இந்தோனீசியா வரை கடல் கடந்து வென்று ஆசியாவின் மிகப்பெரிய ராணுவ சக்தியாக உயர்ந்த ‘ராஜேந்திர சோழன்’

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி இந்தி42 நிமிடங்களுக்கு முன்னர்

ஒன்பதாம் நூற்றாண்டில் (கி.பி 850 வாக்கில்) தெற்கு இந்தியாவில் பாண்டியர்களுக்கும் பல்லவர்களுக்கும் இடையே மோதல் நிலவி வந்தது. இதனை தனக்குச் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட விஜயாலயா எனும் மன்னர் தஞ்சாவூரைக் கைப்பற்றினார். சோழ சாம்ராஜ்ஜியத்திற்கான அடித்தளம் இவ்வாறு தான் நிறுவப்பட்டது.

பத்தாம் நூற்றாண்டில் (கிபி 907 ஆம் ஆண்டு) சோழ சாம்ராஜ்ஜியத்தின் முதலாம் பராந்தக மன்னர் அரியணை ஏறி 48 ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் வந்த பலவீனமான மன்னர்களால் சோழ சாம்ராஜ்ஜியம் சரியத் தொடங்கியது.

கிபி 985 ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழன் அரியணை ஏறியபோது சோழ சாம்ராஜ்ஜியம் மீண்டும் எழத் தொடங்கியது.

முதலாம் ராஜராஜ சோழன் மற்றும் அவரின் மகன் ராஜேந்திர சோழன் தலைமையில் சோழர்கள், ஆசியாவில் மிகப்பெரிய ராணுவ, பொருளாதார மற்றும் கலாசார சக்தியாக உருவெடுத்தனர்.

ஒரு காலகட்டத்தில் சோழ சாம்ராஜ்ஜியம் தெற்கில் மாலத்தீவிலிருந்து வடக்கே வங்காளத்தில் கங்கை நதிக்கரை வரை பரவியிருந்தது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ரிச்சர்ட் ஈடன் தனது ‘பாரசீக காலத்தில் இந்தியா (India in the Persianate Age)’ புத்தகத்தில் சோழர்கள், “தஞ்சையின் மகா சோழர்கள்’ என அறியப்பட்டதாக குறிப்பிடுகிறார்.

“ஒட்டுமொத்த தெற்கு கரை மீதான அவர்களின் கட்டுப்பாடு தற்போதும் கோரமண்டல் என நினைவுகூரப்படுகிறது. சோழமண்டல் என்கிற வார்த்தையின் மறுவிய வடிவம் தான் கோரமண்டல். இது சோழப் பேரரசின் ஆட்சி எல்லையைக் குறிக்கிறது” என எழுதியுள்ளார்.

ஸ்ரீவிஜய அரசுடனான மோதல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடராஜர் சிலை சோழப் பேரரசின் அடையாளமாக இருந்தது11 ஆம் நூற்றாண்டில் கெமர் மற்றும் சோழ வணிகர்கள் வங்காள விரிகுடாவின் கரையோரம் அமைந்துள்ள நாடுகளின் பொருளாதாரத்தைக் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

தங்கள் இருவரின் நலனும் ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்துள்ளது என சோழர்களும் கெமர்களும் உணர்ந்தனர். இந்தக் காலகட்டத்தில் கெமர் பேரரசும் மிகப் பெரிதாக, செல்வாக்கு மிக்கதாக இருந்தது.

அவர்கள் தற்போதைய கம்போடியா, தாய்லாந்து மற்றும் வியட்நாமின் பல பகுதிகளை ஆட்சி செய்தனர். கம்போடியாவில் உள்ள பிரபலமான அங்கோர்வாட் கோவிலை கெமர் மன்னர்கள் கட்டினர்.

ஒய் சுப்பராயலு தனது ‘சோழர்களின் கீழ் தென்னிந்தியா (South India Under the Cholas)’ எனும் புத்தகத்தில், “பல கல்வெட்டுகள் சோழர்கள் மற்றும் கெமர்கள் இடையே நட்புறவு இருந்தையும் 1020 ஆம் ஆண்டில் இருவருக்கும் இடையே ரத்தினங்கள் மற்றும் தங்கரத பரிமாற்றம் இருந்ததையும் குறிப்பிடுகின்றன. அதிகரித்து வந்த ரஷ்ய, சீன மக்கள் தொகை மற்றும் ஆடம்பர பொருட்கள் மீதான அவர்களின் ஈடுபாட்டால் இரு அரசுகளும் பெரிதும் பலனடைந்தன” என எழுதியுள்ளார்.

இருவருக்கும் இருந்த ஒரு எதிரி – ஸ்ரீவிஜய அரசு தான். பௌத்தர்களான ஸ்ரீவிஜய அரசர்கள் தென்கிழக்கு ஆசியாவின் பல துறைமுகங்களை கட்டுப்படுத்தி வந்தனர்.

சீனா நோக்கிச் சென்ற அனைத்து கப்பல்களுக்கும் அவர்கள் வரி விதித்தனர். வரி செலுத்தாத கப்பல்களை அவர்களின் கப்பற்படை தாக்கி அழித்தது.

ஸ்ரீவிஜய அரசின் தோல்வி

ஸ்ரீவிஜய அரசர்களின் ராஜாங்கம் சோழ அரசர்களை கோபமடையச் செய்தது.

சோழ மன்னர்களுக்கு நட்புறவான செய்திகளை அனுப்பிய அதே வேளையில் தற்போதைய நாகப்பட்டினம் துறைமுகம் இருக்கும் பகுதியில் பௌத்த மடம் கட்டுவதற்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தனர்.

மறுபுறம், சீன மன்னர்களிடம் சோழர்கள் சிறிய அரசு என்றும் தங்கள் கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்து வந்தனர்.

ராஜேந்திர சோழன் 1015-இல் சீனர்களுடன் ராஜாங்க உறவுகளை ஏற்படுத்தினார். அப்போது ஸ்ரீவிஜயர்களின் கொள்கையைப் பற்றி அறிந்த பிறகு விஜயதுங்கவ மன்னரிடம் தனது ராணுவ வலிமையைக் காட்ட முடிவு செய்தார்.

1017ஆம் ஆண்டு நடந்த போரில் ராஜேந்திர சோழன் வென்று விஜயதுங்கவர்மனை சிறைபிடித்தார். அதன் பின்னர், ராஜேந்திர சோழனின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்டு தனது மகளை அவருக்கு திருமணம் செய்து வைத்தார் விஜயதுங்கவர்மன்.

வெற்றிக்குப் பிறகு வன்முறை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோட்டை ஒன்றின் எச்சங்கள்ராஜேந்திர சோழன் ஆசியாவில் மிகப் பிரபலமான நபராக மாறினார். அவர் ராணுவ வெற்றிகளின்போது வன்முறையில் ஈடுபடுவதற்காக அறியப்பட்டார்.

அவர் போர் விதிகளை மீறுவதாக அவரின் எதிரிகள் குற்றம்சாட்டினர்.

சாளுக்கியர்கள் உடனான போரில் ஒட்டுமொத்த ராஜ்ஜியத்தையும் அழித்து, “பெண்கள் மற்றும் பிராமணர்களைக் கொல்லவும் தயங்கவில்லை” எனத் தெரிவிக்கப்படுகிறது.

அனிருத் கனிசெட்டி தனது ‘தென்னிந்தியாவின் தக்காணப் பிரபுக்கள்: சாளுக்கியர்கள் முதல் சோழர்கள் வரை (Lords of the Deccan, Southern India from Chalukyas to Cholas)’ எனும் புத்தகத்தில், “இலங்கையின் வரலாற்றிலும் ராஜேந்திர சோழனின் வீரர்கள் கடுமையாக நடந்து கொண்டது பதிவு செய்யப்பட்டுள்ளது” என எழுதியுள்ளார்.

“அரச குடும்பத்தின் பெண்களை கடத்தியவர்கள் அனுராதபுரத்தின் அரச கஜானாவை களவாடிச் சென்றனர். இது மட்டுமில்லை பௌத்த மடங்களின் ஸ்துபிக்களை உடைத்து ரத்தினத்தை எடுத்துச் சென்றனர்” என அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை மற்றும் மாலத்தீவு ஆக்கிரமிப்பு

பட மூலாதாரம், Universal Images Group via Getty Images

படக்குறிப்பு, இலங்கையில் உள்ல யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமான பொலன்னறுவா இலங்கை அரசாங்கம் மற்றும் சோழப் பேரரசின் பழமையான அரச நகரம்.1014-இல் ராஜராஜ சோழனின் மறைவுக்குப் பிறகு ராஜேந்திர சோழன் அரியணை ஏறினார்.

பாண்டியர்கள் மற்றும் சேரர்கள் உடனான சண்டைக்குப் பிறகு 1017-இல் முதலில் இலங்கையைத் தாக்கினார்.

இந்தத் தாக்குதலின் நோக்கம் அதிகாரத்தை கைப்பற்றுவது அல்ல, மாறாக முடிந்த வரையில் தங்கம் மற்றும் இதர பொக்கிஷங்களை எடுத்து வர வேண்டும் என்பது தான் என அந்த காலத்து கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

எனினும், முடிவில் சோழர்கள் முதல் முறையாக முழு இலங்கைத் தீவையும் கட்டுப்பாட்டில் எடுத்தனர்.

அதற்கு ஓராண்டு கழித்து 1018-இல் ராஜேந்திர சோழன் மாலத்தீவிற்கும் லட்சத்தீவிற்கும் கடற்படைகளை அனுப்பி அவற்றை சோழ காலனிகளாக மாற்றினார்.

1019-இல் வட கர்நாடகா மற்றும் தெற்கு மகாராஷ்டிராவிற்கு ராணுவப் படைகளை அனுப்பினார். 1021-இல் தென்னிந்தியாவின் பெரும்பகுதிகளைக் கட்டுப்படுத்திய சாளுக்கியர்களை வென்றார்.

கங்கை நீரை தெற்கிற்கு எடுத்துச் சென்றவர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சோழர்கள் கட்டிய சிவக் கோவில்1022-இல் தனது பேரரசை 1000 மைல்கள் தாண்டி கங்கையின் கரை மற்றும் அதற்கு அப்பாலும் விரவுபடுத்தினார். வழியில் ஓடிசா மற்றும் வங்காளத்தின் சக்திவாய்ந்த பால சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான மகிபாலாவை தனது மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்ள வைத்தார்.

“ராஜேந்திர சோழன் வங்காளத்திலிருந்து மிக விலையுயர்ந்த ரத்தினங்கள் மற்றும் புனித தெய்வங்களின் சிலைகள் மற்றும் கலசங்களில் கங்கையின் புனித நீரையும் எடுத்துக் கொண்டு திரும்பினார். இந்த சாதனையின் நினைவாக அவருக்கு ‘கங்கை கொண்ட சோழன்’ என்கிற பெயர் கிடைத்தது. கங்கை கொண்ட சோழபுரத்தை தனது புதிய தலைநகராக அறிவித்தார். கங்கை கொண்ட என்றால் கங்கையை வென்றவர் என்று பொருள்” என ரிச்சர்ட் ஈடன் எழுதியுள்ளார்.

புகழ் பெற்ற வரலாற்று ஆசிரியரான ரோமிலா தாப்பர் தனது ‘ஆதி இந்தியா (Early India)’ புத்தகத்தில், “வெற்றிக்குப் பிறகு கங்கை நீரை தெற்கே எடுத்துச் சென்றது வடக்கு மீதான தெற்கின் வெற்றியின் சின்னம்” என எழுதியுள்ளார்.

சுமத்ராவிற்கு கப்பல் பயணம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தோனீசியாவில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரம்பன்னன் கோவில்ராஜேந்திர சோழன் தனது தலைநகரில் சிவனுக்கு ஒரு கோவிலை கட்டினார், இது 250 ஆண்டுகளுக்கும் மேலாக சைவ வழிபாடு மற்றும் சோழ கட்டடக்கலையின் அடையாளமாக திகழ்ந்தது.

தலைநகரில் மிகப்பெரிய செயற்கை ஏரி ஒன்றை நிர்மாணித்தார் ராஜேந்திர சோழன். இதன் பரப்பளவு 16 மைகள் நீளமும் 3 மைல்கள் அகலமும் ஆகும்.

வங்காளத்திலிருந்து கொண்டு வரப்பட்ட கங்கை நதி இந்த ஏரியில் ஊற்றப்பட்டது, ஆனால் ராஜேந்திர சோழன் நீண்ட காலம் வடக்கு மீதான தனது கட்டுப்பாட்டை நிலைநிறுத்த முடியவில்லை.

மாலத்தீவு மற்றும் இலங்கை மீதான தனது வெற்றிகளால் குதூகலமடைந்த ராஜேந்திர சோழன் மற்றும் கடல்கடந்த பயணத்திற்கு திட்டமிட்டிருந்தார். இந்த முறை இந்தோனீசியாவில் உள்ள சுமத்ரா தீவுகளுக்கு தன்னுடைய கப்பற்படையை அனுப்பும் எதிர்பாராத முடிவை எடுத்தார்.

ஸ்ரீவிஜய அரசு மீதான கப்பற்படை வெற்றி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ‘The Golden Road’ புத்தகத்தில் வில்லியம் டால்ரிம்பிள், சோழர்களின் வெளிநாட்டு பயணங்கள் பற்றி குறிப்பிடுகிறார்.1017-இல் ராஜேந்திர சோழன் மற்றும் ஸ்ரீவிஜய அரசிற்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ராஜேந்திர சோழனின் கப்பற்படை வென்றது.

இது மலேசியாவின் கடா நகரில் உள்ள கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராஜேந்திரன் ‘கடாவை வென்றவர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.

1025-இல் ராஜேந்திர சோழன் தனது முழு கப்பற்படையையும் ஸ்ரீவிஜய அரசுக்கு எதிராக சண்டையிட அனுப்பினார்.

பால் முனோஸ் தனது ‘ஆதி சாம்ராஜ்ஜியங்கள் (Early Kingdoms)’ புத்தகத்தில், “இந்தப் போரில் வெற்றிக்குப் பிறகு கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தில் அங்கோரைச் சேர்ந்த சூர்யவர்ம மன்னர், ராஜேந்திர சோழனுக்கு விலைமதிக்க முடியாத பரிசுகளை வழங்கினார். மிகப்பெரிய கப்பற்படை ஒன்றை அவர் அனுப்பினார். இவை சோழர்களின் முக்கிய துறைமுகமாக விளங்கிய நாகப்பட்டினத்தில் அணி சேர்க்கப்பட்டன” என எழுதியுள்ளார்.

வில்லியம் டால்ரிம்பிள் தனது ‘தங்க சாலை (The Golden Road)’ புத்தகத்தில், “இந்தப் போருக்கான வீரர்கள் மற்றும் யானைகளும் கூட கப்பலில் அழைத்துச் செல்லப்பட்டன. சோழர்கள் தங்களின் சண்டையை இலங்கையில் உள்ள ஒரு துறைமுகத்திலிருந்து ஆரம்பித்தனர்” என எழுதியுள்ளார்.

மேலும் அதில், “பல நாட்கள் கடல் பயணத்திற்குப் பிறகு அவர்கள் சுமத்ரா, தகுவா பா என்கிற தாய்லாந்து துறைமுகம் மற்றும் மலேசியாவில் உள்ள கேதா ஆகிய இடங்கள் மீது எதிர்பாரா தாக்குதலை நடத்தினர், அப்போது ஒரு தெற்காசிய அரசால் தங்கள் நாட்டிற்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட நீண்ட தூர ராணுவ நடவடிக்கை ஆகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வெற்றிகரமான போர்களுக்குப் பிறகு ராஜேந்திரனின் ஆதிக்கம் தென்கிழக்கு ஆசியா முழுவதும் பரவியிருந்தது.

இந்த வெற்றியின் பெருமையால் அதன் முழு விவரங்கள் தஞ்சையில் உள்ள கோவில் சுவற்றில் 1027 ஆம் ஆண்டு எழுதினார்.

விஜய் மற்றும் சங்கீதா சகுஜா தங்களின் ‘ராஜேந்திர சோழன், தென்கிழக்கு ஆசியாவிற்கான முதல் கடல் பயணம் (Rajendra Chola, First Naval Expedition to South-East Asia)’ எனும் புத்தகத்தில், “இந்த ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஆறு இடங்களில் நான்கு சுமத்ராவிலும், ஒன்று மலாய் தீபகற்பத்திலும் ஒன்று நிகோபார் தீவுகளிலும் உள்ளது” என எழுதியுள்ளார்.

அதில், “ராஜேந்திர சோழன் இன்று சிங்கப்பூர் என அழைக்கப்படும் இடத்தை கடந்து சென்றிருப்பது சாத்தியமே. இதற்கு காரணம் அங்கும் ஒரு கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, அதில் ராஜேந்திர சோழனின் பல்வேறு பெயர்களில் ஒன்று குறிப்பிடப்பட்டுள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளனர்.

சீனாவுடன் நெருங்கிய உறவு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோவில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டது.தெற்கிழக்காசியாவில் கடல் வழியாக ராஜேந்திர சோழன் நுழைந்ததன் நோக்கம் வெற்று பெறுவது மட்டுமல்ல, ஒரு வர்த்தகப் போரில் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி கடல் வழித்தடங்களில் ஸ்ரீவிஜய அரசின் பிடியை வலுவிழக்கச் செய்வதே ஆகும் என வரலாற்றாசிரியர்கள் நம்புகின்றனர்.

கென்னத் ஹால் எழுதிய ‘Khmer Commercial Development and Foreign Contacts under Suryavarman I’ எனும் புத்தகத்தில், “இந்தப் பயணங்களில் முக்கியமான நோக்கம் என்பது சீனா உடன் மிகவும் லாபகரமான வர்த்தகப் பாதையை உருவாக்குவது ஆகும். அந்த காலகட்டத்தில் மிளகு, மசாலா மற்றும் பருத்திக்கு சீனாவில் பெரிய அளவில் தேவை இருந்தது. இவற்றை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதன் மூலம் அதிக அளவில் லாபம் சம்பாதிக்க முடியும் என சோழர்கள் நம்பினர்” என எழுதியுள்ளனர்.

ஸ்ரீவிஜயர்களை தடுப்பாட்டம் ஆடவைத்த பிறகு ராஜேந்திர சோழன் சீனாவுக்கு தனது தூதுக்குழுவை அனுப்பினார்.

சீன பேரரசருக்கு தந்தம், முத்துகள், பன்னீர், காண்டாமிருகக் கொம்புகள் மற்றும் பட்டு ஆடைகள் போன்ற விலையுயர்ந்த பரிசுகளை எடுத்துச் சென்றார்.

அதற்குச் சில நாட்கள் கழித்து சீனாவின் குவான்சூ நகரில் கோவில் ஒன்று கட்டப்பட்டது. அதன் சில பகுதிகள் தற்போதும் உள்ளன.

ஜான் கை தனது, ‘ தமிழ் வணிகர்களும் இந்து-பௌத்த புலம்பெயர்ந்தோரும் (Tamil Merchants and the Hindu-Buddhist Diaspora)” எனும் புத்தகத்தில், “1067-69 காலகட்டத்தில் சோழ இளவரசர் திவாகரா சீனாவில் உள்ள கோவில்களை பராமரிக்க நிதிகள் வழங்கினார் என ஒரு சீன கல்வெட்டு குறிப்பிடுகிறது” என எழுதியுள்ளார்.

தமிழ் வணிகர்கள் சீனாவிலிருந்து கோரமண்டல் துறைமுகங்களுக்கு நறுமண மரங்கள், தூபம், கற்பூரம், முத்துக்கள், பீங்கான் மற்றும் தங்கம் அடங்கிய கப்பல்களைக் கொண்டு வந்தனர்.

கெமர் பேரரசு உடனான உறவுகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பின் அடையாளமாக அங்கோர் வாட் கோவில் உள்ளது.ராஜேந்திர சோழனின் காலகட்டத்தில் சோழ மற்றும் கெமர் சாம்ராஜ்ஜியங்கள் இடையேயான ஒத்துழைப்பு, உலகின் மிகப்பெரிய அங்கோர்வாட் கோவில் கட்டுமானத்தின் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்த விஷ்ணு கோவில் தற்போதும் 500 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. தஞ்சையிலும் சிதம்பரத்திலும் கோவில்கள் கட்டப்பட்ட அதே காலகட்டத்தில் தான் இந்தக் கோவிலும் கட்டப்பட்டுள்ளது. இந்தியப் பெருங்கடலின் இரு சக்தி வாய்ந்த மன்னர்கள் நெருங்கிய நண்பர்களாகவும் இருந்தனர்.

சிறந்த போர் வீரர் என்பதோடு, சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார் ராஜேந்திர சோழன். பல கிராமங்களில் பல உயர்தர குருகுலங்களை நிறுவினார். இங்கு மாணவர்களுக்கு சமஸ்கிருதம் மற்றும் தமிழ் மொழி கற்பிக்கப்பட்டது.

தஞ்சாவூர் தவிர்த்து ஸ்ரீரங்கம், மதுரை, ராமேஸ்வரம் உட்பட பல பிரம்மாண்டமான கோவில்களை அவர் கட்டினார். அவை இன்றளவும் கட்டடக்கலைக்குச் சான்றாகப் பார்க்கப்படுகின்றன.

ராஜேந்திர சோழன் கடலை மட்டுமல்ல மக்களின் மனங்களையும் வென்றவர் எனக் கூறப்படுகிறது.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு