Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஆஸ்திரேலிய அணியை அச்சுறுத்தும் தமிழர்: யார் இந்த செனுரன் முத்துசாமி ?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட தென் ஆப்ரிக்க வீரர் செனுரன் முத்துசாமிஎழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக44 நிமிடங்களுக்கு முன்னர்
இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட பலர் பல்வேறு வெளிநாட்டு அணிகளுக்காக கடந்த காலங்களில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர், தற்போதும் சிலர் விளையாடி வருகிறார்கள்.
ஆனால், தமிழகத்தை வேராகக் கொண்டு வெளிநாட்டு அணிகளுக்காக கிரிக்கெட் விளையாடியது மிகச் சிலர்தான். கடந்த காலங்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணிக்காக ஆல்வின் ஐசக் காளிச்சரண், மகிந்திரா நாகமுத்து, சிவ்நரேன் சந்தர்பால் உள்ளிட்ட சில வீரர்கள் விளையாடியுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணியில் தமிழர்
தென் ஆப்ரிக்க அணியில் இதற்கு முன் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஹசிம் ஆம்லா, கேசவ் மகராஜ் உள்ளிட்டோர் விளையாடி இருந்தாலும், தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட வீரர் ஒருவர்கூட விளையாடியதில்லை. அந்த குறையைப் போக்கும் விதத்தில் முதல்முறையாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட செனுரன் முத்துசாமி இடம் பெற்று விளையாடி அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார்.
செனுரன் முத்துசாமியின் டெஸ்ட் போட்டி அறிமுகமே அமர்க்களமாக இருந்தது. 2019ம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகிய முத்துசாமி விராட் கோலியை ஆட்டமிழக்கச் செய்து, வாழ்வில் மறக்க முடியாத வகையில் முதல் டெஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றினார். நீண்ட இடைவெளிக்குப்பின் தற்போது தென் ஆப்ரிக்க டி20 அணியில் இடம் பெற்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பந்துவீச்சில் மிரட்டி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணியின் பேட்டர்களை அதன் சொந்த மண்ணில் திணறவிட்டு, நிலைகுலைய வைப்பது எளிமையானது அல்ல. அதிலும், வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானத்தில் சுழற்பந்துவீச்சு மூலம் பேட்டர்களுக்கு சிம்ம சொப்பனமாக ஒரு பந்துவீச்சாளர் இருந்துவிட்டால் உலக கிரிக்கெட்டின் பார்வையை ஈர்த்துவிடுவார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அந்த வகையில் தென் ஆப்ரிக்காவின் பேட்டிங் ஆல்ரவுண்டரான செனுரன் முத்துசாமி இப்போது ட்ரெண்டிங்காக மாறியுள்ளார். இடதுகை சுழற்பந்து(ஆர்த்தடாக்ஸ்) வீச்சாளரான முத்துசாமி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த 2 நாட்களுக்கு முன் முடிந்த முதல் டி20 போட்டியில் பிரமாதமான பந்துவீச்சை வெளிப்படுத்தியுள்ளார். 4 ஓவர்கள் வீசிய முத்துசாமி 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 4 ஓவர்கள் வீசி, 15 டாட் பந்துகளுடன் 24 ரன்கள் கொடுத்து, ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.யார் இந்த செனுரன் முத்துசாமி?
செனுரன் முத்துசாமி தென் ஆப்ரிக்காவில் முதல்தரப் போட்டிகளிலும், ஏ லிஸ்ட் போட்டிகளிலும் 100க்கும் மேற்பட்ட ஆட்டங்களில் ஆடியுள்ளார். முதல் தரப்போட்டிகளில் 9 சதங்கள், 20 அரைசதங்கள் உள்ளிட்ட 5,111 ரன்களையும், 266 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஏ லிஸ்ட் போட்டிகளில் 2,364 ரன்களையும், 97 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.
2019ம் ஆண்டு தென் ஆப்ரிக்க டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முத்துசாமி அதன்பின் நீண்ட இடைவெளிக்குப் பின்தான் மீண்டும் தேசிய அணியில் வாய்ப்புக் கிடைத்தது. இதுவரை 5 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் ஆடிய முத்துசாமி 173 ரன்கள் சேர்த்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இருந்துதான் தென் ஆப்ரிக்க ஒருநாள், டி20 அணியில் தொடர்ந்து வாய்ப்புப் பெற்று முத்துசாமி விளையாடி வருகிறார். 4 டி20 போட்டிகளில் ஆடிய முத்துசாமி 4 விக்கெட்டுகளை எடுத்து, 15 ரன்கள் சேர்த்துள்ளார். கீழ்வரிசை பேட்டராக, முத்துசாமி தென் ஆப்ரிக்க அணியில் களமிறங்குவதால், பேட்டிங் செய்வதற்கு பெருமளவு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
ஜனநாயகமும்- முத்துசாமியின் பிறப்பும்
தென் ஆப்ரிக்காவில் நாடல் மாகாணத்தில், டர்பன் நகரில் 1994ம் ஆண்டு, பிப்ரவரி 22ம் தேதி செனுரன் முத்துசாமி பிறந்தார். தென் ஆப்பிரிக்கா தேசம் பிரிட்டிஷ் ஆதிக்கத்தில் இருந்து மீண்டு, 1994ம் ஆண்டுதான் ஜனநாயகத்துக்கு திரும்பியது. அந்த நேரத்தில் அந்நாட்டில் பிறந்தவர்தான் செனுரன் முத்துசாமி.
அதனால்தான் அனைத்து மக்களுக்கும் சமமான வாய்ப்புக் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, முத்துசாமிக்கு குழந்தைப் பருவத்தில் இருந்தே கல்வி முதல் விளையாட்டுவரை சமமான வாய்ப்புக் கிடைத்தது.தமிழகத்தில் நாகப்பட்டினம் பூர்வீகம்
செனுரன் முத்துசாமியின் பூர்வீகம் சென்னைதான் என்றாலும், உறவினர்கள் பலரும் இன்னும் நாகை மாவட்டம், நாகப்பட்டினத்தில் வாழ்ந்து வருகிறார்கள். முத்துசாமியின் தந்தைவழி தாத்தா காலத்திலேயே தென் ஆப்ரிக்காவுக்கு புலம்பெயர்ந்துவிட்டனர். இருப்பினும், தமிழக்கத்தில் உள்ள உறவினர்களோடு முத்துசாமி குடும்பத்தினருக்கு உறவுநிலை இன்னும் தொடர்ந்து வருகிறது.
இந்த தகவலை ஒரு பேட்டியில் செனுரன் முத்துசாமியே தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இந்து பாரம்பரியத்தைக் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த செனுரன் முத்துசாமி, தென் ஆப்ரிக்காவில் அடிக்கடி கோயிலுக்கு செல்லும் பழக்கம் இருப்பதாக ‘இந்துஸ்தான் டைம்ஸ்’ நாளேட்டுக்கு கடந்த 2019ம் ஆண்டு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், “தனக்கு தமிழ் பேசத் தெரியாது என்றபோதிலும், தமிழகத்துக்கு இருமுறை வந்து நாகையில் உள்ள உறவினர்களை சந்தித்துச் சென்றிருக்கிறேன். என் குடும்பத்தினர் சிலர், உறவினர்கள் இன்னும் நன்றாக தமிழ் பேசினாலும், எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன். இந்தியாவுடன் எங்களுக்கு இருக்கும் பிணைப்பு அற்புதமானது, எங்கள் கலாசாரம் எப்போதும் இந்தியராகவே வைத்திருக்கிறது” என முத்துசாமி அந்தப் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, “எனக்கு தமிழ் தெரியாது. விரைவில் கற்றுவிடுவேன்” என்றார் முத்துசாமிசிறுவயதிலேயே கிரிக்கெட் பயிற்சி
டர்பனில் உள்ள கிளஃப்டன் கல்லூரியில் படிப்பை முடித்த முத்துசாமி, க்வா ஜூலு நாடல் பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் மற்றும் மார்க்கெட்டிங் பிரிவில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தார். டர்பனில் முத்துசாமி வசித்தபோது சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது தீராத ஆசையோடு இருந்ததால், முதல் வகுப்பு படிக்கும்போதே முறையான பயிற்சியில் பெற்றோரால் சேர்க்கப்பட்டார்.
க்வா ஜூலு நாடல் மாகாணத்தில் 11 வயதுக்குட்பட்டோர், 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டிகளில் செனுரன் முத்துசாமி சிறப்பாக விளையாடி அனைவரின் பாராட்டுகளைப் பெற்றார், பள்ளிப் போட்டிகளிலும், உள்ளூர் போட்டிகளிலும் முத்துசாமியின் ஆட்டம் பிரமாதப்படுத்தியது.
முத்துசாமியின் திறமையான ஆட்டம் அவரை தென் ஆப்பிரிக்காவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான அணிக்குள் தேர்வு செய்ய வைத்தது. இவரின் ஆட்டத்தைப் பார்த்த டால்பின் அணி, 2015-16ம் ஆண்டு அணியில் ஒப்பந்தம் செய்தது.
அதன்பின் க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி இடம் பெற்று விளையாடினார், 2017ம் ஆண்டு டி20 குளோபல் லீக் தொடரில் கேப்டவுன் நைட் ரைடர்ஸ் அணிக்காக முத்துசாமி ஒப்பந்தம் செய்யப்பட்டார்.
2018ம் ஆண்டு நடந்த ஆப்ரிக்க டி20 கோப்பைத் தொடருக்காக க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு, பின்னர் 2021, ஏப்ரல் மாதத்தில் நார்த்வெஸ்ட் அணியிலும் முத்துசாமி இடம் பெற்றார்.
2021-22ம் ஆண்டு நடந்த சிஎஸ்ஏ எனப்படும் கிரிக்கெட் சவுத் ஆப்ரிக்கா ஒருநாள் தொடரில் முத்துசாமி தனது முதல் சதத்தை மேற்கு மாகாணத்துக்கு எதிராகப் பதிவு செய்தார். இதுதான் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் முத்துசாமியின் முதல் சதமாக அமைந்தது.
சங்கக்கராவால் ஈர்க்கப்பட்டவர்
2016-17ம் ஆண்டில் டால்பின் அணியில் நிரந்தரமாக முத்துசாமிக்கு இடம் கிடைத்தது. பேட்டிங்கைப் பொருத்தவரை இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார சங்ககராவை பின்பற்றி அவரைப் போல் பேட்டிங் செய்ய முத்துசாமி ஆர்வமாகினார், அவரின் பேட்டிங் ஸ்டைலைப் போலவே பல ஷாட்களையும் முத்துசாமி தனது ஆட்டத்தில் கொண்டு வந்தார்.
முத்துசாமிக்கு திருப்புமுனையாக அமைந்தது 2017-18ம் ஆண்டு சீசன்தான். இதில் நைட்ஸ் அணிக்கு எதிராக தொடக்க வீரராக ஆடிய முத்துசாமி 181 ரன்கள் குவித்தார். அதன்பின் தனது பேட்டிங் வரிசையை கீழ்வரிசைக்கு மாற்றிய முத்துசாமி, சுழற்பந்துவீச்சில் கவனத்தைச் செலுத்தினார். அந்த ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமி, 4 விருதுகளையும், அந்த ஆண்டின் சிறந்த வீரருக்கான விருதையும் பெற்றார்.
2018ம் ஆண்டு தென் ஆப்ரிக்க அணியின் பயிற்சி முகாமுக்கு அழைக்கப்பட்ட முத்துசாமிக்கு சுழற்பந்துவீச்சில் பயிற்சி அளிக்கப்பட்டு, 2019ம் ஆண்டு இந்தியப் பயணத்துக்கு தயார் செய்யப்பட்டார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2017-18ஆம் ஆண்டில் மட்டும் டால்பின்ஸ் அணிக்காக 33 விக்கெட்டுகளை கைப்பற்றிய முத்துசாமிமறக்க முடியாத முதல் விக்கெட்
இதற்கிடையே க்வா ஜூலு நாடல் மாகாண அணியில் முத்துசாமியின் ஆட்டத்தைப் பார்த்த தென் ஆப்ரிக்க அணியின் தேர்வாளர்கள், 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கான தென் ஆப்ரிக்க அணியில் முத்துசாமியை தேர்வு செய்தனர்.
இதையடுத்து, 2019ம் ஆண்டு இந்திய பயணத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முத்துசாமி விசாகப்பட்டினத்தில் அக்டோபர் 2ம் தேதி நடந்த இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமாகினார்.
முத்துசாமிக்கு டெஸ்ட் அறிமுகம் வாழ்வில் மறக்கமுடியாத தருணமாக அமைந்தது. டெஸ்ட் வாழ்க்கையில் தனது முதல் விக்கெட்டாக அப்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியை 20 ரன்னில் காட்அன்ட் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து முத்துசாமி மறக்க முடியாத நினைவுகளைப் பெற்றார்.
அதன்பின் தென் ஆப்ரிக்க அணியில் மீண்டும் இடம் பெற முத்துசாமிக்கு நீண்ட இடைவெளி காத்திருக்க நேர்ந்தது. கேசவ் மகராஜ், ஷம்சி உள்ளிட்ட சுழற்பந்துவீச்சாளர்களின் கடும் போட்டியால் 6 ஆண்டுகளுக்குப்பின் இந்த ஆண்டிலிருந்து மீண்டும் அணிக்குள் முத்துசாமி வாய்ப்புப் பெற்றார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தென் ஆப்ரிக்க அணியில் முத்துசமி இடம் பெற்றாலும், அவருக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை.
“இதற்காகத்தான் காத்திருந்தேன்”
தென் ஆப்பிரிக்க அணிக்குள் மீண்டும் வந்தது குறித்து முத்துசாமி கிரிக்இன்போ தளத்துக்கு அளித்த பேட்டியில் “மீண்டும் ப்ளேயிங் லெவனுக்குள் வந்தது அற்புதமான தருணம். இந்த வாய்ப்புக்காகத்தான் நான் இதுவரை காத்திருந்தேன், கடந்த சில மாதங்களாக சீரான வாய்ப்புக் கிடைப்பது சிறப்பானது.
அணிக்குள் இருந்தாலும், வீரர்களுக்கு குளிர்பானங்கள் அளிக்கும் வேலையே செய்தபோதிலும் என்னால் கற்றுக்கொள்ள வாய்ப்புக் கிடைத்தது, அதனால்தான் என்னால் அணிக்குள் வர முடிந்தது. வித்தியாசமான தளங்களில் விளையாடும் பக்குவத்தை பெற முடிந்தது” எனத் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பயிற்சியாளர் கான்ராட்டின் முயற்சி
தென் ஆப்ரிக்க அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை முதல்முறையாக வென்றபின் அணிக்குள் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக புதிய பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் புதிய வீரர்களை அடையாளம் கண்டு தொடர்ச்சியாக வாய்ப்புகளை அளித்து வருகிறார். அதில் முக்கியமானவர் முத்துசாமி.
முத்துசாமிக்கு திறமை இருந்தபோதிலும் போதுமான வாய்ப்புக் கிடைக்காமல் சர்வதேச அளவில் 8 ஆட்டங்களில் மட்டுமே ஆடி இருந்தார். அவருக்கு தொடர்ச்சியாக கடந்த பாகிஸ்தான், ஜிம்பாப்பே தொடரிலிருந்து வாய்ப்புகளை வழங்கி பயிற்சியாளர் கான்ராட் ஊக்கப்படுத்தி வருகிறார்.
இந்தியாவை ஒப்பிடும்போது தென் ஆப்ரிக்காவில் திறமையான இளம் வீரர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருந்தாலும், இங்கிலாந்தை விட தொழில்முறை நிலை (professionalism) குறைவாக இருந்தாலும், ஆஸ்திரேலியாவுடன் ஒப்பிடும்போது பொதுமக்களின் கவன ஈர்ப்பு மிகக் குறைவாக வைத்திருந்தாலும், தென்னாப்பிரிக்கா வெற்றி பெறுகிறது. சமவாய்ப்பு வழங்குவது, நிதி சிக்கல் மற்றும் பிற வளங்களின் பற்றாக்குறை உள்ளிட்ட யதார்த்தங்களை மீறி தென் ஆப்ரிக்கா முத்துசாமி போன்ற வீரர்களை வளர்த்தெடுத்து வெற்றி பெறுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு