பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அன்டோனோவ் ஏஎன் 26 விமானம் புருலியாவில் ஆயுதங்களை வீசியது.எழுதியவர், ரெஹான் ஃபசல்பதவி, பிபிசி இந்திஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்தச் சம்பவம் 1995-ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் நடந்தது.

டிசம்பர் 17-ம் தேதி இரவு, சுமார் நான்கு டன் எடையுள்ள ஆபத்தான ஆயுதங்களை ஏந்திய ரஷ்ய அன்டோனோவ் ஏஎன் 26 (Antonov AN-26) சரக்கு விமானம் கராச்சியிலிருந்து டாக்காவுக்கு புறப்பட்டது.

அந்த விமானத்தில் எட்டு பேர் பயணம் செய்தனர். அவர்களில் டென்மார்க்கைச் சேர்ந்த கிம் பீட்டர் டேவி, பிரிட்டனில் இருந்து வந்த ஆயுத வியாபாரி பீட்டர் ப்ளீச், சிங்கப்பூரில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தீபக் மணிகன் மற்றும் ஐந்து விமான பணியாளர்கள் இருந்தனர்.

அந்த ஐந்து பணியாளர்களும் ரஷ்ய மொழி பேசக்கூடிய லாட்வியாவின் குடிமக்கள். விமானம் வாரணாசியின் பாபத்பூர் விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்பியது.

அப்போது, விமானத்தில் ஏற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மூன்று பாராசூட்டுகள் இணைக்கப்பட்டன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

சிபிஐயிடம் அளித்த வாக்குமூலத்தில் பீட்டர் ப்ளீச் இந்த விவரங்களை ஒப்புக்கொண்டதுடன், கராச்சிக்கு வருவதற்கு முன்பே பல்கேரியாவின் புர்காஸ் நகரத்தில் ஆயுதங்கள் விமானத்தில் ஏற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

“வாரணாசியில் இருந்து புறப்பட்ட விமானம், கயா அருகே தனது பாதையை மாற்றியது. புருலியா என்ற மேற்கு வங்கத்தின் பின்தங்கிய மாவட்டத்தை அடைந்ததும், அது மிகவும் தாழ்வாக பறக்கத் தொடங்கியது. அங்கு, பாராசூட்டுகளுடன் இணைக்கப்பட்ட மூன்று பெரிய மரப் பெட்டிகள் கீழே விடப்பட்டன. அவை நூற்றுக்கணக்கான ஏகே-47 துப்பாக்கிகளால் நிரம்பியிருந்தன” என மூத்த பத்திரிகையாளர் சந்தன் நந்தி தனது புகழ்பெற்ற ‘தி நைட் இட் ரெய்ன்ட் கன்ஸ்’ என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

“இந்த ஆயுதங்கள் ஆனந்த் மார்க்கின் தலைமையகத்திற்கு அருகிலுள்ள ஜல்டா கிராமம் அருகே கீழே விடப்பட்டன. அவற்றை வீசியவுடன், விமானம் மீண்டும், அதன் திட்டமிட்ட பாதையில் பறக்கத் தொடங்கியது. பின்னர் கல்கத்தாவில் தரையிறங்கி எரிபொருள் நிரப்பிய பிறகு, தாய்லாந்தின் புக்கெட்டுக்குப் பறந்தது.”

பட மூலாதாரம், Rupa

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் சந்தன் நந்தி எழுதிய ‘தி நைட் இட் ரெய்ன்ட் கன்ஸ்’ என்ற புத்தகம் பீட்டர் ப்ளீச்சின் நோக்கம் என்ன?

சந்தன் நந்தி மற்றும் பிரிட்டிஷ் பத்திரிகையாளர் பீட்டர் போப்ஹாம் கூறுவதன் படி, விமானத்தில் இருந்த ஆயுத வியாபாரி பீட்டர் ப்ளீச், பிரிட்டிஷ் உளவுத்துறை அமைப்பான எம்ஐ-6 உடன் (MI6) தொடர்புடையவர். சில நேரம் அவர்களுக்காக உளவுப் பணிகளில் ப்ளீச் உதவியதாகவும் கூறப்படுகிறது.

வாரணாசியிலிருந்து விமானம் புறப்பட்டபோது, தனது விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு விடுமோ என்று ப்ளீச் அஞ்சினார்.

“விமானம் புறப்படுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, ஒரு டேனிஷ் வாடிக்கையாளர் அதிக அளவிலான ஆயுதங்களை வாங்க விரும்புவதாக என்னை அணுகினார் என்று பீட்டர் ப்ளீச் கூறினார்.

ஆயுதங்கள் எந்த நாட்டுக்காகவுமல்ல, ஒரு தீவிரவாத அமைப்புக்காகவே என்பதைக் கண்டறிந்ததும், அவர் இந்த விவரங்களை பிரிட்டிஷ் உளவுத்துறைக்கு தெரிவித்தார்” என பிரிட்டனின் ‘தி இன்டிபென்டன்ட்’ செய்தித்தாளின் 2011 மார்ச் 6-ம் தேதி வெளியான ‘Up in Arms: The Bizarre Case of the British Gun Runner, the Indian Rebels and the Missing Dane’ என்ற கட்டுரையில் பீட்டர் போப்ஹாம் எழுதியுள்ளார்.

“பீட்டர் ப்ளீச் தனது வேலையைத் தொடர வேண்டும் என பிரிட்டிஷ் உளவுத்துறை அவருக்கு அறிவுரை வழங்கியது. அவர் தீவிரவாதத்தை எதிர்க்கும் ஒரு மறைமுக நடவடிக்கையில் பங்கேற்கிறார் என்றும், ஆயுதங்கள் வீசப்படுவதற்கு முன்பே இந்திய பாதுகாப்பு அமைப்புகள் அதை இடைமறித்து நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் நம்பி, அந்த திட்டத்தில் அவர் சேர்ந்தார்.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆயுத வியாபாரி பீட்டர் ப்ளீச்புருலியாவில் ஆயுதங்கள் வீசப்பட்டன

ஆனால் அந்த பணி தொடங்குவதற்கு முன்பு, அதைத் தடுக்க இந்திய நிர்வாகம் முயற்சி செய்ததற்கான எந்த அறிகுறிகளும் இல்லை.

“வாரணாசியில் இருந்து விமானம் புறப்பட்டதும், பீட்டர் ப்ளீச் கவலையடைந்தார். இந்தியர்கள் விமானத்தைச் சுட்டு வீழ்த்த முடிவு செய்திருக்கலாம் என அவர் நினைத்தார். தனது முடிவு நெருங்கிவிட்டதாக அவர் அஞ்சினார்”என பீட்டர் போப்ஹாம் எழுதியுள்ளார்.

ஆனால் இரவு நெருங்கியதும், விமானம் இருளில் ஆயுதங்களை வீசியது. அப்போது எதுவும் நடக்கவில்லை. பீட்டர் ப்ளீச்சின் பார்வையில், தனது பிரச்னைகள் முடிவடைந்துவிட்டன என்று தோன்றியது. ஆனால் உண்மையில், அப்போது தான் அவரது சிக்கல்கள் தொடங்கின.

நூற்றுக்கணக்கான ஏகே-47 துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள் தரையில் சிதறிக் கிடந்தன.

டிசம்பர் 18 ஆம் தேதி காலை, புருலியா மாவட்டத்தில் உள்ள கனுதி கிராமத்தைச் சேர்ந்த சுபாஷ் தண்டுபாய் தனது கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.

திடீரென்று அவரது கண்கள் ஒரு மேட்டின் முன் இருந்த புல்வெளியில் ஏதோ ஒன்று பிரகாசித்துக் கொண்டிருந்ததைக் கண்டன.

சுபாஷ் அருகில் சென்றபோது, அவர் இதுவரை பார்த்திராத ஒரு துப்பாக்கியின் மீது பார்வை பதிந்தது. அங்கு சுமார் 35 துப்பாக்கிகள் சிதறிக்கிடந்தன. இதைக் கண்டதும், அவர் உடனே ஜால்டா காவல் நிலையம் நோக்கி ஓடினார், என ஜால்டா காவல் நிலையத்தின் வழக்கு நாட்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“செய்தியைக் கேள்விப்பட்டவுடன், நான் உடனே என் சீருடையை அணிந்து சிட்டாமு கிராமம் நோக்கி புறப்பட்டேன். அங்கு சென்றபோது, தரையில் கிடந்த ஆலிவ் நிற மரப் பெட்டிகள் உடைக்கப்பட்டிருந்தன. அவற்றில் வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் அனைத்தும் காணாமல் போயிருந்தன,” என்று நிலையப் பொறுப்பாளர் பிரணவ் குமார் மித்ரா, சந்தன் நந்தியிடம் தெரிவித்தார்.

“என்னுடைய சக ஊழியர்களில் ஒருவர் இந்திய ராணுவ வீரரை அழைத்தார். எனது வேண்டுகோளின் பேரில், அவர் அருகிலுள்ள குளத்தில் மூழ்கினார். அவர் வெளியே வந்தபோது, அவர் கையில் ஒரு டாங்கியை அழிக்கும் கையெறி குண்டு இருந்தது. அதன் பிறகு தான் முதல் முறையாக இது ஒரு தீவிரமான விஷயம் என்பதை உணர்ந்தேன்.”

பின்னர், ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை காவல்துறையிடம் திருப்பித் தர வேண்டும் என்று ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பின்னர், பல ஏகே 47 துப்பாக்கிகள் அருகிலுள்ள கிராமங்களான கட்டங்கா, பெலாமு, மராமு, பகாடோ மற்றும் பெராதிஹ் ஆகிய இடங்களில் கிடந்தன.

ஒரு நபர் வந்து, வயலில் ஒரு பெரிய நைலான் பாராசூட் கிடப்பதாகவும், அதன் கீழே பல துப்பாக்கிகள் இருப்பதாகவும் கூறினார்.

கல்கத்தா நீதிமன்றம் பிரிட்டன், பல்கேரியா, லாட்வியா மற்றும் தென்னாப்பிரிக்காவின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பிய கோரிக்கை கடிதத்தில், “மொத்தம் 300 ஏகே-47 துப்பாக்கிகள், 25 9 மிமீ பிஸ்டல்கள், இரண்டு 7.62 ஸ்னைப்பர் துப்பாக்கிகள், 2 இரவு நேரங்களில் பயன்படும் தொலைநோக்கிகள், 100 கையெறி குண்டுகள் மற்றும் 16000 சுற்று தோட்டாக்கள் புருலியா மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டன. இவை அனைத்தின் மொத்த எடை 4375 கிலோ” என்று கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புருலியாவில் கீழே வீசப்பட்ட ஆயுதங்கள்வலுக்கட்டாயமாக மும்பையில் தரையிறக்கப்பட்ட விமானம்

தாங்கள் வீசிய ஆயுதங்கள், இந்திய பாதுகாப்புப் படையினரின் கைகளுக்கு கிடைத்துவிட்டதைக் கண்டதும், அந்த செயலில் ஈடுபட்டவர்களுக்கு வேறு மாதிரியான விஷயங்கள் நடக்கத் தொடங்கின.

இதையெல்லாம் மீறி, அந்த விமானம் மீண்டும் கராச்சிக்குப் புறப்பட்டது. புக்கெட்டிலிருந்து திரும்பிய விமானம், கல்கத்தாவிற்குப் பதிலாக சென்னையில் எரிபொருள் நிரப்பி அங்கிருந்து புறப்பட்டது.

மும்பை நகரத்திலிருந்து சுமார் 15–20 நிமிடங்கள் தொலைவில் அந்த விமானம் இருந்தபோது, விமானி அறை வானொலியில் ஒரு குரல் ஒலித்தது. அதில், இந்திய விமானப்படையின் மிக்-21 போர் விமானம், ரஷ்ய விமானத்தை மும்பை விமான நிலையத்தில் உடனே தரையிறக்க உத்தரவிடப்பட்டது.

“விமானம் தரையிறங்கத் தொடங்கியதும், கிம்மின் முகத்தில் கவலை அதிகரித்தது. அவர் தனது பெட்டியில் இருந்து சில காகிதங்களை எடுத்து, அவற்றை சிறிய துண்டுகளாகக் கிழித்து எரித்தார். இதன் பிறகு, அவர் அவற்றை கழிப்பறைக்கு எடுத்துச் சென்று அவற்றை அப்புறப்படுத்தினார்” என்று சந்தன் நந்தி குறிப்பிட்டுள்ளார்.

“பின்னர் அவர் தனது பெட்டியில் இருந்து நான்கு ஃப்ளாப்பி டிஸ்க்குகளை எடுத்து துண்டுதுண்டாக உடைத்தார். பின்னர் ஒரு ப்ளீச் லைட்டரை எடுத்து தீ வைத்தார். அவர் இதனைச் செய்து முடிக்கும் நேரத்தில், விமானத்தின் சக்கரங்கள் மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையைத் தொட்டன.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புருலியா ஆயுத வழக்கின் மூளையாக செயல்பட்ட கிம் டேவிதப்பித்த கிம் டேவி

விமானம் சஹார் சர்வதேச விமான நிலையத்தில் (மும்பை) தரையிறங்கிய போது, இரவு 1:40 மணி. ஆனால் விமானத்திற்காக அங்கு ஒரு நபர் கூட காத்திருக்கவில்லை.

10 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டு பேருடன் ஒரு விமான நிலைய ஜீப் அங்கு வந்ததாக, பீட்டர் ப்ளீச் சிபிஐக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருந்தார்.

“டேவியும் ப்ளீச்சும் அந்த இரண்டு அதிகாரிகளிடமும் பேசிக்கொண்டே இருந்தனர். இந்திய அதிகாரிகளின் முட்டாள்தனமும் திறமையின்மையும் உச்சத்தில் இருந்தது. டேவி அவர்களிடம் தரையிறங்கும் கட்டணத்தைச் செலுத்த வேண்டுமா என்று கேட்டபோது, அந்த அதிகாரியின் ஆம் என்று பதில் கூறினார்” என்று சந்தன் நந்தி பதிவு செய்துள்ளார்.

“விமானம் தரையிறங்கிய சுமார் 45 நிமிடங்களுக்குப் பிறகு, மற்றொரு ஜீப் அங்கு வந்தது, அதில் 6 அல்லது 7 பேர் சாதாரண உடையில் இருந்தனர். அவர்கள் தங்களை சுங்கத்துறை அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு விமானத்தைச் சோதனையிட விரும்புவதாகக் கூறினர்.”

“சுங்கத்துறை அதிகாரிகள் விமானத்திற்குள் நுழைந்த பிறகு, டேவி விமானத்திற்குள் நுழைந்தார். அவர் ஒரு கோப்பில் இருந்த காகிதங்களை எடுத்துக்கொண்டு அமைதியாக விமானத்திலிருந்து இறங்கினார். இதற்குப் பிறகு, யாரும் டேவியைக் காணவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு, விமானம் 50 முதல் 70 ஆயுதமேந்திய பாதுகாப்புப் படையினரால் சூழப்பட்டது.”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் டேவியை நாடு கடத்த இந்தியா முயற்சித்தது.விமான குழுவினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

விமானத்தின் குழுவினருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

பீட்டர் ப்ளீச்சும், குழு உறுப்பினர்கள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுத்ததற்காக விசாரிக்கப்பட்டனர்.

இரண்டு ஆண்டுகள் நீடித்த விசாரணைக்குப் பிறகு, அனைவருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு கிம் டேவி மீண்டும் காணப்பட்டார். கிம் டேவி டென்மார்க் முழுவதும் பயணம் செய்து தனது பணியைப் பற்றி பெருமையாகப் பேசினார்.

டேவியை நாடு கடத்த இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது, ஆனால் அந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தன.

பட மூலாதாரம், Getty Images

டேவியின் பரபரப்பான கூற்று

“இந்த முழு சம்பவத்திலும் இந்திய உளவுத்துறை நிறுவனமான ராவுக்கு (RAW) பங்கு இருந்தது. ஆயுதங்கள் கீழே வீசப்பட்டது குறித்து இந்திய அரசாங்கத்திற்கு முன்கூட்டியே தகவல் தெரியும். இந்த நடவடிக்கை ரா மற்றும் பிரிட்டிஷ் உளவுத்துறை நிறுவனமான எம்ஐ6 (MI6) ஆகியவற்றின் கூட்டு நடவடிக்கையாகும்” என்று ஏப்ரல் 27, 2011 அன்று ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் டேவி கூறினார்.

அவரது கருத்தை அரசாங்கம் மறுத்தது.

இந்த சம்பவத்தில் எந்த அரசு நிறுவனமும் ஈடுபடவில்லை என்று சிபிஐ கூறியது. பின்னர், கிம் டேவி ‘தே கால்டு மீ டெரரிஸ்ட்’ ( ‘They Called Me Terrorist’) என்ற புத்தகத்தை எழுதினார்.

இதில், “பிகாரைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி மூலம் இந்தியாவிலிருந்து தப்பிச் செல்ல அவருக்கு உதவி செய்யப்பட்டது. அவரது உதவியுடன், விமானப்படை ரேடார்கள் சிறிது நேரம் ஆஃப் செய்யப்பட்டன, இதனால் ஆயுதங்கள் எந்தத் தடையும் இல்லாமல் வீசப்பட்டன. இந்த ஆயுதங்களின் நோக்கம் ஆனந்த் மார்கா மூலம் மேற்கு வங்கத்தில் வன்முறையைப் பரப்புவது. அதை ஒரு சாக்காகப் பயன்படுத்தி ஜோதி பாசு தலைமையிலான மாநில அரசு பதவி நீக்கம் செய்யப்படலாம்” என்று கிம் டேவி கூறியிருந்தார்.

கிம் டேவியின் கூற்றுகளுக்குப் பிறகும், அதற்கு முன்னதாகவும் இதுபோன்ற அனைத்து வகையான குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்பு தெரிவித்த ஆனந்த மார்கா, சிலர் தங்களது அமைப்பின் மீது அவதூறு பரப்ப விரும்புவதாகக் கூறினார்.

ஆயுதங்கள் வீசப்பட்ட பிறகு காவல்துறை விசாரணை நடத்தியது. ஆனால், அங்கு அவர்கள் எந்த ஆயுதங்களையும் கண்டுபிடிக்கவில்லை என்று ஆனந்த மார்கா கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக, இந்திய நாடாளுமன்றத்தால் அமைக்கப்பட்ட குழுவின் சில எம்.பி.க்கள், இந்திய விமானப்படை ரேடார்கள் 24 மணி நேரமும் செயல்படுகின்றனவா என்று கேட்டபோது, இந்திய விமானப்படை பிரதிநிதி ஏர் வைஸ் மார்ஷல் எம். மெக்மஹோன், “ரேடர்கள் எரிந்து போகும் அபாயம் இருப்பதால், அவற்றை 24 மணி நேரமும் செயலில் வைத்திருப்பது சாத்தியமில்லை” என்று பதிலளித்தார்.

(-இந்த வழக்கு தொடர்பான மூன்றாவது அறிக்கை, பக்கம் 7)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் டேவி எழுதிய “அவர்கள் என்னை பயங்கரவாதி என்று அழைத்தார்கள்” எனும் புத்தகம்இந்தியாவுக்கு முன்கூட்டியே தகவல் கிடைத்ததது – பிரிட்டன் உள்துறை அமைச்சர்

தனது விமானம் எப்போது எங்குச் செல்லும் என்பதைக் குறித்து இந்திய நிர்வாகம் முன்கூட்டியே தெரிந்து வைத்திருந்தது என்றும், விமானத்தில் எத்தனை பேர் இருந்தனர், விமானத்தில் எத்தனை ஆயுதங்கள் இருந்தன, அவற்றை எங்கு வீச வேண்டும் என்பதும் அவர்களுக்குத் தெரியும் என்றும் கிம் டேவி கூறினார்.

எதிரி நாட்டிலிருந்து ஆயுதங்கள் நிரம்பிய ஒரு விமானத்தை, இந்திய அரசாங்கத்திற்குத் தெரியாமல் நாட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என , எந்த புத்தியுள்ள நபராவது முயற்சி செய்வாரா?” என்று கிம் டேவி கேள்வி எழுப்பினார்.

“முன்னாள் ரா அதிகாரி ஆர்.கே. யாதவ் தனது ‘மிஷன் ரா’ என்ற புத்தகத்தில், ‘பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் மைக்கேல் ஹோவர்ட் இந்தியா வந்தபோது, விமானத்தில் இருந்து ஆயுதங்களை கீழே வீசும் திட்டம் குறித்து பிரிட்டிஷ் அரசு முன்கூட்டியே இந்தியாவுக்கு தகவல் அளித்ததாக அவர் பத்திரிகையாளர் சந்திப்பில் தெளிவாகக் கூறினார். இதனால் கிம் டேவியின் கூற்றுகள் உறுதி செய்யப்பட்டன’ என்று எழுதியுள்ளார்.”

“இத்தனைத் தகவல்கள் இருந்த போதும் , விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஏன் விமானத்தை கல்கத்தாவில் தரையிறக்க அனுமதித்தது? ராவுக்கு இதுகுறித்து முன்கூட்டியே தகவல் தெரிந்திருந்தால், உளவுத்துறை, உள்ளூர் காவல்துறை அல்லது சுங்கத் துறை போன்ற பிற அரசு நிறுவனங்கள் வாரணாசியிலேயே விமானத்தை ஏன் சோதனை செய்யவில்லை?”

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் ரா அதிகாரியான ஆர்கே யாதவ் எழுதிய ‘மிஷன் ரா ‘ புத்தகம்.பீட்டர் ப்ளீச் மற்றும் குழுவினரின் விடுதலை

“ரஷ்ய விமானம் விமான நிலைய கட்டடத்திலிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் வேண்டுமென்றே நிறுத்தப்பட்டது. பாதுகாப்பு மற்றும் புலனாய்வு அதிகாரிகள் அங்கு சென்றபோது, விமானத்தின் கதவு திறந்திருந்தது. டேவி, விமான நிலையத்தின் அரசு வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். சுங்கம் அல்லது குடியேற்ற சோதனை எதுவும் இல்லாமல், அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல அனுமதிக்கப்பட்டார்” என்று ஆர்.கே. யாதவ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஒரு வெளிநாட்டு விமானம் இந்திய வான்வெளியில் அத்துமீறி நுழைந்து, பாராசூட் மூலம் ஆயுதங்களை நாட்டுக்குள் வீசுவது என்பது கற்பனைக்கு அப்பாற்பட்டதாகத் தெரிகிறது.

“விமானம் வலுக்கட்டாயமாக தரையிறக்கப்பட்டிருந்தாலும், இந்த முழு திட்டத்தின் மூளையாக இருந்த கிம் டேவி அல்லது நீல்சன், இந்திய பாதுகாப்பு அமைப்புகளின் கண் முன்னே மும்பை சஹார் சர்வதேச விமான நிலையத்திலிருந்து மர்மமான சூழ்நிலையில் தப்பிச் சென்றது புரிந்துகொள்ள முடியாத விஷயமாக உள்ளது” என்று சந்தன் நந்தி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிம் டேவியின் கூட்டாளியான பீட்டர் ப்ளீச், கைது செய்யப்பட்ட பிறகு, தன்னை விடுவிப்பார்கள் என்ற நம்பிக்கையில் இந்த சம்பவத்தை வெளிப்படுத்தினார்.

ஆனால், அவர் மீது வழக்கு தொடரப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

2004 ஆம் ஆண்டு பிரிட்டனின் டோனி பிளேர் அரசு இந்திய அரசிடம் மன்னிப்பு கோரிய போது, இந்தியாவின் அப்போதைய குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவருக்கு மன்னிப்பு வழங்கி, பீட்டர் ப்ளீச்சை விடுவித்தார். அப்போது அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

அதற்கு 4 ஆண்டுகள் முன்பாகவே, அதாவது 2000-ஆம் ஆண்டு ஜூலை 22-ஆம் தேதி, ரஷ்ய அரசாங்கத்தின் வேண்டுகோளின் பேரில், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்றவர்கள் விடுவிக்கப்பட்டிருந்தனர். அதே ஆண்டில், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இந்தியாவுக்கு வரவிருப்பதை முன்னிட்டு, ஒரு நல்லெண்ண முயற்சியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. அப்போதும் அடல் பிஹாரி வாஜ்பாய் தான் இந்தியாவின் பிரதமராக இருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமராக இருந்த டோனி பிளேர்கிம் டேவியை ஒப்படைக்க டென்மார்க் மறுப்பு

இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது.

ஆனால், முதல் 5 ஆண்டுகளுக்குப் பிறகு விசாரணையின் வேகம் மெல்லமெல்ல குறைந்தது. ‘வழக்கை தேங்கி நிற்க அனுமதித்தார்கள்’ என்று சந்தன் நந்தி கருதுகிறார்.

“சிபிஐ இயக்குநர் பி.சி. சர்மா பதவியிலிருந்து விலகிய பிறகு, இந்த வழக்கில் எந்த சிபிஐ தலைவரும் ஆர்வம் காட்டவில்லை. 2001 முதல் 2011 வரை விசாரணை முற்றிலும் நின்றுவிட்டது. 2011 ஏப்ரலில், கிம் டேவி கோபன்ஹேகனில் ஒரு நாள் கைது செய்யப்பட்டார். ஆனால், அடுத்த நாளே டேனிஷ் காவல்துறை அவரை விடுவித்தது. இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் இருந்தபோதும், அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்கிறார் சந்தன் நந்தி.

இந்தியாவில் டேவி சித்திரவதை செய்யப்படுவார் என்றும், அவரது மனித உரிமைகள் மீறப்படும் என்றும் அஞ்சியதன் அடிப்படையில், டேவியை இந்தியாவுக்கு அனுப்ப டென்மார்க் நீதித்துறை மறுத்துவிட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கிம் டேவியை இந்தியாவிடம் ஒப்படைக்க டென்மார்க்மறுத்துவிட்டது.விடை தெரியாத பல கேள்விகள்

“முழுமையான விசாரணைக்குப் பிறகு, இந்த திட்டம் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது என்பது வெளிச்சத்திற்கு வந்தது. கிம் டேவியிடம் இரண்டு போலி பாஸ்போர்ட்டுகள் இருந்தன. ஒன்றில் அவரது பெயர் ‘கிம் பால்கிரேவ் டேவி’ என்றும், மற்றொன்றில் ‘கிம் பீட்டர் டேவி’ என்றும் இருந்தது” என்று சந்தன் நந்தி எழுதியுள்ளார்.

இந்த இரண்டு பாஸ்போர்ட்டுகளும் 1991 மற்றும் 1992 ஆம் ஆண்டுகளில் நியூசிலாந்தின் தலைநகரான வெலிங்டனில் வழங்கப்பட்டிருந்தன.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் கழிந்துவிட்டன.

ஆனால், இந்த ஆயுதங்கள் யாருக்காக வீசப்பட்டன? யார் அவற்றை வீசினார்கள், யார் அதற்கு பணம் கொடுத்தார்கள்?

ஆயுதங்களுடன் அந்த விமானம் இந்திய வான்வெளியில் நுழைந்தவுடன் தடுத்து நிறுத்தப்படாதது ஏன்? இந்த ஆயுதங்கள் வீசப்பட்டது குறித்து ரா முன்கூட்டியே அறிந்திருந்ததா, ஆம் என்றால், முன்கூட்டியே தகவல் இருந்தும் ஏன் மற்ற அரசு அமைப்புகளுக்குத் தெரிவிக்கவில்லை?

கிம் டேவி மும்பை விமான நிலையத்தை விட்டு வெளியேற எப்படி அனுமதிக்கப்பட்டார், அவர் தனது நாட்டிலிருந்து டென்மார்க்கிற்கு எப்படி சென்றார்? என்பன போன்ற பல கேள்விகள் இன்னும் விடை தெரியாமல் உள்ளன.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு