Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
கடலுக்குள் மூழ்கிய கிருஷ்ணனின் துவாரகையைத் தேடும் பயணம் – ஆழ்கடல் சவால்களை எதிர்கொள்வது எப்படி?
பட மூலாதாரம், Prof. Alok Tripathi/FB
படக்குறிப்பு, துவாரகை கோயிலைச் சுற்றியுள்ள பகுதியிலும், கடலுக்கு அடியிலும் கூட, பல ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் பல முறை மேற்கொள்ளப்பட்டுள்ளன.எழுதியவர், அர்ஜவ் பரேக்பதவி, பிபிசி செய்தியாளர் 2 மணி நேரங்களுக்கு முன்னர்
மகாபாரத காலத்தில், ‘கிருஷ்ணரின் துவாரகை’ எப்படி இருந்தது? அங்கு என்னென்ன ரகசியங்கள் இருந்தன என்பதைக் கண்டறிய இதுவரை பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
துவாரகை கோயிலைச் சுற்றியுள்ள பகுதியிலும், கடலுக்கு அடியிலும் கூட, பல ஆண்டுகளாக அகழ்வாராய்ச்சிகள் பல முறை மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த அகழ்வாராய்ச்சி மூலம் துவாரகையின் பல ரகசியங்கள் வெளிப்பட்டுள்ளன. ஆனால் இந்த அகழ்வாராய்ச்சி அவ்வளவு எளிதானது அல்ல. அந்த இடம் பல ஆபத்துகளால் நிறைந்துள்ளது.
சுற்றியுள்ள பகுதிகள் தெளிவாக தெரியாத சூழல் , கடல் நீரோட்டங்கள் மற்றும் மாறிக்கொண்டே இருக்கும் வானிலை போன்ற பல சவால்களை அந்த தளம் முன்வைக்கிறது.
அதேபோல், ஆழமான நிலத்தடிக்குள் மூழ்கி டைவிங் செய்வதும் பல ஆபத்துகளைக் கொண்டிருப்பதால், அங்கு டைவ் செய்பவர்களுக்கும் இந்தப் பணி சவாலானது தான்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
துவாரகாவின் நிலத்தடியில் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டபோது என்ன நடந்தது? என்பதைத் தெரிந்துகொள்வோம்.
கடலுக்கு அடியில் எவ்வாறு அகழ்வாராய்ச்சி செய்யப்படுகிறது?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மாதிரி படம்கடலுக்கடியில் அகழ்வாராய்ச்சி செய்யும்போது, முன்கூட்டியே பல தயாரிப்புகள் செய்யப்படுகின்றன.
அகழ்வாராய்ச்சி தொடங்கும் முன், விஞ்ஞானிகள் கடல் ஆழத்தின் தன்மை, கடலோர நிலவியல், மற்றும் கடல் நீரின் ஆழம் போன்ற விஷயங்களை விரிவாக ஆய்வு செய்கிறார்கள். இந்த ஆய்வுகள் முடிந்த பிறகுதான் நீருக்கடியில் அகழ்வாராய்ச்சி தொடங்கப்படுகிறது.
அகழ்வாராய்ச்சி திட்டங்களை உருவாக்க பல நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதில்,
நீருக்கடியில் கணக்கெடுப்பு திட்டங்கள்சைடு ஸ்கேன் சோனார்கீழ்-தட விவர ஆய்வுகள்ஹைட்ரோஸ்கேன்உலோக கண்டுபிடிப்பான் ஆய்வுகள் போன்ற பாரம்பரிய மற்றும் நவீன நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.இதில் பயன்படுத்தப்படும் கருவிகள் மிகவும் முக்கியமானவை மற்றும் விலை உயர்ந்தவை.
அகழ்வாராய்ச்சிக்கான கணக்கெடுப்பும் ஆவணப்படுத்தலும் எவ்வளவு முக்கியமோ, அதற்காக பயன்படுத்தப்படும் கருவிகளும் அதே அளவுக்கு முக்கியம்.
நீருக்கடியில் அகழ்வாராய்ச்சி செய்கையில், புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதும் அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நீர்மூழ்கி வீரர்கள் தண்ணீருக்குள் ஆழமாக இறங்கும்போது, அவர்களின் உடலில் அழுத்தம் அதிகரிக்கிறது.
அதனால், ஆழமான நீரில் புகைப்படம் எடுப்பதும், வீடியோ படப்பிடிப்பு செய்வதும் ஒரு பெரிய சவாலாக இருக்கிறது.
அகழ்வாராய்ச்சியில் உள்ள சவால்கள் என்ன?
பட மூலாதாரம், MIB/Marine Archeology in India
படக்குறிப்பு, துவாரகா அகழ்வாராய்ச்சியின் 1986 ஆம் ஆண்டு புகைப்படம்.பேராசிரியர் அலோக் திரிபாதி 2007ஆம் ஆண்டு துவாரகாவில் நீருக்கடியில் நடந்த அகழ்வாராய்ச்சிக்கு தலைவராக இருந்தார். அவர், நீருக்கடியில் அகழ்வாராய்ச்சி செய்யும் துறையில் நிபுணரும் கூட.
“ஒவ்வொரு அகழ்வாராய்ச்சி தளமும் தனித்துவமான சவால்களைக் கொண்டது. துவாரகாவில் நடந்த அகழ்வாராய்ச்சிக்கும் சவால்கள் இருந்தன. அந்த இடத்தில் உள்ள மண்ணின் அளவு, அது என்ன வகை, அங்கு கிடைக்கும் பொருட்கள் எப்படி இருக்கின்றன, அந்த இடத்தின் காலநிலை எப்படி இருக்கிறது, ஆகிய காரணிகள் அனைத்தும் அகழ்வாராய்ச்சியில் தாக்கம் செலுத்துகிறது”என ஒரு நேர்காணலில் அவர் விளக்குகிறார்.
“நீருக்கடியில் பழமையான பொருட்களைத் தேடுவது உலகத்தில் மிகக் குறைவாகவே நடக்கிறது. இவ்வாறு பழைய நகரங்களைத் தோண்டி பார்ப்பது அரிது. ஒவ்வொரு இடத்திலும் சூழ்நிலைகள் வேறுபட்டவையாக இருக்கும்”என்றும் அவர் கூறியிருந்தார்.
“இந்தியப் பெருங்கடலும், அரேபியக் கடலும் மிகவும் வித்யாசமான இயல்பைக் கொண்டவை. இங்குள்ள அலைகளில் நிறைய மாறுபாடுகள் உள்ளன. சில மீட்டர்கள் இடைவெளியில் மாறி மாறி, அலைகள் உள்ளேயும் வெளியேயும் வந்து செல்லும். அதேபோல் நீரோட்டமும் மிகவும் வலுவாக இருக்கும். இதுதான் பெரிய சவால். இதுபோன்ற சூழ்நிலைகளில் நீங்கள் உயிருடனும் இருக்க வேண்டும், பொருட்களையும் எடுக்க வேண்டும் என்பது மிகவும் கடினமான ஒன்று”
“கடலில் நன்றாக டைவிங் செய்யும் திறமை கொண்டவர், எந்த நேரத்திலும் கடலில் இறங்கலாம். ஆனால், கடல் சற்று அமைதியாக இருக்கும் நேரத்தை நாங்கள் தேர்வு செய்கிறோம். கடலின் அடியில் தெளிவாகப் பார்க்க முடியும் நேரம் முக்கியம். ஏனெனில் தெளிவாகப் பார்க்க முடியாவிட்டால், பொருட்கள் தெரியாது, புகைப்படம் எடுக்க முடியாது, ஆவணமாக்கவும் சிரமம் ஏற்படும். பொதுவாக, குளிர்காலம் இந்த வேலைக்கு ஏற்ற நேரம். கோடையில் இது சாத்தியமில்லை, ஏனெனில் அப்போது அலைகள் அதிகமாக இருக்கும்.” என்று பேராசிரியர் திரிபாதி விளக்குகிறார்.
துவாரகாவில் அகழ்வாராய்ச்சி செய்யும் போது படகுகள் கவிழ்ந்ததா?
பட மூலாதாரம், MIB/Marine Archeology in India
படக்குறிப்பு, துவாரகைக் கடலில் நடைபெறும் அகழ்வாராய்ச்சிஇந்தியாவின் முன்னணி தொல்பொருள் ஆய்வாளரான பேராசிரியர் எஸ். ஆர். ராவ், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தில் பணியாற்றிய காலத்தில் சிந்து சமவெளி நாகரிகத்தின் தொல்பொருள் தளங்களை அகழ்வாராய்ச்சி செய்தவர்.
அவர் துவாரகா பகுதியில் பல அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டார்.
இந்த அனுபவங்களை ‘இந்தியாவில் கடல் தொல்லியல்’ என்ற புத்தகத்தில் பேராசிரியர் எஸ். ஆர். ராவ் விரிவாக எழுதியுள்ளார்.
” துவாரகாவுக்கு அருகே உள்ள கடல்பகுதியில், அலைகள், வலுவான நீரோட்டங்கள் மற்றும் சேறு இருந்ததன் காரணமாக, நீருக்கடியில் புகைப்படம் எடுப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஆனால் துவாரகா கடல்பகுதியில் எடுத்த புகைப்படங்கள் ஓரளவுக்கு நன்றாக இருந்தன.” என்று 1984ஆம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சி பற்றி அவர் கூறுகிறார்.
“பண்டைய துவாரகாவில் அகழ்வாராய்ச்சி 1983 டிசம்பர் 23 அன்று தொடங்கியது. இது 1990 வரை, வானிலையின் காரணமாக, வருடத்திற்கு சுமார் 30 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. பணம், அங்கு பணியில் ஈடுபட வேண்டிய ஆட்கள், அதற்கு வேண்டிய கருவிகள் போன்ற அனைத்துமே மிகக் குறைவாகவே கிடைத்தன. அதனால், ஒவ்வொரு ஆண்டும் அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கும் போது, முந்தைய ஆண்டில் தோண்டிய இடங்களை மீண்டும் சுத்தம் செய்ய வேண்டியிருந்தது. அந்த இடங்களில் தாவரங்கள் வளர்ந்திருந்ததால், பழைய புகைப்படங்கள் மற்றும் வரைபடங்களை வைத்து மீண்டும் வேலை செய்யப்பட்டது.”
“அந்த நேரத்தில், கடலில் நீரோட்டம் மிகவும் வலுவாக இருந்தது. நிலத்தடியில் கிடைத்த கட்டமைப்புகள் மற்றும் பழமையான பொருட்களை சுத்தம் செய்ய டைவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்பட்டது. அங்கு சுற்றி இருந்த இடத்தைப் பார்ப்பது கடினமாக இருந்ததால், புகைப்படம் எடுப்பதும், ஆவணமாக்குவதற்கும் தாமதமானது. கடல் கொந்தளிப்பாக இருந்த நேரங்களில், படகுகள் செல்ல முடியாததால், நிலப்பகுதிகள் மட்டும் ஆய்வு செய்யப்பட்டன.”என்று 1985ஆம் ஆண்டு நடந்த அகழ்வாராய்ச்சி குறித்து பேராசிரியர் எஸ். ஆர். ராவ் கூறுகிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பல நேரங்களில், அகழ்வாராய்ச்சிகள் காலை நேரத்தில் தொடங்கப்பட்டன. ஆனால் மதியத்துக்குள் கடலின் சூழல் மாறிவிட்டால், பணியை நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டது. சில இடங்களில் மண் ஒட்டும் தன்மை கொண்டிருந்த காரணத்தினால், ஆழமற்ற பகுதிகளை அடைவது கூட கடினமாக இருந்தது.
“கற்பனை செய்ய முடியாத அளவுக்கு கடலின் சூழல் அடிக்கடி மாறுகிறது. டிசம்பர் 12, 1986 அன்று மதியம், ஒரு சிறிய படகு மூழ்கியது. அதில் படகு சேதமடைந்தது, ஆனால் மாலுமி காப்பாற்றப்பட்டார்”,
அதன் பிறகு, “1989 ஜனவரி 7 அன்று, துவாரகாவில் அகழ்வாராய்ச்சி மீண்டும் தொடங்கப்பட்டது. அன்றும், கடலுக்குள் சென்றபோது, படகு கவிழ்ந்தது. அந்த நேரத்தில், டைவர்கள் மாலுமியைக் காப்பாற்றினர்” என்றும் பேராசிரியர் எஸ். ஆர். ராவ் குறிப்பிடுகிறார்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு