டிவால்ட் பிரிவிஸ்-க்காக விதிகளை மீறியதா சிஎஸ்கே? – அஸ்வின் கருத்தால் எழுந்த சர்ச்சைக்கு விளக்கம்

பட மூலாதாரம், R. SATISH BABU/AFP via Getty Images

எழுதியவர், போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மழைவிட்டாலும் தூறல் விடவில்லை என்பதுபோல் ஐபிஎல் சீசன் முடிந்தாலும், சிஎஸ்கே குறித்த சில பரபரப்பு தகவல்கள் அவ்வப்போது வந்து ரசிகர்களை விழிப்பிலே வைத்திருக்கிறது.

குறிப்பாக சிஎஸ்கே அணி அடுத்த சீசனில் எந்தெந்த வீரர்களை அணியில் தக்கவைக்கப் போகிறார்கள், தோனி விளையாடுவாரா, எந்தெந்த வீரர்களை விடுவிக்கப் போகிறார்கள் என்ற கணிப்புகளை, ஊகங்களை முன்னாள் வீரர்கள் சிலர் தங்கள் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது தெரிவித்து சிஎஸ்கே பரபரப்புக்கு உயிர்கொடுத்து வருகிறார்கள்.

அதில் முன்னாள் வீரர் சடகோபன் ரமேஷ் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் பதிவிட்ட வீடியோவில், ” சிஎஸ்கே அணி சில வீரர்களை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடன் பரிமாற்றம் செய்வது குறித்து பேசி வருகிறது. அதில் கேப்டன் சஞ்சு சாம்ஸனை சிஎஸ்கே பக்கம் இழுத்துவிட்டு, அதற்குப் பதிலாக ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட சிலரை வழங்கவும் பேச்சு நடக்கிறது” எனத் தெரிவித்தார்.

இது ரசிகர்கள் மத்தியில் சிஎஸ்கே அணி குறித்த பரபரப்பை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.

அஸ்வின் வீசிய அணுகுண்டு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின்இந்தச் சூழலில் சிஎஸ்கே அணியில் தற்போது இருக்கும் ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் தளத்தில் பிரிவிஸை சிஎஸ்கே அணி விலைக்கு வாங்கியது குறித்து பேசியதுதான் சமூகவலைத்தளத்தில் பேசுபொருளாகி, அது கிரிக்கெட் தளத்தில் விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அஸ்வின் சமீபத்தில் வெளியிட்ட வீடியோவில் பேசுகையில் ” சிஎஸ்கே அணி நிர்வாகம் பாதி சீசனின் போது காயமடைந்த குர்ஜப்நீத் சிங்கிற்குப் பதிலாக தென் ஆப்ரிக்க இளம் வீரர் டிவால்ட் பிரிவிஸை தங்கள் அணியில் சேர்ப்பது குறித்து அணுகியது.

பிரிவிஸிடம் நடத்தப்பட்ட பேரத்தின் முடிவில் அவரின் அடிப்படை விலையைவிட சிஎஸ்கே அணி கூடுதல் பணம் வழங்கியிருக்கலாம். ஏனென்றால், அந்த நேரத்தில் பிரிவிஸை சேர்க்க பல அணிகளும் அவருடன் பேரத்தில் இருந்தன.

இதிலிருந்து முந்திக்கொண்டு அவரை வாங்க வேண்டும் என்ற நோக்கில் குர்ஜப்நீத்துக்கு நிர்ணயிக்கப்பட்ட ரூ.2.20 கோடி விலையைவிட கூடுதலாக சிஎஸ்கே அணி கொடுத்திருக்கலாம் என்று தெரிகிறது. பிரிவிஸின் கடந்த ஐபிஎல் சீசன் ஆகச்சிறந்ததாக இருந்தது” எனத் தெரிவித்தார்.

ஆனால், உண்மையில் பிரிவிஸ் ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும்போது அவருக்கான அடிப்படை விலை ரூ.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஏலத்தில் ஒரு அணிகூட பிரிவிஸை சீண்டிக்கூட பார்க்கவில்லை. இதனால் ஏலமாகாத வீரர்கள் பட்டியில் பிரிவிஸ் இருந்தாலும், பதிவு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியலில் இருந்தார்.

ஆனால், பிரிவிஸின் கடந்த கால கிரிக்கெட் புள்ளிவிவரங்களை அறிந்தபின்புதான் பல்வேறு அணிகள் சீசனின் இடைப்பகுதியில் அவரை அணியில் சேர்க்க போட்டிபோட்டன, அவருக்கான கிராக்கியும் அதிகரித்தது.

ஆகாஷ் சோப்ராவின் விளக்கம்

பிரிவிஸை அவரின் அடிப்படை விலையான ரூ.75 லட்சத்தில் இருந்து ரூ.2.20 கோடிக்கும் அல்லது அஸ்வின் கூற்றுப்படி அதற்கு அதிகமான விலையிலும் சிஎஸ்கே அணி வாங்கியது சரியானதா என்பது குறித்து முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது யூடியூப் தளத்தில் விளக்கியுள்ளார்

ஆகாஷ் சோப்ரா அளித்த விளக்கத்தில் ” ஐபிஎல் சீசனின் நடுப்பகுதியில் காயம் காரணமாக ஒரு வீரருக்குப் பதிலாக மற்றொரு வீரரை ஓர் அணி சேர்க்கும் பட்சத்தில் அவருக்கு “ப்ரோ ரேட்டா”(pro rata basis) அடிப்படையில்தான் ஊதியம் வழங்க வேண்டும். அதாவது மீதமுள்ள போட்டிகளை கணக்கிட்டு மாற்று வீரருக்கு ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும். அப்படி இருக்கையில் பிரவிஸுக்கு அவரின் அடிப்படை விலையில் பாதியான ரூ.37.50 லட்சத்தைதான் அடிப்படையாக வைத்திருக்க வேண்டும்.

காயமடைந்த குர்ஜப்நீத்துக்கு பதிலாக சேர்க்கப்பட்டதால் அவருக்கான ஏலத்தொகை ரூ.2.20 கோடியிலிருந்து பாதியைத்தான் பிரிவிஸுக்கு நிர்ணயித்து மீதமுள்ள சீசனில் இருக்கும் போட்டிகளில் விளையாட வைக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தென் ஆப்ரிக்கா பேட்டர், ஜூனியர் ஏபிடி என அழைக்கப்படும் டிவால்ட் பிரெவிஸ்விதிகள் மீறப்பட்டதா?

பிரிவிஸ் அடிப்படை விலையில் இருந்து கூடுதலாக பணத்தை சிஎஸ்கே நிர்வாகத்திடம் கோரினார் என்று அஸ்வின் தெரிவித்துள்ளார். பிரிவிஸுக்கு கூடுதலாக பணம் வழங்க ஏதேனும் வழிமுறை இருக்கிறதா, அதிகாரபூர்வமாக அவரால் பெற முடியுமா.

சில நேரத்தில் ஐபிஎல் அணியிடம் இருக்கும் பர்ஸின் கையிருப்பு பண அ்ளவை மீறமுடியுமா, அந்த விதிமுறை மீறலை, ஓட்டைகளைத்தான் அஸ்வின் குறிப்பிட்டாரா. ஒருவேளை அதிகமான பணத்தை சிஎஸ்கே நிர்வாகம் பிரிவிஸுக்கு வழங்கினாலும் அது அடுத்த சீசனுக்கானதாக இருக்கலாம். ஏதேனும் விதிகளில் ஓட்டை இருந்தால், நிச்சயமாக அதை பயன்படுத்தியிருக்கலாம்” எனத் தெரிவித்திருந்தார்.

சிஎஸ்கே விளக்கம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சென்னை சூப்பர் கிங்ஸ்இந்நிலையில் அஸ்வினின் குற்றச்சாட்டுக்கு சிஎஸ்கே நிர்வாகம் அதிகாரபூர்வமாக திடீரென விளக்கம் அளித்து அஸ்வின் கூற்றை மறுத்துள்ளது. அதில் ஐபிஎல் விதிப்படி அனைத்து விதிகளை முறைப்படி பின்பற்றிதான், காயமடைந்த வீரருக்கு மாற்று வீரராக டிவால்ட் பிரிவிஸை அணிக்குள் கொண்டு வந்தோம் என்று சிஎஸ்கே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிஎஸ்கே அணி அளித்த விளக்கத்தில் ” ஐபிஎல் தொடரில் இருக்கும் விதிகளின் படிதான் காயமடைந்த வீரருக்குப் பதிலாக மாற்றுவீரராக டிவால்ட் பிரிவிஸ் சேர்க்கப்பட்டார். ஐபிஎல் விதி 6.6ன் படி மாற்றுவீரர் விதி முறையாகக் கடைபிடிக்கப்பட்டது.

2025 டாடா ஐபிஎல் சீசனில் காயமடைந்த வீரருக்குப் பதிலாக மாற்று வீரரைச் சேர்க்கும் விதிகளையும், கட்டுப்பாடுகளையும் முறைப்படி சிஎஸ்கே நிர்வாகம் பின்பற்றிதான் டிவால்ட் பிரிவிஸை அணிக்குள் சேர்த்தது, அவரை ஒப்பந்தம் செய்தது.

மாற்று வீரரை சேர்க்கும் ஐபிஎல் விதி 6.1 அல்லது 6.2ல் குறிப்பிட்டபடி, சீசனில் வழங்கப்படும் ஊதியத்தைவிட அதிகமாக இல்லாதவாறு, காயமடைந்த வீரருக்கு எந்த ஊதியம் நிர்ணயிக்கப்பட்டிருந்ததோ அந்த ஊதியத்தைதான் மாற்று வீரருக்கு வழங்கினோம்.

அதாவது குர்ஜப்நீத்துக்கு 2025 சீசனில் ரூ.2.20 கோடி ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது, அது தான் அவருக்குப் பதிலாக அணியில் சேர்க்கப்பட்ட டிவால்ட் பிரிவிஸுக்கும் வழங்கப்பட்டது. இந்த தொகையைவிட கூடுதலாக சிஎஸ்கே நிர்வாகம் வழங்கவில்லை” என விளக்கம் அளித்தது.

ஐபிஎல் விதிகள் கூறுவதென்ன?

பட மூலாதாரம், Getty Images

ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரருக்கு காயம் ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக்குறைவு ஏற்பட்டு தொடர்ந்து விளையாட முடியாத சூழல் நிலவும்போது மாற்றுவீரரை அந்த அணி நிர்வாகம் தேர்வு செய்ய ஐபிஎல் விதி அனுமதிக்கிறது.

ஆனால், மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படக்கூடியவருக்கும் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஐபிஎல் விதிகளில் கூறப்பட்டுள்ளதாவது

இதன்படி, மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படக்கூடிய வீரர் ஒருவர் அந்த சீசனில் உள்ள பதிவு செய்யப்பட்ட வீரர்கள் பட்டியல்(RAAP) பெயரை பதிவு செய்திருக்க வேண்டும். அவ்வாறு பதிவு செய்த வீரரைத்தான் ஓர் அணி மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

அந்த மாற்று வீரர் ஐபிஎல் சீசன்முழுமைக்கும் வேறு எந்த போட்டித் தொடரிலும் விளையாடாமல் இருப்பாரா, அல்லது எப்போது வேறு தொடர்களில் விளையாடச் செல்வார், அவருக்கான ஒப்பந்த ஊதியம், முழு சீசனிலும் விளையாட நேர்ந்தால் அதற்கான தொகை ஆகியவற்றை குறிப்பிட வேண்டும்.

மாற்று வீரரின் வீரர் ஒப்பந்தம் விதிமுறைகளின்படி நீட்டிக்கப்பட்டால், அடுத்த சீசனுக்கான வீரருக்கு வழங்க வேண்டிய சம்பளத் தொகை, நடப்பு சீசனுக்கான ஊதிய உச்சவரம்பிற்கும் அதிகமாக வழங்கப்படலாம். எப்படியாகினும் அணியில் வீரர்கள் எண்ணிக்கை 25 பேருக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஏலத்தில் வாங்கப்பட்ட ஒரு வீரர் அந்த அணிக்காக ஏற்கெனவே போட்டியில் பங்கேற்றிருந்த போதிலும், சீசனின் நடுப்பகுதியில் காயம் ஏற்பட்டாலோ அல்லது உடல்நலக் குறைவு ஏற்பட்டாலோ அவருக்கு மாற்று வீரர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

ஆனால், அந்த சீசனில் 12 லீக் போட்டிக்கு முன்பாகவே காயம் அல்லது உடல்நலக்குறைவு ஏலத்தில் வாங்கப்பட்ட வீரருக்கு ஏற்பட்டிருக்க வேண்டும்.

பிசிசிஐ அமைப்பால் நியமிக்கப்பட்ட மருத்துவர், அந்த குறிப்பிட்டவீரரின் உடல்நிலையை பரிசோதித்து காயம் ஏற்பட்டதையும், உடல்நலக்குறைவு ஏற்பட்டதையும் உறுதி செய்ய வேண்டும்.

தொடர்ந்து அந்த வீரரால் விளையாட முடியாது என்று சான்றளித்தபின்புதான் மாற்றுவீரரை அணி நிர்வாகம் தேர்ந்தெடுக்க முடியும்.

ஐபிஎல் விதி பிரிவு 6.6ல் குறிப்பிட்டுள்ளபடி, “மாற்று வீரராகத் தேர்ந்தெடுக்கப்படும் வீரருக்கான ஊதியம் என்பது காயமடைந்த அல்லது விளையாட முடியாத வீரருக்கு அந்த சீசனில் ஒப்பந்தம் செய்யப்பட்ட ஊதியத்தைவிட விட அதிகமாக இருக்கக்கூடாது.”

விதி 6.7ல் குறிப்பிட்டுள்ளபடி “ஒரு சீசனில் மாற்று வீரர் சேர்க்கப்பட்டால், அவருக்கான ஊதியம் அவர் அணியில் சேர்க்கப்படும் முன், எத்தனை போட்டிகளை அந்த அணி விளையாடி முடித்துள்ளது என்பது கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு அதற்கு ஏற்றார்போல் ஊதியம் குறைக்கப்படும்.”

உதாரணமாக சிஎஸ்கே அணி பிரிவிஸை அணியில் சேர்க்கும் முன் 5 போட்டிகளில் பங்கேற்றிருந்தால், மீதமுள்ள லீக் போட்டிகளை மட்டும் கணக்கிட்டு ஊதியம் நிர்ணயிக்கப்படும்.

விதி 6.8ன் கீழ் ” மாற்று வீரரை ஒரு அணி ஒப்பந்தம் செய்வதற்கு முன், அந்த அணி நிர்வாகம் அது தொடர்புடைய அனைத்து தகவல்களையும் பிசிசிஐ-க்கு அனுப்பி வைக்க வேண்டும். பிசிசிஐ ஒப்புதல் அளித்தப்பின்புதான் மாற்றுவீரருடன் ஒப்பந்தத்தில் கையொப்பமிடவேண்டும்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு