Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஓ.பன்னீர்செல்வத்தால் அதிமுக – பாஜக கூட்டணிக்கு எத்தனை தொகுதிகளில் பாதிப்பை ஏற்படுத்த முடியும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், ஒருபுறம் அவருக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் இடையிலான வார்த்தைப் போர் வலுத்துவருகிறது.எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்51 நிமிடங்களுக்கு முன்னர்
ஓ. பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகியிருக்கும் நிலையில், ஒருபுறம் அவருக்கும் பா.ஜ.க. தலைவர்களுக்கும் இடையிலான வார்த்தைப் போர் வலுத்துவருகிறது.
மற்றொரு பக்கம், அவர் கூட்டணி தொடர்பாக என்ன முடிவுகளை எடுக்கப் போகிறார், 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் யார் வாய்ப்புகளைப் பாதிப்பார் என்ற கேள்விகளும் எழுந்திருக்கின்றன. அவருடைய திட்டம் என்ன? யாருடைய வாய்ப்புகளை அவர் பாதிப்பார்?
தே.மு.கூட்டணியில் இருந்து விலகல், ஸ்டாலினுடன் சந்திப்பு
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தனக்கு போதிய மரியாதை இல்லாததாகக் கருதிய ஓ. பன்னீர்செல்வம் கடந்த வாரம் அந்தக் கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.
ஜூலை மாத இறுதியில் தமிழ்நாட்டிற்குப் பிரதமர் வந்த போது, தான் அவரை வாழ்த்தவும் வழியனுப்பவும் அனுமதி கோரி கடிதம் எழுதியும் அவ்வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் இந்த முடிவை அவர் அறிவித்தார். இதற்குப் பிறகு காட்சிகள் வேகமாக நகர ஆரம்பித்தன.
அதே நாள் மாலையில், முதல்வர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்து நலம் விசாரித்த ஓ. பன்னீர்செல்வம் அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, எதிரிகளும் இல்லை என்று பதிலளித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
முதல்வருடனான அவரது சந்திப்பும் அதற்குப் பிறகு அவர் அளித்த பேட்டியும் குழப்பமான சமிக்ஞைகளை அனுப்பின.
படக்குறிப்பு, அ.தி.மு.கவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்டபோது அவருடன் பெரும் எண்ணிக்கையிலான நிர்வாகிகள் வரவில்லை என்றாலும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவருக்கு வாக்குகள் இருக்கின்றனபாஜகவுடன் ஓபிஎஸ் வார்த்தைப் போர்
ஓ. பன்னீர்செல்வத்தின் அதிருப்தி குறித்தும் கூட்டணியிலிருந்து வெளியேறியது குறித்தும் பேசிய நயினார் நாகேந்திரன், அவர் பிரதமரைச் சந்திக்க விரும்புவது தனக்குத் தெரிந்திருந்தால் அதற்கு ஏற்பாடு செய்திருப்பேன் எனக் குறிப்பிட்டார்
இதற்குப் பதிலளித்த ஓ. பன்னீர்செல்வம், இது தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பியதாகவும் பல முறை அழைத்தும் தனது அழைப்புகளை அவர் ஏற்கவில்லையென்றும் குறிப்பிட்டார்.
பிரதமரைச் சந்திக்க வேண்டுமெனக் கோரி தான் அனுப்பிய கடிதம் ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டதை தெரிவித்த ஓ. பன்னீர்செல்வம், தன்னுடைய குறுஞ்செய்தியையோ, அழைப்பையோ பார்த்து, அதற்கான ஏற்பாடுகளை நயினார் செய்திருக்கலாம் அல்லது ஊடகங்களில் வெளிவந்த கடிதத்தைப் பார்த்து அதற்கான ஏற்பாட்டைச் செய்திருக்கலாம் என்றார்.
”நயினார் நாகேந்திரன் அப்படி எதையும் செய்யாத நிலையில் நான் பிரதமரைச் சந்திப்பதில் அவருக்கு விருப்பமில்லை என்பது தெளிவாகிறது. நயினார் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் நிலையில், அவர் இனியாவது உண்மை பேச வேண்டும்” எனக் குறிப்பிட்டர் ஓ. பன்னீர்செல்வம்
இதற்குப் பதிலளித்த நயினார் நாகேந்திரன், “அவர் என்னைத் தொடர்பு கொள்ளவில்லை. முதல்வர் ஸ்டாலினைச் சந்திப்பதற்கு முதல் நாள் நான்தான் அவரைத் தொடர்பு கொண்டேன். இதற்கு முன்னால் சட்டமன்றம் நடக்கும்போது பல நேரங்களில் என்னை அழைத்திருக்கிறார். என்னுடைய உதவியாளர்கள் மூலம் என்னிடம் பேசி இருக்கிறார். எனவே, இப்போது அவர் என் மீது குறை சொல்லிருக்கிறார் நான் அவரைப் பற்றி எந்த குறையும் சொல்ல மாட்டேன்” என்றார்.
ஓ. பன்னீர்செல்வம் வெளியேறியது குறித்து அ.தி.மு.க. அதிகாரப்பூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. ஆனால், பா.ஜ.க. தலைவர்கள் ஓ. பன்னீர்செல்வம் சற்று அவசரப்பட்டுவிட்டதாகக் கருதுகிறார்கள்.
செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.கவின் முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், “எங்கள் தலைவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள். எங்கள் தலைவர்களை அவர் குற்றம் சொல்வதை ஏற்க மாட்டோம். ஆனால், ஓ. பன்னீர்செல்வம் சற்று நிதானமாக செயல்பட்டிருக்கலாம்” என்று மட்டும் தெரிவித்திருக்கிறார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த டிடிவி தினகரன், ஓ. பன்னீர்செல்வத்தைச் சமாதானப்படுத்தி அவரை மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என்று கூறியிருக்கிறார்.
பட மூலாதாரம், EPSTamilNad/X
படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, அவரால் தென் மாவட்டங்களிலும் கிழக்கு மாவட்டங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கருதுகிறார்கள்தென் மாவட்டங்களில் செல்வாக்கு?
அ.தி.மு.கவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட போது அவருடன் பெரும் எண்ணிக்கையிலான நிர்வாகிகள் வரவில்லை என்றாலும் தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. 2024ஆம் ஆண்டு தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் சுயேச்சை சின்னத்தில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்ட ஓ. பன்னீர்செல்வத்தால் வெற்றிபெற முடியாவிட்டாலும் 3,42,882 வாக்குகள் பெற்று அதிமுக கூட்டணியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தை பிடித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலினைச் சந்தித்த பிறகு, எழுந்த சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் வகையில் தி.மு.கவுடன் கூட்டணி அமைக்கப் போவதாகக் கூறுவது சரியல்ல என்று கூறி அந்த யூகத்திற்கு இப்போதைக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார் ஓ. பன்னீர்செல்வம். அடுத்ததாக யாருடன் அணி சேர திட்டமிட்டுள்ளார் என்பதை இன்னும் அவர் தெளிவுபடுத்தவில்லை.
ஓ. பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்களைப் பொறுத்தவரை, அவரால் தென் மாவட்டங்களிலும் கிழக்கு மாவட்டங்களிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கருதுகிறார்கள்.
“ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் அ.தி.மு.கவில் இணைய முயற்சித்த போதெல்லாம் காலம் கடந்துவிட்டது, அவர் யாருக்கும் விசுவாசமில்லாதவர் என்றெல்லாம் தனிப்பட்ட முறையிலான தாக்குதலில் இறங்கினார்கள். ஆனால், இப்போது அவருக்கு கிடைக்கும் ஆதரவைப் பார்த்துவிட்டு அவரைக் குறைத்து எடைபோட்டுவிட்டோம், அவரை மீண்டும் கட்சியில் இணைப்பதுதான் நல்லது என்பதை அவர்கள் உணர்வார்கள். பா.ஜ.கவும்கூட அந்த முயற்சியில் ஈடுபடலாம். அது இயல்பானதுதான்.” என்று ஓ. பன்னீர்செல்வம் தலைமையிலான அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் தேர்தல் பிரிவு செயலரான வழக்கறிஞர் ஏ. சுப்புரத்தினம் கூறினார்.
மேலும் தொடர்ந்த அவர், “ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருத்து இருக்கிறது. அது சமுதாயங்களைக் கடந்தது. அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள். இதனால், தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பு இருக்கும். சரியாகச் சொல்வதென்றால் 86 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். அது, அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். மற்றவர்களை வைத்து அதனைச் சரிசெய்ய முடியாது.” என்றார்.
பட மூலாதாரம், TWITTER/H.RAJA
‘கூட்டணிக்கு எதிர்மறையாக இருக்கும்’
சுயாதீன அரசியல் ஆய்வாளரான ராமமூர்த்தி வெங்கட்ரமணியும் இதே கருத்தை எதிரொலிக்கிறார்.
“மேற்கு மாவட்டங்களைப் பொறுத்தவரை அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் வலுவாக இருக்கின்றன. வட மாவட்டங்களைப் பொறுத்தவரை, பா.ம.கவுடன் கூட்டணி ஏற்பட்டால் அங்கும் கணிசமான வலிமை கிடைக்கும். ஆனால் தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை ஓ. பன்னீர்செல்வம் உடனிருப்பதுதான் அக்கூட்டணிக்கு நல்லது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக இருப்பதால் அதனை வைத்து இந்த இழப்பை எதிர்கொள்ளலாம் என அவர்கள் கருதுவதைப் போல இருக்கிறது. அது எந்த அளவுக்கு சரியாக இருக்குமெனத் தெரியவில்லை. டெல்டா மாவட்டங்களில் மொத்தம் 33 தொகுதிகள் இருக்கின்றன. இதில் மயிலாடுதுறை, சீர்காழி போன்ற 3-4 தொகுதிகளை விட்டுவிட்டால் பிற தொகுதிகளில் ஓ. பன்னீர்செல்வமும் வைத்தியலிங்கமும் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும். தென் மாவட்டங்களில் 58 தொகுதிகளில் ஓ. பன்னீர்செல்வம் தரப்புக்கு ஓரளவுக்கு செல்வாக்கு இருக்கும். இம்மாதிரி சூழலில் அவர் இந்தக் கூட்டணியில் இல்லாமல் போவது அந்தக் கூட்டணிக்கு எதிர்மறையாகத்தான் இருக்கும்” என்கிறார் ஆய்வாளரான ராமமூர்த்தி வெங்கட்ரமணி.
தே.மு.தி.கவைப் பொறுத்தவரை, தமிழ்நாடு முழுக்க ஒவ்வொரு தொகுதியிலும் தலா 2,000 வாக்குகள் இருக்கலாம். அந்தக் கட்சியையே விட்டுவிடக்கூடாது என இரு கட்சிகளும் கருதுகின்றன. அப்படியிருக்கும்போது சுமார் 80 தொகுதிகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஓ. பன்னீர்செல்வமும் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பது அவர்களுக்கு வலுச்சேர்க்கும் என்கிறார் வெங்கட் ரமணி.
அதே நேரம், அ.தி.மு.கவுக்கும் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் இடையில் கூட்டணி ஏற்பட்டால், ஓ. பன்னீர்செல்வத்தை கணக்கில் வைக்கத் தேவையிருக்காது என்கிறார் அவர்.
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம்’40 தொகுதிகளில் சிறிய தாக்கம்’
மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமைப் பொறுத்தவரை, ஓ. பன்னீர்செல்வத்தால் 40 தொகுதிகளில் சிறிய தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என நினைக்கிறார்.
“அதனை சரிக்கட்ட டி.டி.வி. தினகரனும் வி.கே. சசிகலாவும் உதவக்கூடும். டி.டி.வி. தினகரன் கூட்டணியில் நீடிப்பார். வி.கே. சசிகலாவிடமிருந்து ஒரு ஆதரவு அறிக்கையைப் பெறலாம். அது தவிர, ஓ. பன்னீர்செல்வம் பக்கமிருக்கும் 3 எம்.எல்.ஏக்களையும் தேர்தல் நெருக்கத்தில் எடப்பாடி கே. பழனிச்சாமி தன் பக்கம் இழுத்தால் ஓ. பன்னீர்செல்வம் தனிமரமாகக் நிற்பார்” என்கிறார் ஷ்யாம்.
ஓ. பன்னீர்செல்வம் தி.மு.கவுடன் கூட்டணி கிடையாது என கூறியிருந்தாலும் அரசியல் ஆய்வாளர் ரவீந்திரன் துரைசாமியைப் பொறுத்தவரை அவர் தேர்தல் நெருக்கத்தில் தி.மு.க. பக்கம் சாயலாம் என்றே கருதுகிறார். “மு. கருணாநிதியைப் பார்ப்பதைப் போல அவர்கள் மு.க. ஸ்டாலினைப் பார்க்கவில்லை” என்கிறார் அவர்.
இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். “ஓ. பன்னீர்செல்வம் அறிக்கையின் சாரம், தி.மு.கவுடன் இப்போது கூட்டணி கிடையாது என்பதுதான். தேர்தல் நெருக்கத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்” என்கிறார் அவர்.
ஓ. பன்னீர்செல்வம் திரும்பவும் பா.ஜ.க. கூட்டணிக்குள் வரும் வாய்ப்பிருக்கிறதா?
“கடந்த வாரம் தமிழ்நாடு வந்த பிரதமர் தன்னைச் சந்திக்கவில்லை என்பதற்காக ஓ. பன்னீர்செல்வம் கூட்டணியைவிட்டு விலகவில்லை. அவருக்கு பா.ஜ.க. எதையுமே செய்துதரவில்லை எனக் கருதுகிறார். இப்போது பிரதமரைச் சந்திக்க வாய்ப்பளிக்காதது என்பது ஒட்டகத்தின் மீது வைக்கப்பட்ட கடைசி அரசியல் வைக்கோல். அதுவே முழுமையான காரணமல்ல. அப்படியிருக்கும் போது மீண்டும் அவர் உள்ளே செல்வது நடக்குமா எனத் தெரியவில்லை” என்கிறார் ஷ்யாம்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு