Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
படக்குறிப்பு, பாலாஜியின் வீடு சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குடியிருப்பில் அமைந்துள்ளது.எழுதியவர், கணேஷ் போல்பதவி, பிபிசி செய்தியாளர் 13 நிமிடங்களுக்கு முன்னர்
“78 லட்சம் மதிப்புள்ள நிலத்தை விற்றேன். டிராக்டரை வைத்து 2 லட்ச ரூபாய் கடன் வாங்கினேன். ஒரு பொற்கொல்லரிடம் தங்கத்தை அடகு வைத்தேன். எனக்குத் தெரிந்தவர்களிடம் இருந்து ஐந்து முதல் ஆறு லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கினேன். மொத்தமாக அதில் 1 கோடி 9 லட்சம் ரூபாய் செலவாகிவிட்டது. எனது வங்கிக் கணக்கில் இருந்த பணம் முழுவதும் காலியான போதுதான் நிறுத்தினேன்.”
26 வயதான பாலாஜி கரே இதனைச் சொல்லிவிட்டு, எதுவும் பேசாமல் சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.
சட்டவிரோத ஆன்லைன் சூதாட்டத்தில், ஒரு கோடி ரூபாய்க்கு மேல் பாலாஜி இழந்துள்ளார்.
“நான் ஆன்லைன் சக்ரி விளையாட்டுகளை மட்டுமே விளையாடுவேன். அதில் பதினாறு முதல் பதினேழு விளையாட்டுகள் இருந்தன. ஆனால் நான் சக்ரியை மட்டுமே விளையாடுவேன். ஃபன்ரெட் சக்ரி. இதில் நான் தனியாக இல்லை, ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். யாருக்கும் எந்தப் பணமும் கிடைக்கவில்லை”என்கிறார் பாலாஜி.
அவரது வீடு மகாராஷ்டிராவின் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால் கிராமத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குடியிருப்பில் உள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இதில், கரே குடும்பத்தின் சொத்துக்களான ஆறு ஏக்கர் நிலம், ஐந்து தோலா தங்கம், ஒரு டிராக்டர் மற்றும் 22 ஜெர்சி பசுக்கள் ஆகியவற்றை அவர் இழந்துள்ளார்.
வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் கூட இல்லாத பாலாஜி, இந்த விளையாட்டுக்கு எப்படி அடிமையானார் என்பதை அறிந்து அவரது குடும்பத்தினர் ஆச்சர்யத்தில் உள்ளனர்.
பாலாஜி இனிமேல் எந்த ஆன்லைன் பந்தயம் அல்லது சூதாட்ட விளையாட்டுகளையும் விளையாடுவதில்லை என்று கூறுகிறார்.
இந்த வழியில் சென்று மற்றவர்களும் ஏமாற வேண்டாம் என்றும், ஏற்கனவே இதில் சிக்கியுள்ள இளைஞர்கள் விரைவில் நிறுத்த வேண்டும் என்றும் பாலாஜி மனதார வேண்டுகோள் விடுக்கிறார்.
“அரசாங்கம் இந்த விளையாட்டுகளை நிறுத்த வேண்டும். குருதுவாடியைச் சேர்ந்த எழுநூறு முதல் எண்ணூறு இளம் விவசாயிகள் இதில் சிக்கிக் கொண்டுள்ளனர்.
எனது சொந்த உதாரணத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். நான் இவ்வளவு பணம் முதலீடு செய்தேன், ஆனால் எனக்கு எதுவும் கிடைக்கவில்லை. அப்படியானால் மற்றவர்களுக்கு எப்படி கிடைக்கும்?
இந்த விளையாட்டில் ஈடுபடாமல் இருங்கள், ஒருவேளை இதில் சிக்கிக்கொண்டால், ஒரு கணம் கூட யோசிக்காமல் அங்கேயே நிறுத்துங்கள்” என்று பாலாஜி கூறினார்.
ஆன்லைன் சூதாட்டத்தின் மறைக்கப்பட்ட பக்கம்
பாலாஜிக்கு ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடும் பழக்கம் உண்டு.
இந்த விளையாட்டுக்கான செயலி ஸ்மார்ட்போன்களில் உள்ள பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை. மாறாக, இந்த செயலிக்கான இணைப்பு வாட்ஸ்அப் மூலம் வழங்கப்படுகிறது.
இதற்காக, சோலாப்பூரில் உள்ள ஒவ்வொரு கிராமத்திலும் முகவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இந்த முகவர்கள் கிராம சுவர்களில் அமர்ந்திருக்கும் இளைஞர்களை உளவு பார்க்கிறார்கள். பிறகு, இந்த விளையாட்டின் செயலியைப் பதிவிறக்கம் செய்ய அவர்களை ஊக்குவிக்கிறார்கள்.
ஆரம்பத்தில் இந்த விளையாட்டிலிருந்து தனக்கு பணம் கிடைத்ததாகக் கூறுகிறார் பாலாஜி.
படக்குறிப்பு, சட்டவிரோத ஆன்லைன் பந்தய விளையாட்டு செயலிஆனால் பின்னர், இதிலிருந்து எந்தப் பணத்தையும் வெல்ல முடியாது. சம்பந்தப்பட்ட நபர் முன்பு இழந்த பணத்தைத் திரும்பப் பெறுவதற்காக லட்சக்கணக்கான ரூபாயை வீணடிக்கிறார்.
தற்போது, ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தயம் கட்டுவதற்கான ஒரு மறைந்திருக்கும் மோகம் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடையேயும் பரவியுள்ளது.
நேரத்தை கடத்தலாம் அல்லது விரைவாக பணம் சம்பாதிக்கலாம் என்ற மோகத்துடன் தொடங்கும் இந்த விளையாட்டு, இளைய தலைமுறையினருக்கு நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
படக்குறிப்பு, தற்போது, ஆன்லைன் கேமிங் மற்றும் பந்தயம் கட்டுவதற்கான மோகம் மகாராஷ்டிராவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான இளைஞர்களிடையேயும் பரவியுள்ளது.பாலாஜி வழங்கிய தகவலின்படி, இந்த சட்டவிரோத ஆன்லைன் செயலியை விளம்பரப்படுத்த முகவர்கள் லால் கிராமத்திற்கு தொடர்ந்து வருகை தருவார்கள் என அறியப்படுகிறது.
இதில் சில நண்பர்கள் பணம் முதலீடு செய்வதை அவர் பார்த்துள்ளார்.
ஆரம்பத்தில், சிலர் பணம் பெறுவதைக் கண்டதும், பாலாஜி இரண்டாயிரம் ரூபாய் முதலீடு செய்து அதைத் தொடங்கினார். ஆனால் இறுதியில், அவருக்கு எதுவும் கிடைக்கவில்லை.
பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த செயலி சட்டவிரோதமானது என்பதால், சோலாப்பூர் காவல்துறை நடவடிக்கை எடுத்து, சந்தேகத்துக்குரிய சில நபர்களை கைது செய்துள்ளது.
இந்த வகையான மோசடியால் பாலாஜி மட்டும் பாதிக்கப்படவில்லை.
இந்தியாவில் ஆயிரக்கணக்கான பாலாஜிகள் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பலியாகி வருகின்றனர்.
அவர்களில் சிலர் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாகக் கூட காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ஜோதி கெய்க்வாட் முக்கியமான தகவல்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.
“தற்போது இளைஞர்களுக்கு வேலை இல்லை. எனவே, அவர்கள் எளிதாக பணம் சம்பாதிப்பதற்காக ஆன்லைன் கேமிங்கைத் தொடர்கின்றனர். ஆன்லைன் கேமிங் என்பது சூதாட்டத்தின் ஒரு வடிவம், “ஒரு விளையாட்டு, திறமையின் அடிப்படையிலானது என்பதை நிரூபித்தால், அது சட்டபூர்வமாக அமையலாம்” என்று கூறிய அவர்,
“அரசாங்கம் இதிலிருந்து ஜிஎஸ்டி வரியைப் பெறுகிறது. ஆனால் பெரும்பங்கு அந்த நிறுவனத்திற்கே செல்கிறது. இந்த நிறுவனம் அரசாங்கத்திற்கு வழங்கிய வருவாய் ரூ. 6,384 கோடி. ஆனால் இதில் வெற்றி பெறும் வாய்ப்பு வெறும் 0.000006 சதவீதம் மட்டுமே”என்றும் குறிப்பிட்டார்.
‘சமூக அந்தஸ்தின் காரணமாக இதற்கு அடிமையானவர்கள் புகார் செய்வதில்லை’
மழைக்கால கூட்டத்தொடரில் ஆலோசனைகளை முன்வைத்தபோது, தாராஷிவ் தொகுதியைச் சேர்ந்த சிவசேனா (யுபிடி) எம்.எல்.ஏ. கைலாஸ் பாட்டீல், தனது தொகுதியில் நடந்த ஒரு தற்கொலை வழக்கை முன்வைத்து, அவையின் கவனத்தை ஈர்த்தார்.
“தாராஷிவ்வில் உள்ள பாவி கிராமத்தைச் சேர்ந்த லட்சுமண மாருதி ஜாதவ் என்ற இளைஞர் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகி தனது பண்ணையை விற்றார். தனது வீட்டை விற்றார்.
ஆனால் அதற்கான பணத்தை அவரால் கொடுக்க முடியவில்லை. அதனால் அவர் தனது இரண்டு வயது மகனுக்கு விஷம் கொடுத்து கொன்றார். கர்ப்பிணி மனைவியைக் கொன்றார். பின்னர் தற்கொலை செய்து கொண்டார்” என்று கைலாஸ் பாட்டீல் குறிப்பிட்டார் .
இந்தப் பிரச்னை குறித்து மேலும் புரிந்துகொள்ள, கைலாஷ் பாட்டீலை பிபிசி மராத்தி தொடர்பு கொண்டது.
இதுகுறித்து அவர் பேசுகையில், “எனது தொகுதியிலும் மாநிலத்திலும் இந்தப் பிரச்னை மிகவும் தீவிரமாகிவிட்டது. இதைத் தடுக்க என்ன நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பதை நான் ஆராய்ந்து வருகிறேன். தெலுங்கானா இது குறித்து நடவடிக்கை எடுத்துள்ளது. அதன் அடிப்படையில் நம் நாட்டில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்படலாம் என்பது குறித்து நிபுணர்களுடன் விவாதிப்பேன், விரைவில் இது குறித்து விரிவான தகவல்களை வழங்க ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்துவேன்”என்றார்.
படக்குறிப்பு, பாலாஜி அளித்த காவல் புகாரின் பேரில், சோலாப்பூர் கிராமப்புறப் பிரிவின் உள்ளூர் குற்றப்பிரிவின் காவல் ஆய்வாளர் சஞ்சய் ஜக்தாப் தற்போது மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.மறுபுறம், சோலாப்பூர் கிராமப்புறப் பிரிவின் உள்ளூர் குற்றப்பிரிவின் காவல் ஆய்வாளரான சஞ்சய் ஜக்தாப், பிபிசி மராத்தியிடம் கூறுகையில், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையான இளைஞர்கள் புகார் அளிக்க முன்வருவதில்லை என்கிறார்.
“இதில் நான் நிறைய பணத்தை இழந்துவிட்டேன், என் குடும்பத்தினர் இதை கவனிக்கக்கூடாது, அல்லது நான் இதற்கு அடிமையாகிவிட்டேன் என்பதை சமூகம் தெரிந்து கொள்ளக்கூடாது என அவர்கள் விரும்புகிறார்கள். எனவே அதற்கு அடிமையானவர்கள் அவர்களின் சமூக அந்தஸ்தின் காரணமாக புகார் அளிக்க முன்வருவதில்லை,” என்று ஜக்தாப் கூறினார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்கள் அதைப் பற்றி புகாரளிக்காததால், நடவடிக்கை எடுப்பதில் காவல்துறை சிரமப்படுகிறது.
சூதாட்டத்துக்கு அடிமையானவர்கள் ஏன் அடையாளம் காணப்படுவதில்லை?
இணையம் போன்ற மெய்நிகர் உலகில் இவை நடப்பதால், அடிமையானவரின் குடும்பத்தினர் அல்லது நண்பர்கள் அவற்றைக் குறித்து அறிந்திருக்க மாட்டார்கள் என்கிறார் ஜக்தாப்.
எல்லோர் கையிலும் ஆண்ட்ராய்டு போன் உள்ளது . அதனால், நெருங்கிய நபர்கள் கூட அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதைக் கவனிப்பதில்லை.
நம் கைகளில் 24 மணி நேரமும் ஒரு போன் உள்ளது. ஆன்லைன் சூதாட்ட செயலிகளால் நாம் தொடர்ந்து கவரப்படுகிறோம். விளம்பரங்கள் நம்மை ஈர்க்கின்றன. மக்கள் அதற்கு இரையாகி விடுகிறார்கள். அதற்கு அடிமையானவர் கூட இதற்கு தன்னைத்தானே குற்றம் சாட்டிக் கொள்கிறார்.
ஆனால், அந்த செயலிகள் தான் இவர்களை அடிமையாக்குகின்றன என்பதை யாரும் கவனிப்பதில்லை என்று ஜக்தாப் விளக்குகிறார்.
இதற்கிடையில் அறிக்கைகள், இளைய தலைமுறையினர் மூன்று முக்கிய காரணங்களுக்காக ஆன்லைன் சூதாட்ட வெறியில் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதைக் குறிக்கின்றன.
முதலாவதாக, இந்த செயலிகளின் வடிவமைப்பு.ஒரு ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் ஒரு நபர் ஆரம்பத்தில் கொஞ்சம் பணம் சம்பாதிக்கிறார்.
பின்னர் திடீரென ஒரு பெரிய இழப்பு ஏற்படுகிறது. இழந்த பணத்தை மீட்க பலர் மேலும் பணத்தைச் செலவிடத் தொடங்குகிறார்கள். இந்த சுழற்சி நிற்காமல் தொடர்கிறது.
இரண்டாவது காரணம், இதில் அரசாங்கத்திடமிருந்து இன்னும் கடுமையான கட்டுப்பாடுகள் அளிக்கப்படவில்லை.மூன்றாவதாக, இந்த விளையாட்டுகள் பாலிவுட் பிரபலங்கள் மற்றும் விளையாட்டு வீரர்களால் சமூக ஊடகங்களில் பெரிதும் விளம்பரப்படுத்தப்படுகின்றன.
படக்குறிப்பு, சோலாப்பூரில் உள்ள குருடுவாடியில் சந்தோஷ் ஷெண்டே பால் வியாபாரம் செய்து வருகிறார். குருடுவாடியில் விளையாடப்படும் சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக ஷெண்டே குரல் எழுப்பியுள்ளார்.சோலாப்பூர், குருடுவாடியில் பால் வியாபாரம் நடத்தி வரும் சந்தோஷ் ஷெண்டே, குருடுவாடியில் விளையாடப்படும் சட்டவிரோத ஆன்லைன் விளையாட்டுகளுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.
பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், “இந்தியாவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு. எந்த நேரத்திலும் கோடிக்கணக்கான மக்கள் அப்போட்டியைப் பார்க்கிறார்கள். ஐபிஎல்லில் ஒரு பந்து வீசப்படும்போது, மொபைல் போன்களில் சூதாட்ட விளம்பரங்கள் தோன்றும்.
போட்டியின் நடுவில் இரண்டரை நிமிட டைம்அவுட் இருக்கும். முந்தைய தகவல்களைப் பார்த்தால், அந்த இரண்டரை நிமிட மொத்த இடைவேளையில் சூதாட்ட விளம்பரங்கள் மட்டுமே தோன்றும். இதிலிருந்து அரசாங்கத்திற்கு நிறைய வரி கிடைக்கக்கூடும். ஆனால் அடுத்த தலைமுறை முற்றிலும் வீணடிக்கப்படுகிறது”என்கிறார்.
ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் அதற்கு எதிராகப் பேசுவதில்லை, ஆனால் ஷெண்டேவின் நெருங்கிய நண்பர்கள் ஆன்லைன் பந்தய விளையாட்டுகளில் மில்லியன் கணக்கான ரூபாய்களை இழந்ததால் அதைப் பற்றி விவாதிக்க அவர் தயாராக இருந்தார். அதைப் பற்றி அவர் வருத்தம் தெரிவிக்கிறார்.
“எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவரது தந்தை பத்து நாட்களுக்கு முன்பு புதிய வீட்டை பெரிய அளவில் புதுப்பித்தார். ஆனால் ஒரு மாதத்திற்குள் அந்த வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்று, என் நண்பர் தனது கிராமத்தை விட்டு வெளியேறி, வேறொரு கிராமத்தில் வாழ்கிறார். இதுதான் நடந்தது. ஆன்லைன் சூதாட்டம் முழு மகாராஷ்டிராவையும் பாதித்துள்ளது. மகாராஷ்டிரா இப்போது பின்தங்கியுள்ளது,” என்று ஷெண்டே இதைச் சொல்லும்போது அவரது முகம் பதற்றத்தால் நிறைந்திருந்தது.
‘தேசிய அளவில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்’
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமானால், தேசிய அளவில் சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்,அதனால் தான் மகாராஷ்டிரா அரசால் இதுவரை அதைத் தடை செய்ய முடியவில்லை என்று முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த விளையாட்டுக்கள் இந்தியாவுக்குள்ளும், வெளிநாட்டிலும் இருந்து நடத்தப்படுவதாகவும்,
அதனால் தான் மாநில அளவிலான சட்டங்களால் இதைத் தடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Maharashtra Vidhan Sabha
படக்குறிப்பு, ஆன்லைன் சூதாட்ட செயலிகள் பற்றி சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் (ஜூலை 18, 2025)மழைக்கால கூட்டத்தொடரில் ஒரு குறிப்பிடத்தக்க ஆலோசனைக்குப் பதிலளித்த ஃபட்னாவிஸ் , “இந்த விளையாட்டை நிறுத்த ஒரு சட்டம் தேவை. இதை விளையாடுபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வராது. இந்த விளையாட்டை நிறுத்த வேண்டும் என்றால், மத்திய அரசு மட்டுமே அதற்கான சட்டத்தை இயற்ற முடியும்” என்றார் .
இணையதள உலகில், இது பல இடங்களிலிருந்தும் நடத்தப்படுகிறது. எனவே, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் கலந்துரையாடி வருவதாகவும் ஃபட்னாவிஸ் சபையில் தெரிவித்தார்.
ஆனால் முதலமைச்சர் பேசிய பிறகு, அதே அமர்வில், பாஜக எம்.எல்.ஏ.வும் முன்னாள் கேபினட் அமைச்சருமான சுதிர் முங்கந்திவார் பேசியபோது, அரசியலமைப்பில் உள்ள மாநிலப் பட்டியலை மேற்கோள் காட்டி, பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டம் குறித்து சட்டங்களை இயற்ற மாநில அரசுக்கும் உரிமை உள்ளது என்று கூறினார்.
பட மூலாதாரம், Maharashtra Vidhan Sabha
படக்குறிப்பு, அரசியலமைப்பில் உள்ள மாநிலப் பட்டியலை மேற்கோள் காட்டி, மாநில அரசுகளும் சூதாட்டத்துக்கு எதிராகச் சட்டங்களை இயற்றலாம் என்று பாஜக எம்எல்ஏ சுதிர் முங்கந்திவார் மழைக்காலக் கூட்டத்தொடரில் தெரிவித்தார்.”இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் ‘பந்தயம் மற்றும் சூதாட்டம்’ என்ற தலைப்பு உள்ளது. அதன்படி, ஒவ்வொரு மாநிலமும் தனியாக சட்டம் இயற்றும் அதிகாரம் பெற்றுள்ளது.
மத்திய அரசை வலியுறுத்தாமல், தெலுங்கானா, ஆந்திரா, ஒடிசா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்கள் ‘அதிர்ஷ்டத்தின் அடிப்படையிலான விளையாட்டுகள்’ மற்றும் ‘திறன் அடிப்படையிலான விளையாட்டுகள்’ ஆகியவற்றைத் தடை செய்துள்ளன.
என் தகவலை ஒரு முறை சரிபார்த்துப் பாருங்கள். அழிவுகள் மிக வேகமாக நடக்கின்றன, இது கட்டுப்பாட்டை இழந்த ரயிலைப் போல ஆகிவிட்டால், புதிய தலைமுறையை போதைப்பொருள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளிலிருந்து பாதுகாப்பது மிகவும் கடினமாகிவிடும்,” என்று முங்கந்திவார் தெரிவித்தார்.
அதன் பின்னர், முங்கந்திவார் வழங்கிய தகவல்கள் சரிபார்க்கப்படும் என்று முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.
இது குறித்து மத்திய அரசு என்ன கூறியது?
இதற்கிடையில், பிபிசி மராத்தி இதை சரிபார்த்தபோது, மார்ச் 26, 2025 அன்று பத்திரிகை தகவல் பணியகம் வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, சூதாட்டம் மற்றும் பந்தயம் கட்டுவதற்கு எதிராக மாநில அரசு சட்டங்களை இயற்ற முடியும் என்று கண்டறியப்பட்டது .
நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், ‘சூதாட்டம் மற்றும் பந்தயம்’ ஆகியவை இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலில் உள்ளவை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதனால், அரசியலமைப்பின் பிரிவு 246 மற்றும் பிரிவு 162ன் படி, மாநில சட்டமன்றங்களுக்கு இது தொடர்பாக சட்டங்களை இயற்றும் முழு அதிகாரம் உள்ளது.
மேலும், ‘சட்டம் ஒழுங்கு’ என்பதும் மாநிலப் பிரிவில் வரும் என்பதால், சட்டவிரோத பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பான குற்றங்களைக் கட்டுப்படுத்துதல், குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தேடுதல், விசாரணை செய்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தல் ஆகியவை மாநில காவல் துறையின் பொறுப்பாகும்.
இது தொடர்பாக, மாநில காவல் துறை தடுப்பு நடவடிக்கைகளையும், சட்டப்படி தண்டனை நடவடிக்கைகளையும் எடுக்க அதிகாரம் பெற்றுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் 2023 (BNS) பிரிவு 112(1) இன் படி, சட்டவிரோதமாகப் பந்தயம் கட்டுதல் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 1 வருடமும் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
இதற்கிடையில், நவீன உலகில் கேமிங் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுவது இணையதளங்களின் வாயிலாக நடைபெறுவதால், இந்த விஷயத்தில் சட்டம் இயற்ற மாநில அரசுகளுக்கோ அல்லது மத்திய அரசிற்கோ அதிகாரம் உள்ளதா எனும் விவகாரம் குறித்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.
மறுபுறம், விளையாட்டுகளுக்கான வரி தொடர்பான மனுவின் விசாரணையின் போது, ஆன்லைன் சூதாட்ட செயலிகள் குறித்து உச்ச நீதிமன்றம் மத்திய அரசை கடுமையாகக் கண்டித்தது.
“ஐபிஎல் கிரிக்கெட்டின் பெயரில் பலர் பந்தயம் கட்டுகிறார்கள் மற்றும் சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள். இது ஒரு மிகக் கடுமையான பிரச்னை,” என்று நீதிமன்றம் தெரிவித்தது.
சட்ட வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?
மும்பை உயர்நீதிமன்றத்தின் வழக்கறிஞரும் சைபர் சட்ட நிபுணருமான பிரசாந்த் மாலி, இணைய யுகத்தில் உள்ள பிரச்னைகள் குறித்து சட்டம் இயற்றுவது சவாலானது என்று கருதுகிறார்.
“மாநில அரசு இணையதள சூதாட்ட செயலிகளை தடை செய்யவோ அல்லது ஒழுங்குபடுத்தவோ முடியும் என்றாலும், தொழில்நுட்ப மற்றும் சட்ட ரீதியான தடைகள் உள்ளன. பல செயலிகள் வெளிநாட்டிலிருந்து இயக்கப்படுகின்றன,
மேலும், இந்தியாவில் விபிஎனைப் (vpn) பயன்படுத்தி, இந்த செயலிகளை எளிதாகப் பயன்படுத்தலாம்.
தொழில்நுட்ப ரீதியாக, 2000 ஆம் ஆண்டு ஐடி சட்டத்தின் பிரிவு 69A இன் கீழ் தடை செய்வது சாத்தியம், ஆனால் ஒருவர் அதைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக நிறுத்துவது கடினம்,” என்று மாலி பிபிசி மராத்தியிடம் பகிர்ந்துகொள்கிறார்.
கூடுதலாக, பல செயலிகள் தங்களை ‘திறன் சார்ந்த விளையாட்டுகள்’ என்று அழைத்துக் கொண்டு சட்டத்திற்குள் உள்ளன.
எனவே, தடை மட்டுமல்ல, கடுமையான உரிம முறை, நிதி பரிவர்த்தனைகளைக் கண்காணித்தல் மற்றும் பொது விழிப்புணர்வு ஆகியவற்றின் மூலம் ஒருங்கிணைந்த தீர்வு கிடைக்க வேண்டும்.
“இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின்படி, ‘சூதாட்டம் மற்றும் பந்தயம்’ என்பது மாநிலப் பட்டியலில் உள்ளது, எனவே மாநில அரசுகள் சுதந்திரமாகச் சட்டங்களை இயற்ற உரிமை உண்டு.
ஆனால், ஆன்லைன் சூதாட்ட செயலிகள் இணையத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், இணையம் மற்றும் டிஜிட்டல் தொடர்பான விஷயங்களைக் கட்டுப்படுத்த மத்திய அரசுக்கு உரிமை உண்டு” என்றும் மாலி கூறினார்.
இது , ஆன்லைன் சூதாட்ட செயலிகள் மீது இரு தரப்பினருக்கும் குறிப்பிட்ட சில அதிகாரங்களை வழங்குகிறது.
மத்திய அரசால், ஐடி சட்டம் மற்றும் டிஜிட்டல் ஒழுங்குமுறை கொள்கை மூலம் நடவடிக்கை எடுக்க முடியும் என்றாலும், மாநில அரசுகள் அந்தந்த அதிகார வரம்புகளுக்குள் அதனைத் தடை செய்யலாம்.
இதன் விளைவாக, இந்த பிரச்னைக்கு ஒரு பயனுள்ள தீர்வைக் காண, மத்திய மற்றும் மாநிலங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பு மற்றும் ஒருங்கிணைந்த கொள்கை அவசியம் என்கிறார் மாலி.
மறுபுறம், ஆன்லைன் சூதாட்டப் பிரச்னை அரசாங்கத்தின் முன்பும், உச்ச நீதிமன்றத்தின் வாசல்களிலும் சூழ்ந்திருந்தாலும், இதிலிருந்து மீண்டுள்ள பாலாஜிக்கு தற்போது ஒரே ஒரு கோரிக்கை மட்டுமே உள்ளது.
அதாவது, இத்தகைய செயலிகளுக்கு முழுமையான தடை விதிக்க வேண்டும் என்பது தான் அந்த கோரிக்கை.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பின்குறிப்பு :
நீங்களோ, உங்களுக்குத் தெரிந்த ஒருவரோ ஆன்லைன் சூதாட்டத்தில் சிக்கலை எதிர்கொண்டால், உதவி பெற சில வழிகள் உள்ளன.
நீங்கள் கீழ்வரும் உதவி எண்கள் மூலம் ஆலோசனை பெறலாம். சமூக நீதித் துறையின் உதவி எண் இதற்காக ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது.
ஹிட்குஜ் ஹெல்ப்லைன், மும்பை – 022- 24131212சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் -1800-599-0019 (13 மொழிகளில் கிடைக்கிறது)மனித நடத்தை மற்றும் கூட்டணி அறிவியல் நிறுவனம் – 9868396824, 9868396841, 011-22574820தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் – 080 – 26995000வித்யாசாகர் மனநலம் மற்றும் கூட்டணி அறிவியல் நிறுவனம், 24X7 ஹெல்ப்லைன்-011 2980 2980- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு