லண்டனின் கென்சிங்டன் (Kensington) பகுதியில் அமைந்துள்ள ஈரான் தூதரகத்தில் சனிக்கிழமை (ஜனவரி 10, 2026) இந்த அதிரடிச் சம்பவம் நிகழ்ந்தது. ஈரானில் தற்போது நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக லண்டனில் நூற்றுக்கணக்கானோர் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது, ஒரு நபர் திடீரென தூதரக கட்டிடத்தின் பால்கனி பகுதிக்கு ஏறிச் சென்றார். அங்கு பறந்து கொண்டிருந்த ஈரானிய குடியரசின் அதிகாரப்பூர்வக் கொடியை ஆவேசமாக கீழே இழுத்து எறிந்தார். பின்னர், அதற்குப் பதிலாக 1979-ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு ஈரானில் பயன்பாட்டில் இருந்த ‘சிங்கம் மற்றும் சூரியன்’ (Lion and Sun) சின்னம் பொறித்த கொடியை ஏற்றினார். இதைப் பார்த்துக் கொண்டிருந்த போராட்டக்காரர்கள் உற்சாகமாக முழக்கமிட்டனர். • ‘சிங்கம் மற்றும் சூரியன்’ சின்னம் கொண்ட கொடியானது ஈரானின் பழைய மன்னராட்சியின் அடையாளமாகும். தற்போதைய மதகுருமார்களின் ஆட்சியை எதிர்க்கும் போராட்டக்காரர்கள், இதை ஜனநாயகத்தின் மற்றும் மாற்றத்தின் அடையாளமாகப் பயன்படுத்தி வருகின்றனர். •ஈரானில் கடந்த டிசம்பர் 28 (2025) முதல் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டங்களில் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. : இந்தச் சம்பவத்தை அடுத்து லண்டன் காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர். அத்துமீறி நுழைந்ததல் மற்றும் அதிகாரிகளைத் தாக்கியது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. • ஈரானில் நடக்கும் இந்த நிகழ்வுகளை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். ஈரானிய மக்கள் சுதந்திரத்தை நோக்கி நகர்வதாக ட்ரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தூதரகத்தின் பால்கனியில் சிறிது நேரம் பறந்த அந்தப் பழைய கொடி, பின்னர் தூதரக அதிகாரிகளால் அகற்றப்பட்டு மீண்டும் தற்போதைய கொடி ஏற்றப்பட்டது. இருப்பினும், இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ________________________________________
ஈரான் தூதரகத்தின் மீது ஏறி கொடியை மாற்றிய போராட்டக்காரர்! – Global Tamil News
3