Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மாம்பழம் நீரிழிவு நோயாளிகள் சாப்பிட உகந்த பழமா? ஆய்வில் தெரியவந்த அறிவியல் உண்மை
பட மூலாதாரம், Mansi Thapliyal
படக்குறிப்பு, இந்தியாவில் 1,000க்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன.எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்பதவி, பிபிசி செய்திகள்17 ஆகஸ்ட் 2025, 03:35 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியாவை உலுக்கும் கோடைகாலத்தில், மும்பையைச் சேர்ந்த முன்னணி நீரிழிவு நிபுணர் ராகுல் பாக்ஸியிடம் நோயாளிகள் அடிக்கடி கேட்கும் கேள்வி, “மாம்பழம் சாப்பிடலாமா?” என்பது தான்.
“மாம்பழம் அதன் இனிப்பு சுவையாலும், பலவித வகைகளாலும் இந்தியாவின் கோடைகாலத்தில் முக்கியமான பழமாக இருக்கிறது. மக்கள் ஏன் அதை விரும்பிச் சாப்பிட விரும்புகிறார்கள் என்பதையும் புரிந்துகொள்ள முடியும் ,” என்கிறார் ராகுல் பாக்ஸி.
ஆனால், இந்த எளிய கேள்வி பல தவறான எண்ணங்களை உள்ளடக்கியது. சிலர் மாம்பழத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என நினைக்கிறார்கள். மறுபுறம், சிலர் “அதிகமாக மாம்பழம் சாப்பிட்டால் நீரிழிவு குணமாகிவிடும்” என்று நம்புகிறார்கள்.
ஆனால், இந்த இரண்டு எண்ணங்களுக்கு இடையிலும் வேறொரு உண்மை உள்ளது. அதேபோல் இந்தக் குழப்பமும் கோடைகாலத்துடன் முடிவதில்லை.
“மாம்பழப் பருவம் முடிந்த பிறகு, பல நோயாளிகள் மீண்டும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அவர்களின் இரத்த சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். சில சமயங்களில், இதற்குக் காரணம் மாம்பழத்தை அதிகமாகச் சாப்பிட்டதுதான்,” என்கிறார் மருத்துவர் ராகுல் பாக்ஸி.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்தத் தொடர்ச்சியான குழப்பம், நீரிழிவு நோயாளிகளை “பழங்களின் ராஜா” என்று அழைக்கப்படும் மாம்பழத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருக்க வைத்துள்ளது. ஆனால், புதிய ஆராய்ச்சிகள் மாம்பழம் தவறான பழமல்ல என்று கூறுகின்றன.
இந்தியாவில் நடந்த இரண்டு புதிய மருத்துவ ஆய்வுகள், பழைய உணவு நம்பிக்கைகளை மாற்றியுள்ளன. ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்குப் பதிலாக, குறைவாகவும் கட்டுப்பாட்டுடனும் மாம்பழம் சாப்பிடுவது, டைப்-2 நீரிழிவு நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவையும், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம் என்று கூறுகின்றன.
கணையம் இன்சுலினை குறைவாகவோ அல்லது உற்பத்தி செய்யாமலோ இருக்கும்போது டைப்-1 நீரிழிவு நோய் ஏற்படுகிறது, அதே நேரத்தில் டைப்-2 நீரிழிவு நோயில், உடல் இன்சுலினை சரியாகப் பயன்படுத்த முடியாமல் எதிர்க்கிறது.
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு (IDF) கூற்றின்படி, உலகளவில் 90% க்கும் மேற்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு டைப்- 2 நீரிழிவு நோய் உள்ளது. இது உலகில் நோய்களால் ஏற்படும் பாதிப்புகளில் எட்டாவது முக்கிய காரணமாக உள்ளது.
2050ஆம் ஆண்டுக்குள் இது இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதற்கான முழு காரணங்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றாலும், அதிக உடல் எடை, வயது, இனம் மற்றும் குடும்பத்தில் நீரிழிவு வரலாறு ஆகியவை இதற்கு முக்கியக் காரணங்களாக உள்ளன.
உலக சுகாதார அமைப்பு (WHO) கூறுவதன்படி, இந்தியாவில் சுமார் 7.7 கோடி பேருக்கு டைப்-2 நீரிழிவு நோய் உள்ளது. கிட்டத்தட்ட 2.5 கோடி பேர் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் உள்ளனர்.
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
படக்குறிப்பு, இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் தொடங்கப்பட்டு , அதன் கலாசார முக்கியத்துவத்தைக் கொண்டாடுகின்றனர்.ஆனால் இத்தகு சவால்களுக்கு மத்தியிலும், புதிய ஆய்வுகள் மாம்பழ பிரியர்களுக்கு ஆச்சரியமான நம்பிக்கையை அளிக்கின்றன.
கிளினிகல் நியூட்ரிஷன் என்ற ஐரோப்பிய இதழில் இதுதொடர்பான ஆய்வுக் கட்டுரை ஒன்று விரைவில் வெளியாகிறது. 95 பேரை உள்ளடக்கிய அந்த ஆய்வில் இந்தியாவின் பிரபலமான மாம்பழ வகைகளான சஃபேடா, டாஷேரி, மற்றும் லாங்ரா ஆகியவை வெள்ளை ரொட்டியை விட குறைந்த அல்லது அதனை ஒத்த ரத்த சர்க்கரை உயர்வை ஏற்படுத்துவதாகக் கண்டறியப்பட்டது.
(ரத்த சர்க்கரை உயர்வு என்பது, ஒரு உணவைச் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் சர்க்கரை எவ்வளவு வேகமாக, எந்த அளவில் உயர்கிறது என்பதைக் குறிக்கிறது.)
டைப்- 2 நீரிழிவு நோயாளிகளையும், நீரிழிவு இல்லாதவர்களையும் மூன்று நாட்கள் தொடர்ந்து கண்காணித்த போது, நீரிழிவு நோயாளிகள் மாம்பழம் சாப்பிட்ட பிறகு, உணவுக்குப் பிந்தைய ரத்த சர்க்கரை ஏற்ற இறக்கங்கள் மிகவும் குறைவாக இருந்தன. இந்தக் குறைவான ஏற்ற இறக்கங்கள், நீண்ட காலத்திற்கு உடலுக்கு நன்மை தரலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
“மாம்பழம் அனைவராலும் விரும்பப்படும் பழம், ஆனால் இது ரத்த சர்க்கரையையும் உடல் எடையையும் அதிகரிக்கும் என்று பலர் தவறாக நினைக்கிறார்கள்,” என்கிறார் இரண்டு ஆய்வுகளிலும் பிரதானமாக அங்கம் வகித்த மருத்துவர் சுகந்தா கெஹர்.
“பரிந்துரைக்கப்பட்ட உணவு முறைகளுக்குள், மாம்பழம் சாப்பிடுவது ரத்த சர்க்கரைக்கு தீங்கு விளைவிப்பதில்லை, மாறாக நன்மையைத் தரலாம் என்று இந்த ஆய்வுகள் காட்டுகின்றன,” என்று அவர் கூறுகிறார்.
டெல்லியில் உள்ள ஃபோர்டிஸ் சி-டிஓசி மருத்துவமனையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் நிதியுதவியுடன் நடத்தப்பட்ட எட்டு வார ஆய்வு, இந்தக் கண்டுபிடிப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஆய்வு, நீரிழிவு மற்றும் வளர்சிதை மாற்றக் கோளாறுகள் என்ற இதழில் வெளியாகியுள்ளது.
டைப்- 2 நீரிழிவு உள்ள 35 பேர் , தங்கள் காலை உணவில் ரொட்டிக்குப் பதிலாக 250 கிராம் மாம்பழம் சாப்பிட்டனர். இதன் விளைவாக, சாப்பிடுவதற்கு முன்பான அவர்களின் ரத்த சர்க்கரை, HbA1c (சராசரி இரத்த சர்க்கரை அளவைக் காட்டும் பரிசோதனை), இன்சுலின் எதிர்ப்பு, உடல் எடை, இடுப்பு அளவு, மற்றும் HDL (நல்ல) கொழுப்பு ஆகியவற்றில் முன்னேற்றம் கண்டனர். இவை நீரிழிவு கட்டுப்பாடு மற்றும் உடல் ஆரோக்கியத்தின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
“காலை உணவில் ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக சிறிய அளவு மாம்பழம் சாப்பிடுவதன் நன்மைகளை முதல் முறையாக இரண்டு விரிவான ஆய்வுகளில் நிரூபித்தோம். மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற தவறான கருத்துகளுக்கு இதன் மூலம் முற்றுப்புள்ளி வைத்தோம்,” என்கிறார் ஆய்வின் மூத்த ஆசிரியரும் தலைவருமான பேராசிரியர் அனூப் மிஸ்ரா.
“ஆனால், மிதமாக சாப்பிடுவதும், மருத்துவரின் ஆலோசனைப்படி நடப்பதும் முக்கியம். மாறாக, எவ்வளவு வேண்டுமானாலும் மாம்பழம் சாப்பிடலாம் என்று அர்த்தம் அல்ல” என்று அவர் எச்சரிக்கிறார்.
பட மூலாதாரம், Bloomberg via Getty Images
படக்குறிப்பு, இந்தியாவில் 77 மில்லியன் நபர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.மாம்பழத்தை மிதமாக சாப்பிடுவது என்றால் என்ன என்று பேராசிரியர் அனூப் மிஸ்ராவிடம் கேட்டேன்.
“ஒரு நாளைக்கு உங்கள் கலோரி எல்லை 1,600 ஆக இருந்தால், மாம்பழத்தின் கலோரிகள் அதற்குள் அடங்க வேண்டும், கூடுதலாக இருக்கக் கூடாது. 250 கிராம் மாம்பழம், அதாவது ஒரு சிறிய பழம் சுமார் 180 கலோரிகளைக் கொண்டது. ஆய்வில் கூறியபடி, அதேபோன்ற முடிவுகளைப் பெற, ரொட்டி போன்ற கார்போஹைட்ரேட்டுகளுக்கு பதிலாக மாம்பழத்தை உண்ண வேண்டும்,” என்று அவர் என்னிடம் விளக்கினார்.
மருத்துவர் பாக்ஸியும் தனது நோயாளிகளுக்கும் இதே போன்ற அறிவுரையைச் சொல்வதாகக் கூறுகிறார்.
“ரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருந்தால், என் நோயாளிகளை குறைந்த அளவு மாம்பழம் (அதாவது 15 கிராம் கார்போஹைட்ரேட் தரும் அளவு) , நாளொன்றுக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ பாதி பழத்தை சாப்பிட ஊக்குவிக்கிறேன்,” என்று அவர் கூறுகிறார்.
அளவைக் கட்டுப்படுத்துவது மிக முக்கியம். மாம்பழத்தை இனிப்பாக அல்லாமல், உணவுக்கு இடையில் சாப்பிட வேண்டும். புரதம் அல்லது நார்ச்சத்து மிக்க உணவுகளுடன், அதனை சேர்த்து சாப்பிடுங்கள். மாம்பழத்தை ரொட்டி, சாறு அல்லது மில்க் ஷேக் போன்ற சர்க்கரை உணவுகளுடன் கலந்து சாப்பிடுவதைத் தவிருங்கள் என்று மருத்துவர் பாக்ஸி தனது நோயாளிகளுக்கு அறிவுறுத்துகிறார்.
மாம்பழம் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, இந்தியர்களுடைய வாழ்விலும் பெரிய இடத்தைப் பிடித்துள்ளது. இது கலாசார, சமூக, மற்றும் ராஜ தந்திர ரீதியில் முக்கியத்துவம் கொண்ட ஒரு பழம்.
“மாம்பழ ராஜ தந்திரம் ” என்பது இந்தியத் துணைக் கண்டத்தில் பிரபலமான சொல். கவனமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாம்பழப் பெட்டிகள் அரசியல் ஒப்பந்தங்களை எளிதாக்கலாம், கூட்டணிகளை வலுப்படுத்தலாம், அல்லது பதற்றமான பேச்சுவார்த்தைகளை சுமூகமாக்கலாம்.
பட மூலாதாரம், AFP via Getty Images
படக்குறிப்பு, 2007 ஆம் ஆண்டு நடந்த ஒரு விழாவின் போது, முன்னாள் இந்தியத் தூதர் ரோனன் சென், அப்போதைய அமெரிக்க வேளாண் செயலாளர் மைக் ஜோஹன்ஸுக்கு இந்திய மாம்பழங்களின் கூடையை வழங்குகிறார்.இந்திய நகரங்களில் மாம்பழத் திருவிழாக்கள் ஏற்பாடு செய்யப்பட்டு , இந்தப் பழத்தின் கலாசார மற்றும் பொருளாதார முக்கியத்துவம் கொண்டாடப்படுகிறது. இந்தப் பழம் விரும்பப்படும் உணவாகவும், சக்தி வாய்ந்த சமூக மதிப்பைக் காட்டுவதாகவும் உள்ளது.
“பெரும்பாலான இந்தியர்களுக்கு மாம்பழத்தின் மீது தனிப்பட்ட விருப்பம் உள்ளது. தங்கள் ஊரின் மாம்பழம் தான் சிறந்தது என்று பலர் வாதிடுவார்கள்” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த வரலாற்றாசிரியரும் சமையல் நிபுணருமான புஷ்பேஷ் பந்த்.
“நல்ல மாம்பழங்கள் சாப்பிடுவதற்கு மட்டுமல்ல. அவை நகைகளைப் போன்ற அழகும் மதிப்பும் கொண்டவை. “சிறந்த மாம்பழங்கள், அதிக பணம் கொடுக்கத் தயாராக இருப்பவர்களிடம் சென்று சேர்கின்றன” என்று Mangifera indica: A Biography of the Mango என்ற புத்தகத்தில், இந்தப் பழத்தையும் அதன் ரசிகர்களையும் பற்றி விரிவாக எழுதியுள்ளார் சோபன் ஜோஷி.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாம்பழ வகைகள் பயிரிடப்படுகின்றன. இந்தியாவின் மாம்பழங்கள் பிராந்தியத்திற்கு ஏற்ப மாறுபடுகின்றன என்று ஜோஷி குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு வகைகளான லாங்ரா, டாஷேரி, சௌசா, மற்றும் ஹிம்சாகர் ஆகியவை மிகவும் இனிப்பாக உள்ளன, அதே நேரத்தில் தெற்கு வகைகள் மென்மையான இனிப்பு-புளிப்பு சுவையைத் தருகின்றன. மேற்கு இந்தியாவின் அல்போன்சா மாம்பழம், சர்க்கரை மற்றும் அமிலத்தின் தனித்துவமான சமநிலையால் தனித்துவமான சுவையைப் பெறுகிறது.
இந்தியர்களின் வாழ்க்கையில் மாம்பழம் மிகவும் முக்கியமானது. ஒரு ஆண்டின் தொடக்கமே பல இடங்களில் மாம்பழம் பூக்கும் காலத்துடன் ஆரம்பிக்கிறது. கவிஞர் காலிப் மாம்பழத்தை “மூடிய தேன் குவளை” என்று அழைத்தார். அதன் வசீகரத்தைக் கொண்டாடி நூற்றுக்கணக்கான புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன.
மாம்பழம் ஒரு பக்கம் மகிழ்ச்சியைத் தருகிறது, மறு பக்கம் அடையாளமாக விளங்குகிறது. எப்போதும் மக்களை மகிழ்விக்கும் பழம், தற்போது ஆச்சர்யமளிக்கும் விதமாக அறிவியலின் ஆதரவையும் பெற்றுள்ளது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு