கவனிப்பாரற்றிருந்த நிலாவரை ஆழமற்ற கிணறு துப்புரவு – Global Tamil News

கவனிப்பாரற்றிருந்த நிலாவரை ஆழமற்ற கிணறு துப்புரவு – Global Tamil News

by ilankai

யாழ்ப்பாணம் நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால்   துப்புரவு செய்யப்பட்டுள்ளது.  தொன்மை வாய்ந்த நிலாவரை கிணற்றுப் பிரதேசம் கழிவுகளாலும் பற்றைகளாலும் சூழப்பட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை (ஜனவரி 7, 2026) விசேட தூய்மிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிலாவரை பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் துப்புரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. உடைந்திருந்த பார்வையாளர் இருக்கைகள் மற்றும் நுழைவாயில் கதவுகள் திருத்தப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டன. பொலித்தீன் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டு, சுத்தத்தைப் பேணுவதற்கான அறிவுறுத்தல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீண்டகாலமாக பிரதேச சபையின் பராமரிப்பில் இருந்த இப்பகுதியில், 2021-2023 காலப்பகுதியில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தடுத்த தவிசாளர் நிரோஷ் மீது நீதிமன்றில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகள் மற்றும் கட்டண அறவீட்டுத் தடைகள் காரணமாக, கடந்த காலங்களில் சபையினால் இப்பகுதியைச் சீராகப் பராமரிக்க முடியாத சூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பகுதி மக்கள் முகம் சுளிக்காத வகையில் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் மீண்டும் ஒரு சுற்றுலாத் தளமாகப் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. Tag Words: #Nilavarai #JaffnaNews #ValikamamEast #Nirosh #Environment #TamilHeritage #SriLankaNews #SocialResponsibility #BottomlessWell

Related Posts