போலி ஆதார் மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி?காணொளிக் குறிப்பு, AI கருவிகள், QR Code, Segno போன்ற பைதான் லைப்ரரிகளை பயன்படுத்தி போலி QR Code-கள் உருவாக்கப்படுகின்றன.போலி ஆதார் மோசடியில் சிக்காமல் தப்புவது எப்படி?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

AI தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தாலும்… அதே வேகத்தில் மோசடிகளும் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. பான் கார்ட், ஆதார் கார்டு போலிகளை உருவாக்கி, பெரிய அளவில் மோசடிகள் நடக்கின்றன.

இந்த போலி அடையாள அட்டைகள் ஏன் ஆபத்தானவை? அவற்றை எப்படி கண்டுபிடிப்பது? இந்த காணொளியில் பார்க்கலாம்.

அடையாளங்கள் திருடப்படுவதால் ஏற்படும் ஆபத்துகள்:

சைபர் குற்றவாளிகள் ஆன்லைனில் இருந்து உங்கள் பெயர், முகவரி, புகைப்படம் போன்ற தனிநபர் தகவல்களை திருடி, AI, டீப்‌ஃபேக், போலி QR கோடுகள் போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, உண்மையானது போல் காணப்படும் அடையாள அட்டைகளை உருவாக்குகின்றனர்.

இந்த விஷயத்தில் பொது மக்கள் எச்சரிக்கை உடன் இருக்க வேண்டும் என சைபர் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

சைபர் பாதுகாப்பு வல்லுநரான ஹரிஹரசுதன் தங்கவேலு பிபிசி தமிழிடம் பேசிய போது, “இது போன்ற தனிநபர் தகவல்கள் திருடப்படும் போது, அவர்கள் உங்கள் பெயரில் மோசடி செய்வது எளிதாகிறது. இந்த தகவல்களை அவர்கள் நம்மிடம் கூறினால், நாம் எளிதாக அவர்களை அரசு அதிகாரிகள் அல்லது வங்கி ஊழியர்கள் என நம்பிவிடுவோம். இதனால் அவர்களால் எளிதாக நம்மை ஏமாற்றி மோசடியில் ஈடுபட முடியும்” என கூறினார்.

புதிய வங்கிக் கணக்கு தொடங்குவது, கடனுக்கு விண்ணப்பிப்பது, பணமோசடி குற்றங்களை நிகழ்த்துவது போன்ற குற்றச் செயல்களுக்கு இதுபோன்ற போலி ஆவணங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

சைபர் குற்றங்களில் ஈடுபடுவதற்கும், அரசின் நலதிட்ட உதவிகளை பெறுவதற்கும் கூட திருடப்பட்ட தனிநபர் தரவுகள் பயன்படுத்தப்படலாம்.

இதுமட்டுமின்றி, உங்களுடைய வயது, தங்குமிடம் போன்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு தேவையின் அடிப்படையிலான டார்கெட் அட்டாக் செய்து மோசடி செய்யலாம் என ஹரிஹரசுதன் தங்கவேலு எச்சரிக்கிறார்.

ஆதார், பான் கார்ட்களில் உள்ள புகைப்படங்களை மாற்ற AI கருவிகள் மற்றும் டீப்ஃபேக் உதவுகின்றன. மோசடி நபர்கள் உங்களின் ஆதார் அல்லது பான் எண்ணை பயன்படுத்தியும் இது போன்ற மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.

AI கருவிகள், QR Code, Segno போன்ற பைதான் லைப்ரரிகளை பயன்படுத்தியும் போலி QR Code-கள் உருவாக்கப்படுகின்றன.

இதுபோன்ற ஆபத்துகளில் இருந்து தப்பிப்பது எப்படி?

ஆதார் மற்றும் பான் கார்ட் குறித்த தரவுகளை சரிபார்க்க, UIDAI மற்றும் நேஷனல் செக்யூரிட்டி டெபாசிட்டரி லிமிடெட் (NSDL) ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட தளங்களை அணுக வேண்டும்.

புகைப்படத்தை ஸ்கேன் செய்தோ, QR Code முறையிலோ ஆதார் அல்லது பான் கார்டை சரி பார்க்க வேண்டும்.

உங்களுக்கு யாரேனும் ஆதார் அல்லது பான் கார்ட் புகைப்படம் அனுப்பும் போது, சந்தேகம் ஏற்பட்டால் அரசின் அங்கீகரிக்கப்பட்ட தளத்தில், அந்த அடையாள அட்டை குறித்த விவரங்களை உடனடியாக சரிபார்க்கவும்.

ஆதார், பான் கார்ட் போன்ற முக்கிய ஆவணங்களை சமூக வலைதளங்களில் பகிர்வதை தவிர்க்க வேண்டும். அவ்வாறு பகிரப்படும் சமயத்தில் அவை தவறாகப் பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது.

போலி அடையாள அட்டைகளை கண்டறிவது எப்படி?

AI-ஆல் உருவாக்கப்பட்ட போலி ஆதார் மற்றும் பான் கார்ட்களைப் பார்ப்பதற்கு உண்மையானது போலவே இருக்கும். அதை சோதித்து பார்ப்பதன் மூலமாக மட்டுமே அது உண்மையானதா? அல்லது போலியானதா என்பதை அறியமுடியும்.

முதலில் ஆதார், பான் கார்ட்களில் உள்ள புகைப்படத்தை பரிசோதிக்க வேண்டும். உண்மையான புகைப்படத்திற்கும் போலி புகைப்படத்திற்கும் சிறிய வித்தியாசம் இருக்கும்.

ஆதார் மற்றும் பான் கார்ட்களில் மத்திய அரசின் லச்சினை இருக்கும். அதை கவனிக்க வேண்டும். AI மூலம் உருவாக்கப்பட்டிருந்தால் அது உண்மையான லோகோவில் இருந்து சற்று மாறுபட்டிருக்கும். லோகோவின் டிசைன், நிறம், அதில் உள்ள எழுத்துகளில் ஏதேனும் ஒரு மாற்றம் இருக்கும்.

ஆதார் மற்றும் பான் கார்ட்களில் QR Code-கள் இருக்கும். அதை ஸ்கேன் செய்தும் பரிசோதிக்கலாம்.

Sanchar Saathi என்ற அரசு வலைதளத்தில் உங்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணை சரி பார்க்க முடியும் என கூறிய ஹரிஹரசுதன் தங்கவேலு இதன் மூலம் வேறு யாரேணும் உங்கள் அனுமதியின்றி உங்கள் ஆதாரைப் பயன்படுத்தினால் கண்டறிந்து மோசடிகள் நடப்பதை தவிர்க்கலாம் என்கிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு