யாழ்ப்பாணம் வேலணை பகுதியில் பண்ணையாளர்கள் மாடுகளை களவாடி , அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்து வந்த கும்பலில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்து ஊர்காவற்துறை  காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.  அதேவேளை , குறித்த கும்பலை சேர்ந்த நால்வர் தப்பியோடிய நிலையில் , அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

வேலணை பகுதியில் பண்ணையாளர்களின் மாடுகளை களவாடி அவற்றை இறைச்சியாக்கி விற்பனை செய்யும் திருட்டு கும்பல் ஒன்றினால், பண்ணையாளர்கள் கடும் நஷ்டங்களை எதிர்கொண்டு வந்தனர்.

அது தொடர்பில் ஊர்காவற்துறை காவல்துறையினரிடம் பல தடவைகள் முறைப்பாடு செய்தும் கால்நடை திருட்டுக்கள் தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில், வேலணை பகுதிக்கு வரும் சந்தேகத்திற்கு இடமான வாகனங்களை பொதுமக்கள் கண்காணித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அதிகாலை சந்தேகத்திற்கு இடமான முறையில் , பயணித்த பட்டா ரக வாகனத்தை மக்கள் வங்களாவடி பகுதியில் மறித்து சோதனையிட முயன்றுள்ளனர்.

அவ்வேளை வாகனத்தின் பின்னால் இருந்த நால்வர் வாகனத்தை விட்டு குதித்து தப்பியோடியுள்ளனர். அதனை அடுத்து வாகனத்தையும் , வாகன சாரதியையும் பொதுமக்கள் மடக்கி பிடித்து , வாகனத்தை சோதனையிட்ட வேளை, ஒரு தொகை இறைச்சியை வாகனத்தில் இருந்து மீட்டுள்ளனர்.

அதனை அடுத்து ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு அறிவித்ததை அடுத்து, காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நபரை கைது செய்ததுடன் , மக்களால் பிடிக்கப்பட்ட  வாகனத்தையும் , அதில் இருந்த இறைச்சியையும் மீட்டு , காவல் நிலையம் கொண்டு சென்றுள்ளனர்.

கைதான நபரை காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ள காவல்துறையினர் , வாகனத்தில் வந்து தப்பியோடிய நால்வரையும் கைது செய்யவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.