தமிழ் புலம்பெயர்ந்தோரின் ஆதரவால் முன்னாள் கடற்படை தளபதி கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிலங்கையில் பிரச்சாரங்கள் முடுக்கவிடப்படடுள்ளன. இதனிடையே இத்தகைய கருத்துக்கள் வேடிக்கையாக உள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் புலம்பெயர்ந்தோரை திருப்திப்படுத்தவே அரசாங்கம் முன்னாள் கடற்படை தளபதி நிஷாந்த உலுகேதென்னவை கைதுசெய்துள்ளதாக கூறும் கருத்து முற்றிலும் தவறானது. நீதிமன்ற தீர்ப்பின் மூலமே அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகளுக்கு அமைய அவருக்கான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்து தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை திருப்திப்படுத்த அரசாங்கம் செயற்படுவதாக கூறுகின்றார்கள்.

நாங்கள் திருப்திப்படுத்துவது நமது நாட்டில் உள்ள தமிழ், சிங்கள, முஸ்லீம் மக்களையே. அதுவே எங்களது கடமை. முன்னைய அரசாங்கத்தால் நீதி மறுக்கப்பட்டது. நீதியை தவறாக பயன்படுத்தியவர்களே அவர்கள். அது மக்களுக்கும் தெரியும்.

கோட்டபாய அரசாங்கம் உள்ளிட்ட முன்னைய அரசாங்கங்கள் பயணத்தடைகளை விதித்திருந்தன. அந்த மோசடி கும்பலுக்கு பயந்து நிசாந்த சில்வா நாட்டை விட்டு உயிரை காப்பாற்றிக் கொள்ள தப்பியோடினார்.

நீதியின்படி செயற்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்திய சானி அபேசேகர 11 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஆனால் தற்போதுநீதி சரியாக செயற்படுகிறது. நியாயமான தண்டனைகள் வழங்கப்படுகின்றன” எனவும் அனுர திசநாயக்க தெரிவித்துள்ளார்.