படுமாக இருந்தால், நாங்கள் பகல் வேளையில் முன் வழியாக பொறுப்பான அதிகாரி ஒருவர் அழைத்து வந்திருப்பார். இரவு 11.30க்கு வருகைத் தருமாறு நாங்கள் சொல்ல மாட்டோம்.” என அவர் குறிப்பிடுகின்றார்.

பட மூலாதாரம், VARUNA GAMAGE

படக்குறிப்பு, ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகேமூன்று ராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன?

ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்தமை குறித்த சம்பவம் தொடர்பில் இந்த மூன்று சிப்பாய்களும் கைது செய்யப்படவில்லை என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

ராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை திருடுவதற்கு உதவி வழங்கியமை தொடர்பில் இருவர் போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார்.

அத்துடன், முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து தப்பிச் சென்றவர்களின் வழக்கிய வாக்குமூலத்திற்கு அமைய, ராணுவ சிப்பாய் ஒருவர் தம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மற்றைய ராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

அதைத் தவிர்த்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் எந்தவொரு சிப்பாயும் கைது செய்யப்படவில்லை என ராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார்.

ராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து, பொருட்களை திருட முயற்சித்த சம்பவமே இந்த இடத்தில் நேர்ந்துள்ளதாகவும், அதை விடுத்து, தமது தரப்பினர் யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை எனவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகின்றார்.

வடக்கு, கிழக்கில் ஏன் ராணுவ முகாம்கள் அதிகம்?

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009ம் ஆண்டு ராணுவம் வசம் 8 சதவீத நிலப் பரப்பு காணப்பட்டதாகவும், இன்றைய தினத்தில் 0.38 சதவீத நிலப்பரப்பே காணப்படுவதாகவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவிக்கின்றார்.

ஏனைய அனைத்து நிலப்பரப்புகளையும் ராணுவம் விடுவித்து, பொதுமக்களுக்கு கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.

காணி உரிமையாளர்களிடம் காணி தொடர்பான சட்ட ஆவணங்கள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களினாலேயே தற்போது எஞ்சியுள்ள காணிகளை விடுவிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார்.

ராணுவம் உண்மையிலேயே பெருமளவான காணிகளை விடுவித்துள்ளதா?

போர் முடிவடைந்த தருணத்தில் 8 சதவீதமாக காணப்பட்ட பொதுமக்களின் காணிகள் பெருமளவு விடுவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறும் கருத்தை, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மறுக்கின்றார்.

யாழ்ப்பாணத்தில் இன்று பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

”அவர் முற்று முழுதான விடயம் தெரியாதவராக இருக்க வேண்டும். 2003ம் ஆண்டிலிருந்து இது சம்மந்தமான வழக்குகளை நான் செய்துக்கொண்டிருக்கின்றேன். 22 வருடங்கள் செய்துக் கொண்டிருக்கின்றேன். இப்போதும் பலாலி நிலப்பகுதியை சூழவுள்ள காணிகள் தொடர்பாக 2176 வழக்குகளை நான் மட்டும் கையாண்டுக்கொண்டிருக்கின்றேன். எல்லாம் உறுதிப் பத்திரங்கள் இருக்கின்ற வழக்குகள். அத்தனைக்கும் உறுதிப் பத்திரங்கள் இருக்கின்றன. அவர் சொல்கின்ற நிலப் பரப்பு சதவீதமானது, மற்றைய மாகாணங்களை ஒப்பிட்டு சொல்கிறாரா? மற்றைய மாகாணங்களில் ராணுவ பிரசன்னம் எத்தனை சதவீதம் இருக்கின்றது என்று சொன்னாரா? இல்லை. அதைத் தானே பார்க்க வேண்டும். இது ஒரு நாடு. எல்லோரும் சமம் என்று எல்லாம் சொன்னால், எல்லா பிரதேசங்களிலும் சமமான வீதத்திலேயே ராணுவ பிரசன்னம் இருக்க வேண்டும். இது அப்படி இல்லையே. வடக்கு கிழக்கில் மிகப் பெரிய அளவில் ராணுவ பிரசன்னம் இருக்கின்றது. மக்களின் குடியிருப்புக்களுக்கும் மக்களின் வாழ்க்கைக்குள் இணைந்த வகையில் ராணுவம் பிரசன்னம் இருக்கின்றது. ராணுவ மயமாக்கல் என்பது அது தான். அது எந்த காலத்திலும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.” என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார்.

ஏனைய மாகாணங்களில் ராணுவ இருப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து, பிபிசி தமிழ் ராணுவ ஊடகப் பேச்சாளரிடம் வினவியது.

நாட்டின் தேசிய பாதுகாப்பு காரணமாக ராணுவ முகாம்களில் எண்ணிக்கை மற்றும் ராணுவ அதிகாரிகளின் தகவல்கள் குறித்த விடயங்களை வெளியிட முடியாது என அவர் பதிலளித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு