யாழில் ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்கிறது தமிழரசு கட்சி! “பிரஜா சக்தி” திட்டத்திற்கு எதிராக நீதிமன்றை நாடுவோம் – எம்.ஏ. சுமந்திரன் அதிரடி அறிவிப்பு! by admin January 15, 2026 written by admin January 15, 2026 யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெறும் ஜனாதிபதியின் பொங்கல் நிகழ்வு உட்பட அனைத்து உத்தியோகபூர்வ நிகழ்வுகளையும் இலங்கை தமிழரசு கட்சி புறக்கணிப்பதாக அக்கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார் . இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை உத்தியோகபூர்வமாக அறிவித்தார். “பிரஜா சக்தி” எனும் பெயரில் அரச இயந்திரங்களுக்கு சமாந்தரமாக, ஜனாதிபதியின் கட்சியைச் சார்ந்தவர்களைக் கொண்டு ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. நிழல் அரசாங்க த்திற்கான முயற்சியாக இது அமைகிறது. உள்ளூராட்சி சபைகள் செய்ய வேண்டிய வேலைத்திட்டங்களை திசைமாற்றி, இந்த அமைப்பின் ஊடாக முன்னெடுப்பதை அதிகார துஷ்பிரயோகமாக கருதி வன்மையாகக் கண்டிக்கிறோம். குறிப்பாக தமக்கு உள்ளூராட்சி அதிகாரங்கள் கிடைக்காத வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இத்தகைய சட்டவிரோத செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன இதனால் வடக்கு – கிழக்கு புறக்கணிக்கப்படும். வறுமை ஒழிப்பு என்ற போர்வையில், உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களை மத்திய அரசு நேரடியாகக் கையில் எடுப்பதை எதிர்த்து, நீதிமன்றில் சட்டரீதியான சவாலை முன்னெடுக்கவும் தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. “சுனாமி காலப்பகுதியில் வடக்கு கிழக்கில் நிவாரணப் பணிகளை முன்னெடுக்க முயன்றபோது இதே ஜே.வி.பியினர்தான் நீதிமன்றம் சென்று தடையுத்தரவு பெற்றனர் என்பதை இந்த நேரத்தில் நினைவுபடுத்துகிறோம்.” எனவும் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். மேலதிக தகவல்களுக்கு எமது பக்கத்தை பின்தொடரவும்!
யாழில் ஜனாதிபதியின் நிகழ்வை புறக்கணிக்கிறது தமிழரசு கட்சி! – Global Tamil News
7
previous post