Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சர்ச்சிலுக்கு அனுப்பிய ‘வாத்தலகிக்கு’ நடுக்கடலில் ஹிட்லர் படை குறியா? தீராத இரண்டாம் உலகப்போர் மர்மம்
பட மூலாதாரம், Australian Museum
படக்குறிப்பு, கோலாக்கள் ஆஸ்திரேலியாவின் விலங்கு தூதர்களாக மாறுவதற்கு முன்பு, அந்த நாடு பிளாட்டிபஸ் எனப்படும் சிறிய விலங்குகளை தூதர்களாக்க முயற்சித்ததுஎழுதியவர், டிஃப்பனி டர்ன்புல் பதவி, பிபிசி செய்திகள்36 நிமிடங்களுக்கு முன்னர்
1943 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கிலாந்துக்கு கப்பல் ஒன்று மிகவும் ரகசியமான ஒன்றை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது. அந்த ரகசியமான ஒன்று பிளாட்டிபஸ் ஆகும்.
வாத்தலகி என்று தமிழில் அறியப்படும் இந்த அரிய பாலூட்டி வகை விலங்கு, இரண்டாம் உலகப் போரின்போது, பசிபிக் கடற்பகுதியில் போர் மூளவிருந்த சூழலில் பிரிட்டனின் ஆதரவைப் பெற தீவிரமாக முயற்சிக்கும் ஒரு நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட பரிசாகும்.
பிரிட்டிஷ் பிரதமருக்காக அனுப்பப்பட்ட இந்த விலங்கு தூதருக்கு, அப்போதைய பிரதமரின் பெயரான ‘வின்ஸ்டன்’ என்பதே சூட்டப்பட்டிருந்தது. வின்ஸ்டன் ஆஸ்திரேலியாவில் இருந்து அனுப்பப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, சுற்றியிருந்த கடற்பகுதிகளில் போர் மூண்டது. அந்த விலங்கு தனக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்ட “பிளாட்டிபசரி”யின் நீரில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
ராஜதந்திர சம்பவம் நிகழ்வதற்கான சாத்தியங்கள் இருந்த நிலையில், வின்ஸ்டனின் மரணம் மூடி மறைக்கப்பட்டது.
பாதுகாக்கப்பட்ட வின்ஸ்டன், பதப்படுத்தப்பட்டு, அதற்காக உருவாக்கப்பட்ட இடத்தில் பாதுகாக்கப்பட்டது. ஆஸ்திரேலியாவால் பரிசளிக்கப்பட்ட விலங்கு நாஜி நீர்மூழ்கிக் கப்பலால் மேற்கொள்ளப்பட்ட ஷெல் தாக்குதலினால் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவின.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
உண்மையில் வின்ஸ்டன் என்ற இந்த விலங்கின் மரணத்திற்கு யார் காரணம் அல்லது காரணங்கள் எவை என்ற மர்மம் அன்றிலிருந்து இன்றுவரை மர்மமாகவே இருந்து வருகிறது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிங்கங்கள், சிறுத்தை மற்றும் கருப்பு அன்னங்கள் ஆகியவற்றை சர்ச்சில் வைத்திருந்தார்இரண்டு வின்ஸ்டன்களும் ஒரு போரும்
பிளாட்டிபஸ் என்ற உயிரினம் தமிழில் வாத்தலகி என்று அழைக்கப்படுகிறது. இது, வாத்து முகம் மற்றும் கால்கள், நீர்நாய் வடிவ உடல் மற்றும் வால் கொண்ட முட்டையிடும் பாலூட்டி இனத்தைச் சேர்ந்தது. இந்த உயிரினம் இருப்பதாக சொல்வது கட்டுக்கதை என்று நினைத்தனர்; பாதுகாக்கப்பட்ட வின்ஸ்டனின் உடல், பாடம் செய்யும் டாக்ஸிடெர்மி தந்திரம் என்றுமே கருதினார்கள்.
அரிய மற்றும் அயல்நாட்டு விலங்குகளை சேகரிப்பதில் தீவிர ஆர்வம் கொண்ட வின்ஸ்டன் சர்ச்சில், பிளாட்டிபஸ் போன்ற ஒன்று, தனது விலங்குக் கூடத்தில் இருக்க வேண்டும் என விரும்பினார்.
1943ஆம் ஆண்டில் அவர் தனது விருப்பத்தை ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் ஹெச்.வி. ‘டாக்’ எவாட்டிடம் தெரிவித்தார்.
எவாட்டின் கோணத்தில் இருந்து பார்த்தால், அவரது நாடு உயிரினங்களை ஏற்றுமதி செய்வதைத் தடை செய்திருந்தது அல்லது அவற்றைக் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வது மிகவும் கடினமாக இருந்தது. அப்படியே வெளிநாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டாலும் அவை நீண்ட பயணத்தில் இருந்து தப்பிப் பிழைத்ததில்லை.
இவ்வாறு அவர் முன் பல சவால்கள் இருந்தன.
ஜப்பானியர்கள் நெருங்கி வந்துக் கொண்டிருந்த சூழலில், தாய்நாட்டால் கைவிடப்பட்டதாக ஆஸ்திரேலியா உணர்ந்தது. இந்த நிலையில், வாத்தலகிகளை சர்ச்சிலுக்கு அனுப்புவதால், தங்களது கோரிக்கைக்கு சாதகமான பதில் வந்தால் நல்லது தானே என்று ஆஸ்திரேலியா நினைத்தது.
இந்தப் பணிக்கு உதவுமாறு விலங்கு நல ஆர்வலர் டேவிட் ஃபிளே என்பவரிடம் கேட்கப்பட்டது. அவர் அதிக இணக்கம் இல்லாதவர் என அறியப்பட்டார்.
“ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் மனித குலம் ஒரு நெருக்கடியில் இருக்கும்போது, சர்ச்சில் போன்ற முக்கியமான பொறுப்பில் இருந்த ஒருவர் அரை டஜன் பிளாட்டிபஸ்களைப் பற்றி சிந்திக்க நேரம் ஒதுக்கினார்,” என்று அவர் 1980ஆம் ஆண்டு எழுதிய தனது Paradoxical Platypus என்ற புத்தகத்தில் டேவிட் பிளே குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Australian Museum
படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவில் “பாதுகாப்பின் தந்தை” என்று டேவிட் ஃபிளே அழைக்கப்படுகிறார்டேவிட் ஃப்ளேயின் கூற்றுப்படி, அவர் அரசியல்வாதிகளிடம் பேசி, சர்ச்சிலுக்கு அனுப்பவிருந்த பிளாட்டிபஸ்களின் எண்ணிக்கையை ஆறிலிருந்து ஒன்றாகக் குறைத்தார். அதன்பிறகு, அவர் மெல்போர்னுக்கு அருகிலுள்ள ஆற்றில் இருந்து இளம் வாத்தலகி ஒன்றை பிரிட்டிஷ் பிரதமருக்காக தேர்ந்தெடுத்தார்.
விலங்கு தூதராக அனுப்பப்படவிருந்த வாத்தலகியை வசதியாக கொண்டு செல்வதற்காக வைக்கோல்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட தனியிடம் மற்றும் ஆஸ்திரேலிய சிற்றோடை நீர் என விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. உணவுக்காக 50,000 புழுக்கள், மற்றும் சிறப்பு உணவாக வாத்து முட்டை கஸ்டர்ட் கொண்ட மெனு தயாரிக்கப்பட்டது. வாத்தலகி மேற்கொள்ளவிருக்கும் 45 நாள் பயணத்தில் அதனை பராமரிக்கவும், அதன் தேவைகளை கவனித்துக் கொள்ளவும் உதவியாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டார்.
வாத்தலகியின் சோகமான மரணம் ஏற்படுவதற்கு முன்னதாக அது, பசிபிக் கடல், பனாமா கால்வாய், அட்லாண்டிக் பெருங்கடல் என நீண்ட பயணத்தை மேற்கொண்டது.
எவாட்டுக்கு எழுதிய கடிதத்தில், தனக்கு “அன்புடன்” அனுப்பப்பட்ட பிளாட்டிபஸ், பயணத்தின் இறுதிப் பகுதியில் இறந்துவிட்டதாக அறிவிப்பதில் “வருத்தப்பட்டதாக” சர்ச்சில் கூறியிருந்தார்.
“அதன் இழப்பு எனக்குப் பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது,” என்றும் அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
பொதுமக்களின் எதிர்ப்பைத் தவிர்ப்பதற்காக, வாத்தலகியை கொண்டுவரும் முயற்சியில் ஏற்பட்ட தோல்வி பல ஆண்டுகளாக ரகசியமாக வைக்கப்பட்டது. ஆனால் இறுதியில், வின்ஸ்டனின் மறைவு பற்றிய செய்திகள் செய்தித்தாள்களில் வெளிவரத் தொடங்கின. வாத்தலகி வந்த கப்பல், ஒரு ஜெர்மன் நீர்மூழ்கிக் கப்பலை எதிர்கொண்டதாகவும், சரமாரியான குண்டுவெடிப்புகளால் கப்பல் தள்ளாடியதில் அது இறந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.
“மிகவும் உணர்திறன் வாய்ந்த அலகைக் கொண்ட ஒரு சிறிய விலங்கு, இரவின் இருளில் ஓடையின் அடிப்பகுதியில் கொசுவின் நுட்பமான அசைவுகளைக் கூடக் கண்டறியும் திறன் கொண்டது. மனிதனால் உருவாக்கப்பட்ட வன்முறை வெடிப்புகள் போன்ற பிரம்மாண்டங்களைச் சமாளிக்கும் என்று நம்ப முடியாது” என்று பல தசாப்தங்களுக்குப் பிறகு டேவிட் ஃபிளே எழுதினார்.
“மிகவும் வெளிப்படையான விஷயம். போரின் துரதிர்ஷ்டங்கள் இருந்திருக்காவிட்டால், ஒரு நல்ல, செழிப்பான, ஆரோக்கியமான சிறிய பிளாட்டிபஸ் இங்கிலாந்தில் வசித்தது என்ற புதிய வரலாற்றை உருவாக்கியிருக்கும்.”
அவிழ்க்கப்பட்ட மர்ம முடிச்சு
“இது ஒரு ருசிகரமான கதை அல்லவா?” என பிஎச்டி மாணவர் ஹாரிசன் கிராஃப்ட் பிபிசியிடம் கேள்வி எழுப்பினார்.
ஆனால் இந்தக் கேள்வி இன்றல்ல, நீண்ட காலமாக சந்தேகங்களை எழுப்பி வரும் கேள்விகளில் ஒன்றாகும்.
இந்த வினாக்களுக்கான விடை காண்பதற்காக கடந்த ஆண்டு, உண்மையைக் கண்டறியும் பயணத்தைத் தொடங்கினார் ஹாரிசன் கிராஃப்ட்.
கான்பெரா மற்றும் லண்டனில் உள்ள காப்பகங்களை அணுகிய மோனாஷ் பல்கலைக்கழக மாணவர் ஹாரிசன், வின்ஸ்டன் பயணித்த கப்பல் குழுவினரின் பதிவுகள் பலவற்றைக் கண்டார். அதில், வின்ஸ்டனை பராமரிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த பணியாளரின் நேர்காணலையும் அவர் கண்டறிந்தார்.
“அவர்கள் ஒருவிதமான பிரேத பரிசோதனையையும் செய்தார்கள் என்பதை அவர் மிகவும் குறிப்பாக தெரிவித்திருந்தார். வெடிப்பு எதுவும் இல்லை, வாத்தலகி பயணித்த கப்பலில் எல்லாம் மிகவும் அமைதியாகவும் சரியாகவும் இருந்தது என்பதில் அவர் மிகவும் உறுதியாக இருந்தார்,” என்று ஹாரிசன் கிராஃப்ட் கூறுகிறார்.
பட மூலாதாரம், Renee Nowytarger/University of Sydney
படக்குறிப்பு, வின்ஸ்டனின் வாழ்க்கையைப் பற்றிய பதிவுகள் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்தில் உள்ள அருங்காட்சியக சேகரிப்புகளில் இடம் பெற்றுள்ளனசிட்னியில் மற்றொரு குழுவும் வின்ஸ்டனின் வாழ்க்கையை ஆராய்ந்து கொண்டிருந்தது. டேவிட் ஃப்ளேயின் தனிப்பட்ட சேகரிப்பு ஆஸ்திரேலிய அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. கட்டடம் முழுவதும் உள்ள ஊழியர்கள் வின்ஸ்டனின் மரணம் தொடர்பான மர்மத்திற்கான விடை இருக்கிறதா என்பதை அறிய ஆவலுடன் இருந்தனர்.
“நீங்கள் லிஃப்ட்களில் சவாரி செய்வீர்கள், பாலூட்டியியல் துறையைச் சேர்ந்த ஒரு மருத்துவர்… ‘வின்ஸ்டன் ஆழமான வெடிப்புகளால் இறந்ததற்கான காப்பக ஆதாரம் என்ன?’ என்று [கேட்பார்கள்]” என்று அருங்காட்சியகத்தின் காப்பக மேலாளர் ராபர்ட் டூலி பிபிசியிடம் கூறுகிறார்.
“இது நீண்ட காலமாக மக்களை ஆர்வப்படுத்திய ஒன்று.”
சிட்னி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பயிற்சியாளர்கள் குழுவின் உதவியுடன், அவர்கள் டேவிட் ஃப்ளேயின் அனைத்து பதிவுகளையும் டிஜிட்டல்மயமாக்கத் தொடங்கினர்.
பட மூலாதாரம், Renee Nowytarger/University of Sydney
படக்குறிப்பு, வழக்கைத் தீர்க்க உதவிய குழுவில் இவான் கோவன் (இடது இரண்டாவது) மற்றும் பால் ஜாக்கி (வலது இரண்டாவது) ஆகியோர் அடங்குவர்1940களிலேயே, பிளாட்டிபஸ்கள் உணவு உண்பதில் விருப்பமுடையவை என்பதை மக்கள் அறிந்திருந்தனர். இந்த இனத்தின் பசியைப் பற்றிய கதைகள் மிகவும் அதிகமாக இருந்ததால், வின்ஸ்டன் வந்தவுடன் அவற்றுக்கு உணவளிக்க புழுக்களைப் பிடித்து கொடுக்கும் சிறார்களுக்கு பணம் கொடுப்பதாகவும் பிரிட்டிஷ் அதிகாரிகள் ஒரு அறிவிப்பை தயாரித்தனர்.
சில புழுக்கள் அழிந்து போகத் தொடங்கியதால், வழியில் வாத்தலகிக்கான உணவு குறைக்கப்பட்டதற்கான ஆதாரங்களை, கப்பலில் பிளாட்டிபஸை பராமரிக்க பணியமர்த்தப்பட்ட உதவியாளரின் பதிவுப் புத்தகத்தில் கண்டறிந்தனர்.
வின்ஸ்டன் கொண்டு வரப்பட்ட கப்பலில் நாள்தோறும் காலை 8 மணி மற்றும் மாலை 6 மணிக்கு நீர் மற்றும் காற்றின் வெப்பநிலை குறிக்கப்படுவது வழக்கமாக இருந்தது. அந்த குறிப்புகள் தான் நீண்டகால மர்மத்தைத் தீர்ப்பதற்கான திறவுகோலாக இருந்தன.
இந்தக் குறிப்புகள், நாள்தோறும் இரு முறை எடுக்கப்பட்டன. கப்பல் ஒரு வாரத்திற்கு மேல் பூமத்திய ரேகையைக் கடந்தபோது, பதிவு செய்யப்பட்ட வெப்பநிலை 27C என்பதைத் தாண்டியது. இதுதான் நீண்ட கால சந்தேகத்தைத் தீர்த்து வைத்தது.
பின்னோக்கிப் பார்த்ததன் பயனாகவும், கடந்த 80 ஆண்டுகால அறிவியல் ஆராய்ச்சியின் பயனாகவும் கிடைத்த முடிவுகளின்படி, அந்த சூட்டில் வின்ஸ்டன் வெந்து போனதாக சிட்னி பல்கலைக்கழகக் குழு தீர்மானித்தது.
நீர்மூழ்கிக் கப்பல் தொடர்ந்து ஷெல் தாக்குதல் செய்ததாக கூறப்பட்ட கதையை அவர்களால் திட்டவட்டமாக நிராகரிக்க முடியாவிட்டாலும், நீடித்த அதிக வெப்பநிலையின் தாக்கம் மட்டும் வின்ஸ்டனைக் கொல்ல போதுமானதாக இருந்திருக்கும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
“நாங்கள் அதற்கு போதுமான அளவு உணவளிக்கவில்லை என்றோ, அதற்கு உகந்த வெப்பநிலையை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்றோ சொல்வதை விட, ஜெர்மானியர்கள் மீது பழியைப் போடுவது மிகவும் எளிதானது” என்று இவான் கோவன் பிபிசியிடம் கூறுகிறார்.
“யார் சொல்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வரலாறு உருவாகிறது” என்று பால் ஜாக்கி கூறுகிறார்.
பட மூலாதாரம், Australian Museum
படக்குறிப்பு, வின்ஸ்டன் இங்கிலாந்தை நெருங்கியபோது வெப்பநிலை குறைந்தாலும், அதனைக் காப்பாற்ற தேவையான உதவிகள் கிடைக்க காலதாமதமானதுபிளாட்டிபஸ் ராஜதந்திரம்
பிளாட்டிபஸை பரிசாக கொடுத்த ஆஸ்திரேலியாவின் முதல் முயற்சி தோல்வியடைந்தாலும், மீண்டும் 1947இல் அது விலங்கு தூதராக பரிசளிக்கப்பட்டது.
முதன்முறையாக பாதுகாக்கப்பட்ட நிலையில் ஒரு பிளாட்டிபஸை வெற்றிகரமாக இனப்பெருக்கம் செய்த சாதனை மிகவும் பாராட்டத்தக்கது.
அமெரிக்காவுடனான உறவை வலுப்படுத்தும் முயற்சியில் பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலையில் மூன்று பிளாட்டிபஸ் உயிரினங்களை வைத்திருக்க ஆஸ்திரேலிய அரசாங்கத்தை டேவிட் ஃப்ளே சம்மதிக்க வைத்தார். இது, அடுத்த 50 ஆண்டுகளுக்கு மீண்டும் செய்ய முடியாத ஒரு சாதனையாக மாறியது.
பசிபிக் பெருங்கடலைக் கடந்து சென்ற வின்ஸ்டனின் ரகசியப் பயணத்தைப் போலல்லாமல், மூன்று வாத்தலகிகள் செய்த இந்தப் பயணம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. பெட்டி, பெனிலோப், செசில் என மூன்று வாத்தலகிகள் மிகுந்த ஆரவாரத்துடன் பாஸ்டனை வந்தடைந்தன.
பின்னர் மூவரும் லியூமோசின் எனப்படும் உல்லாச ஊர்திகள் மூலம் நியூயார்க் நகரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது, அங்கு ஆஸ்திரேலிய தூதர் அவற்றை வரவேற்கும் விதமாக முதல் புழுவை உணவளிக்கக் காத்திருந்தார்.
பெட்டி என்ற பெயர் கொண்ட வாத்தலகி நியூயார்க் வந்தபிறகு இறந்துவிட்டது. ஆனால் பெனிலோப்பும் செசிலும் பிரபலங்களாக மாறின. இந்த இரு விலங்குகளையும் பார்க்க கூட்டம் அலைமோதியது. அவற்றின் ஒவ்வொரு அசைவையும் பத்திரிகைகள் கண்காணித்து செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டிருந்தன.
பட மூலாதாரம், Australian Museum
பிளாட்டிபஸ்கள் தனிமையான உயிரினங்கள், ஆனால் நியூயார்க்கில் அவை காதலர்களாக பார்க்கப்பட்டன. செசில் காதல்வயப்பட்டிருந்தாலும், பெனிலோப் என்ற வாத்தலகிக்கு காதலில் விருப்பமில்லை என்று தெரிகிறது.
ஆனால், ஊடகங்களோ அதுவொரு “வெட்கப்படும் பெண்”, “ஒரு ஆணை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்பும் சாகசப் பெண்களைப் போன்றது” என சித்தரித்தன.
1953ஆம் ஆண்டு வரை, இந்த ஜோடி நான்கு நாள் காதலில் இருந்தது. இது, “அதிக அளவு நண்டுகள் மற்றும் புழுக்கள்” கொடுத்து தூண்டப்பட்டு, “இரவு முழுவதும் காதல் களியாட்டங்கள்” நடத்தியதாக விவரிக்கப்படுவது வருத்தமளிக்கிறது.
பெனிலோப் கூடு கட்டத் தொடங்கியதுமே, அதன் அடுத்த தலைமுறையை காண்பதற்காக உலகமே ஆவலுடன் காத்திருந்தது. உண்மையில், அந்த சிசுக்கள் பிறந்தால், அவை மாபெரும் அறிவியல் மைல்கல்லாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
பாதுகாப்பாக தனிமையில் வைக்கப்பட்டு இனப்பெருக்கம் செய்த இரண்டாவது வாத்தலகி என்றும், ஆஸ்திரேலியாவிற்கு வெளியே முதல் இனப்பெருக்கம் செய்தது என்றும் பெனிலோப் பெயர் பெறும் என்று எதிர்பார்ப்புகள் இருந்தன.
பெனிலோப்பிற்கு நான்கு மாதங்களாக ராஜ உபசாரம் நடைபெற்றது, அதற்கு இருமடங்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. பிறகு, உற்சாகத்துடன் காத்திருந்த செய்தியாளர் கூட்டத்திற்கு முன்னால் மிருகக்காட்சிசாலையின் பாதுகாப்புப் பணியாளர்கள், கூட்டைச் சரிபார்த்தனர்.
ஆனால் பெனிலோப்பிற்கு குழந்தை எதுவும் பிறக்கவில்லை. அதிக புழுக்களைப் பெறவும், செசில் தன்னை நெருங்குவதை தவிர்க்கவும், பெனிலோப் இல்லாத கர்ப்பத்தை போலியாகக் கூறியதாக வெளிப்படையாகக் குற்றம் சாட்டப்பட்டது.
“அதுவொரு அப்பட்டமான ஊழல்,” என்று கோவன் கூறுகிறார். ஆனால், பெனிலோப்பின் அவப்பெயர் ஒருபோதும் மாறவில்லை.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1957ஆம் ஆண்டில், தனது கூண்டிலிருந்து பெனிலோப் மறைந்துவிட்டது. அந்த சிறிய விலங்கினத்தை வாரக்கணக்கில் தேடியும் அது கிடைக்கவில்லை. அது “தொலைந்து போயிருக்கலாம், ஒருவேளை இறந்துவிட்டிருக்கலாம்” என்று மிருகக்காட்சிசாலை அறிவித்துவிட்டது.
பெனிலோப்பை தேடும் பணிகள் நிறுத்தப்பட்ட ஒரு நாளுக்குப் பிறகு செசில் இறந்துவிட்டது. இதை ஊடகங்கள் “இதயம் உடைந்த” செசில் இறந்துவிட்டதாக என்று குறிப்பிட்டன.
இந்த ஜோடியுடன் பிளாட்டிபஸ் ராஜதந்திரமும் முடிவடைந்துவிட்டதா என்றால் இல்லை.
பிராங்க்ஸ் மிருகக்காட்சி சாலை 1958ஆம் ஆண்டில் அதிக பிளாட்டிபஸ்களைக் கொடுத்தாலும் அவை ஒரு வருடத்திற்கும் குறைவாகவே வெளிநாட்டில் உயிர்வாழ்ந்தன. ஆஸ்திரேலியா அவற்றின் ஏற்றுமதியைத் தடை செய்யும் சட்டங்களை கடுமையாக்கியது. அதன் பின்னர் நாட்டை விட்டு வெளியேறிய இரண்டு வாத்தலகிகள் மட்டுமே 2019 முதல் சான் டியாகோ மிருகக்காட்சி சாலையில் வசித்து வருகின்றன.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு