அலாஸ்காவில் சந்திக்கும் டிரம்ப் – புதின் மனதில் உள்ள அரசியல் கணக்கு என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் சந்தித்து பேசுகின்றனர். எழுதியவர், ஆண்டனி சுர்சர், ஸ்டீவ் ரோசன்பெர்க்பதவி, பிபிசி நியூஸ் 23 நிமிடங்களுக்கு முன்னர்

யுக்ரேனில் நடைபெற்று வரும் ரஷ்ய போரை நிறுத்துவது குறித்து பேச அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் புதினும் அலாஸ்காவில் சந்திக்க உள்ளனர்

யுக்ரேனிய பகுதியை வென்றெடுக்கும் விருப்பத்தில் புதின் தொடர்ந்து உறுதியாக இருக்கிறார். ஆனால் டிரம்ப் உலக அமைதி காப்பாளராக இருக்கும் தனது விருப்பத்தை எந்த ரகசியமும் இல்லாமல் வெளிப்படுத்துகிறார்.

ஆனால் இருவரும் வேறு சில வாய்ப்புகள் இருப்பதையும் கவனிப்பார்கள். புதின் உலக அரங்கில் ராஜதந்திர உறவுகளை மீட்டெடுக்க முயற்சி செய்யலாம். புதினை குறித்து வெவ்வேறு கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில், டிரம்ப் என்ன செய்வார் என்று யூகிப்பது சற்று கடினமானதாகும்.

இந்த சந்திப்பிலிருந்து இரு நாட்டு தலைவர்கள் என்ன எதிர்ப்பார்க்கக்கூடும் என்பது குறித்த விரிவான தகவல்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

சர்வதேச அங்கீகாரத்தை எதிர்நோக்கும் புதின்

பட மூலாதாரம், GAVRIIL GRIGOROV/Pool/AFP

ரஷ்ய ஆசிரியர் ஸ்டீவ் ரோசன்பெர்க்

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

புதின் இந்த கூட்டத்தின் மூலம் முதலில் எதிர்ப்பார்ப்பது அங்கீகாரம், அது அவருக்கு ஏற்கெனவே கிடைத்துவிட்டது.

உலகின் மிக சக்திவாய்ந்த நாடான அமெரிக்காவின் அங்கீகாரம் கிடைத்ததால் புதினை தனிமைப்படுத்தும் மேற்கு உலகின் முயற்சிகள் தோற்று போயின.

இந்த உயர் மட்டக் கூட்டம் நடப்பது அதற்கு சாட்சியாகும். ரஷ்யா அறிவித்துள்ள கூட்டு செய்தியாளர் சந்திப்பும் அதற்கு சாட்சியாகும். உலக அரசியல் அரங்கில் மீண்டும் மேல் எழும்பியுள்ளதாக ரஷ்யா கூறக்கூடும்.

அமெரிக்க ரஷ்யா சந்திப்பை மட்டும் புதின் அடைந்துவிடவில்லை, அந்த சந்திப்புக்கான முக்கிய இடத்தையும் பெற்றுள்ளார். சந்திப்பு நடைபெறும் அலாஸ்கா ரஷ்யாவுக்கு நிறைய வழங்கக்கூடும்.

முதலில் பாதுகாப்பு. அலாஸ்கா ரஷ்யாவின் சுகோத்காவிலிருந்து 90கி.மீ மட்டுமே, அதாவது “எதிரி” நாடுகள் மீது பறந்து செல்ல வேண்டிய தேவை புதினுக்கு இருக்காது.

இரண்டாவது – இது யுக்ரேன் மற்றும் ஐரோப்பாவிலிருந்து, தொலைவில், வெகு தொலைவில் உள்ளது. யுக்ரேனையும் ஐரோப்பிய தலைவர்களையும் ஓரங்கட்டி, அமெரிக்காவுடன் நேரடியாக விவகாரம் பேச வேண்டும் என்ற ரஷ்யாவின் முடிவுக்கு இது உதவியாக இருக்கும்.

இதில் வரலாற்று அடையாளம் ஒன்றும் உள்ளது. சார் ஆட்சியின் கீழ் இருந்த ரஷ்யா, 19ம் நூற்றாண்டில் அலாஸ்காவை அமெரிக்காவுக்கு விற்றது என்பது 21ம் நூற்றாண்டில் வலிமையை கொண்டு எல்லைகளை மாற்ற நினைக்கும் ரஷ்யாவின் முயற்சியை ஒரு வகையில் நியாயப்படுத்த உதவக் கூடும்.

ரஷ்ய நாளிதழ் மாஸ்கோவ்ஸ்கி கோம்சோமொலெட்ஸ், “நாட்டின் எல்லைகள் மாறக்கூடும் என்பதற்கும் பெரிய பிராந்தியங்கள் கை மாறக்கூடும் என்பதற்கும் அலாஸ்கா ஒரு தெளிவான உதாரணமாகும்” என்று எழுதியது.

ஆனால் புதினுக்கு வேண்டியது சர்வதேச அங்கீகாரமும் அடையாளங்களும் அல்ல, அதற்கும் மேல்.

அவருக்கு வெற்றி வேண்டும். யுக்ரேனின் நான்கு பிராந்தியங்களில் ரஷ்யா கைப்பற்றி ஆக்கிரமித்திருக்கும் எல்லா நிலத்தையும் ரஷ்யா வைத்துக் கொள்ளும் என்று அவர் கூறி வருகிறார். இந்த பிராந்தியங்களில் யுக்ரேனின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களிலிருந்து யுக்ரேன் பின் வாங்க வேண்டும் என்று கூறுகிறார்.

யுக்ரேனுக்கு இது ஏற்றுக் கொள்ளவே முடியாததாகும். “ஆக்கிரமிப்பாளருக்கு யுக்ரேன் தனது நிலத்தை கொடுக்காது” என்று யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார்.

இது ரஷ்யாவுக்கும் தெரியும். ஆனால் பிராந்தியங்களை வைத்துக் கொள்வது குறித்து அமெரிக்காவின் ஆதரவை ரஷ்யா பெற்றால், அதை மறுக்கும் யுக்ரேனுக்கு அமெரிக்கா எந்த உதவியும் வழங்காது என்பது ஒரு கணக்கு. இதற்கிடையில் ரஷ்யாவும் அமெரிக்காவும் உறவுகளை மேம்படுத்தி, பொருளாதார ஒத்துழைப்பை வளர்த்துக் கொள்ளக் கூடும்.

ஆனால், மற்றொரு விசயமும் சாத்தியம். ரஷ்யாவின் பொருளாதாரம் தற்போது நெருக்கடியில் உள்ளது. பட்ஜெட் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. எண்ணெய் மற்றும் எரிவாயு ஏற்றுமதி மூலம் கிடைக்கும் வருவாய் குறைந்து வருகிறது.

பொருளாதார பிரச்னைகள் காரணமாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய சூழல் புதினுக்கு ஏற்பட்டால் ரஷ்யா அந்த சமரசத்தை செய்யும்.

தற்போதைக்கு அதற்கான அறிகுறிகள் இல்லை. போர்க்களத்தில் ரஷ்யாவே முன்னெடுத்து வருகிறது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர்.

அமைதியை ஏற்படுத்த முயன்றதாக கூறிக் கொள்ள முயலும் டிரம்ப்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, யுக்ரேனில் போரின் போக்கு மாற்றியமைக்க போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார். வட அமெரிக்க செய்தியாளர் ஆண்டனி சுர்சர்

2024 அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, யுக்ரேன் போரை நிறுத்துவது மிக எளிது என்றும் ஒரு சில நாட்களில் அதனை தன்னால் முடிவுக்கு கொண்டு வர முடியும் என்றும் டிரம்ப் உறுதி அளித்திருந்தார்.

டிரம்ப் ஜனவரியில் பொறுப்பேற்றது முதல் இந்த சண்டையை தீர்த்து வைக்கும் முயற்சியில் சில காலம் ரஷ்யா மீது வெறுப்பாகவும், சில காலம் யுக்ரேன் மீது வெறுப்பாகவும் இருந்துள்ளார்.

பிப்ரவரியில் வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போது ஜெலன்ஸ்கியை டிரம்ப் மிக கடுமையாக விமர்சித்து கடிந்துக் கொண்டார். பிறகு யுக்ரேனுக்கு ராணுவ உதவி மற்றும் தகவல் பரிமாற்றத்தையும் தற்காலிக நிறுத்தினார்.

சமீப காலமாக டிரம்ப் புதின் குறித்து விமர்சித்து பேசி வருகிறார். புதின் விட்டுக் கொடுக்காமல் இருப்பது, பொதுமக்களை தாக்க தயாராக இருப்பது குறித்து டிரம்ப் விமர்சித்துள்ளார். ரஷ்யா மீதும் அதனுடன் வியாபாரம் செய்யும் பிற நாடுகள் மீதும் புதிய தடைகள் விதிப்பதற்கான அவகாசத்தை அமெரிக்கா அறிவித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இவற்றுக்கான கடைசிநாளாகும், ஆனால் டிரம்ப் பின்வாங்கி விட்டார்.

இப்போது ரஷ்ய அதிபரை அமெரிக்க மண்ணில் அழைத்து “நில மாற்று” பேச்சுவார்த்தை நடத்துகிறார். அமைதி திரும்ப தன் நிலத்தை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும் என்று யுக்ரேன் அஞ்சுகிறது.

எனவே வெவ்வேறு கருத்துகளையும் செயல்களையும் செய்து வரும் டிரம்ப் இந்த கூட்டத்தின் மூலம் என்ன செய்ய நினைக்கிறார் என்பது தெளிவாக தெரியவில்லை.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, டிரம்ப்-புதின் சந்திப்புக்கு முன்பாக டிரம்புடன் பேசியிருந்தார் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி. இந்த வாரம், இந்த சந்திப்பு குறித்த எதிர்ப்பார்ப்புகளை குறைப்பதற்கு டிரம்ப் முயற்சி எடுத்து வந்துள்ளார். ஒரு வேளை போரிடும் நாடுகளில் ஒன்று மட்டுமே இருப்பதால் இந்த சந்திப்பின் மூலம் பெரிய வாய்ப்புகள் இல்லை என்பதை மௌனமாக ஒப்புக்கொள்வதாக இருக்கலாம்.

இந்த சந்திப்பு கருத்துகளையும் நிலைபாட்டையும் அறிந்துக் கொள்வதற்கான சந்திப்பு என்று திங்கட்கிழமை பேசிய டிரம்ப் கூறினார். சந்திப்பின் “முதல் இரண்டு நிமிடங்களில்” புதினுடன் ஒரு ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு உள்ளதா இல்லையா என்பது தனக்கு தெரிந்துவிடும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

“நன்றி, வணக்கம் என்று நான் கூறக்கூடும். அத்துடன் முடிந்துவிடும். இதற்கு தீர்வு காணவே முடியாது என்று நான் கூறக்கூடும்” என்று டிரம்ப் கூறினார்.

இதே கருத்தை வெளிப்படுத்திய வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட், இந்த சந்திப்பு “கேட்டறிந்துக் கொள்ள” நடைபெறுகிறது என்று செவ்வாய்கிழமை தெரிவித்திருந்தார்.

டிரம்பை பொறுத்தவரை எதிர்ப்பார்க்காததை எதிர்ப்பார்க்க வேண்டும். ஜெலன்ஸ்கி மற்றும் ஐரோப்பிய தலைவர்கள் அவருடன் புதன்கிழமை பேசினர். யுக்ரேன் ஒப்புக் கொள்ளாத, ஒப்புக் கொள்ள முடியாதவற்றை புதினுடன் டிரம்ப் ஒப்புக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவர்கள் டிரம்புடன் பேசினர்.

எனினும் ஒரு விசயம் எப்போதும் உறுதியாக தெரிகிறது – போரை முடித்து வைக்கும் ஆளாக இருக்கும் வாய்ப்பை டிரம்ப் எப்போதும் வரவேற்பார்.

அமைதிக்கான நோபல் பரிசு என்ற சர்வதேச அங்கீகாரத்துக்கு அவர் விருப்பப்படுகிறார் என்பதில் எந்த ரகசியமும் இல்லை.

டிரம்ப் விவரங்களில் சிக்கிக் கொள்பவர் இல்லை. ஆனால் அமைதியை ஏற்படுத்த அவரது முயற்சி எடுத்துள்ளார் என்பதை அவரால் கூறிக் கொள்ள முடியும் என்றால், அந்த வாய்ப்பை அவர் தவற விடமாட்டார்.

எப்போதும் தேர்ந்த மத்தியஸ்தரான புதின், டிரம்ப் அந்த பெருமையை தேடிக் கொள்ள அனுமதிப்பார். ஆனால் அதே நேரம் அது ரஷ்யாவின் நலனை காக்கும் வகையிலேயே நடைபெறக் கூடும்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு