Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை குறைத்தால் என்ன நடக்கும்? – இந்தியாவுக்கு இருக்கும் வேறு வாய்ப்புகள் என்ன?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், அபய் குமார் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக்கொள்ளக்கூடும் எனத் தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், ” இந்தியா இப்போது ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தப்போகிறது என எனக்கு தெரியவந்துள்ளது. நான் இதை கேள்விப்பட்டேன், ஆனால் உறுதியாக சொல்ல முடியாது. இது ஒரு நல்ல நடவடிக்கை. இனி என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்…” என்று கூறினார்.
ஆகஸ்ட் 1 முதல் அமெரிக்காவுக்கு செல்லும் ஒவ்வொரு இந்திய பொருளுக்கும் 25 விழுக்காட்டு வரி விதிக்கப்படும் என்று இதற்கு இரண்டு நாட்களுக்கு முன்புதான் டிரம்ப் அறிவித்திருந்தார்.
இந்தியா ரஷ்யாவிலிருந்து ராணுவ உபகரணங்கள் மற்றும் எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்த வரிக்கு மேல் கூடுதல் அபராதமும் செலுத்த வேண்டியிருக்கும் என்று அவர் கூறினார். இந்தியா எண்ணெய் வாங்குவது யுக்ரேன் போரை தொடர ரஷ்யாவுக்கு உதவுவதாக அவர் குற்றம்சாட்டுகிறார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது குறித்த கேள்விக்கு, இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “நமது ஆற்றல் தேவைகளைப் பொறுத்து, நாங்கள் எல்லா நிலைமைகளையும் பரிசீலித்து முடிவெடுக்கிறோம் என்பது உங்களுக்கு தெரியும். சந்தையில் என்ன கிடைக்கிறது, உலகளவில் என்ன நிலைமை உள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு முடிவு செய்கிறோம்.” என வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினாலோ அல்லது குறைத்தாலோ, அது நாட்டின் பொருளாதாரம், எண்ணெய் விலைகள் மற்றும் ராஜதந்திர உறவுகளில் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து இப்போது விவாதம் நடைபெறுகிறது. இந்தக் கேள்விகளுக்கு விடைகாண பிபிசி இந்தி பல்வேறு நிபுணர்களிடம் பேசியது.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்க காரணம், இந்தியாவுக்கு முன்னுள்ள பாதை
ரஷ்யாவின் கச்சா எண்ணெய்யை அதிகம் வாங்கும் நாடுகளாக இந்தியாவும், சீனாவும் உள்ளன. ரஷ்யா-யுக்ரேன் போருக்குப் பிறகு, ரஷ்யாவிலிருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வது வேகமாக அதிகரித்தது.
வணிக அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2024-25 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த எண்ணெய் இறக்குமதியில் சுமார் 35 விழுக்காடு ரஷ்யாவிலிருந்து வந்தது, ஆனால் 2018 நிதியாண்டில் இது வெறும் 1.3 விழுக்காடாக மட்டுமே இருந்தது.
இந்த நிலையில், இந்த விநியோகம் நின்றால் என்ன நடக்கும் என்பதுதான் மிக முக்கியமான கேள்வியாக உள்ளது.
குளோபல் டிரேட் ரிசர்ச் இனிஷியேட்டிவ் (GTRI) நிறுவனத்தின் நிறுவனர் அஜய் ஸ்ரீவாஸ்தவா, உலகளவில் இன்னும் போதுமான எண்ணெய் கிடைப்பதாகவும் , விநியோகத்தில் எந்த நெருக்கடியும் ஏற்படாது என்று கருதுகிறார்.
” இந்தியா உலகின் மொத்த எண்ணெய் நுகர்வில் வெறும் 2 விழுக்காடு மட்டுமே பயன்படுத்துகிறது. அதிக எண்ணெய் உற்பத்தி எப்போதும் பிரச்சினையாக இருந்து வருகிறது. இதனால்தான் நாடுகள் அதிக உற்பத்தி செய்யாமல் இருக்க ஓபெக் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்போது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் தேவைப்படும்போது அதிக உற்பத்தி செய்ய முடியும் என்பதுதான் நிலை. எனவே, இன்று விநியோகம் ஒரு பிரச்னையல்ல,” என்று அவர் சொல்கிறார்.
இருப்பினும், நிகோர் அசோசியேட்ஸின் பொருளாதார நிபுணர் மிதாலி நிகோர், இந்த பாதை அவ்வளவு எளிதாக இருக்காது என்று கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, “இது இந்தியாவுக்கு மிகவும் கடினமான சூழ்நிலை. இப்போது நாம் ரஷ்யாவிலிருந்து தள்ளுபடி விலையில் எண்ணெய் வாங்க முடிகிறது. பல நாடுகளுக்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது கடினம், ஆனால் இந்தியாவுக்கு தள்ளுபடி கிடைத்தது. ஐரோப்பாவும் ரஷ்யாவிலிருந்து சிறிது எண்ணெய் வாங்குகிறது. அமெரிக்கா ரஷ்யா மீது தடைகள் விதித்திருந்தாலும், அமெரிக்காவே ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இல்லாவிட்டாலும் வேறு சில பொருட்களை வாங்குகிறது என சமீபத்தில் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் சீனா கூறியது. எனவே, அமெரிக்கா தானே ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும்போது, மற்ற நாடுகளை ஏன் ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்ய கூடாது என்று கூறுகிறது? சீனாவும் இதே கேள்வியை எழுப்பியது.”
பிபிசி இந்தியுடன் பேசுகையில் இந்தியாவின் EY நிறுவனத்தின் வர்த்தகக் கொள்கைத் தலைவர் அக்னேஷ்வர் சென், எதிர்கால உத்திக்கு முக்கியத்துவம் அளிக்கிறார். இந்தியா எரிசக்தி பாதுகாப்பை பராமரிக்க பல மூலங்களை நோக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
“இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதியைக் குறைக்க முடிவு செய்தால், அதன் பாரம்பரிய மத்திய கிழக்கு கூட்டாளிகளான சவுதி அரேபியா, இராக் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸை நோக்க வேண்டும். இதோடு, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற புதிய மூலங்களையும் தேட வேண்டும். ஆனால் ஒவ்வொரு தேர்வுக்கும் அதிக விலைகள் மற்றும் விநியோகத்தின் நிச்சயமற்ற தன்மை போன்ற சவால்கள் உள்ளன,” என அவர் தெரிவித்தார்.
“தற்போது உள்நாட்டு உற்பத்தி மொத்த தேவையில் சுமார் 15 விழுக்காட்டை மட்டுமே பூர்த்தி செய்கிறது, இதை விரைவில் அதிகரிப்பது எளிதல்ல. எனவே, குறுகிய காலத்தில் இந்தியா தனது ஆற்றல் பாதுகாப்பு, செலவு மற்றும் புவி-அரசியல் சமநிலையை பராமரிக்க, எண்ணெய் மூலங்களில் கவனமாக பன்முகத்தன்மையை கொண்டு வர வேண்டும்.”
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இருக்கும் வாய்ப்புகள்தான் என்ன?
இந்தியாவுக்கு பல சாத்தியமான எண்ணெய் மூலங்கள் உள்ளன, ஆனால் அவற்றுக்கு தனித்தனி சாதக, பாதகங்கள் உள்ளன.
மிதாலி நிகோர் கூறுகிறார், “எப்போதும் மிகப்பெரிய தேர்வு மத்திய கிழக்கு (ஐக்கிய அரபு எமிரேட்ஸ்). அங்கு எண்ணெய் விலை அதிகம், ஆனால் கிடைக்கிறது. மேலும், அமெரிக்காவிலிருந்தும் எண்ணெய் பெற முடியும். அமெரிக்காவில் புதிய சுத்திகரிக்கும் ஆலைகள் திறக்கப்படுகின்றன. அமெரிக்கா தனது எண்ணெய் நிறுவனங்களை முன்னேற்ற முயற்சிக்கிறது, ஏனெனில் அடுத்த 40-50 ஆண்டுகளில் மட்டுமே எண்ணெய் விற்பனை செய்யமுடியும்.”
அனைது தேர்வுகளும் எளிதானவையல்ல என அவர் மேலும் சொல்கிறார். ஆம், இது விலை அதிகமாக இருக்கும். ஆப்பிரிக்காவில் சில நாடுகளில் எண்ணெய் கிடைக்கிறது, ஆனால் கடந்த 20 ஆண்டுகளில் சீனா ஆப்பிரிக்காவில் பெரும் முதலீடு செய்துள்ளது, அதனால் அங்கு வளங்களின் மீது அதற்கு கணிசமான கட்டுப்பாடு உள்ளது. எனவே, அங்கிருந்து எண்ணெய் பெறுவதும் எளிதல்ல.”
அதாவது, எண்ணெய் வாங்குவதற்கு வாய்ப்புகள் உள்ளன, ஆனால் அவை மலிவானவையோ உடனடியாக கிடைப்பவையோ இல்லை.
மத்திய அமைச்சர் ஹர்தீப் புரி, பிப்ரவரி 2025 இல் பிபிசியின் ஹார்ட் டாக் நிகழ்ச்சியில் இந்த சவால்களை குறிப்பிட்டார். “எங்களது விநியோக மூலங்களில் கணிசமான பன்முகத்தன்மை உள்ளது. இப்போது நாங்கள் 39 நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கிறோம்,” என கூறினார்.
இந்தியா அமெரிக்காவை கோபப்படுத்தி ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குகிறதா என்று நிகழ்ச்சியில், கேட்கப்பட்டபோது, “இங்கு நான் உங்களுக்கு தெளிவாக சொல்கிறேன், இது யாருடைய விருப்பத்திற்கு எதிராகவும் இல்லை,” என்று அவர் கூறினார்,
“நாங்கள் ரஷ்யாவிலிருந்து எவ்வளவு வேண்டுமானாலும் எண்ணெய் வாங்கலாம், ஆனால் நியாயமான விலையில் வாங்க வேண்டும் என அமெரிக்கா எங்களுக்கு கூறியது. இது எங்களுக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.”
பட மூலாதாரம், BBC NEWS INDIA/YOUTUBE
படக்குறிப்பு, 2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மாறும் என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில், ஹர்தீப் சிங் புரி கூறியிருந்தார்.உள்ளூர் விலைகள் மற்றும் பொருளாதாரத்தின் தாக்கம் என்னவாக இருக்கக்கூடும்?
இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் அல்லது கணிசமாக குறைத்தால், உள்நாட்டு சந்தை மற்றும் பொருளாதாரத்தில் என்ன தாக்கம் ஏற்படும்?
ரஷ்யாவிலிருந்து கிடைக்கும் மலிவான எண்ணெய் இந்திய பொருளாதாரத்துக்கு நிச்சயமாக ஒரு நிவாரணம் அளித்தது, ஆனால் இதன் பலன் சாமானிய மக்களுக்கு கிடைக்கவில்லை, என அஜய் ஸ்ரீவாஸ்தவா கூறுகிறார்,
அவர் கூறுகிறார், “ரஷ்யாவிலிருந்து எண்ணெய் சற்று குறைந்த விலையில் கிடைக்கிறது. ஆனால் இதனால் கிடைத்த சேமிப்பு பொதுமக்களுக்கு பயனளிக்கவில்லை. இந்த சேமிப்பு அரசிடமோ அல்லது சுத்திகரிப்பு நிறுவனங்களிடமோ மட்டுமே இருந்தது. பெட்ரோல்-டீசல் விலைகளில் எதிர்பாராத குறைப்பு ஏற்படவில்லை.”
மறுபுறம், மிதாலி நிகோர், ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்கப்படாவிட்டால் அதன் தாக்கம் எப்படியும் தெரியும் என்று கருதுகிறார்.
“100 விழுக்காடு தாக்கம் ஏற்படும். இந்த நிலைமை யாருக்கும் பயனளிக்காது. இது முற்றிலும் நஷ்டமளிக்கும் நிலைமை. எப்படி நஷ்டத்தை குறைக்கலாம் என்பதை நாம் யோசிக்க வேண்டும். ஒன்று, பெட்ரோல்-டீசல் விலைகளை உயர்த்த வேண்டியிருக்கும், அல்லது அமெரிக்காவின் வரிகளின் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும், அல்லது சேவைத் துறையில் புதிய வரிகள் அல்லது வரி விதிப்புகள் ஏற்படலாம். எல்லாப் பக்கமும் நஷ்டம் மட்டுமே. இந்த நிலைமையை சரியாக கையாள, நமது பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும், உள்நாட்டு நுகர்வை அதிகரிக்க வேண்டும், மற்றும் போரில் இருந்து விலகி இருக்க வேண்டும்,” என்கிறார் அவர்.
அக்னேஷ்வர் சென்னும் இந்த முடிவு சாமானிய நுகர்வோரை பாதிக்கலாம் என்று கருதுகிறார்.
“இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை முற்றிலும் நிறுத்தினால், பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகள் ஒரு லிட்டருக்கு 5 முதல் 6 ரூபாய் வரை உயரலாம். இருப்பினும், உண்மையான உயர்வு சந்தை நிலைமைகள் மற்றும் அரசின் வரி அல்லது மானிய முடிவுகளைப் பொறுத்து அமையும்,” என சென் கூறுகிறார்,
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, நிபுணர்கள், இந்தியா உள்நாட்டு எண்ணெய் தேடலில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறுகின்றனர்.அடுத்து என்ன?
எண்ணெய் விநியோகம் தொடர்பாக வரவிருக்கும் காலத்தில் இந்தியாவின் உத்தி என்னவாக இருக்கலாம் என்பது குறித்து, நிபுணர்கள் வெவ்வேறு அம்சங்களை சுட்டிக்காட்டுகின்றனர்.
மிதாலி நிகோர் கூறுகிறார், ” எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கிருந்து எண்ணெய் வாங்குவோம் என்ற அரசாங்கத்தின் தற்போதைய அறிக்கை சரியானது என்று நினைக்கிறேன். இப்போது நமது உத்தி, எண்ணெய்யை சார்ந்திருப்பதை குறைக்க, முடிந்தவரை விரைவாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலில் முதலீடு செய்ய வேண்டும் என்பதாகத்தான் இருக்கவேண்டும்.”
இந்த விவாதத்தில் உள்நாட்டு உற்பத்தியின் முக்கியத்துவத்தை அஜய் ஸ்ரீவாஸ்தவா வலியுறுத்துகிறார். இந்தியா மீண்டும் தனது ஆற்றல் தேவைகளுக்காக தேடல் மற்றும் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறுகிறார்.
“நீண்ட காலத்திற்கு ஆற்றலில் தன்னிறைவு அடைய விரும்பினால், உள்நாட்டு எண்ணெய் தேடலில் கவனம் செலுத்துவது அவசியம். இது நடக்கும் வரை, திறந்த சந்தையில் இருந்து வாங்க வேண்டியிருக்கும்,” என அவர் தெரிவித்தார்.
ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவது ஒரு பொருளாதார முடிவு, அரசியல் நிலைப்பாடு இல்லை என்று அவர் தெளிவுபடுத்துகிறார்.
“யுக்ரேன் போருக்கு முன்பு இந்தியா ரஷ்யாவிலிருந்து மிகக் குறைவாகவே எண்ணெய் வாங்கியது. ரஷ்யாவிலிருந்து வாங்கும் அளவு அதிகரித்ததற்கு காரணம், அது மலிவாக கிடைத்தது என்பதுதான். இது ஒரு வர்த்தக முடிவு, அரசியல் முடிவு இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். வேறு எந்த நாட்டில் இருந்து இதேபோல் மலிவான எண்ணெய் கிடைத்திருந்தாலும், நாம் அங்கிருந்து வாங்கியிருப்போம். இந்தியாவும் ரஷ்யாவும் பழமையான மற்றும் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளன, ஆனால் எண்ணெய் வாங்குவதற்கும் இதற்கு நேரடி தொடர்பு இல்லை. ரஷ்யாவிலிருந்து மலிவான எண்ணெய் கிடைக்கும் வரை இந்தியா வாங்கும். மலிவாக கிடைக்காவிட்டால், இந்தியா மற்ற நாடுகளில் இருந்து எண்ணெய் வாங்கும்,” என்ற வாதத்தை அவர் முன்வைக்கிறார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு