பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாடு முழுவதும் நேற்று (ஆகஸ்ட் 17) பரவலாக மழை பெய்துள்ளது. 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் கோவை மாவட்டத்தில் உள்ள வால்பாறை PAP மற்றும் வால்பாறை தாலுகாவில் 7 செ.மீ., மழையும், சோலையார், சின்கோனா, நடுவட்டம், வால்பாறை பிடிஓ மற்றும் உபாசி (UPASI) பகுதிகளில் தலா 5 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.

நீலகிரி, கோவையில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் முன்பே எச்சரிக்கை விடுத்திருந்தது. இன்று (ஆகஸ்ட் 17) முதல் வரும் 23ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.