Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
படக்குறிப்பு, குல்ஃப்ஷான் தனது மகளின் எதிர்காலத்தை நினைத்து கவலைப்படுவதாகத் கூறுகிறார்.எழுதியவர், அரவிந்த் சாப்ராபதவி, 12 நிமிடங்களுக்கு முன்னர்
ஐந்து வயது ஹாதியா அஃப்ரிடி, தனது தாயின் துப்பட்டாவைப் பிடித்துக்கொண்டு முற்றத்தில் அமைதியாக நிற்கிறார்.
இந்திய மாநிலமான பஞ்சாபின் மலேர்கோட்லா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சூழல் இது.
நாங்கள் ஹாதியாவுடன் பேசத் தொடங்கியதும், அவர் மெதுவாக, “நான் என் அம்மாவுடன் வாழ விரும்புகிறேன்” என்றார்.
ஆனால் ஹாதியா சொல்வது போல், தாயுடன் வாழ வேண்டும் என்ற அவரது விருப்பம், நடைமுறையில் அத்தனை எளிதானது அல்ல.
அவரது குழந்தைப் பருவம் எல்லைகள், சட்ட ஆவணங்கள், மற்றும் இந்தியா–பாகிஸ்தான் இடையிலான அரசியல் இழுபறியில் சிக்கிக் கொண்டுள்ளது என்பதை ஹாதியா அறியவில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஹாதியா, சுயநினைவு வந்ததிலிருந்து வாழ்ந்த ஒரே வீட்டில் தொடர்ந்தும் இருக்க அனுமதி பெறப் போராடுகிறாள். ஆனால் பாகிஸ்தானில் குழந்தை பராமரிப்பு தொடர்பான குடும்பச் சட்டம் அவரது ஆசைக்கு தடையாக உள்ளது.
உண்மையில், ஹாதியா இந்தியாவில் உள்ள பஞ்சாப் வீட்டில் எப்போதுமே வாழ்ந்தவரல்ல.
அவர் 2020-ஆம் ஆண்டு பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தவர்.
இந்தியாவைச் சேர்ந்த அவரது தாயார் குல்ஃப்ஷன், இந்திய குடியுரிமை கொண்டவர். அவரது தந்தை மொயிஸ் கான் பாகிஸ்தான் குடிமகன்.
‘என் திருமணம் விவாகரத்தில் முடிந்தது. அதற்குப் பிறகு, என் இளைய மகள் ஹாதியாவை வளர்க்கும் உரிமைக்காக பாகிஸ்தானின் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தேன்’ என குல்ஃப்ஷன் கூறுகிறார்.
அந்த வழக்கில் தீர்ப்பு குல்ஃப்ஷனுக்கு சாதகமாக வந்தது. அதன்பிறகு, அவர் ஹாதியாவுடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார்.
இந்தியா வந்ததும், குல்ஃப்ஷன் பஞ்சாபின் மலேர்கோட்லா நகரில் உள்ள அவரது தாயார் வீட்டுக்குச் சென்றார். அதே வீட்டில் தான் நாங்கள் ஹாதியாவையும் குல்ஃப்ஷானையும் சந்தித்தோம்.
அந்த நாளிலிருந்து ஹாதியா அந்த வீட்டில்தான் வளர்ந்து வருகிறார். அவர் அங்குள்ள பள்ளியில் படித்து, அந்த மொழியைக் கற்றார். தனது தாயின் உறவினர்களைத் தன் உறவினர்களாக கருதுகிறார்.
“இந்தியா இப்போது அவரது வீடு,” என்கிறார் குல்ஃப்ஷன்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, குல்ஃப்ஷானும் மொய்ஸ் அஃப்ரிடியும் பிப்ரவரி 14, 2019 அன்று காதலர் தினத்தன்று திருமணம் செய்து கொண்டனர், ஆனால் அந்த திருமணம் நீண்ட காலம் நீடிக்கவில்லை.தடைகள் நிறைந்த ஒரு புதிய வாழ்க்கை
குல்ஃப்ஷான் மற்றும் மொய்ஸ் அஃப்ரிடி இருவரும் விவாகரத்து செய்தனர். பின்னர் இருவருமே மறுமணம் செய்துகொண்டனர்.
குல்ஃப்ஷன் 2022-இல் மறுமணம் செய்தார்.
அவரது கணவர் இந்தியாவைச் சேர்ந்தவர், தற்போது வேலைக்காக துபாயில் வசிக்கிறார். 2024-இல், அவர்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்துள்ளது.
அதற்குப் பிறகு, பாகிஸ்தானில் இருந்த ஹாதியாவின் தந்தை, புது டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதில், இந்தியாவில் வசிக்கும் தனது மகள் ஹாதியா மீது உரிமை கோரினார். ஹாதியா ஒரு பாகிஸ்தான் குடிமகள் என்பதால், இவ்வளவு காலம் இந்தியாவில் எப்படி தங்க முடிந்தது என்ற ஆட்சேபனையும் எழுப்பினார்.
பாகிஸ்தான் சட்டப்படி, விவாகரத்துக்குப் பிறகு குழந்தையின் பராமரிப்பு தாயாரிடம் வழங்கப்படுகிறது. ஆனால் தாய் மறுமணம் செய்தால், அந்த உரிமை தானாகவே நீங்கும் என்று அந்த மனுவில் வாதிடப்பட்டது.
ஹாதியா பாகிஸ்தானில் பிறந்தவர். அதனால், அவருக்கு பாகிஸ்தான் குடியுரிமை உள்ளது. அவர் தாயாருடன் குறிப்பிட்ட கால விசாவில் இந்தியா வந்தார்.
சமீபத்தில், ஹாதியாவின் தாய் விசாவை நீட்டிக்க விண்ணப்பித்த போது, விசா காலாவதியானதால் அது நிராகரிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஹாதியா பாகிஸ்தானின் லாகூரில் பிறந்தார், ஆனால் பின்னர் தனது தாயுடன் இந்தியாவுக்கு குடிபெயர்ந்தார்.ஹாதியாவின் தந்தை சமர்ப்பித்த மனுவை காரணமாகக் காட்டி, இந்திய குடிவரவு அதிகாரிகள் ஹாதியாவின் விசா நீட்டிப்பு விண்ணப்பத்தை நிராகரித்தனர்.
இதனால் ஐந்து வயது சிறுமியான ஹாதியா, தனக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத ஒரு நாட்டிற்கு (பாகிஸ்தான்) செல்ல வேண்டிய சூழ்நிலை உருவானது.
2025 மே மாதத்தில் இந்தியா–பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட கடும் மோதல்கள், இந்த பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. அந்த பதற்றமான நாட்களில், இரு நாடுகளும் போரின் விளிம்புக்குச் சென்றன.
அப்போது, இந்திய அரசாங்கம் இந்தியாவில் இருந்த அனைத்து பாகிஸ்தான் குடிமக்களும் நாடு திரும்ப வேண்டும் என்று உத்தரவிட்டது.
‘எனக்கு பயமாக உள்ளது’
“அவள் (ஹாதியா) என்னிடம், ‘என்னை அழைத்துச் செல்ல யாராவது வருவார்களா?’ என்று கேட்கிறாள். நான் அவளுக்கு, ‘இல்லை மகளே, நான் இங்கே இருக்கிறேன்’ என்று உறுதியளிக்கிறேன். ஆனால் உண்மையில், எனக்குப் பயமாக இருக்கிறது,” என்று குல்ஃப்ஷன் கூறுகிறார்.
ஹாதியாவின் பாகிஸ்தான் பாஸ்போர்ட் அக்டோபர் 2025-இல் காலாவதியாக உள்ளது. அடுத்த சில நாட்களில், இந்த விவகாரம் ஹாதியாவுக்கு சாதகமாக முடிவடையவில்லை என்றால், இந்திய அரசாங்கத்தால் அவர் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டவராக அறிவிக்கப்படலாம்.
அதற்குப் பிறகு, ஹாதியாவை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து முடிவு எடுக்கப்படும்.
‘ஹாதியாவுக்கு பாகிஸ்தானில் யாரையும் தெரியாது. அவளை கவனித்துக்கொள்ள அங்கே யாரும் இல்லை’ என்கிறார் குல்ஃப்ஷன் .
ஆனால் , ‘ஹாதியாவின் தாய் மறுமணம் செய்ததால், குழந்தையைப் பார்த்துக் கொள்ளும் உரிமை அவருக்கு இல்லை’ என்கிறார் பாகிஸ்தானில் உள்ள ஹாதியாவின் தந்தை மொயிஸ் அஃப்ரிடி .
‘ஷரியா சட்டப்படி, குழந்தையை பராமரிக்கும் பொறுப்பு தந்தையிடமே இருக்கும். நான் அந்த பொறுப்பை துறக்க மாட்டேன்’ என்றும் அவர் கூறுகிறார்.
மொயிஸிடம், ‘நீங்கள் குழந்தையை எப்படி கவனித்துக்கொள்வீர்கள் ?’ என்று கேட்டபோது, ‘விவாகரத்துக்குப் பிறகு நான் தனியாக இருந்த போது சூழல் சற்று கடினமாக இருந்தது. இப்போது நான் மறுமணம் செய்துள்ளேன், குழந்தையை நிம்மதியாக கவனித்துக்கொள்ள முடியும்’ என்றார்.
இப்போது தான் மறுமணம் செய்து கொண்டதாகவும், இப்போது இந்தப் பொறுப்பை நிம்மதியாக நிறைவேற்ற முடியும் என்றும் அவர் கூறினார்.
மறுபுறம், குல்ஃப்ஷனும் அவரது குடும்பத்தினரும் இந்திய அரசிடம் உதவி கோரி கடிதம் எழுதியுள்ளனர். ஆனால் அரசாங்கத்திடமிருந்து சரியான பதில் கிடைக்காததால், அவர்கள் பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
ஹாதியாவின் பாகிஸ்தான் குடியுரிமையை அங்கீகரித்த நீதிமன்றம், ஹாதியா ஒரு சிறுமி என்பதும், தாயை முழுமையாக சார்ந்திருப்பதும் முக்கியம் எனக் கூறியது.
“குடும்பத்தின் கோரிக்கையை மிகுந்த அனுதாபத்துடன் பரிசீலிக்க வேண்டும். மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்.” என நீதிமன்றம் இந்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டப்பூர்வ நிலை
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் சட்டத்தின்படி, 7 வயதுக்கு மேற்பட்ட குழந்தையின் காவலை தந்தையிடம் ஒப்படைக்கலாம்.’தேசியம், பாதுகாப்பு, உரிமை போன்ற பிரச்னைகளை கடுமையாக விளக்கும் போது, அதன் விலை மிக அதிகமாக இருக்கும். ஹாதியாவின் வழக்கு அதற்கு ஒரு எடுத்துக்காட்டு’ என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஆனால், இந்த விஷயத்தில் சட்டம் மிகவும் தெளிவாக உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
“அந்த சிறுமி பாகிஸ்தானில் பிறந்தவர் என்பதால், சட்டப்படியும் பிறப்பாலும் அவர் ஒரு பாகிஸ்தான் குடிமகள்” என்றார் இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சத்ய பால் ஜெயின்.
அந்தச் சிறுமி இந்தியாவில் அதிக காலம் தங்க முடியுமா, இந்திய குடியுரிமை பெற முடியுமா என்று கேட்ட போது, இந்திய குடியுரிமைச் சட்டத்தின் கீழ் இது தொடர்பாக விரிவான நடைமுறை உள்ளது என்று அவர் கூறினார்.
குல்ஃப்ஷான் மற்றும் ஹாதியா இந்தியாவில் தங்கியிருக்கும் காலத்தை நீட்டிக்க விண்ணப்பித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த இறுதி முடிவும் அரசால் வழங்கப்படவில்லை.
முடிவு தனக்கு சாதகமாக இருக்கும் என்று குல்ஃப்ஷான் நம்புகிறார்.
“நான் என் மகளை இங்கு (இந்தியா) சட்டவிரோதமாக அழைத்து வரவில்லை, பாகிஸ்தான் நீதிமன்றங்களின் அனுமதி பெற்ற பிறகுதான் அவளை இங்கு அழைத்து வந்தேன். இப்போது நான் அவளை நிம்மதியாக வளர்க்க விரும்புகிறேன்”என்று அவர் கூறுகிறார்.
பாகிஸ்தானில் குடும்பச் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர் சதாஃப் ஜமீல் கூறுகையில், ஒரு தம்பதியினரிடையே விவாகரத்து ஏற்பட்டால், மைனர் குழந்தை பராமரிப்பு விஷயங்கள் பொதுவாக 1890 ஆம் ஆண்டு பாதுகாவலர்கள் மற்றும் வார்டுகள் சட்டம் மற்றும் இஸ்லாமிய (ஷரியா) சட்டங்களின் கீழ் முடிவு செய்யப்படுகின்றன என்றார்.
இந்த விஷயத்தில், நீதிமன்றங்கள் முடிவுகளை எடுக்கும் போது குழந்தையின் நலனுக்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றன என்றும், குழந்தையை தாய் அல்லது தந்தை ஆகிய இருவரில் யாரால் சிறப்பாக வளர்க்க முடியும் என்பதைப் பார்க்கின்றன என்றும் அவர் கூறினார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.குழந்தை 7 வயதுக்கு கீழ் இருந்தால், பொதுவாக குழந்தையைப் பராமரிக்கும் பொறுப்பு தாயிடம் வழங்கப்படும்.
ஆனால், குழந்தை ஏழு வயதை அடைந்த பிறகு, தந்தையும் குழந்தையைப் பராமரிப்பதற்கு உரிமை கோரலாம்.
அந்தக் குழந்தைக்கு 7 வயது ஆவதற்கு முன் தாய் மறுமணம் செய்தால், தந்தை பராமரிப்பதற்கு உரிமை கோரலாம்.
ஆனால், எந்த சூழ்நிலையிலும், நீதிமன்றம் குழந்தையின் நலனையே முதன்மையாகக் கருதி முடிவு எடுக்கும் என்று சதாஃப் கூறுகிறார்.
நாங்கள் குல்ஃப்ஷனுடன் பேசிக் கொண்டிருந்த போது, ஹாதியா வண்ண பென்சில்களால் காகிதத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். அவளுக்கு தூதரகம், நாடு கடத்தல், காவல் உரிமை போன்ற விஷயங்கள் பற்றி எதுவும் தெரியாது.
குல்ஃப்ஷன் அவளை அணைத்துக்கொண்டே சொல்கிறார்,
“இது அரசியல் பிரச்னை அல்ல. ஹாதியா ஒரு சிறுமி. அவள் என் மகள்.”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு