அண்ணாமலை முதல் கூலி வரை: ரஜினி சாமானியரை திரையில் பிரதிபலிக்க அதிகம் விரும்புவது ஏன்?

பட மூலாதாரம், @sunpictures

எழுதியவர், சிராஜ்பதவி, பிபிசி தமிழ்42 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில், நடிகர் ரஜினிகாந்தின் திரைப்படங்களுக்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவுவது வழக்கமானது தான் என்றாலும், ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகும் கூலி திரைப்படத்தின் முன்பதிவில் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் கிடைத்துள்ள வரவேற்பு பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது.

குறிப்பாக கேரளாவில் ரூ.3 கோடிக்கு மேல் மதிப்புள்ள 2,00,000 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன என்றும், கூலி திரைப்படம் கேரளாவில் ஒரு தமிழ் படத்திற்கான பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கக்கூடும் என்றும் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்’ செய்தி கூறுகிறது.

‘கூலி’ படத்தின் முன்னோட்டத்திலிருந்து, ஒரு துறைமுகத்தில் தினக்கூலிக்கு வேலை செய்யும் நபராக ரஜினி நடித்திருப்பது போல் தெரிகிறது. ரஜினியின் திரை வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், சாமானிய மனிதர்களுடன் எளிதில் பொருந்திப் போகக்கூடிய கதாபாத்திரங்களையே அவர் அதிகம் தேர்ந்தெடுத்து நடித்துள்ளார்.

திரையில் சாமானியர்களைப் பிரதிபலிக்கும், ‘எம்ஜிஆர்’ ஃபார்முலா கதாபாத்திரங்கள் தான் அவரை இன்றும் சூப்பர்ஸ்டாராக நிலைத்து நிற்க வைத்துள்ளன என விமர்சகர்கள் கூறும் நிலையில், சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அத்தகைய பாத்திரத்தை ‘கூலி’ மூலம் அவர் ஏற்றுள்ளதாக தெரிகிறது. அவ்வாறு ரஜினி நடித்த சில முக்கிய ‘காமன் மேன்’ (Common man) கதாபாத்திரங்களை இக்கட்டுரையில் பார்க்கலாம்.

அண்ணாமலை (1992)

பட மூலாதாரம், KavithalayaProductions

படக்குறிப்பு, அண்ணாமலை திரைப்படம் 1987இல் வெளியான ‘குத்கர்ஸ்’ எனும் பாலிவுட் படத்தின் தழுவல்.”பால் வியாபாரம் செய்யும் ஒரு வெகுளியான மனிதன், நண்பனின் துரோகத்திற்கு பழிவாங்க பணக்காரன் ஆகிறான்” என்பது தான் அண்ணாமலை திரைப்படத்தின் ஒருவரிக் கதை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அண்ணாமலை திரைப்படம் 1987இல் வெளியான ‘குத்கர்ஸ்’ எனும் பாலிவுட் படத்தின் தழுவல். ஆனால் ‘குத்கர்ஸ்’ திரைப்படத்தில் பணக்கார நண்பன் கதாபாத்திரம் தான் கதாநாயகன். அவன் பார்வையில் தான் படம் நகரும்.

அதை தமிழில் ரஜினிக்காக மாற்றும்போது, அண்ணாமலை எனும் சாமானிய மனிதன் கதாபாத்திரம் கதாநாயகனாக இருக்கும்வகையில் திரைக்கதை எழுதப்பட்டது. அண்ணாமலையாக ரஜினியும், நண்பன் அசோக் கதாபாத்திரத்தில் சரத்பாபுவும் நடித்திருப்பார்கள். வஞ்சகத்தால் நண்பனிடம் சொத்தை இழந்த அண்ணாமலை, அவனை விட பெரிய பணக்காரனாக மாறுவேன் என சவால் விட்டு அதில் ஜெயிப்பதே கதை.

குறிப்பாக ‘குத்கர்ஸ்’ படத்தில் இல்லாத காட்சி ஒன்று வரும், அண்ணாமலை பணக்காரனாகி, நண்பனின் வீட்டையும் ஏலத்தில் எடுத்து, சவாலில் வென்றபிறகு, நண்பன் வீட்டுப் பத்திரத்தை தாயிடம் கொடுத்து, ‘இதை அசோக்கிடமே கொடுத்துவிடுங்கள்’ என்பார்.

அப்போது தாய், எவ்வளவு பணம் வந்து சேர்ந்தும், ‘என் அண்ணாமலை மாறவில்லை’ எனக் கூறுவார். இதையே மேலும் பல ரஜினி படங்களில் பார்க்கலாம். அதாவது பணக்காரன் ஆனாலும், அதிகாரத்திற்கு சென்றாலும் அந்த ரஜினி கதாபாத்திரம் மனதளவில் மாறாத ஒரு சாமானியன் தான் என்ற கருத்தாக்கம்.

முத்து (1995)

பட மூலாதாரம், Kavithalayaa Productions

படக்குறிப்பு, ‘முத்து’ திரைப்படம், மோகன்லால் நடிப்பில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ (1994) எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவல்.கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியாகி மிகப்பெரும் வெற்றி பெற்ற ‘முத்து’ திரைப்படம், மோகன்லால் நடிப்பில் வெளியான ‘தென்மாவின் கொம்பத்’ (1994) எனும் மலையாளத் திரைப்படத்தின் தழுவல். இதில் ‘ராஜா’ எனும் ஜமீன்தாருக்கு குதிரை வண்டி ஓட்டும் ‘முத்து’ என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ரஜினி.

இதிலும், ரஜினிக்காக திரைக்கதையில் பல மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கும். தென்மாவின் கொம்பத் திரைப்படத்தில், மோகன்லாலுக்கு ‘குதிரை வண்டி ஓட்டுபவர்’ என்ற ஒரு வேடம் தான், தமிழில் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் வரும் மற்றொரு ஜமீன்தார் (ரஜினி) கதாபாத்திரம் கிடையாது.

எவ்வளவு பணமும் அதிகாரமும் இருந்தாலும், சாமானிய மக்களுக்கு ஒரு பிரச்னை என்றால் அதைத் தூக்கி எறிய தயங்காதவர் என்ற ரீதியில் தான் ஜமீன்தார் ரஜினி கதாபாத்திரம் உருவாக்கப்பட்டிருக்கும்.

இறுதிக்காட்சியில், ராஜா ‘குதிரை வண்டி ஓட்டுபவராகவும்’, முத்து ஜமீன்தாராகவும் மாறி நிற்கையில், அந்த ரஜினி கதாபாத்திரம் திரையிலிருந்து மக்களைப் பார்த்து “இந்த முத்து, எப்போதும் என்றும், எல்லோருக்கும் ஒரு சேவகன் தான். நீங்கள் தான் எனக்கு எஜமான்” என்று கூறுவார்.

பாட்ஷா (1995)

பட மூலாதாரம், Sathya Movies

படக்குறிப்பு, பாட்ஷா திரைப்படம், ‘ஹம்’ (1991) என்ற பாலிவுட் படத்தின் தழுவல்.பாட்ஷா திரைப்படம் என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வரும் ஒரு காட்சி, எவ்வளவு பிரச்னைகள் வந்தாலும் பொறுத்துப் போகும் மாணிக்கம் எனும் ஆட்டோ ஓட்டுநர் கதாபாத்திரம், தங்கைக்கு ஒரு பிரச்னை என்றவுடன் பழைய ‘பாட்ஷாவாக’ மாறி, வில்லனையும் அவனது கும்பலையும் திருப்பி அடிக்கும் காட்சி தான்.

இந்தத் திரைப்படம், ‘ஹம்’ (1991) என்ற பாலிவுட் படத்தின் தழுவல். ஆனால், மாணிக் பாட்ஷாவைப் போல ‘ஹம்’ படத்தின் நாயகன், மக்களுக்காகப் போராடி ‘டான்’ ஆக மாட்டார், தந்தையை இழந்த பிறகு, வன்முறை வாழ்க்கையை கைவிட்டு, வேறு ஊருக்கு வந்து ஒரு சாமானிய ‘ஆட்டோ ஓட்டுநராக’ வாழ மாட்டார்.

ஹம் திரைப்படத்தின் கதாநாயகன் ‘டைகர்’ மும்பையில் வில்லனுக்காகவே வேலை செய்வார். ஒருகட்டத்தில், வில்லன் அவரது நண்பனையும் தந்தையையும் கொன்றுவிட, அதன் பிறகு தாய்க்கு செய்துகொடுத்த சத்தியத்திற்காக, தனது தம்பிகளுடன் தமிழ்நாட்டின் ‘ஊட்டிக்கு’ வந்து டிம்பர் தொழில் செய்யும் வணிகராக அமைதியாக வாழ்வார்.

ரஜினியின் ‘காமன் மேன்’ திரைபிம்பத்திற்காக, “இரக்கமுள்ள மனசுக்காரன்டா – நான் ஏழைக்கெல்லாம் சொந்தக்காரன்டா” என்ற அறிமுகப் பாடல் உள்பட பல மாற்றங்கள் செய்யப்பட்டு, ‘ஹம்’ தமிழில் பாட்ஷாவாக மாறியது.

இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், தமிழில் மாணிக்கம் கதாபாத்திரத்திடம், ‘நீங்கள் பாம்பேயில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள், சொல்லுங்க..சொல்லுங்க’ என கேட்கும் ஷிவா எனும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை (மாணிக்கத்தின் தம்பி) தான், ‘ஹம்’ திரைப்படத்தில் ரஜினிகாந்த் ஏற்று நடித்திருப்பார்.

சிவாஜி (2007)

பட மூலாதாரம், AVM Productions

படக்குறிப்பு, இரண்டாம் பாதியில் அனைத்தையும் இழந்து மீண்டும் சாமானியனாக மாறி போராடும் ரஜினி கதாபாத்திரம் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றது.அமெரிக்காவில் பல வருடங்கள் ஒரு மென்பொறியாளராக பணியாற்றிவிட்டு, பல கோடிகளுடனும், தமிழ்நாட்டின் ஏழை மக்களுக்கு நற்பணிகளை செய்யவேண்டுமென்ற கனவுடன் வருவார், நாயகன் சிவாஜி ஆறுமுகம். சொத்து முழுவதையும் இழந்து, மேற்கொண்டு கடனாளி ஆனாலும் கூட மக்களுக்கு நல்லது செய்யாமல் விடமாட்டேன் என்று நினைக்கும் கதாபாத்திரம்.

அதிலும், சிவாஜி ஆறுமுகம் பரம்பரை பணக்காரர் அல்ல, ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்து, கஷ்டப்பட்டு படித்து, அமெரிக்கா சென்று, உழைத்து பணக்காரர் ஆனவர். அதனால் அவருக்கு ஏழைகளின் கஷ்டம் தெரியும் என இப்படத்தில் காட்டப்பட்டிருக்கும்.

முதல் பாதியில், பணக்காரராக வரும் ரஜினியை விட, இரண்டாம் பாதியில் அனைத்தையும் இழந்து மீண்டும் சாமானியனாக மாறி போராடும் ரஜினி கதாபாத்திரமே இப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்ததாக சினிமா விமர்சகர்கள் கூறினர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.உழைப்பாளி (1993) மற்றும் அருணாச்சலம் (1997)

உழைப்பாளி படத்தில் ஒரு தொழிற்சாலையில் தினக்கூலிக்கு பணிபுரியும் நபராக ரஜினி நடித்திருப்பார். ஆனால், உண்மையில் அவர் பணக்கார வீட்டு வாரிசு. சிறு வயதில், உறவினர்கள் சதியால் குடும்பத்தைப் பிரிந்திருப்பார்.

இந்தத் திரைப்படம் ரீமேக் அல்ல, அதேசமயம் திரைக்கதை, பாடல்கள் என அனைத்துமே ரஜினிக்காகவே எழுதப்பட்டிருக்கும். வேறு எந்த நடிகர் நடித்திருந்தாலும் இந்தளவு பொருந்தியிருக்குமா என்பது சந்தேகமே.

ஒரு உதாரணம், திரைப்படத்தின் இறுதிக்காட்சியில் பூர்வீக சொத்துகள் தன்னை வந்து சேர்ந்தாலும், அனைத்தையுமே தன்னை தத்தெடுத்து வளர்த்த குடும்பத்திற்கு எழுதி வைத்துவிடுவார் ரஜினி.

“எல்லாவற்றையும் எங்களுக்கு கொடுத்துவிட்டாயே, உனக்கு?” என ஒரு கதாபாத்திரம் கேட்க, சிரித்தபடியே மேல் சட்டையை கழற்றி, உள்ளே தான் அணிந்திருக்கும் சிவப்பு நிற தொழிலாளர் சீருடையுடன், ‘தனக்கு சொத்துகள் வேண்டாம், எளிய தொழிலாளி வாழ்க்கையே போதும்’ என்றபடி தொழிலாளர்களை நோக்கி நடந்து செல்வார்.

1997இல் வெளியான அருணாச்சலம் திரைப்படத்திலும் இதேபோன்ற ஒரு கதாபாத்திர வடிவமைப்பை காண முடியும். அதில் அருணாச்சலம் ஒரு கிராமத்தின் பணக்கார குடும்பத்தில் வளர்ந்து, பின்னர் தான் தத்தெடுக்கப்பட்ட ஒருவர் என அறிந்து அங்கிருந்து வெளியேறி சென்னை வந்து, தனது உண்மையான கதையை அறிவார்.

பின்னர், ’30 நாட்களில் 30 கோடி செலவு செய்தால், 3000 கோடி’ கிடைக்கும் என தந்தை விட்டுச்சென்ற சவாலில் ஜெயித்து, இறுதியில் 3000 கோடி ரூபாயை மக்கள் நலனுக்காக செலவிடப்பட வேண்டும் என்று கொடுத்துவிட்டு, ‘தான் என்றும் ஒரு சாமானியன் தான்’ என்ற ரீதியில் நடந்து செல்வார்.

பட மூலாதாரம், Deepa/Instagram

படக்குறிப்பு, ‘எவ்வளவு பணம் வந்தாலும், மனதளவில் தான் ஒரு சாமானியன் என்பதை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை ரஜினி விரும்புகிறார்’ என ஜா.தீபா கூறுகிறார்.இப்படி 90களில் மற்றும் அதற்குப் பிறகு ரஜினி நடித்த பெரும்பாலான கதாபாத்திரங்கள், ஒரு சாமானியராக, சொந்தங்கள், நட்பு அல்லது மக்களுக்காக எதையும் விட்டுத் தரக்கூடியவராக, எவ்வளவு அதிகாரம் அல்லது பணம் இருந்தாலும் அதை எளிதில் உதறிவிட்டு செல்பவராக இருக்கும்.

இதுகுறித்துப் பேசிய எழுத்தாளர் ஜா.தீபா, “இது எம்ஜிஆர் பயன்படுத்திய ஒரு ஃபார்முலா. தனது ரசிகர்கள் இதைத் தான் விரும்புவார்கள் என தொடர்ந்து ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் நடிப்பது. உதாரணத்திற்கு எம்ஜிஆர் படங்களில் அவர் ஏழைகளுக்கு உதவுவது, விவசாயி, ரிக்ஷா ஓட்டுநர் கதாபாத்திரங்களில் நடிப்பது, கத்திச் சண்டை போடுவது போன்ற காட்சிகள், நம்பியார் வில்லனாக இருப்பது ஆகியவற்றைச் சொல்லலாம்” என்கிறார்.

“விஜயகாந்த் என்றால் நாட்டிற்காக தீவிரவாதிகளுக்கு எதிராகப் போராடும் கதாபாத்திரங்கள் நினைவுக்கு வருவது போல” என்று கூறும் ஜா.தீபா, சினிமா குறித்து ‘ஒளி வித்தகர்கள்’, ‘கதை டூ திரைக்கதை’ உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

“கூலி திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. ஆனால், கூலி வேலை செய்பவர், பால்காரர், ஆட்டோ ஓட்டுபவர் என சாமானியர்களின் தொழில்/வேலை சார்ந்த கதாபாத்திரங்கள் தான் அவரது பலம். அது தொடர்பான அவரது படத்தின் பாடல்களும் இன்று வரை பயன்படுத்தப்படுகின்றன அல்லவா?” என்று அவர் கூறுகிறார்.

குறிப்பாக அண்ணாமலைக்குப் பிறகு இத்தகைய வேடங்களை அவர் அதிகம் ஏற்று நடித்தார் என்று கூறும் ஜா.தீபா, “2010க்குப் பிறகு, இயக்குநர்களின் நடிகராக அவர் மாறியிருந்தார். அவருக்கு வித்தியாசமான கதாபாத்திரங்கள் நடிக்கத் தெரியாமல் அல்ல, அவர் ஒரு நல்ல நடிகர் தான். ஆனால், எவ்வளவு பணம் வந்தாலும், மனதளவில் தான் ஒரு சாமானியன் என்பதை பிரதிபலிக்கும் கதாபாத்திரங்களை தான் அவர் விரும்புகிறார் என்பது தெரிகிறது. அதுவே அவரது தனிப்பட்ட வாழ்க்கை தத்துவமாகவும் இருக்கலாம்” என்று கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.