கிர் காட்டிற்கு உள்ளே மற்றும் வெளியே வாழும் சிங்கங்களின் வாழ்க்கை எவ்வாறு வேறுபடுகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிங்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கடந்த 20-25 ஆண்டுகளில் ஆசிய சிங்கங்கள் சரணாலயங்களுக்கு வெளியே பரவத் தொடங்கியுள்ளன.எழுதியவர், கோபால் கட்டேஷியாபதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

புல்வெளிகள், புதர்க்காடுகள் அல்லது அடர்ந்த காடுகளில் வாழும் மாமிச உண்ணிகளாக சிங்கங்கள் கருதப்படுகின்றன.

உலகளவில் சிங்கங்கள் இயற்கையாக வாழும் இடங்கள் இரண்டு மட்டுமே. ஒன்று ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள காடுகள், மற்றொன்று இந்தியாவின் கிர் காடு.

கிர் காடுகளில் வாழும் சிங்கங்கள் ‘ஆசிய சிங்கங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன.

இந்த காடு ஜூனாகத், கிர்-சோம்நாத் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் பரவியுள்ளது. வன விலங்குகளுக்காக இந்த காடு மூன்று முக்கிய பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. கிர் தேசிய பூங்கா, கிர் வனவிலங்கு சரணாலயம் மற்றும் பனியா வனவிலங்கு சரணாலயம் ஆகியவை தான் அந்த மூன்று பகுதிகள்.

இவை தவிர, அம்ரேலியில் உள்ள மிதியாலா வனவிலங்கு சரணாலயம் மற்றும் ஜூனாகத்தில் உள்ள கிர்னார் வனவிலங்கு சரணாலயம் ஆகியவை ஆசிய சிங்கங்களின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாக, போர்பந்தரில் உள்ள பர்தா வனவிலங்கு சரணாலயத்தையும் சிங்கங்கள் தங்களுடைய வாழ்விடமாக மாற்றியுள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கடந்த 20–25 ஆண்டுகளில், அவற்றின் எண்ணிக்கை அதிகரிப்பதன் காரணமாக, ஆசிய சிங்கங்கள் இந்த பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வரத் தொடங்கியுள்ளன.

கிர் காட்டைச் சுற்றியுள்ள சிறிய பாதுகாக்கப்பட்ட காடுகள், ஒதுக்கப்பட்ட காடுகள் மற்றும் வகைப்படுத்தப்படாத காடுகளிலும், ஜூனாகத், கிர் சோம்நாத், அம்ரேலி, பாவ்நகர், ராஜ்கோட் மற்றும் போர்பந்தர் மாவட்டங்களில் உள்ள ஆறுகள் மற்றும் ஓடைகளின் பள்ளத்தாக்குகளிலும், அணைகளைச் சுற்றியுள்ள புதர்கள் நிறைந்த பகுதிகளிலும், சாகுபடி செய்யப்படாத தனியாருக்குச் சொந்தமான தரிசு நிலங்களிலும், அரசாங்க தரிசு நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், பயிரிடப்பட்ட வயல்கள் மற்றும் தோட்டங்களைச் சுற்றியுள்ள புதர்களிலும் சிங்கங்கள் இப்போது குடியேறியுள்ளன.

இந்தப் பகுதிகள் ‘கிரேட்டர் கிர்’ என்று அழைக்கப்படுகின்றன.

போர்பந்தரில் தொடங்கி பாவ்நகரின் தலாஜா தாலுகா வரை கடற்கரையோரத்தில் உள்ள காண்டா அகாசியா மரங்களின் அடர்ந்த காடுகளிலும் சில சிங்கங்கள் குடியேறியுள்ளன.

ஆனால், கிர் காட்டிற்கு வெளியே வாழும் சிங்கங்களின் வாழ்க்கையும் காட்டுக்குள் வாழும் சிங்கங்களின் வாழ்க்கையும் ஒன்றாக உள்ளாதா என்ற கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வோம்.

பாதி சிங்கங்கள் கிர் காட்டிற்கு வெளியே வாழ்கின்றனவா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிர் காடுகள் ஜூனாகத், கிர்-சோம்நாத் மற்றும் அம்ரேலி மாவட்டங்களில் பரவியுள்ளன.குஜராத் வனத்துறையால் 2025ம் ஆண்டு மே மாதம் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, குஜராத்தில் இப்போது 891 ஆசிய சிங்கங்கள் உள்ளன.

2020 ஆம் ஆண்டில், இந்த எண்ணிக்கை 674 ஆக இருந்தது. அதாவது, ஐந்து ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை 32 சதவீதம் அதிகரித்துள்ளது.

2025ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, “891 சிங்கங்களில் 497, அல்லது மொத்த தொகையில் 55.78 சதவீதம், கிர் அல்லது அதைச் சுற்றியுள்ள சரணாலயங்கள் மற்றும் பிற பாதுகாக்கப்பட்ட காடுகளில் வாழ்கின்றன.

அதே நேரத்தில் 394 சிங்கங்கள் (44.2 சதவீதம்) வனப்பகுதிகளுக்கு வெளியே மனிதர்கள் வாழும் பகுதிகளில் காணப்படுகின்றன”.

எளிமையாகச் சொன்னால், இப்போது அங்குள்ள சிங்கங்களில், பாதி சிங்கங்கள் காட்டிலிருந்து தொலைவில், மனிதர்களிடையே வாழ்கின்றன.

2010 ஆம் ஆண்டில், பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே 74 சிங்கங்கள் வாழ்ந்தன. இப்போது அந்த எண்ணிக்கை சுமார் 400 ஆக அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த 15 ஆண்டுகளில் சிங்கங்களின் வாழ்விடம் நிறைய மாறியுள்ளது என்பது தான் இதன் பொருள்.

காடுகளுக்கு வெளியே கிர் சிங்கங்கள் எங்கு காணப்படுகின்றன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குஜராத்தில் இப்போது 891 ஆசிய சிங்கங்கள் உள்ளன.கிர் தேசிய பூங்கா மற்றும் வனவிலங்கு சரணாலயத்தின் கண்காணிப்பாளர் மோகன் ராம் தலைமையிலான பல்வேறு ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட குழுக்கள், ஜூன் 2019 முதல் டிசம்பர் 2023 வரை 29 சிங்கங்களுக்கு ரேடியோ காலர்களைப் பொருத்தி, செயற்கைக்கோள்களின் உதவியுடன் சிங்கங்களின் அசைவுகள் மற்றும் இடம்பெயர்வுகளைக் கண்காணித்தன.

அத்துடன், சிங்கங்கள் என்ன சாப்பிடுகின்றன என்பதைப் பற்றிய ஒரு தகவலைப் பெற, 2017 மற்றும் 2021 க்கு இடையில் மொத்தம் 884 மாதிரிகளை அவர்கள் ஆய்வு செய்தனர்.

அதன் தொடர்ச்சியாக காட்டுக்குள் இருந்து 443 சிங்கக் கழிவு மாதிரிகளையும், காட்டுக்கு வெளியே இருந்து 441 மாதிரிகளையும் சேகரித்தனர்.

இந்த ஆராய்ச்சியின் முடிவுகள், காட்டிற்கு வெளியே வாழும் சிங்கங்களின் வாழ்க்கை, காட்டுக்குள் வாழும் சிங்கங்களிலிருந்து பல வழிகளில் வேறுபட்டிருப்பதைக் குறிக்கிறது.

நான்கு ஆய்வுத் திட்டங்களில் நான்காவது திட்டத்தின் முடிவுகளை விவரிக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரை சமீபத்தில் வெளியிடப்பட்டது .

கிர் வனப்பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் சுற்றித் திரியும் சிங்கங்களைப் பற்றி ஆய்வு செய்வதற்காக, மோகன் ராம் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, கிரேட்டர் கிர் பகுதியைச் சேர்ந்த 6 ஆண் சிங்கங்கள் மற்றும் 4 பெண் சிங்கங்கள் என மொத்தம் 10 சிங்கங்களில் ரேடியோ காலர்களைப் பொருத்தி, ஜூன் 2019 முதல் டிசம்பர் 2023 வரை அவற்றின் அசைவுகளையும் செயல்பாட்டையும் ஆய்வு செய்தது.

அம்ரேலியிலிருந்து சுரேந்திரநகரில் உள்ள சோட்டிலா வரை அலைந்து திரிந்த இரண்டு சிங்கங்களில் ஒன்று, பாவ்நகரில் உள்ள காரியாதரைச் சேர்ந்த ஒரு சிங்கம், போர்பந்தரில் உள்ள ரணவாவில் காணப்பட்ட ஒரு பெண் சிங்கம், கிர் சோம்நாத்தில் உள்ள வேராவல் அருகே காணப்பட்ட ஒரு சிங்கம், துளசிஷ்யம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் சிங்கம் ஆகியவை இந்த ஆராய்ச்சியில் அடங்கும்.

ரேடியோ காலர் உதவியுடன், சிங்கங்கள் எவ்வளவு தூரம் நடந்தன, எந்த வேகத்தில் நடந்தன, எந்த நேரத்தில் நடந்தன போன்றவற்றை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.

இந்த ஆராய்ச்சியின் படி, காட்டிற்கு வெளியே வாழும் ஆண் சிங்கங்கள் சராசரியாக 384 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டிருந்தன, இது காட்டுக்குள் வாழும் சிங்கங்களை விட மிகப் பெரியது.

இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் அப்போதைய தலைவர் மற்றும் பேராசிரியர் யாதவேந்திரதேவ் ஜாலா மற்றும் பிற ஆராய்ச்சியாளர்களால் 2019 இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வுக் கட்டுரையின்படி, கிர் காட்டுக்குள் வாழும் ஆண் சிங்கங்களின் கட்டுப்பாட்டில் உள்ள இடத்தின் சராசரி பரப்பளவு 91 சதுர கிலோமீட்டராக மட்டுமே உள்ளது.

கிர் சிங்கங்களின் ஆயுட்காலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, காட்டிற்கு வெளியே வாழும் சிங்கங்களின் வாழ்க்கை, காட்டுக்குள் வாழும் சிங்கங்களின் வாழ்க்கையிலிருந்து பல வழிகளில் வேறுபட்டது என்பதை ஆராய்ச்சி முடிவுகள் குறிப்பிடுகின்றன.ரேடியோ காலர்களைப் பயன்படுத்தி, ஆராய்ச்சியாளர்கள் சிங்கங்கள் எவ்வளவு தூரம் நடந்தன, எவ்வளவு வேகமாக நடந்தன, நாளின் எந்த நேரத்தில் நடந்தன போன்றவற்றை ஆய்வு செய்தனர்.

2019 ஆம் ஆண்டில், கிரேட்டர் கிர் வனப்பகுதியைச் சேர்ந்த இந்த 10 ரேடியோ காலர் சிங்கங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 6.68 கிலோமீட்டர் தூரம் நடந்தன.

பகலில் 2.28 கிலோமீட்டர் மட்டுமே நடந்த இந்த சிங்கங்கள், இரவில் 11 கிலோமீட்டர் நடந்துள்ளன. இந்த தூரம் கிர் காட்டுக்குள் வாழும் சிங்கங்கள் நடப்பதை விட அதிகம்.

ஜூன் 2019 முதல் செப்டம்பர் 2020 வரை நடத்தப்பட்ட ஆராய்ச்சியின்படி, கிர் காட்டுக்குள் வாழும் ஆண் சிங்கங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 2.5 கிலோமீட்டர் மட்டுமே நடந்தன, அதே நேரத்தில் காட்டுக்கு வெளியே வாழும் ஆண் சிங்கங்கள் ஒரு நாளைக்கு சராசரியாக 6.1 கிலோமீட்டர் நடந்துள்ளன.

பிபிசியிடம் பேசிய மோகன் ராம், “சிங்கங்கள் இரவு நேர விலங்குகள், எனவே அவை இரவில் அதிக சுறுசுறுப்பாக இருக்கும். சிங்கங்களைப் போலல்லாமல், மனிதர்கள் பகலில் அதிக சுறுசுறுப்பாக இருப்பார்கள். இது , சிங்கங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்கிறது, ஆனால் கிரேட்டர் கிர் பகுதியில் வாழும் சிங்கங்கள் மனிதர்களுடன் வாழ்கின்றன” என்று கூறினார்.

“கிரேட்டர் கிர் பகுதியில் உள்ள சிங்கங்கள் இரவில் அதிகம் சுறுசுறுப்பாக இருக்கலாம் என நாங்கள் நினைக்கிறோம். காரணம், இரவில் மனிதர்கள் பெரிதாக இயங்குவதில்லை என்பதால், சிங்கங்களுக்கு அதிக தொந்தரவு இருக்காது.”

“எங்கள் ஆராய்ச்சியில், மக்கள் வசிக்கும் வீடுகள் உள்ள கிராமங்களில் திரியும் பசுக்கள் மற்றும் காளைகள் சிங்கங்களை ஈர்க்கின்றன என்பதை கவனித்தோம். ஆனால் சிங்கங்கள் பகலைவிட இரவில்தான் அந்த கிராமங்களுக்கு அதிகம் வருகிறன. காரணம், இரவில் மனித நடமாட்டம் குறைவாகவே இருப்பதால் , சிங்கங்கள் மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கிறது” என்றும் அவர் கூறினார்.

காடுகளுக்கு வெளியே வாழ்வதால், சிங்கங்களின் உணவு முறையில் ஏற்படும் மாற்றம் என்ன ?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிர் காட்டில் வாழும் சிங்கங்களின் உணவில் 74 சதவீதம் காட்டு தாவர உண்ணிகளும் 26 சதவீதம் வீட்டு விலங்குகளும் உள்ளன.ஆண் சிங்கம் அல்லது பெண் சிங்கம் வாழும் இடத்தின் பரப்பளவு பல காரணங்களைக் பொறுத்தது. அந்த இடத்தில் சிங்கங்களுக்கு உணவாக இருக்கும் மிருகங்கள் எவ்வளவு இருக்கின்றன, அந்த சிங்கக் குடும்பத்தில் எத்தனை உறுப்பினர்கள் இருக்கின்றன மற்றும் அந்த பகுதியில் தண்ணீர் எவ்வளவு கிடைக்கிறது என்பதைப் பொறுத்தது என ஆராய்ச்சியாளர்கள் முன்பே கூறியுள்ளனர்.

ஆசிய சிங்கங்கள் பெரும்பாலும் காட்டு மிருகங்களைத் தான் உணவாகக் கொள்கின்றன. கடமான், சிட்டல், சின்காரா, சோசிங்கா, பிளாக்பக் (இவை அனைத்தும் மான் வகைகள்), குரங்குகள், காட்டுப்பன்றிகள், முயல்கள், முள்ளம்பன்றிகள் போன்றவை அவற்றின் முக்கிய உணவாகும்.

அதைத் தவிர, பசுக்கள், காளைகள், எருமைகள் மற்றும் செம்மறி ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகளையும் சிங்கங்கள் வேட்டையாடுகின்றன.

இயற்கையாகவே, காட்டிற்கு வெளியே காட்டு மிருகங்கள் குறைவாக இருப்பதால், அங்கு வாழும் சிங்கக் குடும்பங்கள் தங்கள் வாழ்விடத்தை பெரிய பரப்பளவில் அமைக்க வேண்டி உள்ளது.

சிங்கங்கள் மாமிசம் உண்ணும் விலங்குகள் என்பதால், பல்வேறு விலங்குகளை வேட்டையாடுகின்றன.

சில நேரங்களில் மயில்கள் போன்ற பறவைகளையும் பிடிக்கின்றன. ஆனால், சிங்கங்களால் விலங்குகளின் ரோமங்களை செரிமானம் செய்ய முடியாது. அதனால், ரோமம், எலும்புத் துண்டுகள் போன்றவை அவற்றின் மலத்துடன் வெளியேற்றப்படுகின்றன.

ஆராய்ச்சியாளர்கள் அந்த மலத்தை ஆய்வுக்கூடத்தில் பரிசோதித்து, அதில் உள்ள ரோமத்தின் அடிப்படையில் சிங்கங்கள் எந்த விலங்குகளை உணவாக எடுத்துள்ளன என்பதை கண்டறிகின்றனர்.

2023 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மோகன் ராமின் குழுவின் ஆராய்ச்சி முடிவுகளின்படி , கிர் காட்டில் வாழும் சிங்கங்களின் உணவில் 74 சதவீதம் காட்டு தாவர உண்ணிகளும் 26 சதவீதம் வீட்டு விலங்குகளும் உள்ளன எனக் கூறுகின்றன.

ஆனால் காடுகளுக்கு வெளியே வாழும் சிங்கங்களின் உணவில் காட்டு தாவர உண்ணிகளின் விகிதம் குறைவாக உள்ளது, அதாவது 51 சதவீதம். அதே நேரத்தில் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் விகிதம் கிட்டத்தட்ட இரு மடங்காக உள்ளது, அதாவது 49 சதவீதம்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.காட்டில் வாழும் சிங்கங்கள் பெரும்பாலும் கடமானை (35%) உணவாகக் கொள்கின்றன. அதற்குப் பிறகு சிட்டல் (19%), வீட்டு எருமை (13%) மற்றும் வீட்டு கால்நடைகள் (13%) ஆகியவை முக்கியமான உணவாக இருக்கின்றன.

காடுகளுக்கு வெளியே மனிதர்களிடையே வாழும் சிங்கங்களின் உணவில் நீல்காய் (ஒரு வகை மான்) அதிகளவில் (38%) இடம் பெற்றுள்ளது. அதன்பிறகு, கால்நடைகள் (24%), வீட்டில் வளர்க்கப்படும் எருமைகள் (17%), காட்டுப்பன்றிகள் (15%), கடமான் (4%), முயல் (3%), சிட்டல் (3%), சின்காரா (2%), வீட்டில் வளர்க்கப்படும் ஆடுகள் (2%) மற்றும் வீட்டில் வளர்க்கப்படும் செம்மறி ஆடுகள் (0.22%) ஆகியவை அடங்குகின்றன.

இதனால், வனப்பகுதிகளுக்கு வெளியே வாழும் சிங்கங்கள் வீட்டு விலங்குகளைக் கொல்ல அதிக வாய்ப்புள்ளது.

ஆனால் , “காட்டுக்கு வெளியே வாழும் சிங்கங்கள் கூட விவசாயிகளின் நல்ல நண்பர்களாக உள்ளன” என்கிறார் மோகன் ராம்.

தொடர்ந்து பேசிய அவர், “நீல்காய் மற்றும் காட்டுப்பன்றிகள் விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்துகின்றன, ஆனால் சிங்கங்கள் நீல்காய் மற்றும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதன் மூலம் அவற்றின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துகின்றன. சிங்கங்கள் இருக்கும் பண்ணைக்கு அருகில் நீல்காய் மற்றும் பன்றிகள் சுற்றித் திரிவதில்லை, அதனால் விவசாயிகளின் பயிர்கள் பாதுகாப்பாக உள்ளன” என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“சிங்கங்கள் பெரும்பாலும் பெரிய விலங்குகளை வேட்டையாட விரும்புகின்றன. ஏனெனில், ஒரு வேட்டையில் வெற்றி பெற்றால், அவை அதிக இறைச்சியைப் பெற முடியும். காட்டுக்குள் கடமான் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், அது சிங்கங்களின் உணவில் முக்கிய இடம் பிடிக்கிறது. ஆனால் காட்டுக்கு வெளியே, வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளுடன் சேர்த்து, நீல்காய் ஒரு பெரிய தாவர உண்ணி என்பதால், சிங்கங்கள் அதை அதிகளவில் குறிவைக்கின்றன” என்று குறிப்பிட்டார்.

காட்டிற்கு வெளியே சிங்கங்கள் எங்கு வாழ விரும்புகின்றன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரேடியோ காலர்களைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட ஆராய்ச்சியில், கிர் காட்டுக்குள் வாழும் ஆண் சிங்கங்கள் ஒரு நாளைக்கு 2.5 கிலோமீட்டர் மட்டுமே நடந்தன என்பது கண்டறியப்பட்டது.கிர் காடுகளுக்கு வெளியே, சிங்கங்கள் வாழும் முக்கிய இடங்களில் சிறிய காடுகள், தரிசு நிலங்கள், ஆறுகள், ஏரிகள், அணைகள் போன்ற நீர்நிலைகளின் அருகிலுள்ள பகுதிகள், விவசாயிகளின் வயல்களில் வளர்ந்து நிற்கும் பயிர்கள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதிகள் அடங்குகின்றன.

கடந்த மாதம் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகளின்படி, கிர் காடுகளுக்கு வெளியே தங்கள் சொந்த பிரதேசங்களை நிறுவி அவற்றில் குடியேறிய சிங்கங்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை சிறிய காடுகளிலோ அல்லது கரும்பு, பருத்தி, தினை, சோளம், சோயாபீன் அல்லது நிலக்கடலை வயல்களிலோ செலவிடுகின்றன எனத் தெரியவந்தது.

ஆனால், நாடோடி வாழ்க்கை வாழ்ந்து நீண்ட தூரம் பயணிக்கும் சிங்கங்கள், காடுகள், நீர்நிலைகள் மற்றும் மாந்தோப்புகளில் வாழ விரும்புகின்றன. அவை பண்ணைகள் மற்றும் கட்டப்பட்ட பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கின்றன.

பகல் நேரங்களில், காடுகள், புதர்க்காடுகள், மாந்தோப்புகள், விளைநிலங்கள் மற்றும் நீர்நிலைப் பகுதிகளில் தங்குவதை சிங்கங்கள் விரும்புகின்றன. அவை கட்டுமானம் செய்யப்பட்ட பகுதிகளிலிருந்து விலகி இருக்கின்றன.

இரவில், சிங்கங்களின் விருப்பங்கள் மாறுகின்றன.

காடுகளுக்குப் பிறகு, சிங்கங்கள் வாழ்வதற்கான முக்கியப் பகுதிகளாக நீர்நிலைப் பகுதிகள் மாறுகின்றன. அதன்பிறகு, புதர்க்காடுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு