மட்டக்களப்பு, ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகிழவெட்டுவான் பகுதியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை யானைத் தாக்குதலில் இளம் தாய் ஒருவர் உயிரிழந்ததுடன், அவரது மூன்று வயது பெண் குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளது.

உயிரிழந்த பெண் மகிழவெட்டுவானைச் சேர்ந்த ரவிச்சந்திரன் பசுபதி (வயது 35) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள வீட்டு முற்றத்தில் தனது மூன்று வயது பெண் குழந்தையுடன் தாய் இருந்தபோது, வீட்டிற்குள் புகுந்த யானை அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது. 

இதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.

இதனையடுத்து, பொலிஸார் உயிர் தப்பிய குழந்தையை மீட்டதுடன், உயிரிழந்த தாயின் சடலத்தை மீட்டு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.