டிரம்ப் மிரட்டலை இந்தியா சமாளிக்குமா? நெப்போலியனின் அறிவுரையை பின்பற்ற நிபுணர்கள் யோசனை

பட மூலாதாரம், ANDREW CABALLERO-REYNOLDS/AFP via Getty

படக்குறிப்பு, டிரம்ப் இந்தியா மீது 25 சதவீத வரி விதித்துள்ளார் (கோப்பு படம்)எழுதியவர், ஜுபைர் அகமதுபதவி, பிபிசி இந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதியும் ஹூஸ்டனில் நடந்த ‘ஹவுடி மோதி’ நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் ஒன்றாக கலந்துகொண்டனர்.

டிரம்பும் மோதியும் கைகோர்த்து, கட்டிப்பிடித்து, பொதுவான மதிப்புகள் மற்றும் உலகத் தலைமைத்துவம் குறித்து வலிமையான உரைகளை நிகழ்த்தினர்.

இந்த நிகழ்ச்சி, இந்தியா-அமெரிக்கா உறவின் உச்சக் கட்டமாக கருதப்பட்டது. ஆனால் இப்போது அது மறக்கப்பட்ட அத்தியாயமாகத் தெரிகிறது.

டிரம்பின் இரண்டாவது பதவிக்காலம் தொடங்கி ஏழு மாதங்கள் கடந்துள்ள நிலையில், நட்பு மனநிலை மாறி, மோதல் சூழ்நிலையாக உருவெடுத்துள்ளது.

இரு நட்பு நாடுகளான இந்தியாவும், அமெரிக்காவும் இப்போது ஒரு வர்த்தகப் போரைச் சந்திக்கும் சூழலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

கடந்த வாரம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25% வரி விதித்தார். இது ஏற்கனவே கடுமையான நடவடிக்கையாக கருதப்பட்டது.

ஆனால் ஆகஸ்ட் 4 அன்று, டிரம்ப் இந்த வரியை 25% விட ‘மிக அதிகமாக’ உயர்த்தப் போகிறேன் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்தியா ரஷ்யாவிடம் அதிகமாக எண்ணெய் வர்த்தகத்தில் ஈடுபடுவது தான் இதற்குக் காரணம் என்று கூறிய அவர், இது யுக்ரேனில் நடக்கும் ‘போருக்கு நிதி’ அளிப்பதாகவும் கூறுகிறார்.

இந்தச் சூழலைக் கவனித்து வருபவர்களுக்கு ஆச்சர்யமளிக்கும் விதமாக, இந்தியா டிரம்பின் வரிகளை பொறுத்துக்கொள்ளாமல், கடுமையான சொற்களால் பதிலடி கொடுத்தது.

மோதி அரசாங்கம் இதை “மேற்கத்திய நாடுகளின் பாசாங்கு” என்று அழைத்தது.

இந்தியச் சுத்திகரிப்பு நிலையங்கள் தேவையின் அடிப்படையில், சந்தையை சார்ந்து முடிவுகளை எடுத்து வரும் அதே வேளையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்ற மேற்கத்திய நாடுகள் இயற்கை எரிவாயு மற்றும் உரங்கள் முதல் இயந்திரங்கள் மற்றும் உலோகங்கள் வரை பல்வேறு துறைகளில் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்து வருவதாக அரசாங்கம் வாதிட்டது.

செவ்வாயன்று அதிர்ச்சியளிக்கும் விதமாக இன்னொரு அறிவிப்பு வெளியானது. சிஎன்பிசியிடம் பேசிய அமெரிக்க அதிபர் , “அடுத்த 24 மணி நேரத்திற்குள்” வரிகளை அதிகரிக்கப் போவதாக அச்சுறுத்தினார்.

“இந்தியா ஒரு நல்ல வர்த்தக கூட்டாளியாக இருந்ததில்லை. அவர்கள் எங்களுக்கு நிறைய ஏற்றுமதி செய்கிறார்கள், ஆனால் நாங்கள் அவர்களுடன் அந்த அளவுக்கு வர்த்தகம் செய்வதில்லை” என்று டிரம்ப் தெரிவித்தார்.

வரி விதிப்பது தொடர்பான டிரம்பின் அச்சுறுத்தல், இந்தியாவின் நிலைப்பாட்டை சோதிக்கும் ஒரு பெரிய சூதாட்டத்தைப் போன்றுள்ளது.

“நாடு அதன் தேசிய நலன்களையும் பொருளாதார பாதுகாப்பையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும்” என இந்திய அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.

பொருளாதாரம் செழித்து வருகிறது, ஆனால் மறுபுறம் என்ன நடக்கிறது?

பட மூலாதாரம், Betty Laura Zapata/Bloomberg via Getty

படக்குறிப்பு, வர்த்தக ஒப்பந்தம் குறித்த தற்போதைய பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அனைத்து கோரிக்கைகளையும் இந்தியா ஏற்க மறுத்துவிட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர் (கோப்பு புகைப்படம்)டிரம்பின் அழுத்தம் உத்தியைச் சார்ந்ததாக உள்ளது.

உலகளாவிய சவால்களை எதிர்கொண்டு, நிலையான பணவீக்க விகிதத்தை பராமரிக்கும் அதே வேளையில் இந்தியாவின் பொருளாதாரம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

அந்நிய செலாவணி கையிருப்பு 645 பில்லியன் டாலர்களுக்கு மேல் உயர்ந்துள்ளது, ரூபாய் மதிப்பு நிலையாக உள்ளது. இந்தியா இப்போது சீனாவை முந்தி அமெரிக்காவிற்கு மிகப்பெரிய ஸ்மார்ட்போன் ஏற்றுமதியாளராக மாறியுள்ளது.

ஆனால் இந்தியாவின் வளர்ச்சியே, அதை வரிகளால் ‘மிரட்டி பணம் பறிக்கும்’ இலக்காக மாற்றுகிறது என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட தெற்காசிய ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன், டிரம்பின் தாக்குதல்கள் தனிப்பட்ட நோக்கம் கொண்டவையாக உள்ளன என்கிறார்.

“டிரம்ப் இந்திய அரசாங்கத்தின் செயல்பாடுகளால் மகிழ்ச்சியடையவில்லை. வர்த்தக பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் அனைத்து கோரிக்கைகளையும் இந்திய பேச்சுவார்த்தைக் குழுவினர் ஏற்க மறுத்துவிட்டனர்” என்று அவர் விளக்கினார்.

சமீபத்திய இந்தியா-பாகிஸ்தான் சண்டை நிறுத்தத்திற்கான பெருமையை மோதி தனக்கு வழங்காதது மற்றும் பதற்றமான தொலைபேசி அழைப்பின் போது அவர் எடுத்த உறுதியான நிலைப்பாட்டிலிருந்து டிரம்பின் கோபம் உருப்பெறுகிறது என குகல்மேன் கருதுகிறார்.

“ஒருவேளை, சீனா மற்றும் ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் பிற நாடுகளை விட இந்தியாவை அதிகமாக டிரம்ப் குறிவைப்பதற்கு இது காரணமாக இருக்கலாம்” என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் உண்மை என்னவென்றால், இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான எண்ணெய் வர்த்தகம் மறைமுகமானது கிடையாது. இது யுக்ரேன் போரால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியை எதிர்கொள்ள, சந்தை நிலையைப் பொருத்து எடுக்கப்பட்ட வெளிப்படையான முடிவு தான்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவுடன் ஆழமான வர்த்தக உறவுகளை வைத்திருக்கின்றன, அந்த நாடுகள் உரங்கள், எஃகு, இயந்திரங்கள் போன்ற பொருட்களை இறக்குமதி செய்கின்றன.

ஆனால், இந்தியா, எரிசக்தி செலவுகளை குறைக்கவும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் தேவையானவற்றை மட்டும் தான் செய்கிறது என்பதை குகல்மேன் சுட்டிக்காட்டினார்.

இக்கட்டான சூழலில் இந்தியா

சமீபத்தில் அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசிய போது மிகவும் கவனமானத் தொனியை வெளிப்படுத்தினார்.

இந்தியா ஒரு ‘உத்தி சார்ந்த கூட்டாளி’ என்பதை அவர் ஒப்புக்கொண்ட அவர், ஆனால் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெயை வாங்குவது ‘நிச்சயமாக எரிச்சலூட்டும் விஷயம்’ என்றும் கூறினார்.

அதே சமயம் இந்தியாவின் எரிசக்தி தேவைகளையும் ரூபியோ ஏற்றுக்கொண்டார்.

“ஒவ்வொரு நாட்டையும் போலவே, அவர்களும் தங்களது பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும். ரஷ்ய எண்ணெய் தடை செய்யப்பட்டது மற்றும் மலிவானது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ஆனால், இந்தியா இந்த அழுத்தத்தை எவ்வளவு காலம் தாங்கும் என்பது தான் இப்போது உண்மையான கேள்வியாக உள்ளது.

“அமெரிக்கா இந்தியாவின் முக்கிய வர்த்தக கூட்டாளியாக இருந்தாலும், இந்தியப் பொருளாதாரம் மற்ற முக்கிய பொருளாதாரங்களைப் போல வர்த்தகத்தைச் சார்ந்து இல்லை” என்கிறார் லண்டனில் உள்ள சத்தம் ஹவுஸைச் சேர்ந்த மருத்துவர் க்ஷிதிஜ் பாஜ்பாய்.

இந்தியாவின் வர்த்தக-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 45 சதவீதமாக உள்ளது, இது ஐரோப்பிய ஒன்றியத்தின் 92 சதவீதத்தை விடக் குறைவு மற்றும் உலக சராசரியை விடக் குறைவு.

பொருளாதார நெகிழ்வுத்தன்மையை மட்டுமல்லாமல், உத்தி சார்ந்த தெளிவையும் இந்தியா பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ஸ்டீவ் ஹான்கே என்பவர் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தில் பொருளாதார (Applied Economics) பேராசிரியராக பணிபுரிகிறார். அவருக்கு அதிபர் ரொனால்ட் ரீகனின் பொருளாதார ஆலோசகர்கள் குழுவில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

சமீபத்தில், மாட் செகெர்கேவுடன் இணைந்து அவர் எழுதிய புத்தகம், ‘Making Money Work: How to Rewrite the Rules of Our Financial System’

“அதிபர் டிரம்ப் நிலையற்ற ஆளுமை கொண்டவர். இதன் விளைவாக, அவர் காலையில் உங்களுடன் கை குலுக்கிவிட்டு, இரவில் உங்கள் முதுகில் குத்தலாம்” என்கிறார் ஸ்டீவ் ஹான்கே.

இந்தியா உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுவதற்குப் பதிலாக, “ஒரு எதிரி தன்னைத்தானே அழித்துக் கொண்டால், அதில் நீங்கள் தலையிட வேண்டாம்” என்ற நெப்போலியனின் அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்று பேராசிரியர் ஹான்கே கருதுகிறார்.

இந்தியா எந்தப் பிரச்னைகளில் பேரம் பேசாது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவில் 40 சதவீதத்திற்கும் அதிகமான மக்கள் விவசாயத்தை நம்பியுள்ளனர் (மாதிரி படம்)இவை அனைத்திற்கும் மத்தியில், மற்றொரு போர் நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போர், இந்தியாவின் உள்நாட்டுப் பொருளாதாரத்தின் ஆன்மாவைத் தாக்கக்கூடிய வலிமை வாய்ந்தது.

இந்தியா தனது பால் மற்றும் விவசாயத் துறைகளை அமெரிக்காவுக்கு திறந்துவிட வேண்டும் என்று அதிபர் டிரம்பின் குழு விரும்புவதாக, இதுகுறித்து அறிந்த வட்டாரம் கூறுகிறது.

ஆனால் இந்தியாவைப் பொறுத்தவரை இது வெறும் வர்த்தகப் பிரச்னை மட்டுமல்ல.

இந்தியாவின் விவசாயத் துறை அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமானது, சமூக ரீதியாக சிக்கலானது மற்றும் பொருளாதார ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது.

40 சதவீதத்திற்கும் அதிகமான இந்தியர்கள் இன்னும் தங்கள் வாழ்வாதாரத்திற்காக விவசாயத்தையே நம்பியுள்ளனர்.

அதிக மானியத்துடன் கூடிய அமெரிக்க விவசாயப் பொருட்களுக்கு சந்தையை திறப்பது, சந்தையில் பொருட்கள் குவிய வழிவகுக்கும், இது விலை குறைப்புக்கு வழிவகுத்து சிறு விவசாயிகளை அழிக்கக்கூடும்.

2020-21 விவசாயிகள் போராட்டத்தின் நினைவுகள் மோதியின் மனதில் இன்னும் பசுமையாக இருக்கும். இந்த போராட்டம் சர்ச்சைக்குரிய விவசாயச் சட்டங்களை திரும்பப் பெற அரசாங்கத்தை கட்டாயப்படுத்தியது.

இங்கே தோல்வியை ஏற்றுக்கொள்வது நிதி ரீதியாக பொறுப்பேற்பது மட்டுமல்ல, அரசியல் ரீதியாகவும் சிக்கலை உருவாக்கும்.

எனவே, கருத்தில் உறுதியாக இருந்து, ஒரு சரியான நிலைப்பாட்டை கண்டறிய வேண்டும்

இப்போதைக்கு, சமநிலையைப் பேணுவது தான் இந்தியாவின் உத்தியாக உள்ளது.

அதன் அடிப்படையில், வெளிப்படையான சலுகைகள் எதையும் வழங்காமல், தீர்வுக்காக அமெரிக்காவுடன் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது இந்தியா.

கடுமையான அழுத்தத்தின் கீழ் கூட, இந்தியா ‘தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கும்’ என்று குகல்மேன் நம்புகிறார்.

“உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காக அமெரிக்காவிற்கு அதிக சலுகைகளை வழங்காமல் இந்தியா கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறிய குகல்மேன், “இது எளிதான சமரசமாக இருக்கப் போவதில்லை” என்றும் அவர் கூறுகிறார்.

அதற்கு பதிலாக, இந்தியா நீண்ட கால அடிப்படையில் இதனை நோக்குகிறது. இந்தியா, அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கிலிருந்து எண்ணெய் இறக்குமதியை அதிகரித்துள்ளது, இரான் மற்றும் வெனிசுலாவிலிருந்து தன்னைத் தூர விலக்கிக் கொண்டுள்ளது, மேலும் மாற்று எரிசக்தி ஆதாரங்களில் பெருமளவில் முதலீடு செய்துள்ளது.

உலக வர்த்தக அமைப்பின் முக்கியத்துவம் குறைந்துள்ளது

உண்மையில் சோகம் என்னவென்றால், வரி தொடர்பான டிரம்பின் முடிவுகள் இருதரப்பு வர்த்தகத்தை மட்டுமல்ல, உலக வர்த்தக அமைப்பையும் பாதித்துள்ளன.

முன்னர் நாடுகளுக்கு இடையிலான வர்த்தக பிரச்னைகளைத் தீர்த்த ஒரு அமைப்பு, இப்போது கிட்டத்தட்ட செயலற்றதாகிவிட்டது.

“பேச்சுவார்த்தைகள் மூலம் வர்த்தகம் நடத்தப்பட்ட ஒரு காலம் இருந்தது, ஆனால் இப்போது மிரட்டலுக்கான நேரம் இது” என்று இதுகுறித்து ஒரு இந்திய அதிகாரியும் கூறியிருந்தார்.

டிரம்பின் முழு உத்தியும் குறைபாடுகளை உடையது என பேராசிரியர் ஹான்கே கருதுகிறார்.

“டிரம்பின் வர்த்தகப் போருக்குப் பின்னால் உள்ள பொருளாதாரச் சிந்தனை ஒரு சீட்டுக்கட்டால் கட்டப்பட்ட வீட்டைப் போன்றது. அமெரிக்கப் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து, பொருளாதார மந்தநிலையின் விளிம்பில் உள்ளது” என்று அவர் கூறுகிறார்.

இந்த பயம், விரைவில் அமெரிக்க கொள்கையையும் பாதிக்கத் தொடங்கலாம் என்றும் அவர் நம்புகிறார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்தியாவின் பலம் என்ன?

அமெரிக்காவிடம் இருந்து அனைத்து வகையான அச்சுறுத்தல்கள் இருந்த போதிலும், இந்தியா எந்த வகையிலும் பலவீனமாக இல்லை. வலுவான டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் நுகர்வோர் எண்ணிக்கையின் காரணமாக, இந்தியாவை மிரட்டுவது எளிதான காரியமல்ல.

“உலகின் அனைத்து முக்கிய சக்திகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதை இந்தியா நீண்டகாலமாக உத்தி சார்ந்த சுதந்திரமாக பாவித்து வருகிறது” என்று பாஜ்பாய் கூறுகிறார்.

இந்த சக்திகளில் மேற்கு நாடுகள் மட்டுமல்ல, சீனா, ரஷ்யா, மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள வளர்ந்து வரும் நாடுகளும் அடங்குகின்றன.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நம்பிக்கை அளிக்கிறது. இங்கு பணவீக்க விகிதம் கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைந்த அளவில் உள்ளது.

மறுபுறம், வேலைவாய்ப்புகளும் அதிகரித்து வருகின்றன, ஏற்றுமதியும் நல்ல நிலையில் உள்ளது. நாட்டின் பொருளாதாரம் மீண்டும் முன்னேற்றப் பாதையில் திரும்பியுள்ளது போல் தெரிகிறது.

நட்பின் முடிவும் புதிய சகாப்தத்தின் தொடக்கமும்

பட மூலாதாரம், SAUL LOEB/AFP via Getty

படக்குறிப்பு, 2019 ஆம் ஆண்டு ‘ஹவுடி மோதி’ நிகழ்ச்சியின் போது பிரதமர் மோதி மற்றும் அதிபர் டிரம்ப் (கோப்புப் படம்)ஒரு காலத்தில் மோதியுடன் அன்பாக கைகுலுக்கிய டிரம்ப், இப்போது அவருக்கு எதிராகத் திரும்பியது ஏன்?

கடந்த காலத்தைப் பார்த்தால், அதற்கான அறிகுறிகள் ஏற்கனவே தென்படத் தொடங்கிவிட்டதை அறிய முடியும்.

தனிப்பட்ட உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட, நாடுகளுக்கிடையிலான பரஸ்பர உறவுகள் முக்கியம் என்பதை ராஜீய நிபுணர்கள் எச்சரித்திருந்தனர்.

மோதிக்கும் டிரம்புக்கும் இடையிலான நட்புறவு குறித்த ஊடக செய்திகள் நன்றாகத் தோன்றலாம், ஆனால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவின் சிக்கல்களை அது எடுத்துக்காட்டுவதில்லை.

இறுதியில் தனிப்பட்ட உறவுகள் அரசியலில் பலிக்கவில்லை.

டிரம்பின் அரசியலில், உணர்ச்சிகள் ஒரு பொருட்டல்ல.

பாஜ்பாய் சொல்வது போல், “டிரம்பின் வெளியுறவுக் கொள்கையில் நண்பர் அல்லது எதிரி என்று எதுவும் இல்லை.”

எண்ணெய் அல்லது வர்த்தகப் பிரச்னையில் டிரம்புடன் இந்தியா உடன்படாததால் இவை அனைத்தும் நடக்கின்றன என்பது அவரது கருத்து.

இந்த சூழ்நிலையில் இந்தியா என்ன செய்ய வேண்டும்?

“சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களில் ஆர்வமுள்ள நாடுகள் மீது இந்தியா கவனம் செலுத்த வேண்டும்” என்கிறார் பேராசிரியர் ஹான்கே.

அதிகப்படியாக வரி விதிக்கப்படும் இந்த சகாப்தத்தில், பொருளாதார நெகிழ்வுத்தன்மை மற்றும் உத்தி சார்ந்த சுதந்திரம் ஆகியவை அடிப்படையான விஷயமாக மாறிவிட்டன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு