தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான அன்னதானத்திற்காக பிடியரிசித் திட்டம் தேவஸ்தான தலைவர் ஆறு திருமுருகனால்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தெல்லிப்பழை துர்க்காதேவியின் வருடாந்த மஹோற்சவ  எதிர்வரும் 25ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து மகோற்சவ திருவிழாக்கள் இடம்பெற்று , செப்டெம்பர் 04ஆம் திகதி காலை தேர் திருவிழாவும் மறுநாள் 05ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெற்று , மாலை கொடியிறக்கம் இடம்பெற்று மகோற்சவ திருவிழாக்கள் நிறைவுறும்.

திருவிழா நாட்களில் தினமும் தேவஸ்தானத்தில் உள்ள அன்னசத்திரத்தில் அடியவர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவது வழமையாகும். இம்முறையும் அன்னதானம் வழங்கப்படுவதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், தேவஸ்தானத்தில்  பாத்திரம் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளிலிருந்து ஒரு கைப்பிடி அரிசி எடுத்து வந்து அந்த பாத்திரத்தில் போட்டு அடியார்களுக்கு உணவு கொடுக்கும் மிக உயர்ந்த புண்ணிய கருமத்தில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளுங்கள் என தெல்லிப்பழை துர்க்காதேவி தேவஸ்தான தலைவர் ஆறு.திருமுருகன் அடியவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.