🚨 பிரித்தானியாவில்    பண்ணை வீடு ஒன்றிலிருந்து   2 தொன்கள்   எடையுள்ள கஞ்சா பறிமுதல் – Global Tamil News

by ilankai

பிரித்தானியாவின் போதைப்பொருள் தடுப்பு வரலாற்றிலேயே மிகப்பெரிய வெற்றிகளில் ஒன்றாகக் கருதப்படும் ஒரு அதிரடிச் சோதனையில், சுமார்  £24 மில்லியன் (சுமார் 900 கோடி ரூபா) பெறுமதியான கஞ்சா செடிகள் மற்றும் பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கிரேட்டர் மன்செஸ்டர் காவல்துறையினர் (Greater Manchester Police) கடந்த வெள்ளிக்கிழமை (ஜனவரி 9, 2026) மேற்கொண்ட இந்த அதிரடிச் சோதனையானது, நாட்டின் மிகப்பெரிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளில் ஒன்றாகப் பதிவாகியுள்ளது. போல்டன் (Bolton) அருகே உள்ள லீ டெனமென்ட் ஃபார்ம் (Leigh Tenement Farm) என்ற ஒதுக்குப்புறமான பண்ணை வீடு ஒன்றிலிருந்து சுமார் 2 தொன்கள் (2,000 கிலோ) எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு £24 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் இருந்த 27 மற்றும் 35 வயதுடைய இரண்டு ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போது காவல்துறைக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்டு வருகின்றனர். நீதிமன்ற பிடியாணை (Warrant) பெறப்பட்டு, ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தப் பண்ணை வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. பண்ணை முழுவதிலும் கஞ்சா பயிரிடப்பட்டிருந்ததோடு, விற்பனைக்குத் தயாராக இருந்த பெருமளவிலான பொதிகளும் கண்டெடுக்கப்பட்டன. “இது ஒரு மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் விநியோகச் சங்கிலியை முடக்கியுள்ளது. இவ்வளவு பெரிய அளவிலான போதைப்பொருள் தெருக்களுக்குச் சென்றிருந்தால் அது பெரும் சமூகச் சீர்கேட்டை ஏற்படுத்தியிருக்கும்,” என மன்செஸ்டர் காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். Tag Words: #UKNews #DrugBust #Bolton #ManchesterPolice #CannabisSeizure #CrimeNews #LeighTenementFarm #BreakingNewsUK

Related Posts