Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘அது நடந்திருக்கவே கூடாது’: டிரம்ப் – புதின் சந்திப்பில் அரங்கேறிய காட்சி பற்றி யுக்ரேன் மக்கள் கருத்து
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, அலாஸ்காவில் சிவப்பு கம்பள வரவேற்பைப் பெறும் விளாடிமிர் புதின்; அன்பாக வரவேற்கும் டொனால்ட் டிரம்ப்எழுதியவர், ஜோயல் குண்டர்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
ரஷ்யா – யுக்ரேன் போரில், ரஷ்யாவிற்கு குறிப்பிடத்தக்க சலுகைகளை வழங்கும் வகையில் ஒப்பந்தத்தை டொனால்ட் டிரம்ப் ஏற்படுத்தி விடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருந்த நிலையில், யுக்ரேன் மக்கள் வெள்ளிக்கிழமை இரவு அச்சத்துடனே படுக்கைக்குச் சென்றனர்.
சனிக்கிழமை காலை அவர்கள் விழித்தெழுந்தபோது, அலாஸ்காவில் நடந்த டிரம்ப்-புதின் உச்சிமாநாடு எந்தவிதமான மூலோபாய அல்லது அரசியல் ஒப்பந்தங்களும் இல்லாமல் தோல்வியடைந்ததைக் கண்டு நிம்மதியடைந்தனர். ஒப்பந்தம் ஏதும் ஏற்படவில்லை என்பது இந்த உச்சிமாநாடு தோல்வியுற்றது என்பதற்கான உதாரணமாகும்.
தற்போதைய நிலையில் உண்மையான முன்னேற்றங்கள் எதுவும் இல்லாத நிலையில், யுக்ரேன் மக்களின் கவனம் உச்சிமாநாட்டில் என்ன நடைபெற்றது என்பதை நோக்கித் திரும்பியது.
அரசியல் ரீதியாக இதை “ஆப்டிக்ஸ்” (optics)என்று சொல்வார்கள். அதாவது, ஊடகங்கள் காட்டும் விதத்தில் ஒரு சூழ்நிலையைப் பார்த்த பிறகு, பொதுமக்களின் கருத்து மற்றும் புரிதல், இதன் சாத்தியமான அரசியல் விளைவுகள் என்ன என்பதை அவதானிப்பது “ஆப்டிக்ஸ்”எனப்படும்.
யுக்ரேனுக்கு எதிரான பேரழிவு தரும் ஆக்கிரமிப்புப் போருக்குப் காரணமான புதினுக்கு அலாஸ்காவில் மிகச் சிறந்த வரவேற்பு கிடைத்தது. அமெரிக்கா ரஷ்ய அதிபருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்து சிறப்பு செய்தது. அவர் நெருங்கி வந்தபோது டிரம்ப் அவரை அன்புடன் அணுகி, நட்புடன் கைகுலுக்கினார். இரு தலைவர்களும் அமெரிக்க அதிபரின் பிரத்யேக லியூமோசின் வாகனத்தில் ஒன்றாக பயணித்தனர், கார் செல்லும்போது புதின் சிரித்துக் கொண்டிருப்பதைக் காண முடிந்தது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, “அது நடந்திருக்கக் கூடாது” என்று புதினுக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு குறித்து மரியா டிராச்சோவா கூறினார்யுக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு சர்வதேச அளவில் கண்டனங்களைப் பெற்ற ரஷ்ய அதிபர் ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், உலகளாவிய இராஜதந்திர நிலையில், ரஷ்ய அதிபரை அமெரிக்கா வரவேற்றது ஒரு குறிப்பிடத்தக்க தொடக்கத்தைக் குறித்தது. அன்றைய நாள் முழுவதுமே ரஷ்ய அதிபருக்கு சிறப்பான மரியாதை வழங்கப்பட்டது.
இந்தக் காட்சி யுக்ரேனில் வரவேற்கத்தக்கதாக இல்லை.
“சர்வதேச நிகழ்வுகளில், சிவப்பு கம்பள வரவேற்பும், பெரிய அளவிலான சந்திப்புகளும் விழாக்களும் இயல்பானவை, ஆனால் லட்சக்கணக்கான மக்களின் மரணத்திற்கு காரணமான ஒரு ஆக்கிரமிப்பாளரை இவ்வளவு மரியாதையுடன் வரவேற்றிருக்கக் கூடாது” என்று யுக்ரேன் தலைநகர் கியவில் உள்ள வழக்கறிஞர் மரியா டிராச்சோவா கருதுகிறார்.
காலை உணவருந்திக் கொண்டே இந்தக் காட்சிகளைப் பார்த்த டிராச்சோவா, “முழு நிகழ்வும் புதினை மகிழ்விக்க அரங்கேற்றப்பட்டது போலவே தோன்றியது” என்று அவர் கூறினார்.
“அவருக்கு இவ்வளவு சிறப்பான வரவேற்பை வழங்குவதன் மூலம் பகுத்தறிவு உலகம் பகுத்தறிவற்ற முறையில் நடந்து கொள்கிறது,” என்று 40 வயதான மரியா டிராச்சோவா தெரிவித்தார்.
பட மூலாதாரம், Reuters
நான்கு அமெரிக்க போர் விமானங்கள் புடைசூழ, புதினின் விமானம் அலாஸ்காவில் உள்ள விமானப்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டது. விமானத்தில் இருந்து இறங்கிய அவர் சிவப்பு கம்பளத்தில் நடந்து சென்று, டிரம்புடன் மகிழ்வுடன் பேசிக் கொண்டிருந்தபோது, நான்கு எஃப்-35 போர் விமானங்கள் சூழ அமெரிக்க வி-2 குண்டுவீச்சு விமானம் ஒன்று வானில் பறந்தது.
டிரம்ப், புதினை சந்திக்கும் காட்சியை பார்ப்பதற்காக உறங்காமல் கண்விழித்துக் காத்திருந்த யுக்ரேனியர்கள், “போர்க்குற்றவாளி ஒருவரை உயர்ந்த மட்டத்தில் நியாயப்படுத்துவதை” கண்டதாக நினைக்கிறார்கள் என்று யுக்ரேனிய எழுத்தாளரும் அரசியல் ஆய்வாளருமான ஒலெக்சாண்டர் கோவலென்கோ கூறினார்.
“இவ்வளவு ஆடம்பரமாக அவரை வரவேற்றிருக்க வேண்டிய அவசியம் இல்லை” என்று கோவலென்கோ கூறினார். “இந்த அளவில் இல்லாமல் குறைந்தபட்ச மரியாதையுடன் மிகவும் நிதானமான முறையில் நடத்தப்பட்டிருக்க வேண்டிய ஒரு சந்திப்பு அது” என்று அவர் கருதுகிறார்.
இரு தலைவர்களும் சம்பிரதாயப்படி சந்தித்தப் பிறகு, டிரம்பும் புதினும் எல்மென்டோர்ஃப் விமானப்படை தளத்தில் “சமாதானத்தை நாடுதல்” என எழுதப்பட்டிருந்த பதாகையின் கீழ் அமர்ந்தனர். அப்போது ஒரு செய்தியாளர், “நீங்கள் பொதுமக்களைக் கொல்வதை நிறுத்துவீர்களா?” என்று புதினை நோக்கி கேள்வி எழுப்பினார்.
கேள்வியைக் கேட்ட ரஷ்யத் தலைவர் புன்னகைப்பது போல் தோன்றியது, மேலும் தனக்கு கேள்வி கேட்கவில்லை என்று அவர் சைகை செய்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.புன்னகையுடன், சிரித்துக் கொண்டே பேசுவது இயல்பான பொது மரியாதை, நாகரிகம் என்றாலும், புதினின் இந்தச் செயல் யுக்ரேனில் பரவலாக கசப்புணர்வைத் தூண்டியது. ரஷ்யாவின் ஆக்கிரமிப்புப் போரில் லட்சக்கணக்கான யுக்ரேனியர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அங்கு நடந்ததைப் பார்த்த போது நான் நொறுங்கிப் போனேன்,” என்று யுக்ரேனின் கிழக்கு மாகாணமான டோனெட்ஸ்கைச் சேர்ந்த 50 வயது செர்ஹி ஓர்லிக் கூறினார். ரஷ்யப் படைகளின் மிகத் தீவிரமான போரை அனுபவித்த இந்த பிராந்தியத்தின் பெரும்பாலான இடங்களை ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
“நான் இரண்டு முறை என் வீட்டை இழந்தேன், ஒருமுறை ஸ்லோவியன்ஸ்க்கில் என்றால், மறுமுறை டொனெட்ஸ்கில்… என் உறவினர்களை இழந்தேன்” என்று ஆர்லிக் கூறினார்.
“எதையாவது ஒப்புக்கொள்ள ஒரு நெறிமுறை இருக்க வேண்டும் என்பதை நான் புரிந்துகொள்கிறேன். புதின் வரும்போது அவரது முகத்தில் உங்களால் அறைய முடியாது. ஆனால் அங்கு நடந்தது குறிப்பாக அவரது புன்னகை மிகவும் விரும்பத்தகாத காட்சியாக இருந்தது” என்று செர்ஹி ஓர்லிக் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, “பொதுமக்களைக் கொல்வதை நிறுத்துவீர்களா?” என செய்தியாளர் கேட்டதற்கு புரியவில்லை என புதின் சைகை காட்டுகிறார்பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகும் புதினுக்கு மரியாதை தொடர்ந்தது. கூட்டு செய்தியாளர் சந்திப்பில், ரஷ்யத் தலைவரை முதலில் பேச வழிவிட்டார் டிரம்ப். சுமார் எட்டு நிமிடங்கள் பேசிய புதின், போர் எவ்வாறு தொடங்கியது என்பது பற்றிய எந்தக் குறிப்பையும் கவனமாகத் தவிர்த்து உற்சாகமாக பேசினார்.
உற்சாகமாக பேசிய ரஷ்ய அதிபர், உச்சிமாநாடு சிறப்பாக நடந்த திருப்தியில் இருந்தார். இதற்கு நேர்மாறாக, வழக்கத்தைப் போலில்லாமல் டிரம்ப் மந்தமாக இருப்பதுபோல தோன்றியது. அவர் இரண்டு நிமிடங்கள் மட்டுமே பேசினார். ஒப்பந்தம் ஒன்றை நெருங்குவதாக எதையும் சொல்லி அவரால் பெருமை கொள்ள முடியவில்லை.
அதற்கு பதிலாக, இந்த முயற்சியை புதினிடம் டிரம்ப் ஒப்படைத்துவிட்டது போல் தோன்றியதாக சாத்தம் ஹவுஸில் ரஷ்யா மற்றும் யூரேசியா திட்டத்தின் மூத்த உறுப்பினரான கியர் கில்ஸ் கூறினார்.
“விமானத்தில் இருந்து இறங்குவதற்கு முன்பே, புதின் இந்த முறையில் மறுவாழ்வு பெற்றது அவருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி” என்று கில்ஸ் கூறினார்.
“சர்வதேச அளவில் தேடப்படும் போர்க்குற்றவாளி என்பதால், புதின் பயணம் செய்வது கடினமாக இருக்க வேண்டும். ஆனால், ஒரு நாட்டின் தலைவராக அவர் வரவேற்கப்படுவதற்கு டிரம்ப் வசதி செய்து கொடுத்துவிட்டார்.”
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, நகைச்சுவையாக பேசிக் கொள்ளும் புதினும் டிரம்பும்… இருவருக்கும் இடையிலான சூழல் சுமூகமாகத் தோன்றியது”ஐரோப்பிய தலைவர்கள் டிரம்பின் அணுகுமுறையை பின்பற்ற வாய்ப்பேயில்லை” என்று கில்ஸ் கூறினார். மேலும், “யுக்ரேன் மீதான புதினின் கோரிக்கைகளை ஆதரிப்பதில்லை என்றும், டிரம்பின் அவமதிப்பைப் பெறும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொள்ளாமல் இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதையும் புதினுடனான டிரம்பின் அணுகுமுறை வலுப்படுத்தும்.”
யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி சனிக்கிழமை வெளியிட்ட ஓர் அறிக்கையில், பேச்சுவார்த்தைகளின் ஒவ்வொரு கட்டத்திலும் ஐரோப்பிய தலைவர்கள் இருப்பதன் அவசியத்தை வலியுறுத்தினார். புதின், டிரம்ப் மீது செல்வாக்கு செலுத்தலாம் என்ற அச்சம் நிலவுவதால், அதை தவிர்க்கும் அரணாக ஐரோப்பிய தலைவர்கள் பார்க்கப்படுகிறார்கள்.
ஆனால் அது நடப்பதற்கு முன்னதாக, ஜெலன்ஸ்கி திங்கட்கிழமையன்று வாஷிங்டன் செல்கிறார். இந்த ஆண்டு பிப்ரவரியில் டிரம்பை ஜெலன்ஸ்கி ஓவல் அலுவலகத்தில் சந்தித்தபோது அந்த சந்திப்பு மோசமானதாக இருந்தது. அதே இடத்தில் இந்த முறை அவர் சிறந்த முடிவையும், ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு கோரிக்கைகளுக்கு சரணடையாத அமைதிக்கான பாதை கிடைக்கும் என்றும் அவர் நம்புவார்.
யுக்ரேனுக்கு இந்த பணியில் உதவ அமெரிக்காவிடம் “பரந்த அளவிலான கருவிகள்” இருந்தன என்று அரசியல் ஆய்வாளர் ஒலெக்சாண்டர் கோவலென்கோ கூறினார். ஆனால் ரஷ்ய அதிபர் புதினுக்கு ஆடம்பரமும் சிறப்பான விழாவும் இருந்திருக்கக் கூடாது என்று அவர் கூறினார்.
“ஒருவேளை இவை அனைத்தும் புதினை ஏமாற்றவும், புகழ்ந்து பேசவும், வெள்ளை மாளிகையின் உத்தியைப் பின்பற்ற அவரைக் கட்டாயப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டிருக்கலாம்” என்று கோவலென்கோ கூறினார்.
“ஆனால் எனக்கு அதில் சந்தேகமாக இருக்கிறது. எந்த உத்தியும் இல்லாமல், அது டிரம்பின் விருப்பமாகத்தான் இருக்கும்.”
கூடுதல் தகவல்: டாரியா மிடியூக்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு