யாழ்ப்பாணத்தில் கடலில் பல்டி அடித்து விளையாடிய இளைஞன் தலையில் படுகாயமடைந்த நிலையில், உயிரிழந்துள்ளார். பளை கரந்தாய் பகுதியை சேர்ந்த இளைஞனே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,  பளை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக, நேற்றைய தினம் திங்கட்கிழமை (09.08.25) இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் வடமராட்சி கிழக்கு தாளையடி கடற்கரை பகுதிக்கு சென்று கடலில் நீராடியுள்ளனர்.

அதன் போது, இளைஞர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறி கடலில் பல்டி அடித்து விளையாடியுள்ளனர். அதன் போது , இளைஞன் ஒருவர் தலையில் படுகாயமடைந்த நிலையில் ஏனைய இளைஞர்கள் அவரை மீட்டு , மருதங்கேணி வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , இளைஞன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் அறிக்கையிட்டனர்.

அதனை அடுத்து சடலத்தை உடற்கூற்று பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ள மருதங்கேணி காவற்துறையினர் இளைஞனுடன் கூட சென்ற ஏனைய இளைஞர்களிடம் தனித்தனியாக வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளதுடன் , மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.