Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
தமிழரசுக் கட்சியே தமிழரின் பெரிய கட்சி என்பதால் மற்றைய சிறிய கட்சிகள் தங்களுடன் இணையலாம் என்று பெரும்பான்மை – சிறுபான்மை சித்தாந்தம் சொல்கிறார் சுமந்திரன். விரும்பிய மாற்றங்களை ஏற்படுத்த 15-20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டுமென சீன கம்யுனிஸ்ட் கட்சி தம்மிடம் தெரிவித்ததாக கூறுகிறார் ஜே.வி.பி.யின் திசைகாட்டியான ரில்வின் சில்வா.
ஊடக நிறுவனங்களில் புதிதாக செய்தியாளர்களாக நியமனம் பெறுபவர்களுக்கு பயிற்சிப் பட்டறை நடத்தப்படுவது வழமை. இதன்போது ஒரு விடயத்தை முக்கியமாக எடுத்துக் கூறுவார்கள்.
நாய் மனிதனைக் கடிப்பது செய்தியல்ல, மனிதன் நாயைக் கடிப்பதே செய்தி என்பது அந்தப் பொன்வாக்கியம். வழமையான செயற்பாடுகள் அல்லது முன்னரே தெரிந்திருந்த விடயங்கள் செய்திகளுக்குரியவையல்ல என்பதே இதன் அர்த்தம்.
கடந்த வாரம் இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் முக்கிய கூட்டத்தைத் தொடர்ந்து ஊடகங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கட்சியின் முடிவுகளில் ஒன்று, கஜேந்திரகுமார் தயாரித்த ஜெனிவாவுக்கான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கடிதம் தொடர்பானது இது. இக்கடிதத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிட மாட்டாது என்ற முடிவை அதன் பேச்சாளர் என்றும் பதில் செயலாளர் என்றும் சொல்லப்படும் சுமந்திரன் இங்கு அறிவித்தார்.
அநேகமாக அனைத்து ஊடகங்களிலும் இச்செய்தி வெளியானது. எனது பார்வையில் இந்தச் செய்தி – அதாவது தமிழரசுக் கட்சியின் முடிவு எதிர்பார்க்கப்படாத ஒன்றல்ல. கஜேந்திரகுமார் முன்னெடுக்கும் எந்த விடயத்திலும் தமிழரசுக் கட்சி இணைந்து செல்ல மாட்டாது என்பது அனைவருக்கும் தெரிந்தது. எனவே இக்கடிதத்திலும் அவர்கள் ஒப்பமிட மாட்டார்கள் என்பது முன்னறிந்த விடயம். சொல்லப்போனால், நாய் மனிதனைக் கடிப்பது போன்ற ஒரு விடயம்தான்.
கஜேந்திரகுமாரின் கடிதத்தில் தமிழரசுக் கட்சி ஒப்பமிடும் என்று முடிவெடுக்கப்பட்டிருந்தால் அது ஊடகங்களில் தலைப்புச் செய்திக்குரியது. ஆனால், கட்சி அவ்வாறு முடிவெடுக்காது என்பது ஏற்கனவே தெரிந்த விடயம். இந்தக் கடிதம் ஜெனிவாவுக்கு அனுப்பப்பட்டு விட்டது. ஆனாலும் கஜேந்திரகுமார் விடுவதாக இல்லை.. இப்போதும் தமிழரசுக் கட்சி விரும்பினால் அவர்களைச் சந்திக்க தயாராக இருப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இதனையும் தமிழரசுக் கட்சி ஏற்றுக்கொள்ளாது என்பது தெரியும். தமிழரசுக் கட்சி சார்பில் ஜெனிவாவுக்கு தனியான கடிதம் அனுப்பப்படுமென்று சுமந்திரன் அறிவித்துள்ளார். இதனை அவர் அறிவிக்கும்போது கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் அருகில் இருந்ததால், அவரை சாட்சியாக்க விரும்பி அவருடைய பெயரையும் ஓரிரு தடவை உச்சரித்துக் கொண்டார். ஆனால், சி.வி.கே. எந்தப் பக்கமும் தலையாட்டி ஆமா போடாது அசையாது அமர்ந்திருந்தார்.
இவ்விடயத்தில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய முக்கிய அம்சம் பெரும்பான்மை – சிறுபான்மை சம்பந்தமானது. தமிழரசுக் கட்சிதான் தமிழ் மக்களின் பெரிய கட்சி, வடக்கு கிழக்கின் சகல மாவட்டங்களிலும் இக்கட்சிக்கு எம்.பிக்கள் உள்ளனர். மிகக்கூடுதலான தமிழ் எம்.பி.க்களை கொண்ட கட்சியும் தமிழரசுதான், கடந்த உள்;ராட்சி மன்ற தேர்தலில் கூடுதலான உறுப்பினர்களைப் பெற்று பெரும்பாலான சபைகளை கைப்பற்றியதும் தமிழரசுக் கட்சியே.
இதனால், நெருக்கடியான இவ்வேளையில் மற்றைய தமிழ்த் தேசிய கட்சிகளையும் அணைத்துக் கொண்டு செல்ல வேண்டிய கடமை இவர்களுக்குண்டு. ஆனால், தாங்களே பெரும்பான்மை என்பதால் அவர்கள் விரும்பினால் எங்களுடன் வரலாம் என்ற பாணியில் அறிவிப்பது மூத்த கட்சி ஒன்றுக்கு அழகல்ல. அப்படித்தான் இருக்க வேண்டுமென்றால், சிங்களத் தேசத்தவர்கள் தாங்களே பெரும்பான்மை இனத்தவர் என்று கூறிக்கொண்டு தாங்கள் சொல்வதை சிறுபான்மையினரான தமிழர் கேட்க வேண்டுமென்றும், வழங்குவதை பெற்றுக்கொள்ள வேண்டுமென்றும் சொல்வதை இது நியாயப்படுத்துவதாக அமையும்.
தமிழரசுக் கட்சி இன்னமும் தமிழ் மக்களிடையே செல்லுபடியானதாக இருப்பதற்கு அடிப்படையாக இரு காரணங்கள் உண்டு. இக்கட்சியை உருவாக்கி பதவி ஆசை இல்லாது தூய்மையான அர்ப்பணிப்புடன் இயங்கிய தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம், கு.வன்னியசிங்கம், டாக்டர்.ஈ.எம்.வி.நாகநாதன், திருமலை இராஜவரோதயம், பட்டிருப்பு இராசமாணிக்கம் போன்றவர்களால் கட்டி வளர்க்கப்பட்டது. விடுதலைப் புலிகள் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை உருவாக்கியபோது அதில் இடம்பெற்ற தமிழர் விடுதலைக் கூட்டணியின் பிரதான அரசியல் அமைப்பாக தமிழரசுக் கட்சி இருந்ததால் அதற்கே முதலிடம் கொடுக்கப்பட்டு அக்கட்சிக்கே தலைமைப் பதவியும் வழங்கப்பட்டது.
இந்த இரண்டு காரணங்களுக்காகவே இன்றும் தமிழரசுக் கட்சியை முதலிடத்தில் மக்கள் நிறுத்தி வருகின்றனர். ஆனால், கடந்த இரண்டு தசாப்தங்களில் புதியவர்களின் பதவிப் போட்டியால் கட்சி சிதறுண்டு போகிறது. 22 எம்.பிக்களுடன் இருந்த கட்சிக்கு இப்போது எட்டுத்தான் மிஞ்சியுள்ளது.
நீதிமன்றத்தின் கட்டுக்குள் அகப்பட்டிருக்கும் கட்சிக்கு மீட்பராக எவரையும் காணவில்லை. ஒவ்வொருவரும் தாமே தலைவராக காணப்படுகின்றனர். தமிழரசுக் கட்சியை ஆங்கிலத்தில் ஷபெடரல் பார்ட்டி| என்பர். இதன் அர்த்தம் சம~;டிக் கட்சி என்பது. இப்போது சம~;டியை வலியுறுத்தி நூறு நாள் மக்கள் போராட்டத்தை சிவஞானம் சிறீதரன் எம்.பி. ஆரம்பித்துள்ளார். வடக்கிலும் கிழக்கிலும் இப்போராட்டம் மக்களால் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கட்சியின் பதில் தலைவரையோ பதில் செயலாளரையோ எங்கும் காணவில்லை. கட்சியின் பிரதான கொள்கையான சம~;டியை இவர்கள் மறந்துவிட்டனரோ என கேட்க வேண்டியுள்ளது.
மாகாண சபைத் தேர்தல் என்பது தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் கானல் நீராகி வருகிறது. புதிய தேர்தல் முறைமை, அடுத்த ஆண்டில் தேர்தல், மாகாண சபை ஒழிக்கப்படாது என்ற உறுதிமொழிகளுக்குள் இலகுவாக அது மூழ்கடிக்கப்படுகிறது. எல்லாப் போட்டிகளிலும் தோல்வி கண்ட பின்னர் இப்போது மாகாண சபைத் தலைவர் பதவியில் போட்டியிடப் போவதாக சுமந்திரன் அறிவித்துள்ளார். இதுகூட கட்சியை மேலும் பிளவுபடுத்தும் செயல். பின்வரும் காலங்களில் இதுபற்றி மேலும் பேசலாம்.
பொதுவுடமை (கம்யுனிசம்) கட்சிகளின் கட்டமைப்பில் தலைவர் என்ற பதவி கிடையாது. இங்கு பொதுச்செயலாளரே கொள்கைகளை நெறிப்படுத்தும்; பொறுப்பாளரும். இலங்கையில் இப்போது முதன்முறையாக ஆட்சி புரியும் ஜே.வி.பி. ஒரு பொதுவுடைமைக் கட்சி. இரண்டு தடவை (1971 மற்றும் 1987-1989); ஆயுதப்புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற முயன்று அரச பயங்கரவாதத்திடம் பல்லாயிரம் தோழர்களைப் பலிகொடுத்த அமைப்பு இது.
இப்போது தேசிய மக்கள் சக்தி என்ற மறுபெயரில் ஜனநாயக ரீதியாக ஆட்சியில் அமர்ந்துள்ளது. ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் ஆகிய மூன்றிலும் சிங்கள மக்கள் தெரிவாக மட்டுமன்றி தமிழர் பிரதேசங்களிலும் கணிசமான ஆசனங்களை இவர்கள் பெற்றனர்.
தேசிய மக்கள் சக்தி என்ற பெயரில் இயங்கினாலும் இதன் இயங்குதளம் ஜே.வி.பி.தான். இதன் செயலாளர் மேஸ்திரி ரில்வின் சில்வாவே அனைத்தையும் தீர்மானிப்பவர். அதாவது இதன் திசைகாட்டி அவர்தான். நாடாளுமன்ற அரசியலில் 29 ஆண்டுகால அனுபவமும் அமைச்சர் பதவி ஆற்றலும் கொண்ட அநுர குமர திஸ்ஸநாயக்கவை பின்னாலிருந்து இயக்குபவரும் இவரே.
அண்மையில் தமது பட்டாளம் ஒன்றுடன் சீனாவுக்குச் சென்று வந்த இவர் கடந்த வாரம் கொழும்பில் இணையக் கலந்துரையாடல் ஒன்றில் பங்குபற்றியபோது முக்கியமான ஒரு விடயத்தை நாசூக்காக வெளிப்படுத்தினார். ‘இலங்கையில் விரும்பிய மாற்றங்களைக் கொண்டு வர 15 – 20 ஆண்டுகள் ஆட்சியில் இருக்க வேண்டும்” (ஊhiநெநளந ஊழஅஅரnளைவ Pயசவல வழடன அந வாயவ றந றழரடன வழ டிந in pழறநச கழச 15 – 20 லநயசள வழ டிசiபெ யடிழரவ வாந னநளசைநன உhயபெநள in ளுசi டுயமெய) என்று சீன கம்யுனிஸ்ட் கட்சி தம்மிடம் தெரிவித்ததாக கூறினார்.
இதனை ஏனோதானோ என்று ஒரு விட்டேந்தியாக ரில்வின் சில்வா தெரிவித்ததாக நினைக்கக்கூடாது. மகாகவி பாரதியார் கூறியது போன்று சிறு பொறியொன்றை அவர் ஊதி விட்டுள்ளார். சரியான நேரம் வரும்போது அது எவ்வாறு பற்றி எரியும் என்பது அவருக்குத் தெரியாததல்ல.
1970ல் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாரநாயக்க புதிய அரசியலமைப்பின் வழியாக தமது ஆட்சிக் காலத்தை தேர்தலின்றி நீடித்தார். 1977ல் பிரதமராக ஆட்சிக்கு வந்து புதிய அரசியலமைப்பின் வழியாக ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் தமது ஆட்சிக் காலத்தை பொதுத் தேர்தல் இன்றியே நீடித்தார். இரண்டு தடவைகள் மட்டுமே ஜனாதிபதியாக ஒருவர் இருக்க முடியுமென்ற சட்டத்தை மாற்றி மூன்றாவது தடவையும் அப்பதவிக்கு போட்டியிட்டார் மகிந்த ராஜபக்ச.
இந்த வரிசையில் பார்க்கும்போது, இப்போதுள்ள அரசியல் சுவாத்தியம் ஜே.வி.பி.யின் மறுவடிவமான தேசிய மக்கள் சக்தியை அவர்கள் விரும்பும் காலம்வரை தேர்தல் இல்லாமலேயே ஆட்சியைத் தொடர வழிவகுக்கலாம். புரட்சிக்காரர்களுக்கு கதவை எவ்வாறு திறப்பதென்று எவரும் சொல்லிக் கொடுக்க வேண்டியதில்லை. ஜே.வி.பி.யின் மூத்தவரான ரில்வின் சில்வாவே (69 வயது) திசைகாட்டியின் திசைகாட்டி.