பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலிய நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்குக் கரையில் உள்ள நீண்ட காலமாக முடக்கப்பட்ட ஈ1 குடியேற்றத் திட்டத்திற்கான “குடியேற்ற விரிவாக்கம்” குறித்து ஆகஸ்ட் 14, 2025 அன்று மாலே அடுமிம் அருகே நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசினார்.36 நிமிடங்களுக்கு முன்னர்

இஸ்ரேலின் வலதுசாரி நிதியமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச், “பாலத்தீன நாடு உருவாகும் யோசனையை முற்றிலும் அழிக்கும்” என்று வர்ணித்த சர்ச்சைக்குரிய குடியேற்றத் திட்டம், பலரிடையே கடும் விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

இந்த திட்டம் ஈ1 என அழைக்கப்படுகிறது.

இதன் மூலம், கிழக்கு ஜெருசலேமுக்கும் மாலே அடுமிம் குடியேற்றப் பகுதிக்கும் இடையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் 3,401 வீடுகள் கட்டப்பட உள்ளன. இந்த திட்டம் பல ஆண்டுகளாக கடுமையான எதிர்ப்பால் நிறுத்தப்பட்டிருந்தது.

சர்வதேச சட்டத்தின் அடிப்படையில், பெரும்பாலான நாடுகள் இஸ்ரேல் குடியேற்றங்களை சட்டவிரோதமானவை என்று கருதுகின்றன. ஆனால் இஸ்ரேல் இதை மறுக்கிறது.

புதன்கிழமையன்று, இந்த திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிதியமைச்சர் ஸ்மோட்ரிச், இதனை “வரலாற்று சாதனை” என்றும் கூறினார்.

பாலத்தீன வெளியுறவு அமைச்சகம் இதனை “இனப்படுகொலை, மக்கள் இடம்பெயர்தல் மற்றும் நிலங்களை இணைத்தல் போன்ற குற்றங்களின் தொடர்ச்சி” என்று கூறியுள்ளது. ஆனால், இஸ்ரேல் இந்த குற்றச்சாட்டுகளை நீண்ட காலமாக மறுத்து வருகிறது.

இந்தத் திட்டத்திற்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு (ஐ.நா.), ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த திட்டத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அந்த நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஈ1 குடியேற்றத் திட்டம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேல், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் மாலே அடுமிம் உள்ளிட்ட பல குடியேற்றங்களைக் கட்டியுள்ளது.1990களில் யிட்ஸாக் ரபின் தலைமையில் முதன்முறையாக முன்மொழியப்பட்ட ஈ1 குடியேற்றத் திட்டம், 2,500 வீடுகளுக்கான ஆரம்பத் திட்டங்களுடன் தொடங்கியது.

2004இல், இது வணிக மற்றும் சுற்றுலா வசதிகளுடன் சேர்த்து சுமார் 4,000 வீடுகளாக விரிவடைந்தது.

2009 முதல் 2020 வரை, நில எடுப்பு, கட்டிட வடிவமைப்புகள் மற்றும் சாலை கட்டுமானம் உள்ளிட்ட புதிய கட்டிடங்கள் அறிவிக்கப்பட்டன.

ஆனால் சர்வதேச அழுத்தத்தின் காரணமாக ஒவ்வொரு முறையும் அந்த திட்டம் முடக்கப்பட்டது.

அந்தத் திட்டம் ஏன் சர்ச்சைக்குரியதாக உள்ளது ?

ஈ1 பகுதியை மேம்படுத்துவது, பாலத்தீன அரசு உருவாவதற்கு தடையாக இருக்கும் என்று நீண்ட காலமாக கருதப்படுகிறது.

ஈ1 பகுதி முக்கியமான இடத்தில் இருப்பதால், அது ஜெருசலேமின் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளைப் பிரிக்கிறது. இதனால், ரமல்லா, கிழக்கு ஜெருசலேம் மற்றும் பெத்லஹேம் ஆகியவற்றை இணைக்கும் ஒருங்கிணைந்த பாலத்தீன நகர்ப்பகுதி உருவாவது தடைபடுகிறது.

இஸ்ரேலிய அமைப்பான ‘பீஸ் நவ்’ (Peace Now) தகவல்படி, மேற்குக் கரையில் குடியேற்றங்களைக் கண்காணிக்கும் இந்தக் குழு, ஈ1 பகுதியில் புதிய வீடுகள் கட்டும் திட்டம் மாலே அடுமிம் குடியேற்றத்தின் அளவை 33% உயர்த்தும் என்று தெரிவிக்கிறது. இந்தப் பகுதியில் தற்போது சுமார் 38,000 பேர் வசிக்கின்றனர்.

இந்தத் திட்டம், வீடுகள் அமையவுள்ள புதிய பகுதிகளை அருகிலுள்ள தொழில்துறை பகுதிகளுடன் இணைக்கும். இதன்மூலம் மேற்குக் கரையின் பெரும் பகுதிகளில் இஸ்ரேலின் ஆதிக்கம் விரிவடையும் என்று ‘பீஸ் நவ்’ கூறுகிறது.

ஈ1 குடியேற்ற திட்டத்திற்கான இறுதி ஒப்புதல் விசாரணை அடுத்த புதன்கிழமை நடைபெற உள்ளது.

இந்த விசாரணையை நடத்தும் தொழில்நுட்பக் குழு, இதற்கு முன்பு முன்வைக்கப்பட்ட எதிர்ப்புகளை ஏற்க மறுத்துவிட்டது.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்குக் கரையில், ரமல்லா அருகே ஆலிவ் பழங்களை அறுவடை செய்ய பாலத்தீன விவசாயிகளுக்கு இஸ்ரேலிய வீரர்கள் அனுமதி மறுப்பதை, இஸ்ரேலிய குடியேறிகள் தொலைவில் இருந்து பார்க்கின்றனர்.மேற்குக் கரை என்பது இஸ்ரேலுக்கும் ஜோர்டான் நதிக்கும் இடையில் உள்ள ஒரு நிலப்பகுதி. இந்த இடம் சுமார் 30 லட்சம் பாலத்தீனியர்களின் வாழ்விடமாக இருக்கிறது.

கிழக்கு ஜெருசலேம் மற்றும் காஸாவுடன், இது ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனியப் பகுதிகள் என்று பரவலாக அறியப்படுகிறது.

மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் சுமார் 700,000 யூதர்கள் வசிக்கும் சுமார் 160 இஸ்ரேலிய குடியிருப்புகள் உள்ளன.

இஸ்ரேல் இந்தப் பகுதியில் இருப்பதற்கு பாலத்தீனியர்கள் எப்போதுமே எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் தற்போதும் மேற்குக் கரையை முழுமையாக கட்டுப்படுத்தி வருகிறது.

ஆனால் 1990களிலிருந்து, ‘பாலத்தீனிய அதிகாரம்’ எனப்படும் பாலத்தீனிய அரசாங்கம், அந்தப் பகுதிகளில் உள்ள பெரும்பாலான பகுதிகளை நிர்வகித்து வருகிறது.

7 அக்டோபர் 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய பிறகு, மேற்குக் கரை பாலத்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் அழுத்தம் மிகவும் அதிகரித்துள்ளது. ஆனால், இஸ்ரேல் இதை ‘பாதுகாப்புக்கான நியாயமான நடவடிக்கைகள்’ என நியாயப்படுத்துகிறது.

ஜூன் மாதத்தில், ஐக்கிய நாடுகள் அமைப்பு கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமான பாலத்தீனியர்கள் காயமடைந்ததாகக் கூறியது.

அந்த மாதத்தில் மட்டும், இஸ்ரேலிய குடியேறியவர்களால் 100 பாலத்தீனியர்கள் காயமடைந்துள்ளனர்.

2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில், இதுபோன்று 757 தாக்குதல்கள் நடந்துள்ளதாக ஐ.நா. பதிவு செய்துள்ளது. இந்த தாக்குதல்களால் பாலத்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் அல்லது அவர்களின் சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது, இந்தச் சம்பவங்கள் 13% அதிகரித்துள்ளது.

பாலத்தீனியர்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் தங்கள் சட்டபூர்வ கடமையை தவறிவிட்டதாக குற்றம் சாட்டுகின்றன. அவர்கள் பாலத்தீனியர்களையும், தங்கள் சொந்த குடிமக்களையும் பாதுகாக்க வேண்டும். ஆனால், குடியேற்றத் தாக்குதல்கள் தொடர்பாக அவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதோடு, சில நேரங்களில் அதில் பங்கேற்றதாகவும் 2024ஆம் ஆண்டின் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் (Human Rights Watch) அறிக்கை கூறுகிறது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் குடியேற்றங்களைத் தடைசெய்யும் ஜெனீவா ஒப்பந்தங்கள் தங்களுக்கு பொருந்தாது என்று இஸ்ரேல் கூறுகிறது. ஆனால், இந்தக் கருத்தை அதன் சொந்த கூட்டாளிகளும் பல சர்வதேச வழக்கறிஞர்களும் மறுக்கின்றனர்.

பாலத்தீனியர்கள், மேற்குக் கரையை எதிர்கால சுதந்திர பாலத்தீன தேசத்திற்கான நிலமாகக் கருதுகிறார்கள். அதனால், அனைத்து இஸ்ரேலிய குடியேற்றங்களும் அகற்றப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

ஆனால், இஸ்ரேலிய அரசாங்கம் பாலத்தீனியர்கள் தங்கள் சொந்த நாட்டைக் கொண்டிருப்பதற்கான உரிமையை ஏற்கவில்லை. மேற்குக் கரை என்பது இஸ்ரேலுடைய சொந்தப் பகுதிகளில் ஒன்று என அவர்கள் வாதிடுகிறார்கள்.

ஜூலை 2024ல், ஐக்கிய நாடுகள் அமைப்பின் உயர் நீதிமன்றமான சர்வதேச நீதிமன்றம் (ICJ), ஆக்கிரமிக்கப்பட்ட பாலத்தீனியப் பகுதிகளில் இஸ்ரேல் தொடர்ந்து இருப்பது சட்டவிரோதமானது என்று தெரிவித்தது. மேலும், இஸ்ரேல் குடியேறியவர்களை அந்தப் பகுதிகளில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் கூறியது.

ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் பாலத்தீனியர்களுக்கு இஸ்ரேல் விதிக்கும் கட்டுப்பாடுகள், “இனம், மதம் அல்லது இன அடையாளத்தின் அடிப்படையில் நடைபெறும் ஒரு திட்டமிட்ட பாகுபாடு” என்று நீதிமன்றம் கூறியது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, இந்த நீதிமன்ற தீர்ப்பை “பொய்யானது” என்று விமர்சித்தார்.

“யூத மக்கள் தங்கள் சொந்த நிலத்தில் ஆக்கிரமிப்பாளர்கள் இல்லை. நமது நிரந்தர தலைநகர் ஜெருசலேமிலோ, யூதேயா மற்றும் சமாரியா [மேற்குக் கரை] போன்ற பாரம்பரிய நிலங்களிலோ இல்லை” என்று நெதன்யாகு தெரிவித்தார்.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேல் ஆக்கிரமித்த மேற்குக் கரையில், இரண்டு வயதான பாலத்தீன விவசாயிகள் ஆலிவ் பழங்களைப் பறிப்பதை இஸ்ரேலிய வீரர்கள் தடுக்கின்றனர்.ஈ1 திட்டத்திற்கு உலகநாடுகளின் எதிர்வினை என்ன?

ஈ1 திட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் தூதர் மைக் ஹக்கபி ஆகியோர் ஆதரவு தெரிவித்ததற்காக நன்றி கூறினார் ஸ்மோட்ரிச் . அவரது கருத்துப்படி, மேற்குக் கரை “கடவுளால் வாக்குறுதியளிக்கப்பட்ட இஸ்ரேல் நிலத்தின் பிரிக்க முடியாத பகுதி” ஆகும்.

மேலும், மேற்குக் கரையில் ஒரு மில்லியன் புதிய குடியேறிகளை கொண்டு வருவதற்கான தனது திட்டங்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆதரிக்கிறார் என்றும் அவர் கூறினார்.

பாலத்தீனிய வெளியுறவு அமைச்சகம் ஈ1 திட்டத்தை கண்டித்தது.

இந்த திட்டம் பாலத்தீனிய பிரதேசத்தின் ஒற்றுமையை தாக்குகிறது, மேலும் ஒரு சுயாதீன அரசை உருவாக்கும் சாத்தியக்கூறுகளுக்கு பெரிய தடையாக இருக்கிறது என்றும் கூறியது.

இந்தத் திட்டம், நிலவியல் ரீதியான மற்றும் மக்கள்தொகையின் ஒற்றுமையை பாதிக்கிறது. மேற்குக் கரை, காலனித்துவ விரிவாக்கத்தால் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக பிரிக்கப்படும், இதனால் அந்தப் பகுதிகளை இணைத்துக்கொள்வது எளிதாகிவிடும் என்றும் பாலத்தீனிய வெளியுறவு அமைச்சகம் குறிப்பிட்டது.

மறுபுறம், ஈ1 பகுதியில் கட்டுமானம் செய்யும் திட்டங்களுக்கு பதிலளித்து, “ஒரு நிலையான மேற்குக் கரை இஸ்ரேலுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. இது பிராந்திய அமைதியை அடைவதற்கான இந்த நிர்வாகத்தின் குறிக்கோளுடன் பொருந்துகிறது”என அமெரிக்க வெளியுறவுத்துறை கூறியது.

ஆனால், ஐ.நா. மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இஸ்ரேலை இந்த திட்டத்தை அடுத்த கட்டத்தை நோக்கிக் கொண்டு செல்ல வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளன.

ஈ1 பகுதியில் கட்டுமானம் செய்வது, மேற்குக் கரையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளை பிரிக்கிறது. இது “ஒரு தொடர்ச்சியான, சாத்தியமான பாலத்தீனிய அரசை உருவாக்கும் வாய்ப்புகளை கடுமையாக பாதிக்கும்”என ஐ.நா. கூறியது.

புதிய ஈ1 குடியேற்றத் திட்டம் “சர்வதேச சட்டத்தை மீறும், இரு நாடுகளின் தீர்வை மேலும் பாதிக்கும்” என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறியிருந்தார்.

பிரிட்டனின் வெளியுறவு மந்திரி டேவிட் லாம்மி இந்த திட்டங்களை எதிர்த்துள்ளார். “இது எதிர்கால பாலத்தீன அரசை இரண்டாகப் பிரிக்கும். அதேபோல், சர்வதேச சட்டத்தை வெளிப்படையாக மீறுகிறது.”என்று அவர் கூறியுள்ளார்.

இத்திட்டத்தை கண்டித்த துருக்கியின் வெளியுறவு அமைச்சகம், “இது சர்வதேச சட்டத்தை புறக்கணிக்கிறது, மேலும் பாலத்தீன அரசின் பிராந்திய ஒருமைப்பாட்டை குறிவைக்கிறது” என்று தெரிவித்தது.

எகிப்து, இந்த திட்டத்தை “சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை வெளிப்படையாக மீறுகிறது” என்று கூறியது.

ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகமும் இத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ஜோர்டானிய வெளியுறவு அமைச்சகம் இந்தத் திட்டத்தை எதிர்த்து, இது “1967 ஜூன் 4 எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட சுதந்திரமான, இறையாண்மை பாலத்தீன அரசை உருவாக்கும் பாலத்தீன மக்களின் உரிமை மீதான தாக்குதல்” என விவரித்தது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற நாடுகள் இந்த ஆண்டின் பிற்பகுதியில் பாலத்தீன அரசை அங்கீகரிக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறியதற்குப் பிறகு, ஈ1 திட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது, ஐ.நா. உறுப்பினர்களில் 193 நாடுகளில் 147 நாடுகள் பாலத்தீன அரசை முறையாக அங்கீகரித்துள்ளன.

“இஸ்ரேல் காஸாவில் போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொள்வது மற்றும் இரு நாடுகளின் தீர்வை மீண்டும் முன்னிறுத்துவது போன்ற நிபந்தனைகளை பூர்த்தி செய்யாவிட்டால், செப்டம்பரில் பிரிட்டன் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும்”என பிரிட்டன் பிரதமர் சர் கீயர் ஸ்டார்மர் கூறியிருந்தார்.

ஆனால், ஈ1 புதிய குடியேற்றத் திட்டம் அறிவிக்கப்பட்ட பிறகு, “அங்கீகரிக்க எந்த அரசும் இருக்காது”என்று ஸ்மோட்ரிச் கூறினார்.

“இன்று உலகில் யாராவது பாலத்தீன அரசை அங்கீகரிக்க முயன்றால், அவர்களுக்கு நாங்கள் நேரடியாக பதிலளிப்போம். ஆவணங்கள், முடிவுகள் அல்லது அறிக்கைகளால் அல்ல, மாறாக உண்மைகளால். வீடுகள், குடியிருப்புப் பகுதிகள் போன்ற உண்மைகளால்,” என்று அவர் மேலும் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு