Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
லட்சக்கணக்கில் மாற்றம் பெறும் வாக்காளர் பட்டியல் – முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Hindustan Times via Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியாவின் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி, சில நாட்களுக்கு முன்பாக இந்திய தேர்தல் ஆணையம் குறித்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். சில இடங்களில் வாக்காளர்களின் எண்ணிக்கை அதீதமாக அதிகரித்தது, வாக்காளர்கள் நீக்கப்பட்டது ஆகியவை குறித்து இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்தார். வாக்காளர் எண்ணிக்கை இப்படி ஏன் அதிகரிக்கிறது, பல லட்சம் பேர் ஏன் பட்டியலில் இருந்து நீக்கப்படுகிறார்கள்? இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என். கோபால்சுவாமியிடம் சில கேள்விகளும் அதற்கான பதில்களும்.
வேட்பாளர் பட்டியல் திருத்தம் என்பது முறைகேடா?
கே. வாக்காளர் பட்டியலைத் திருத்தும்போது ஒரு தொகுதியில் லட்சக்கணக்கான வாக்காளர்கள் புதிதாக இடம்பெறுகிறார்கள். லட்சக் கணக்கானவர்கள் நீக்கப்படுகிறார்கள். இவை முறைகேடுகளா?
ப. வாக்காளர் பட்டியலைத் தீவிரமாகச் சரிபார்க்கும்போது இது போல எண்ணிக்கையில் பெரும் வேறுபாடுகள் ஏற்படத்தான் செய்யும். 2007ல் கர்நாடக மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 2008ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நாங்கள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும். அதற்காக, 2008ஆம் ஆண்டு துவக்கத்தில் தேர்தல் பட்டியல் தீவிரமாக சரிபார்க்கப்பட்டது. அப்போது இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் என 52 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. புதிதாக 20 லட்சம் பேர் சேர்க்கப்பட்டார்கள். பத்து லட்சம் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்குப் பிறகு ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டபோது, 9.52 லட்சம் பேர் புதிதாக பட்டியலில் சேர்க்க வேண்டுமென்றும் சில ஆட்சேபனைகளோடும் விண்ணப்பித்தார்கள். இதில் 7.24 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டன. இதற்குப் பிறகு அரசியல் கட்சிகளின் கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தியபோது அவர்கள் இதனைப் பாராட்டினார்கள்.
அதேபோல, 2007 ஆண்டுவாக்கில் தேர்தலுக்கு ஆறு மாதங்கள் முன்பாக உத்தரப்பிரதேசத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டபோது கிட்டத்தட்ட 21.13 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதற்குப் பிறகு சிறப்பு சரிபார்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, முடிவில் 61.69 லட்சம் பேர் புதிதாக சேர்க்கப்பட்டிருந்தனர். 78.01 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தன. உத்தரப்பிரதேசம் மிகப் பெரிய மாநிலம் என்றாலும்கூட இந்த நீக்கமும் சேர்க்கையும் மிகப் பெரிய எண்ணிக்கைதான்.
பொதுவாக இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை இதுபோல வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலைத் திருத்த வேண்டும். அப்படிச் செய்யும்போதே, திருத்தங்கள், நீக்கங்கள் போன்றவை பல லட்சங்களாக இருக்கும். பல ஆண்டுகளுக்கு ஒரு முறை செய்தால் இந்த எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Facebook
படக்குறிப்பு, கோபால்சுவாமி, முன்னாள் தேர்தல் ஆணையர்கே. ஒரே முகவரியில் பலர் வசிப்பதாக வாக்காளர் பட்டியலில் காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. அப்படி சாத்தியமுண்டா?
ப. பல நகரங்களில் இது நடக்கும். கீழ்நிலை வேலைக்காக இடம்பெயர்ந்து வருபவர்களுக்கு புதிதாக முகவரி ஏதும் இருக்காது. ஒரே முகவரியையே அவர்கள் பயன்படுத்துவார்கள். அந்த முகவரியில் ஏற்கனவே நிறையப் பேர் இருப்பார்கள். புதிதாக அந்த மாநிலத்திற்கு வருபவர்கள் தூங்குவதற்கு மட்டுமோ, தங்கள் பொருட்களையோ, பணத்தையோ வைப்பதற்காக மட்டும் அங்கே வருவார்கள். அந்த முகவரியையே பதிவுசெய்வார்கள். ஆகவே, ஒரே முகவரியை நிறையப் பேர் பயன்படுத்தும் சாத்தியங்கள் இருக்கவே செய்கின்றன.
பட்டியல் திருத்தத்திற்கான கால இடைவெளி என்ன?
கே. தீவிரமாக வாக்காளர்கள் பட்டியலை சரிபார்ப்பதை எந்த கால இடைவெளியில் செய்ய வேண்டும்?
ப. இது ஒரு தொடர் நடவடிக்கை. நான் தலைமைத் தேர்தல் ஆணையராக இருந்தபோது, ‘ஜனாக்ரகா’ என்ற அமைப்போடு சேர்ந்து ஒரு ஆய்வை நடத்தினோம். அந்த ஆய்வில் வீடுவீடாகச் சென்று வாக்காளர்களைச் சரிபார்ப்பதை ஒரு வருடம் செய்யாமல் இருந்தால், அதற்குப் பிறகு சரிபார்ப்பை மேற்கொள்ளும்போது திருத்தங்கள் 3 – 4 சதவீதம் இருக்கும் எனத் தெரியவந்தது. இந்தப் பின்னணியில், வாக்காளர் திருத்தத்தை 4 ஆண்டுகள் செய்யாமல் இருந்தால் வித்தியாசம் 12 சதவீதமாக இருக்காது. அதைவிட அதிகமாகவே இருக்கும். ஏனென்றால், இந்தியா போன்ற ஒரு நாட்டில் மக்கள் உள்ளுக்குள்ளேயே இடம்பெயர்ந்துகொண்டேயிருப்பார்கள். ஒரு நகரத்திற்குள் இடம்பெயர்வார்கள், மாநிலம் விட்டு மாநிலம் இடம்பெயர்வார்கள். ஆகவே, பல ஆண்டுகளுக்குப் பிறகு தீவிரத் திருத்தங்களைச் செய்யும்போது இதுபோல லட்சக்கணக்கான திருத்தங்கள் இருக்கவே செய்யும்.
பட மூலாதாரம், Getty Images
கே. மகாராஷ்டிர மாநிலத்தில், ஐந்து மாதங்களுக்குள் பெரிய அளவில் வாக்காளர்கள் பட்டியலில் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.
ப. 2004ல் நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக வாக்காளர் பட்டியல் திருத்தப்பட்டது. அப்போதும் இதேபோல பெரிய அளவில் திருத்தங்கள் இருந்தன. இது மகாராஷ்ட்ராவில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலுமே இதுபோல வித்தியாசங்கள் இருக்கும். வேகமான நகரமயமாக்கம் காரணமாக, வேலை வாய்ப்புகளுக்காக மக்கள் ஏழ்மையான பகுதிகளில் இருந்து வேலை வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய பகுதிகளுக்கு இடம்பெயரவே செய்வார்கள். ஆகவே, பிஹார், உத்தரப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு இடம்பெயர்வார்கள். 2008ஆம் ஆண்டிற்குப் பிறகு நாட்டின் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இந்த வளர்ச்சி சில இடங்களில் அதிகமாகவும் சில இடங்களில் குறைவாக இருந்தது. ஆகவே மக்களின் புலம்பெயர்வு என்பது தவிர்க்க முடியாமல் போனது. இதுதான் அடிப்படையான பிரச்சனை. இது ஒரு மாநிலத்தில், ஒரு தொகுதியில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனையல்ல. பல மாநிலங்களிலும் பல தொகுதிகளிலும் இதே போன்ற பிரச்சனை இருக்கும்.
உதாரணமாக, 2008ல் தொகுதி மறுசீரமைப்புச் செய்தபோது கன்னியாகுமரி மாவட்டத்தில் தொகுதி குறைந்தது. மாறாக, சென்னையில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரித்தது. அப்படி அதிகரிக்கும்போது நகரின் உள்பகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து, வெளிப்புறப் பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்தது. தற்போது தமிழ்நாட்டில் தொகுதி மறுவரையறை செய்தால் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். மதுரை, திருச்சி போன்ற நகரங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்காது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். கே. தேர்தல் ஆணையம் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது சரியா?
ப. குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும்போது, அந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மை நிலவரத்தை அறிந்து பதில் சொல்ல வேண்டும். தவிர, ஒரு புகாரை முன்வைக்கும்போது, அதனை எழுத்து மூலமாகத் தாக்கல் செய்தால்தான் பதில் சொல்ல முடியும். பெரிய தலைவர் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும்போது, அதற்கு தேர்தல் ஆணையம் பதிலளித்தால் நாளை வேறு சிலர் எங்கோ குற்றச்சாட்டுகளை முன்வைக்கலாம். ஆகவே, எழுத்து மூலமாக புகார் அளிக்கப்படாமல், அதற்கு ஆணையம் பதில் அளித்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடக்கூடும். அதற்காகத்தான் குற்றச்சாட்டுகளை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்யச் சொல்கிறது தேர்தல் ஆணையம். தவிர, எழுத்து மூலமாக புகார் அளிக்கும்போது, புகார் அளிப்பவருக்கும் பொறுப்புணர்வு கூடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு