‘பிளாஸ்டிக் நெருக்கடி’ குறித்த ஒப்பந்தத்தை எட்டுவதற்காக சந்திக்கும் நாடுகள் – தீர்வு கிடைக்குமா?

பட மூலாதாரம், Nipah Dennis/Bloomberg/Getty Images

படக்குறிப்பு, நீல நிற உலோகக் கட்டமைப்பு கொண்ட குப்பைத் தொட்டி, பல்வேறு வண்ணங்களில் உள்ள பிளாஸ்டிக் பாட்டில்களால் நிரம்பியுள்ளது. தொட்டியின் மேற்பகுதியில் ஒரு பிளாஸ்டிக் பாட்டில் விளிம்பில் தொங்குகிறது, அதன் மேல் நீல நிற பிளாஸ்டிக் மற்றும் ஒரு நீல கேபிள் கயிறு உள்ளதுஎழுதியவர், எஸ்மே ஸ்டலார்ட்பதவி, காலநிலை மற்றும் அறிவியல் செய்தியாளர், பிபிசி நியூஸ்2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த நூற்றாண்டில் பிளாஸ்டிக் உற்பத்தி பெருவளர்ச்சி கண்டுள்ளது. சிலருக்கு இது ஒரு அதிசயப் பொருளாக இருக்கிறது, ஆனால் மற்றவர்களுக்கோ மாசு ஏற்படுத்தும் ஒரு விஷயமாக இருக்கிறது.

உலகில் உள்ள கடல்களில் கிட்டத்தட்ட 200 டிரில்லியன் பிளாஸ்டிக் துண்டுகள் மிதந்துகொண்டிருப்பதுடன் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் இது மும்மடங்காகக் கூடும் என விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.

பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்கவும் சில பிளாஸ்டிக்குகளில் இருக்கும் அபாயகரமான ரசாயனங்களை நீக்கவும் உலக அளவில் சட்டரீதியாக கட்டுப்படுத்தும் ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை ஏற்படுத்திக்கொள்ள 2022ஆம் ஆண்டில் நாடுகள் ஒப்புக்கொண்டன. ஆனால் இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னரும் எந்த ஒப்பந்தமும் எட்டப்படவில்லை.

செவ்வாய்கிழமை ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐநா மாநாட்டில் நாடுகள் மீண்டும் சந்திக்கவிருக்கின்றன. அதீத பிளாஸ்டிக் பயன்பாட்டை கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து நாடுகள் ஒரு ஒப்பந்தத்தை எட்டமுடியுமா?

பிளாஸ்டிக் ஏன் இவ்வளவு மதிப்புமிக்க பொருளாக இருக்கிறது?

ரப்பர், கொம்பு மற்றும் அரக்கு(ஷெல்லாக்) வடிவில் இயற்கையாக கிடைக்கும் பிளாஸ்டிக்குகளை, மனித சமூகங்கள் நூற்றாண்டுகளாக பயன்படுத்தி வந்திருக்கின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஆனால் புதைபடிவ எரிபொருள்களை பதப்படுத்துவதன் மூலம் தயாரிக்கப்பட்ட செயற்கை பிளாஸ்டிக்குகளின் அதீத உற்பத்தி 20 ஆம் நூற்றாண்டு கொண்டு வரப்பட்டது.

இந்தப் பொருளின் பன்முகத்தன்மை, வலிமை மற்றும் வெப்பத்தை தாங்கும் பண்புகள் அதை கழிவு நீர் குழாய்கள் முதல் உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள், ஆடைகள் வரை ஆயிரக்கணக்கான பயன்பாடுகளுக்கு உகந்ததாக இருக்கிறது.

அதன் முழு தாக்கத்தை புரிந்து கொள்ளாமல் குறுகிய காலத்தில் இது எங்கும் நிறைந்துவிட்டது, என்று கூறுகிறார் தேசிய கடலியல் மையத்தின் ஆராய்ச்சி விஞ்ஞானி ஆலிஸ் ஹார்டன்.

“பூமியில் உயிரினங்கள் இருந்த காலத்தை ஒப்பிடும்போது, பிளாஸ்டிக்குகள் மிகக் குறுகிய காலமே உள்ளன. குழந்தைகளாக இருந்தபோது பிளாஸ்டிக்குகளை பயன்படுத்தாத மனிதர்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். இதுதான் இந்த பொருளை மிகவும் கவலைக்குரியதாக ஆக்குகிறது,” என்று ஹார்டன் கூறினார்.

“நாம் நமது வாழ்க்கையில் ஒவ்வொரு கருவியிலும் அதை பயன்படுத்தும் வகையில் அது பெருகியிருக்கிறது. ஆனால் இப்போது திடீரென இதில் பிரச்னைகள் இருக்கலாம் என்பதை உணர்கிறோம்.”

பிளாஸ்டிக்குகள் பூமியின் மீது எப்படி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?

கடந்த சில பத்தாண்டுகளாக பிளாஸ்டிக் உற்பத்தி அளவு அதீதமாக வளர்ந்துள்ளது. 1950 ஆம் ஆண்டில் இரண்டு மில்லியன் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டன, 2022 ஆம் ஆண்டில் இது 475 மில்லியன் டன்களாக உயர்ந்தது.

பிளாஸ்டிக் மீண்டும் பயன்படுத்தப்படலாம் என்றாலும், மறுசுழற்சி உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கான செலவு மற்றும் அவை எளிதில் கிடைக்காமல் இருப்பது ஆகியவற்றின் காரணமாக மிகக் குறைவாகவே மறுசுழற்சி செய்யப்படுகிறது. நேச்சர் இதழின் பகுப்பாய்வின்படி, அனைத்து பிளாஸ்டிக்குகளில் சுமார் 60% ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன, மற்றும் 10% மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் கடல் சூழலில் திரண்டு, அவற்றை உண்ணக்கூடிய விலங்குகளுக்கு பிரச்னைகளை ஏற்படுத்துவது காட்டப்பட்டுள்ளது.

“விலங்குகள் இதை உணவு என தவறாக புரிந்து கொள்ளலாம், பின்னர் இது அவற்றின் உள் உறுப்புகளை பாதிக்கிறது மற்றும் செரிமான பிரச்னைகளால் மரணத்திற்கு வழிவகுக்கலாம்,” என்று WWF எனப்படும் உலக வனவிலங்கு நிதியத்தின் உலகளாவிய பிளாஸ்டிக் கொள்கைத் தலைவர் ஜய்னப் சதான் கூறினார்.

சுற்றுப்புறத்தில் நுழையும்போது, பெரும்பாலான பிளாஸ்டிக்குகள் சிறிய துண்டுகளாவும் பின்னர் அதை விட சிறிய துண்டுகளாகவும் உடைகின்றன – இவை மைக்ரோபிளாஸ்டிக்குகள் என அழைக்கப்படுகின்றன. இவை உலகின் அனைத்து புவியியல் பகுதிகளிலும், ஆழ்கடலில் இருந்து மலை உச்சிகள் வரை, மற்றும் சோதிக்கப்பட்ட அனைத்து உயிர் அமைப்புகளிலும் காணப்படுகின்றன.

இதன் முழு தாக்கத்தை புரிந்து கொள்ள ஆராய்ச்சி தொடர்கிறது, வெவ்வேறு உயிரினங்கள் மற்றவற்றை விட சிறப்பாக செயல்படுகின்றன. ஆனால் தேசிய கடலியல் மையத்தின் ஹார்டன், விலங்குகள் பாதிக்கப்படத் தொடங்கும் ஒரு வரம்பு உள்ளது என்று எச்சரிக்கிறார்.

“நம் திசுக்களில் [பிளாஸ்டிக்] திரண்டு இருக்கும்போது, நாம் அழற்சி, செல் பாதிப்பு, ஹார்மோன் மாற்றங்களை காணத் தொடங்குகிறோம். இவை ஒரு உயிரினத்தை உடனடியாக கொல்லாதவை, ஆனால் படிப்படியாக சேர்வதன் மூலம் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தலாம், இதனால் அந்த உயிரினங்கள் பலவீனமானவையாகவும், படிப்படியாக நோயுற்று, நோயால் பாதிக்கப்படலாம் அல்லது இறக்கலாம்,” என்று அவர் விளக்கினார்.

பிளாஸ்டிக்குகள் நமக்கு தீங்கானவையா?

நிபுணர் அறிக்கை ஒன்றின் கூற்றுப்படி, பிளாஸ்டிக்குகள் மனித ஆரோக்கியத்திற்கு “வளர்ந்து வரும் அங்கீகரிக்கப்படாத பயங்கரமான ஆபத்து” ஆகும்.

“பிளாஸ்டிக் நெருக்கடி”யால் ஏற்படும் ஆரோக்கிய தொடர்புடைய நோய்கள் மற்றும் மரணங்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் $1.5 டிரில்லியன் (£1.1 டிரில்லியன்) மதிப்பிலான ஆரோக்கிய தொடர்புடைய பாதிப்புகளுக்கு காரணமாக உள்ளதாக லான்செட் கவுன்டவுன் மதிப்பீடு செய்கிறது.

பட மூலாதாரம், Gerald Anderson/Anadolu/Getty Images

படக்குறிப்பு, லேன்செட் கூற்றின்படி பல நாடுகளில் பொதுவாக உள்ள முறைசாரா தூய்மை பணியாளர்களுக்கு தீக்காயங்கள், புற்றுநோய் மற்றும் குழந்தை இறந்து பிறக்கும் அபாயம் உள்ளதுபிளாஸ்டிக் உற்பத்தி செய்வதால் ஏற்படும் காற்று மாசு முதல் நமது உடலில் பிளாஸ்டிக் நுழைவதால் புற்றுநோய், சுவாச கோளாறு, மற்றும் கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கலாம்.

பிளாஸ்டிக்குகளில் சாயங்கள் மற்றும் தீப்பற்றாமல் தடுக்கும் ரசாயனங்கள் உட்பட 16,000-க்கும் மேற்பட்ட ரசாயனங்கள் உள்ளன, அவற்றில் சில நச்சுத்தன்மை மற்றும் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியவை.

பிளாஸ்டிக்கின் ஆபத்துகள் குறித்து ஆதாரங்கள் அதிகரித்து வந்தாலும், பெரும்பாலான பொருட்களில் என்ன உள்ளது என்பது குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை என்பதை லான்செட் அறிக்கை வெளிச்சம் போட்டு காட்டுகிறது. பிளாஸ்டிக் ரசாயனங்களில் கால் பகுதிக்கு மட்டுமே அவற்றின் தாக்கம் குறித்த தரவுகள் உள்ளன. ஆனால் சோதிக்கப்பட்டவற்றில் 75% “மிகவும் ஆபத்தானவை” என கண்டறியப்பட்டுள்ளன.

நாடுகள் எதை ஒப்புக்கொள்ள முயல்கின்றன?

இந்த பிரச்னையை எதிர்கொள்ள இரண்டு ஆண்டுகளில் ஒரு சர்வதேச ஒப்பந்தம் தேவை என்பதை நாடுகள் 2022ஆம் ஆண்டு ஒப்புக்கொண்டன.

ஐந்து சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு எந்த ஒப்பந்தமும் கையெழுத்தாகமலே 2024 டிசம்பரில் அந்த காலக்கெடு கடந்துவிட்டது.

ஒரு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முயற்சியாக செவ்வாய்க்கிழமை, 170-க்கும் மேற்பட்ட நாடுகள் மீண்டும் சந்திக்கின்றன.

அவர்கள் ஒப்புக்கொள்ள முயற்சிக்கும் முக்கிய பிரச்னைகள் பின்வருவனவற்றை உள்ளடக்கியவை:

ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகளின் உற்பத்தி அளவை குறைப்பதற்கான இலக்குகள்

பிளாஸ்டிக்கில் உள்ள மிகவும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களுக்கு தடைகள்பிளாஸ்டிக் பொருட்களின் வடிவமைப்பு குறித்த உலகளாவிய பொதுவான வழிகாட்டுதல்இந்த முயற்சிக்கு நிதியளித்தல்உலகளாவிய பிளாஸ்டிக் ஒப்பந்தத்திற்கான வணிக கூட்டணியை இணைந்து ஒருங்கிணைக்கும் எலன் மக்ஆர்தர் அறக்கட்டளையின் பிளாஸ்டிக் மற்றும் நிதி நிர்வாகத் தலைவர் ராப் ஆப்சோமர், “நிலையான வடிவமைப்பு தரங்களை பூர்த்தி செய்யவேண்டிய பொருட்கள், மறுசுழற்சியை மேம்படுத்தவும், செலவுகளை சேமிக்கவும், முதல் பயன்பாட்டு பிளாஸ்டிக்குகளுக்கான தேவையை குறைக்கவும் உதவும்,” என பிபிசியிடம் கூறினார்,

“ஒரு எடுத்துக்காட்டாக, ஒரு பான பாட்டில், அது வண்ணமயமாக இருந்தால், மறுசுழற்சி செய்யப்பட்ட பொருளை விற்கும்போது அதன் மதிப்பு, வண்ணமற்ற தெளிவான பாட்டிலின் மதிப்பில் பாதியாக இருக்கும்,” என்று அவர் விளக்கினார்.

பிரிட்டன் உட்பட கிட்டத்தட்ட 100 நாடுகள், பிளாஸ்டிக் உற்பத்தி அளவை கட்டுப்படுத்துவதற்கு உறுதியளிக்கும் ஒரு “உயர் நோக்கமுள்ள ” ஒப்பந்தத்தை வலியுறுத்துகின்றன.

ஆனால் குறைவாக உற்பத்தி செய்வதன் மீது அல்லாமல் மறுசுழற்சியின் மீது பேச்சுவார்த்தை கவனம் செலுத்தவேண்டும் என விரும்பும் ரஷ்யா மற்றும் செளதி அரேபியா உள்ளிட்ட எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் குழுவிடமிருந்து கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.

நாடுகள் பசுமை தொழில்நுட்பங்களை நோக்கி நகரும் நிலையில் உலகளாவிய ஆற்றல் மற்றும் போக்குவரத்து அமைப்புகளில் எண்ணெய்க்கான தேவை அடுத்த சில ஆண்டுகளில் உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையில் எண்ணெய் தொழில்களுக்கு வளர்சி தரக்கூடிய எஞ்சிய சில சந்தைகளில் பிளாஸ்டிக் ஒன்றாக இருக்கக்கூடும். உற்பத்தியை கட்டுப்படுத்தும் எந்த முயற்சிகளும் பெட்ரோலிய நாடுகளுக்கு குறுகிய கால பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தலாம்.

ஆனால் தெளிவான உலகளாவிய ஒழுங்குமுறைகள் இல்லாதது பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களுக்கு, பாதிப்பை ஏற்படுத்துகிறது.

“இது ஒரு அடிப்படை ஆபத்து. தங்கள் பிராண்ட் பெயருடன் உள்ள பேக்கேஜ்கள் வீதிகளிலும் கடல்களிலும் குப்பையாக இருப்பதை வணிக நிறுவனங்கள் விரும்பவில்லை,” என்று ஆப்சோமர் கூறினார்.

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் பிளாஸ்டிக் குறித்து ஏற்படுத்தப்படும் நூற்றுக்கணக்கான புதிய தரங்களுக்கு இணங்க இருப்பதை உறுதி செய்ய ஏற்படும்செலவும் நிறுவனங்களுக்கு உள்ளது என்று அவர் கூறினார்.

மறுசுழற்சி மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்தும் செலவை சமாளிக்க அரசுகள் தங்கள் வணிகங்களுக்கு ஒருங்கிணைந்த வரிகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்று நெஸ்லே மற்றும் யூனிலீவர் போன்ற உலகின் மிகப்பெரிய பிளாஸ்டிக் பயன்படுத்துபவர்களை உள்ளடக்கிய வணிக கூட்டணி வலியுறுத்துகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.பிளாஸ்டிக் கழிவுகளை குறைக்க நீங்கள் என்ன செய்யலாம்?

சுற்றுச்சூழலில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மிகப்பெரியதாக இருக்கிறது. நமது அன்றாட நுகர்வில் ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்குகள் பெரும்பாலும் உணவு பேக்கேஜ் மூலம் வருகிறது.

உணவு பார்சல் வாங்குகிறீர்கள் என்றால் மீண்டும் பயன்படுத்தக்கூடிய கொள்கலன் அல்லது கோப்பையை எடுத்துச் செல்லலாம், மேலும் உணவு வாங்கும்போது பழங்கள் மற்றும் காய்கறிகளை எடைபோட மீண்டும் பயன்படுத்தக்கூடிய சீலிடக்கூடிய பையை எடுத்துச் செல்லலாம்.

சுற்றுச்சூழலில் உள்ள மைக்ரோபிளாஸ்டிக்குகளில் கால் பகுதிக்கு மேல் கார் டயர்களில் இருந்து வருவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. முடிந்தவர்கள் உள்ளூர் கடைகளுக்கு நடந்து செல்லலாம் அல்லது சைக்கிளில் செல்லலாம், நண்பர்கள் அல்லது அண்டை வீட்டாருடன் கார் பயணங்களை பகிர்ந்து கொள்வதும் உதவும்.

மைக்ரோபிளாஸ்டிக்குகளாக எளிதில் உடையும் பிளாஸ்டிக்குகளை தவிர்க்கவும் – உதாரணமாக, சூவிங் கம்.

பிளாஸ்டிக்கிற்கு மாற்றுப் பொருட்கள் பல இன்னமும் கிடைக்கின்றன, இதனால் நீங்கள் திருவிழாக்களில் இன்னமும் மகிழ்ந்து கொண்டாடலாம்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு